

சங்கத்தமிழ் இலக்கியத்தில், பண்டைய தமிழகத்தில் சமஸ்கிருதத்தின் நிலை என்ன?
தொல்காப்பியத்திற்கும் பழமையான நூல் அகத்தியம், இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழுக்கும் இலக்கணம் கூறப்பட்ட முழு முதல் நூல். இந்நூலின் சில சூத்திரங்கள் மட்டுமே உரையாசிரியர்களால் நமக்கு கிடைக்கிறது. இந்நூல் சமஸ்கிருதத்தினை நன்கு அறிந்த சமஸ்கிருத பெயர் கொண்ட அகஸ்தியரால் எழுதப்பட்டது. திருத்தமான இலக்கணம் செய்து தமிழ் வளர்த்தவர் அகஸ்தியர்.
அகத்தியம் கற்றவருள் தொல்காப்பியர் சிறந்தவர் என்கிறது தொல்காப்பிய பாயிரச்சூத்திரம். “தொல்காப்பியர் காப்பியக்குடியை சேர்ந்தவர்” என்பதை அவரது பெயரிலிருந்தே அறியலாம், நாகை மாவட்டம் சீர்காழி தாலுக்காவில் "தொல்காப்பியக்குடி" என்னும் பெயரில் ஒரு கிராமம் இன்றும் உள்ளது. அதாவது வடபகுதி முனிவருள் "பார்க்கவ" முனிவரின் மரபினர் "காவ்ய" கோத்திரத்தினைச் சேர்ந்தவர் தொல்காப்பியர்.
தொல்காப்பியத்திற்கு “பனம்பாரனார்” பாடிய சிறப்பு பாயிரத்தில் "ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்" என்கிறார். "ஐந்திரம்" என்பது இந்திரனால் செய்யப்பட்ட சமஸ்கிருத இலக்கண நூல், பாரத தேசமெங்கும் இந்நூல் பரவி இருந்தது “விண்ணவர் கோமான் விழுநூல்” என இந்நூலை சிலப்பதிகாரம் பாராட்டுகிறது.
ராம பக்தனாம் அனுமனை ஐந்திரம் என்பதை அடைமொழியாக்கி "ஐந்திரம் நிறைந்தவன்” என்கிறது கம்பராமாயணம். ”ஐந்திரவி யாகரணமும் ஓதிஒரு நாளினில் வேதமொரு நாலுடன் கற்றான் அனுமன்” என்கிறான் வைஷ்ணவனான கம்பன். “இந்திரத்தை இனிதாக ஈந்தார் பூலும்“ என்கிறார் சைவராகிய நாவுக்கரசர்.
ஐந்திரத்தின் சிற்சில பகுதிகள் தான் கிடைக்கின்றன, ‘அத வர்ணா சமூக’ அதாவது எழுத்துக்கள் கூடிக் கூட்டெழுத்துக்கள் ஆகும் என்பது ஐந்திரம்.
சமஸ்கிருதத்தில் கூட்டெழுத்துக்கள் உண்டு தமிழில் இல்லை. ஆனால், தொல்காப்பியர் ஐந்திரம் என்னும் சமஸ்கிருத நூல் வழியில் அ+இ=ஐ, அ+உ=ஔ என்று வரும் என விதி வகுத்துள்ளார். அகரம், இகரம் ஐகாரம் ஆகும், அகரம் உகரம் ஔகாரம் ஆகும். “அகரத்திம்பர் யகரப் புள்ளி ஐஎன் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்” என்பன அச்சூதிரங்கள்.
நான்கு வேதத்திலும் புலமை உள்ளவன் என்பதாலேயே "அதங்கோட்டு ஆசான்" என்பவர் அவைக்கு தலைமை தாங்க அவர்முன் தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது.
தமிழ் இலக்கண நூல் அரங்கேற்ற சதுர்வேதமும் அறிந்தவன் தேவையா? இது பார்ப்பன சூழ்ச்சி என கூக்குரல் எழுப்பவேண்டாம்.
தமிழ் இலக்கண நூல் அரங்கேற்றத்திற்கு சதுர்வேதமும் அறிந்தவன் வேண்டும். ஏனெனில் "அறம்புரி அருமறை, மறையோர் தேத்து” என நான்மறைகளைச் சொல்லுவது மட்டுமல்லாது நான்மறை நுணுக்கத்தினையும் தொல்காபியம் சொல்லுகிறது.
எழுத்துக்கள் பிறக்கும் இடம் எட்டு அவை “தலை, மிடர் நெஞ்சு, பல், உதடு, நாக்கு, மூக்கு, அண்ணம் (தாடை). இந்த எட்டு மட்டுமன்றி மூலாதாரத்திலிருந்தும் எழுத்தொலி பிறப்பதுண்டு, இதனை வெளிப்படையாக விளக்கமுடியாது. அந்தணர் வேதத்தில் காணலாம் என்கிறார் தொல்காப்பியர்
“எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து
சொல்லிய பள்ளி எழுதரு வளியில்
பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்து
அகத்தெழு வளிஇசை ஆரில்தப நாடி
அன்பில் கோடல் அந்தணர் மறைத்தே
அஃது இவண் நுவலாது எழுந்துபுறத்து இசைக்கும்
மெய்தெரி வளியிசை அலபுநுவன் றிசினே (தொல் 102)
தொல்காப்பியத்தின் இந்த சூத்திரம் நமக்கு சொல்வது என்னவென்றால் தமிழில் எழுத்திலக்கணம் முழுவதும் அறிய வேண்டுமென்றால் சமஸ்கிருத வேதத்தின் துணை தேவை என்பதே,
சமஸ்கிருதம் அறிவியல்பூர்வமான மொழி இந்த மொழியில் தான் எப்படி உச்சரிக்கிறோமோ அப்படியே எழுதவும் முடியும் அதனால்தான் க, ச, ட, த, ப யென்னும் எழுத்துக்களில் நான்கு விதமான உச்சரிப்பு க, க்க, ga, gha, யென வருகிறது.
தமிழில் க, ச, ட, த, ப என்னும் எழுத்துக்கள் இருப்பினும் உச்சரிப்பின் போது சமஸ்க்ருத ஒலி உச்சரிப்பையே பயன்படுத்துகிறோம். உதாரணமாக “பம்பரம்” என்னும் தமிழ் சொல்லில் முதல் எழுத்தில் வரும் ப வுக்கும் மூன்றாவது எழுத்தாக வரும் ப ba எனவும் உச்சரிக்கும் போது சமஸ்க்ருத எழுத்து ஒலியாக மாறுகிறது, இதனால்தான் தமிழில் எழுத்திலக்கணம் முழுவதும் அறிய சமஸ்கிருதம் அறியவேண்டும் என்கிறார் தொல்காப்பியர்.
தொல்காப்பியத்தின் இந்த சூத்திரம் நமக்கு சொல்வது என்னவென்றால் தமிழில் எழுத்திலக்கணம் முழுவதும் அறிய வேண்டுமென்றால் சமஸ்கிருத வேதத்தின் துணை தேவை என்பதே.
இலக்கண வேற்றுமை எட்டு, முதல் வேற்றுமையின் சிறு வேறுபாடே எட்டாம் வேற்றுமை, ஆதலால் முதலும் எட்டும் வேறானவை அல்ல என்பதால் ஏழு என்னும் வழக்கு முன்பு இருந்ததை அகத்தியமே சொல்கிறது. ஆனால் ஐந்திரம் என்ற சமஸ்கிருத இலக்கண நூலின் வழியில் வேற்றுமை எட்டு என்கிறது அகத்தியம்.
“வேற்றுமை தாமே ஏழ் என மொழிப” என்று தமிழ் மரபுப்படி ஏழு வேற்றுமையை கூறுகின்ற தொல்காப்பியர் கூட சமஸ்கிருத இலக்கண நூலாம் ஐந்திர மரபுப்படி “விளியொடும் எட்டே” என்று அகத்தியர் காட்டிய வழியில் முடிக்கிறார்.
தமிழ் இலக்கண நூலாம் அகத்தியத்தில் நமக்கு கிடைத்துள்ள சில சூத்திரங்களிலேயே சையம், திசை, ஆனந்தம் அராகம், சொச்சகம், வயிரம், மயன், பொத்தகம், சேனை, கம்பலம், காலம், ஆனந்தப்பையுள், பாலன், குமாரன், தானம், விருத்தம்’ பல சமஸ்கிருத சொற்கள் காணப்படுகின்றன.
தொல்காப்பியரோ பன்னிரு நிலத்தினும் வழங்கிவரும் சொற்களைத் தமிழில் கையாளலாம் என்று சொற்களில் (திசைச் சொல்லையும்) சமஸ்கிருதத்திற்கு மட்டும் தனியிடம் தந்து தமிழில் கையாள விதியை விளக்குகிறார், சேர்த்துக்கொள்கிறார்.
வட சொற் கிளவி வடஎழுத்து ஒரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்ஆ கும்மே,
’சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்'
என்கிறது தொல்காப்பியம்.
தமிழும் சமஸ்கிருதமும் எதிர் எதிர் மொழி என்னும் வறட்டு பொய் வாதத்தினை தமிழ் சங்க இலக்கியங்கள் மறுக்கின்றன. மாறாக தமிழ், தாய் என்றால் சமஸ்கிருதம், தந்தை என்கிறாள் ஔவை மூதாட்டி தன் ஆத்திச்சூடியில்.
ஆம்! “அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம்’, “அன்னை” என்று தமிழ் வார்த்தையை பயன்படுத்திய ஔவை “தந்தை” எனத் தமிழில் குறிப்பிடாமல் ‘பிதா” என சமஸ்கிருதச் சொல்லை பயன்படுத்தியதிலிருந்து என்ன புரிகிறது?
ஔவை வாக்குப்படி தமிழ் தாய் மொழி, சம்ஸ்கிருதம் தந்தை மொழி. தாயினையும் தந்தையையும் பிரித்தல் சரியா? தந்தையை தாய்க்கு எதிராக எண்ணுவதும்,எதிராக்குவதும் சரியாகுமா? தமிழுக்கு எதிராக சமஸ்கிருதம் என எண்ணுவதும், எழுதுவதும், பேசுவதும் தாய்க்கு ஆம் தமிழுக்கு செய்யும் துரோகம்.
சமஸ்கிருதம் கலக்காத சங்கத்தமிழ் இலக்கியம் எதுவுமே இல்லையே. சமஸ்கிருதம் கலக்காத பக்தி இலக்கியம் கூட எதுவுமே இல்லை.
தமிழ் இனமானவாதிகளுக்கு ஒரு செய்தி “தமிழன்’ என்று ஒரு இனத்தின் பெயர்,சங்கத்தமிழ் இலக்கியங்களில் இல்லை. "தமிழன்" என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் பூதத்தாழ்வார்தான் தனது இரண்டாம் திருவந்தாதியில் 74 வது பாசுரத்தில் “பெருந்தமிழன்" என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார்.
ஆழ்வார் வாக்கினை அடியார்களாகிய நாமும் உறக்கச் சொல்வோம் "நாமே பெருந்தமிழன்" என்று
தொகுப்பு: Vinoth Balachandran