Showing posts with label ஈசனின் திருபெயாரால் - திருவாசகம். Show all posts
Showing posts with label ஈசனின் திருபெயாரால் - திருவாசகம். Show all posts

Tuesday, January 13, 2015

Keerthivasan

ஈசனின் திருபெயரால் - திருவாசகம் - 4


உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா வெனவோங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே

ஓம் என்ற ஒலி அ, உ, ம் என்ற மூன்று ஒலிகளாய்ப் பிரியும். அம்மூன்றும் முறையே படைத்தல், காத்தல், அழித்தலாகிய முத்தொழில்களையும் குறிக்குமாதலின் அவையே உள்ளத்துள் நினைவின் தோற்றம், நிலை, இறுதியைச் செய்வனவாம். அவ்வெழுத்துகளால் உண்டாகும் ஒலியை இறைவனது சத்தியே செலுத்தி நிற்றலால் "உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா," என்றார்.

சைவ நூல்கள், இடப ஊர்தியை உயிர் என்று கூறும். ஆகவே, "விடைபாகா" என்றது, உயிருக்கு நாதன் என்றதாம்.

"அல்ல யீதல்ல யீதென மறைகளு மன்மைச்
சொல்லி னாற்றுதித் திளைக்குமிச் சுந்தரன்"

என்று பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற்புராணத்தில், மறைகளாலும் இறைவனைக் காண முடியாத தன்மையைக் கூறுகிறார். வேதம் அறிவு நூல் ஆகையால், அறிவால் இறைவனைக் காண முடியாது; அருளால்தான் காணமுடியும் என்ற நயமும், "வேதங்கள் ஐயா என ஓங்கி" என்பதனால் கிடைக்கிறது.

இறைவன் மிக நுட்பமானவன்; அங்கும் இங்கும் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவன். நுண்பொருளுக்குத்தானே எங்கும் நிறைந்திருக்கும் தன்மையுண்டு. அதைக் குறிப்பிட "ஆழ்ந்தகன்ற நுண்ணியனே" என்றார். "அண்டங்க ளெல்லாம் அணுவாக அணுக்களெல்லாம் அண்டங்களாகப் பெரிதாய்ச் சிறிதாயினானும்" என இறைவனது நுண்மையைப் பரஞ்சோதி முனிவரும் கூறினார்.

இவற்றால், இறைவன் உயிர்களிடத்து நிற்கும் நிலை கூறப்பட்டது.

இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்தவன் என்று உணர்த்தும் விஷயம்.... முக்கியமானதும் கூட....
Read More

Monday, January 12, 2015

Keerthivasan

ஈசனின் திருபெயரால் - திருவாசகம் - 3

விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
எண்ணிறந் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர்
பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன்

பதப்பொருள் : விண் நிறைந்தும் - வானமாகி நிறைந்தும், மண் நிறைந்தும் - மண்ணாகி நிறைந்தும், மிக்காய் - மேலானவனே, விளங்கு ஒளியாய் - இயல்பாய் விளங்குகின்ற ஒளிப்பிழம்பாகி, எண் இறந்து - மனத்தைக் கடந்து, எல்லை இலாதானே - அளவின்றி நிற்பவனே, நின்பெருஞ்சீர் - உன்னுடைய மிக்க சிறப்பை, பொல்லா வினையேன் - கொடிய வினையையுடையவனாகிய யான், புகழும் ஆறு ஒன்று அறியேன் - புகழுகின்ற விதம் சிறிதும் அறிகிலேன்.

விளக்கம் : இறைவன் ஐம்பெரும்பூதங்களில் கலந்தும் அவற்றுக்கு அப்பாலாயும் இருக்கிறான் என்பதை விளக்க, "விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய்" என்றார். "உலகெலா மாகி வேறாய் உடனுமா யொளியாய்" என்ற சித்தியார் திருவாக்கும் இதனையே வலியுறுத்துகிறது. இறைவனது பெருமையைக் காட்டித் தன் சிறுமையைக் காட்ட, ‘பொல்லா வினையேன்’ என்றார்.

Read More

Wednesday, January 7, 2015

Keerthivasan

ஈசனின் திருபெயரால் - திருவாசகம் - 2

வேகங் கெடுத்தாண்ட வேந்த னடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உண்மகிழுங் கோன்கழல்கள் வெல்க
சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க
பதப்பொருள் : வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க - மன ஓட்டத்தைத் தொலைத்து என்னை அடிமை கொண்ட முழுமுதற் கடவுளது திருவடி மேம்படுக; பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க - பிறவித் தளையை அறுக்கிற இறைவனது வீரக்கழலணிந்த திருவடிகள் மேம்படுக; புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க - தன்னை வணங்காத அயலார்க்கு எட்டாதவனாயிருப்பவனது தாமரை மலர் போலும் திருவடிகள் மேம்படுக; கரம் குவிவார் உள் மகிழும் கோன்கழல்கள் வெல்க - கை கூம்பப்பெற்றவர்க்கு மனம் மகிழ்ந்து அருளுகின்ற இறைவன் திருவடிகள் மேம்படுக; சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க - கைகள் தலைமேல் கூம்பப்பெற்றவரை உயரப் பண்ணுகிற சிறப்புடையவனது திருவடி மேம்படுக.


விளக்கம் : மன ஓட்டத்தைத் தவிர்ப்பவனும், பிறவித் துன்பத்தை நீக்குபவனும் இறைவனே என்பது, "வேகங் கெடுத்தாண்ட வேந்தன்", "பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்" என்பவற்றால் விளங்கும். பிஞ்ஞகன் - தலைக்கோலம் உடையவன்; பிறை, கங்கை, அரவம் முதலியன தலைக்கோலங்கள்.
இறைவன் தன்னை நினையாதவரைத் தனக்கு வேறானவராகவே வைத்துச் சிறிதும் விளங்கித் தோன்றாதிருத்தலின், "புறத்தார்க்குச் சேயோன்" என்றார்.
இறைவன் விரும்பியிருக்குமிடங்கள் இரண்டு. ஒன்று, நெஞ்சத்தாமரை; மற்றொன்று, துவாதசாந்தப் பெருவெளி; அஃதாவது, தலைக்குப் பன்னிரண்டு அங்குலங்களுக்குமேலுள்ள இடம். இவ்விரண்டு இடங்களிலும் இறைவனை நினைத்து வழிபட வேண்டும் என்பதைக் குறிப்பிட, "கரங்குவிவார், சிரங்குவிவார்" என்று கூறினார். இவற்றால் இறைவன் வெற்றி கூறப்பட்டது.
பிறவி பயனை அடைய சிவபாதம் சரண் புகுவோம்.


ஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றி
தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி
மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றி
சீரார் பெருந்துறைநந் தேவன் அடிபோற்றி
ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி

விளக்கம் : ஈசன் என்றதனால் தன் வயத்தனாதலும், எந்தை என்றதனால் பேரருளுடையனாதலும், தேசன் என்றதனால் தூய உடம்பினனாதலும், சிவன் என்றதனால் இயற்கை உணர்வினனாதலும், நிமலன் என்றதனால் இயல்பாகவே பாசங்களின் நீங்கினவனாதலும், பிறப்பறுக்கும் மன்னன் என்றதனால் முடிவிலா ஆற்றலுடையனாதலும், தேவன் என்றதனால் முற்றுணர்புடையனாதலும், ஆராத இன்பம் அருளுமலை என்றதனால் வரம்பில் இன்பமுடையனாதலுமாகிய இறைவனது எட்டுக் குணங்களையும் காட்டினார். "எண் குணத்தான்தாள்" என்ற நாயனார் அருள் மொழிக்குப் பரிமேலழகர் உரையில் கூறப்பட்டுள்ள எண்குணங்களைக் காண்க.
இவற்றால் வணக்கம் கூறப்பட்டது.

கிருஷ்ணபரமாத்மா
Read More

Monday, January 5, 2015

Keerthivasan

ஈசனின் திருபெயாரால் - திருவாசகம்

சிவனது அநாதி முறைமையான பழமை
அஃதாவது, சிவபிரான் உயிர்களை உய்வித்தற்பொருட்டு அளவில்லாத காலமாகச் செய்து வருகின்ற திருவருட்செயலின் முறைமை என்பதாம்.


நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க!
இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க!
கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க!
ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க!




5. ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க

பதப்பொருள் : நமச்சிவாய வாழ்க - திருவைந்தெழுத்து மந்திரம் வாழ்க; நாதன் தாள் வாழ்க - திருவைந்தெழுத்தின் வடிவாக விளங்கும் இறைவனது திருவடி வாழ்க; இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க - இமைக்கும் நேரமுங் கூட என் மனத்தினின்றும் நீங்காதவனது திருவடி வாழ்க; கோகழி ஆண்ட குரு மணிதன் தாள் வாழ்க - திருப்பெருந்துறையில் எழுந்தருளி என்னையாட்கொண்ட குருமூர்த்தியினது திருவடி வாழ்க; ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க - ஆகம வடிவாகி நின்று இனிமையைத் தருபவனாகிய இறைவனது திருவடி வாழ்க; ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க - ஒன்றாயும் பலவாயும் உள்ள இறைவனது திருவடி வாழ்க.


விளக்கம் : திருவைந்தெழுத்து என்பது தூலம், சூக்குமம், அதிசூக்குமம் என முத்திறப்படும். ‘ந’கரத்தை முதலாக உடையது (நமசிவாய) தூலம். ‘சி’கரத்தை முதலாக உடையது (சிவாயநம) சூக்குமம். அதிசூக்குமம் ‘ந’கர ‘ம’கரங்களின்றிச் சிகரத்தை முதலாகவுடையது (சிவாய). இங்குத் தூலவைந் தெழுத்துக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது, உயிர்களுக்கு உலக இன்பத்தைக் கொடுத்துப் பக்குவப்படுத்துவது. இனி, இறைவனது திருமேனியே திருவைந்தெழுத்தாகும். நகரம் திருவடியாகவும், மகரம் உடலாகவும், சிகரம் தோளாகவும், வகரம் முகமாகவும், யகரம் முடியாகவும் சாத்திரம் கூறும்.

"ஆடும் படிகேள்நல் லம்பலத்தான் ஐயனே
நாடுந் திருவடியி லேநகரம் - கூடும்
மகரம் உதரம் வளர்தோள் சிகரம்
பகருமுகம் வாமுடியப் பார்" (உண்மை விளக்கம்)

இத்துணைப் பெருமையுடையது திருவைந்தெழுத்து ஆகையால், அதனை முதற்கண் வாழ்த்தி, பின்னர் அத்திருவைந்தெழுத்தின் வடிவமாயுள்ள முதல்வனை வாழ்த்தினார்.

"நெஞ்சில் நீங்காதான்" என்றமையால், இறைவன் அகத்தே நெஞ்சத்தாமரையில் வீற்றிருக்கும் தன்மையையும், "கோகழியாண்ட குருமணி" என்றமையால், இறைவன் புறத்தே திருப்பெருந்துறையில் தம்மை ஆண்டருளின பெருமையையும் குறிப்பிட்டார்.

வேதத்தில் பொதுவாக விளங்குதல் போல அல்லாமல், ஆகமத்தில் சிறப்பாக இறைவன் விளங்குதலால், "ஆகமமாகி நின்றண்ணிப்பான்" என்றார். ஆகமங்கள் காமியம் முதல் வாதுளம் ஈறாக உள்ள இருபத்தெட்டு. இனி, "ஏகன் அநேகன்" என்றமையால், இறைவன் தன்மையால் ஒரு பொருளாகவும், உயிர்களோடு கலந்திருத்தலால் பல பொருளாயும் இருக்கிறான் என்ற உண்மையும் கிடைக்கிறது.

இவற்றால் வாழ்த்துக் கூறப்பட்டது.

கிருஷ்ணபரமாத்மா
Read More