இராமாயணம், மகா பாரதம் என்னும் இரண்டு
இதிகாசங்களும் நம் பாரத நாட்டின் மிகப்பெரிய
பொக்கிஷங்கள்! இவ்விரு புராணங்களிலும்
கதையம்சம் ஒரு பக்கம் இருந்தாலும், அன்பு,
வீரம், தர்மம், இரக்கம், ராஜநீதி உள்ளிட்ட பலவும்
நிறைந்துள்ளது. அரக்கர் குலத்திலும் அறத்தை
அறிந் தோர் இருந்தனர். மகாபாரதத் தில்
துரியோதனனுடன் பிறந்த நூறு சகோதரர்களில்
விகர் ணன் என்பவன் தர்மவான். துர்புத்தி உள்ள
துரியோதன னின் நன்மையை வேண்டி பல
தர்மங்களை எடுத்துரைத் தான் அவன்.
இராமாயணத்திலும் இராவணனுக்கு அவனுடைய சகோதரர்கள் கும்பகர்ணன், விபீஷணன் போன்றவர்கள் தர்மங்களை எடுத்துரைத்தனர்.
இராமாயண யுத்த காண்டத்தில், இராவண னுக்கு மால்யவான் செய்யும் உபதேசம் கருத்தாழம் கொண் டது. போர் மும்முரமாக நடந்தது. ஸ்ரீராமனுடைய வீரத்தைக் கண்டு இராவணன் மனம் கலங்கி விட்டான்.
இராவணன் மந்திரிசபை யைக் கூட்டி ஆலோசனை நடத்தினான். "வெற்றியை அடைய என்ன வழி?' என்று கேட்டான் இராவணன்.
சீதா தேவியை ஸ்ரீஇராம னிடத்தில் திரும்பக் கொடுக் கக்கூடாது என்ற பிடிவாதத் தோடு இராவணன் இருப்பது தெரிந்திருந்ததால், எதுவும் சொல்லாமல் அனைவரும் மௌனமாக இருந்தார்கள். அப்போது இராவணனுடைய பாட்டனாரான மால்யவான் எழுந்தான். முதிர்ந்த அனுபவம் உள்ளவனும், கிருத யுகத்தில் விஷ்ணுவோடு யுத்தம் செய்தவனும், மதி நிறைந் தவனும், மாவீரனும், வயதிலும் அனுபவத்திலும் உயர்ந்தவனுமான மால்யவான் எழுந்து நின்றவுடன், எல்லாரும் பிரமித்துப் போய் அவனையே பார்த்தார்கள். நிசப்தமான சூழ்நிலை.
அப்போது மால்யவான் இராவணனைப் பார்த்து, ""அரசே! ராஜ தர்மத்தை உணர்ந்தவன்தான் ராஜ்யத்தைப் பாதுகாக்க முடியும். ராஜதர்மம் ஒரு குறிப்பிட்ட நிலையில் இருப்பதில்லை. வெற்றி - தோல்வி இரண்டிற்கும் அரசன் தயாராக இருக்க வேண்டும். இவை இரண்டும் அரசனுக்கு நன்மை- தீமை இரண்டையும் உண்டு பண்ணும். தோல்வி அடைந்தால் அரசன் அழிகிறான். வெற்றி அடைந்தால் தோற்றவனைச் சேர்ந்தவ ருடைய அதிருப்திக்கு ஆளாகிறான். அதோடு மட்டுமல்லாமல், தோற்றவனைச் சேர்ந்தவர்கள் மறுபடியும் யுத்தம் செய்து இவனைப் பழிவாங்குவதற்கான சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது யுத்தத்தால் ஏற்படும் வெற்றி- தோல்வியைக் காட்டிலும் ஆபத்தானது. இதைத் தவிர்க்க மூன்றாவதாக ஒரு வழி உண்டு.
அந்த வழி சமாதான மார்க்கம். இதில் இருவருமே ஒத்துப்போவதால் வெற்றிக்கோ தோல்விக்கோ இடமே இல்லை. சமாதானம் மூலமாக ஏற்படும் முடிவு ஸ்திரமானது. சமா தான வழியில் நிற்கும் அரசன் தானும் வெற்றி யோடு வாழலாம்; சத்ருக்களையும் தன்வசமாக் கலாம். ஆனால் இந்த சமாதான வழியைப் பின்பற்றுவதிலும் சிரமங்கள் உண்டு. யாரோடு எப்பொழுது சமாதான வழியைக் கையாளுவது என்பதை அரசனே அப்போதைக்கப்போது காலம் அறிந்து தீர்மானிக்க வேண்டும். நல்ல காலத்தில் சமாதான வழியைப் பின்பற்றினால் மகத்தான ஐஸ்வர்யத்தை அடையலாம். தானும் வாழலாம், பிறரையும் வாழச் செய்யலாம். சத்ருக்களோடு காலம் அறிந்து யுத்தம் செய்ய வேண்டும். யுத்தம் செய்யக்கூடாத சூழ்நிலையில் யுத்தம் செய்தால் அரசன் அழிந்து போவான். செய்ய வேண்டிய காலத்தில் செய்தால் வெற்றியை அடையலாம்.
சமாதானம் செய்துகொள்வது என்பதும் அந்தந்த இடத்தைப் பொறுத்தது. எப் பொழுதுமே சமாதானத்தால் காரியத்தைச் சாதிக்க முடியாது. அவ்விதமே எப்போதும் யுத்தத்தாலும் சாதிக்க முடியாது. தன்னைக் காட்டிலும் வலிமையில் தாழ்ந்தவர்களிடம் யுத்தம் செய்து வெற்றி பெறுவது எளிது. தன் னைக் காட்டிலும் வலிமையில் பெரியவர்களிடம் யுத்தம் செய்ய வேண்டிய நிலை வந்தால் அதற்கும் தயாராக இருக்க வேண்டும். வலிமையில் தாழ்ந்தவர்களுடனோ சமமாக இருப்பவர் களுடனோ சமாதானம் செய்துகொள்ளவும் தயாராக இருக்க வேண்டும். சத்ருக்கள் தாழ்ந்த வர்கள் என்பதற்காக அவர்களை அவமானப் படுத்தக் கூடாது. அவர்களோடு போர் புரியவும் கூடாது.
ஆகவே இராமனோடு சமாதானமாகப் போவதுதான் உசிதமான காரியம் என்று எனக் குத் தோன்றுகிறது. பலத்தில் நம்மைவிட இராமன் தாழ்ந்தவனாக இருக்கலாம். ஆனால் தேவர்கள், ரிஷிகள், கந்தர்வர்கள் உள்பட உலகத் தில் உள்ள நல்லவர்கள் எல்லாரும் இராமன் பக்கமாக இருக்கிறார்கள். அவர்கள் இராமனுக்கு வெற்றியை வேண்டுகிறார்கள். ஆகவே அவனு டன் விரோதத்தை வளர்த்துக் கொள்ள வேண்டாம். சமாதானமாகவே போவோம்.
எந்த சீதையை அடைவதற்காக இராமன் யுத்தம் செய்ய வந்துள்ளானோ அந்த சீதை யைத் திருப்பிக் கொடுத்து விடுவோம். மன்னா! நான் ஏன் இப்படி ஆலோசனை சொல்கிறேன் என்றால் சூழ்நிலை அவ்விதம் உள்ளது. இப்பொழுது அதர்மம் அடங்கி தர்மமே ஓங்கி நிற்கிறது. நாம் எல்லாரும் அதர்மத்தின் பட்சத்தைச் சேர்ந்தவர்கள். அதனால் நாம் அடங்கித்தான் போக வேண்டும். அரசனே! ஒரு உண்மையைச் சொல்கிறேன். ஆதிகாலத்தில் பிரும்ம தேவன் இரண்டே இரண்டு வழிகளைப் படைத்தார். ஒன்றுக்கு தர்மபட்சம் என்று பெயர். மற்றொன்றுக்கு அதர்மபட்சம் என்று பெயர். இவை இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பட்டே நிற்பவை. அடிக்கடி மோதிக் கொள்ளும். மனித வர்க்கம் வாழவும் ஓங்கி வளரவும் உதவுவது தர்மம். மனித வர்க்கத்தின் முன்னேற்றத்தைத் தடுத்து அழிவுப் பாதையில் செல்ல உதவுவது அதர்மம்.
தேவர்கள் தர்மபட்சத்தைச் சார்ந்தவர்கள். ராட்சதர்களான நாம் அதர்மபட்சத்தைச் சார்ந்தவர்கள். தர்மம் ஓங்கும் காலத்தில் தேவர்கள் பட்சம் ஜெயிக்கும். அதர்மம் ஓங் கும் காலத்தில் நம்முடைய பட்சம் ஜெயிக்கும். அசுரர்களும் நம்மைச் சேர்ந்தவர்களும் தர்மத்தின் கை ஓங்கி அதர்மத்தின் கை தாழ்ந்திருக்கும் காலத்தில் எந்தக் காரியம் செய்தாலும் வெற்றியைக் கொடுக்காது.
தர்மம்- அதர்மம் இரண்டும் மோதிக் கொள்ளும் காலத்தில் தர்மம் ஜெயித்தால் கிருத யுகம் ஏற்படும். அதர்மம் ஜெயித்தால் கலியுகம் உண்டாகும். அதர்மம் ஜெயித்த காலத்தில் நாம் செய்யும் காரியங்கள் பய னுள்ளவையாக ஆயின. அன்று நாம் எடுத்த காரியங்கள் கைகூடின. ஆனால் இன்றுள்ள நிலைமை வேறு. தர்மம் ஜெயித்து அதர்மம் இன்று அடங்கி நிற்கிறது. இந்த நிலையில் நாம் வெற்றிபெற இடமே இல்லை. ஆங்காங்கு யாகங்கள் நடக்கின்றன. உரத்த குரலில் வேதங்களை ஓதுகிறார்கள். ரிஷிகளுடைய அக்னி ஹோத்ர சாலையிலிருந்து கிளம்பும் புகை நான்கு பக்கங்களிலும் பரவி நிற்கிறது. இந்த நிலையில் ராட்சதர்களுக்கு ஜெயிக்க வாய்ப்பே கிடையாது'' என்றான்.
இந்த உபதேசத்தின் மூலம் ஒரு அரசனுக்கு வேண்டிய தர்மத்தை உணர்ந்துகொள்ள முடிகிறது. இது எல்லா காலகட்டத்திற்கும் பொருத்தமாகவும் உள்ளது.
ஆக்கம்: கிருஷ்ண பரமாத்மா