Showing posts with label ஈழப் போரின் இறுதி நாட்கள். Show all posts
Showing posts with label ஈழப் போரின் இறுதி நாட்கள். Show all posts

Wednesday, September 27, 2017

Keerthivasan

ஈழப் போரின் இறுதி நாட்கள் – 18

விடுதலை புலிகளின் கப்பல்கள் வருவதை செல்போனில் ஒட்டுக் கேட்டது உளவுத்துறை!


2002-ம் ஆண்டு வரை, விடுதலைப் புலிகளுக்கு ஆயுத சப்ளை செய்துவந்த கே.பி.யிடம் இருந்து அந்தப் பொறுப்பு மற்றையவர்களின் கைகளுக்கு மாறியபின், ஆயுத சப்ளை செயின் எப்படியெல்லாம் அறுந்தது. யார் யாரெல்லாம் போட்டு குழப்பினார்கள் என்பதை கடந்த 18 அத்தியாயங்களிலும் பார்த்தோம். அவற்றை தவற விட்டிருந்தால், பழைய அத்தியாயங்களை பார்க்கவும்.

விடுதலைப் புலிகள் யுத்தத்தில் தோல்வியடைந்த காரணங்களில் மிக முக்கியமான காரணம் அதுதான். அதாவது, யுத்தம் புரிய ஆயுதங்கள் போய் சேரவில்லை.

இப்போது மற்றொரு கோணத்தில் இந்த தொடர் திரும்புகிறது.

இலங்கை ராணுவம் இந்த யுத்தத்தை எப்படி, யாருடைய உதவியுடன் ஜெயித்தது? யார், என்னவெல்லாம் செய்தார்கள்? எப்படிச் செய்தார்கள்?

இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே சமாதான பேச்சுவார்த்தை தொடங்கியபோது, எப்படியும் மீண்டும் யுத்தம் வெடிக்கும் என்று அனைவருக்கும் தெரியும். காரணம், அதற்குமுன் நடந்த பேச்சுவார்த்தைகள் யாவும் அப்படியே முடிந்தன. இரு தரப்பும், யுத்த ஏற்பாடுகளை செய்வதற்கே பேச்சுவார்த்தை காலங்களை பயன்படுத்தினார்கள்.

அந்த வகையில், சமாதான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தபோதே, 2002-ம் ஆண்டு, இலங்கை ராணுவத்தை போருக்கு ஏற்ற வகையில் எப்படி மாற்றி அமைக்க வேண்டும் என்ற ரிப்போர்ட் ஒன்றை தயாரித்து கொடுத்தது யார் தெரியுமா? அமெரிக்க பாதுகாப்பு அமைச்சு!

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சின் யுத்த திட்டமிடலாளர்கள் அடங்கிய டீம் ஒன்று இலங்கை சென்று சுமார் 10 நாட்கள் தங்கியிருந்து, இலங்கை ராணுவத்தின் பிளஸ்கள் எவை, மைனஸ்கள் எவை என்று கணித்து, விடுதலைப் புலிகளை யுத்தத்தில் ஜெயிக்க வேண்டுமானால், இலங்கை ராணுவத்தை எப்படி மாற்றி அமைக்க வேண்டும் என அறிக்கை ஒன்றை கொடுத்தது.

US Defence Department Report on SL 2002 என்ற அந்த ரிப்போர்ட்டின் முக்கிய விஷயம்:


விடுதலைப் புலிகளுக்கான ஆயுத சப்ளை முற்றாக நிறுத்தப்பட்டால்தான், யுத்தத்தில் இலங்கை ராணுவம் ஜெயிக்க முடியும். அதற்காக இலங்கை கடற்படை சீரமைக்கப்பட வேண்டும். இலங்கை கடற்படையில், Corvettes, Frigates, Destroyers, Battleships ஏதும் இல்லாத நிலையில், ஆழ்கடல் யுத்தத்தில் ஈடுபடும் வசதியை கடற்படை பெற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த பரிந்துரை, இலங்கை பாதுகாப்பு அமைச்சால் மிகவும் சீரியஸாக எடுத்துக் கொள்ளப்பட்டது. கடற்படையில் மாற்றங்கள் செய்யப்பட்டன.

விடுதலைப் புலிகளுடன் இறுதி யுத்தத்தில் இலங்கை ராணுவம் 2009-ம் ஆண்டு, வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு அடித்தளம் போடப்பட்டது, 2007-ம் ஆண்டு. இலங்கை ராணுவத்தில் 2007-ம் ஆண்டை, ‘கடற்படையின் ஆண்டு’ என்கிறார்கள். அந்த ஆண்டுதான், விடுதலைப் புலிகளின் முக்கிய ஆயுதக் கப்பல்கள் பல ஒவ்வொன்றாக தாக்குதலுக்கு உள்ளாகி, மூழ்கடிக்கப்பட்டன.


2002-ம் ஆண்டு அமெரிக்க அறிக்கை கிடைத்தபின், 2003-ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் இரு ஆயுதக் கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன. இரண்டுமே டேங்கர் ரக கப்பல்கள். அதன்பின் 3 ஆண்டுகளுக்கு தாக்குதல் ஏதுமில்லை. மீண்டும் 2006-ம் ஆண்டு, செப்டெம்பர் 17-ம் தேதி, இலங்கை மட்டக்களப்பில் இருந்து கிழக்கே 240 கி.மீ. தொலைவில், கடலில் வைத்து புலிகளின் மற்றொரு இலங்கை கடற்படையால் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது. அதுவும் டேங்கர் ரக கப்பலே.

ஒருவகையில் பார்த்தால், இந்த கப்பல் முற்று முழுதாக கடற்படை தாக்குதலில் மூழ்கடிக்கப்படவில்லை. விமானப்படையின் குண்டுவீச்சு விமானங்களும் வந்து குண்டு வீசி, விடுதலைப் புலிகளின் டேங்கரை மூழ்கடித்தன.

அந்த கப்பல், இலங்கை கரைக்கு அருகில் வரும் தகவல் எப்படி கடற்படைக்கு கிடைத்தது?

விடுதலைப் புலிகளின் சட்டலைட் போன் உரையாடல்களை ஒட்டுக் கேட்பதன் மூலம் அந்த தகவல் கிடைத்தது.

விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல், இலங்கை கரையில் இருந்து 300 கடல் மைல்களுக்கு அப்பால் வந்தபோது, கப்பலில் இருந்தவர்கள், சட்டலைட் போன் மூலம் வன்னியில் உள்ளவர்களுடன் தொடர்பு கொண்டார்கள். வன்னியில் இருந்த புலிகளின் முக்கியஸ்தர்கள் பலரது சட்டலைட் போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டது, புலிகளுக்கு தெரியாமல் இருந்தது.

இலங்கை ராணுவத் தலைமையகத்தில், Directorate of Military Intelligence அலுவலகம் 2-ம் மாடியில் இயங்குகிறது. இதில் வலது கோடியில் உள்ள ஆபரேஷன் ரூமில், விடுதலைப் புலிகளின் சட்டலைட் போன்கள் ஒட்டுக் கேட்கப்படும் கருவிகள் இருந்தன. 24 மணி நேரமும், இந்த ஒட்டுக் கேட்கும் கருவியில், ராணுவ உளவுப் பிரிவினர் பணியில் இருந்தார்கள்.

அப்படி ஒட்டுக் கேட்ட தகவல் மூலம், புலிகளின் கப்பல் வரும் விஷயம் தெரிய, இலங்கை கடற்படையும் விமானப்படையும் கூட்டாக சேர்ந்து, அந்த கப்பலை மூழ்கடித்தன. கொழும்பு பத்திரிகைகள், டி.வி. எல்லாமே கடற்படையும், விமானப்படையும் கூட்டாக சேர்ந்து செய்த இந்த ஆபரேஷனை ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்து தள்ளின.

இந்த புகழால் வந்தது, சிக்கல்!

இலங்கை ராணுவத்துக்கும், கடற்படைக்கும் இடையே உரசல்கள் இருந்தன! கடற்படையும், விமானப்படையும் கூட்டாக பேர் வாங்கிக் கொண்டு போனதை, ராணுவத்தில் இருந்த ஒரு பிரிவினரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

அவர்களது கோபத்துக்கு காரணம், என்னதான் கடற்படையும், விமானப்படையும் தாக்குதல் நடத்தினாலும், Directorate of Military Intelligence ஒட்டுக் கேட்டு தகவல் சொல்லாவிட்டால், இவர்களால் தாக்கியிருக்க முடியுமா? ராணுவ உளவுத்துறைக்கு புகழில் பங்கு கிடைக்கவில்லை!

ராணுவத்தில் உள்ள கோபம் கொண்ட பிரிவினர் என்ன செய்தார்கள்?

கீழேயுள்ள போட்டோவில், இலங்கை விமானப்படை விமானத்தில் இருந்து குறிவைக்கப்படும் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல். …அடுத்த பக்கம் வாருங்கள்.

ராணுவத்தில் உள்ள கோபம் கொண்ட பிரிவினர், கொழும்பில் இருந்து வெளியாகும் சண்டே டைம்ஸ் பத்திரிகையின் ராணுவ செய்தியாளர் இக்பால் அத்தாஸ் என்பவரை அழைத்து, விடுதலைப் புலிகளின் சட்டலைட் போன் ஒட்டுக் கேட்கப்பட்ட விஷயத்தை சொல்லி, அதனால்தான் புலிகளின் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது என்ற ரகசியத்தை அவிழ்த்து விட்டார்கள்.

இக்பால் அத்தாஸ் மிக்க ஆனந்தத்துடன், அடுத்த ஞாயிற்றுக்கிழமை வெளியான பத்திரிகையில் விலாவாரியாக போட்டு வாங்கி விட்டார்.

உடனே, விடுதலைப் புலிகளின் தளபதிகள் சட்டலைட் போன்களில், இதுபோன்ற விஷயங்களை பேசுவதை நிறுத்திக் கொண்டார்கள்.

கொதித்து போனது, இலங்கை கடற்படை. ஆனால், அதுவும் செய்ய முடியவில்லை. காரணம், ஒட்டுக் கேட்டல் முழுவதும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த இலாகாவால் நடத்தப்பட்டது. அவர்களாக பார்த்து தகவல் கொடுத்தால்தான், கடற்படைக்கு எதுவும் தெரியும் என்ற நிலை.

அப்போது இலங்கை கடற்படைக்கு தளபதியாக இருந்தவர், அட்மிரல் வசந்த கரன்னகொட.




அட்மிரல் வசந்த கரன்னகொட, 2005-ம் ஆண்டு செப்டெம்பர் 1-ம் தேதி, இவர் இலங்கை கடற்படைக்கு தளபதியாக்கப்பட்டார். அவர் தலைவராகி சரியாக 1 வருடத்தின்பின் 2006-ம் ஆண்டு செப்டெம்பர் 17-ம் தேதி, புலிகளின் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது. அத்துடன், புலிகளின் போன் உரையாடலில் இருந்து உளவுத் தகவல் கிடைப்பது அறுந்து போனது.

அதே செப்டெம்பர் மாதம் 8-ம் தேதி (2006) புதிய அமெரிக்க தூதராக கொழும்பு சென்று இறங்கினார், ராபர்ட் ஓ. பிளேக். (கீழேயுள்ள போட்டோவில் இலங்கை ராணுவத்தினருடன் நடந்து வருபவர்)

அட்மிரல் வசந்த கரன்னகொடவுக்கு, அமெரிக்க தூதருடன் மரியாதை நிமித்த சந்திப்பு ஒன்றுக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. மரியாதை நிமித்த சந்திப்பு என்று தொடங்கி, சீரியஸாக 1 மணி நேரம் நீடித்தது, அந்த சந்திப்பு. அதில் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்களை அழிப்பதற்கு, அமெரிக்க உதவி, இலங்கை கடற்படைக்கு தேவை என்று கோரிக்கை விடுத்தார், வசந்த கரன்னகொட.

புதிய அமெரிக்க தூதர் ராபர்ட் ஓ. பிளேக், எந்த உறுதிமொழியும் அளிக்கவில்லை.

இந்த சந்திப்பு நடந்து 2 வாரங்களின்பின், கொழும்புவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து, இலங்கை கடற்படை தலைமைச் செயலகத்துக்கு ஒரு தொலைபேசி அழைப்பு சென்றது. அமெரிக்க டீம் ஒன்று கொழும்பு வந்திருப்பதாகவும், கடற்படை தளபதி, கடற்படை உளவுப் பிரிவு பொறுப்பாளர், மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் அவசர சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், கூறப்பட்டது.

மறுநாள் காலை 10 மணி. நான்கு அமெரிக்கர்கள் கொண்ட டீம் ஒன்று இலங்கை கடற்படை தலைமைச் செயலகத்தில் போய் இறங்கினார்கள். அவர்களுக்கு தலைமை தாங்கியவர் ஒரு பெண்; அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ.வை சேர்ந்தவர்.

அட்மிரல் வசந்த கரன்னகொடவிடம் அந்த சி.ஐ.ஏ. பெண் அதிகாரி, “விடுதலைப்புலிகளின் ஆயுத கடத்தல் ஆபரேஷன் பற்றி உங்கள் உளவுத்துறைக்கு என்ன தெரியும் என்பதை முதலில் சொல்லுங்கள். சி.ஐ.ஏ.வுக்கு என்ன தெரியும் என்று நாங்கள் சொல்கிறோம்” என்றார்.

தொடரும்...

Source
nadunadapu 
Read More
Keerthivasan

ஈழப் போரின் இறுதி நாட்கள் – 17

புலிகளின் ஆயுதங்களுக்காக கடலில் காத்திருந்த கப்பலும், மச்சக்கார அமைச்சரும்!




விடுதலைப் புலிகளுக்காக லண்டனில் அல்ஜீரியாகாரரிடம் பேரம் பேசி 1 மில்லியன் பவுண்ட்ஸ் முன்பணமும் கொடுத்துவிட்டு, ஆயுதங்களை எடுத்துக் கொண்டு வர புறப்பட்டது, சங்கர் தலைமையிலான டீம். சிங்கப்பூரில் நின்றிருந்த புலிகளின் கப்பலை உடனடியாக அனுப்பி வைக்குமாறு பிரபாகரன் கூறியதையடுத்து, அந்தக் கப்பலும் புறப்பட்டது.

20 ஆண்டுகளுக்கு முன், ஒன்றரை மில்லியன் பவுண்ட்ஸ் என்பது மிகப்பெரிய தொகை. அவ்வளவு பணம் கொடுத்து வாங்கப்படும் ஆயுதங்களை ஜாக்கிரதையாக கொண்டுவந்து சேர்க்க வேண்டும் என்பதால், புலிகளின் கப்பல் ஆபரேஷனில் இருந்த அதி திறமைசாலிகளை அனுப்பி வைக்குமாறு, கே.பி.-யிடம் பிரபாகரன் கூறியிருந்தார்.

சின்னவர் என அழைக்கப்படும் ஒருவர்தான் கப்பலின் கேப்டனாக அனுப்பி வைக்கப்பட்டார். கேப்டன் சின்னவர் செலுத்திய கப்பலில் இஞ்ஜினியராக செயல்பட்டவர், சாந்தன்.

இவர்களது கப்பல் செங்கடல் நோக்கிச் செல்லுமுன், இந்திய கடல் பகுதிக்குள் வந்தது. சென்னையில் இருந்து சங்கர், மனோ மாஸ்டர், தினேஷ் ஆகியோர் ஒரு படகு மூலமாக சென்று இந்தக் கப்பலில் ஏறிக் கொண்டனர். விடுதலைப்புலிகளும், மாலுமிகளுமாக மொத்தம் 20 பேர் இருந்தனர்.

லண்டனில் உள்ள அல்ஜீரியாக்காரர் கூறியபடி, கப்பலை செங்கடல் நோக்கி செலுத்துமாறு சங்கர் கூறினார். செங்கடலில், அல்ஜீரியாக்காரரின் கப்பல் எங்கே வந்து இவர்களை சந்திக்கும் என்று சங்கருக்கு தெரிந்திருக்கவில்லை. செங்கடலின் பரப்பளவு, 4 லட்சத்து 38 ஆயிரம் சதுர கி.மீ!

கப்பலில் ஏறியவுடன் சங்கருடன் வந்திருந்த தினேஷ், தாம் கொண்டு சென்றிருந்த ஹெச்.எஃப். செட் ஒன்றை இயக்க துவங்கினார். அதில்தான் சங்கர், பிரபாகரனுடனும், லண்டனில் இருந்த தமது ஆட்கள் இருவருடனும் தொடர்பு கொண்டு, தாம் கப்பலில் ஏறிவிட்ட விஷயத்தை தெரிவித்திருந்தார்.

லண்டனில் இருந்த இருவரில் ஒருவர், தற்போது உயிருடன் இல்லை. மற்றையவர் உருத்திரகுமாரனின் மெகா அமைச்சரவையில் ஒரு அமைச்சராக உள்ளார் என ஏற்கனவே கூறியிருந்தோம்.

சங்கரிடம் பேசிய கேப்டன் சின்னவர், “செங்கடலின் எந்த பகுதிக்கு வரவேண்டும் என்று தெரிந்தால், தேவையற்ற அலைச்சலை தவிர்க்கலாம். சரியான விபரத்தை தாருங்கள்” என்றார். ஆனால், “செங்கடலை நோக்கி செல்லுங்கள்” என்பதைத் தவிர வேறு எந்த தகவலும் சங்கரிடம் இல்லை.

அவர், ஹெச்.எஃப். செட் மூலம் லண்டனில் இருந்த அமைச்சரை தொடர்பு கொண்டு, “செங்கடலில், எந்த இடத்துக்கு வரவேண்டும் என்று கேட்கிறார்கள்?” என்று கேட்டார்.

அமைச்சரோ, செங்கடலை உலக வரைபடத்தில் மட்டுமே பார்த்த அனுபவசாலி. அவருக்கும் சரியாக சொல்ல தெரியவில்லை.

ஒரு வழியாக லண்டனில் அல்ஜீரியாகாரரை தேடிப் பிடித்து விசாரித்த போது, அவரோ, “செங்கடலில் சும்மா சென்று கொண்டிருங்கள். எங்கே வரவேண்டும் என்று அப்புறம் சொல்வோம்” என்றார்.

இதை கேட்ட கேப்டன் சின்னவருக்கு தலை சுற்றியது!

காரணம், இந்த செங்கடல் என்பது, இந்தியக் கடலின் ஒரு நீட்சியாக, சர்வதேச கப்பல் ரூட்டில் உள்ளது. அரேபிய வளைகுடாவுக்கும், ஆபிரிக்காவுக்கும் இடையே உள்ள கப்பல் போக்குவரத்தின் இணைப்பு இந்த கடல் பகுதி. பல கப்பல்கள் பயணித்துக் கொண்டிருக்கும் இந்த செங்கடலில் சும்மா எங்கே போவது?

இதையடுத்து கேப்டன் சின்னவர், சங்கருக்கு ஒரு விஷயத்தை தெளிவு படுத்தினார். “போக்குவரத்து அதிகமுள்ள செங்கடலில் சும்மா உலாவிக் கொண்டிருக்க முடியாது. வேண்டுமானால், செங்கடலின் தெற்கு வாயிலான பாப் எல் மான்டெப் (Bab-el-Mandeb) வரை போய், அங்கே காத்திருக்கலாம். அதற்கு மேல் போக வேண்டாம்.

அந்த இடத்திலிருந்து வட திசையில் கடல் இரு பாதைகளாக பிரிகிறது. சூயஸ் கால்வாய் வழியாக மெடிட்டரேனியன் கடலுக்கு செல்லும் பாதை அது. அதற்குள் உள்ளே புகுவதற்கு முன், அனைத்துக் கப்பல்களும் சோதனையிடப்படும். எனவே நாம் வெளியே காத்திருப்போம்” என்றார்.

இதையடுத்து, இவர்களது கப்பல், பாப் எல் மான்டெப் பகுதி வரை போய் நின்று கொண்டது.

சங்கர், பிரபாகரனை தொடர்பு கொண்டு, “ஆயுதங்களை பெற்றுக் கொள்ளும் இடத்துக்கு வந்து விட்டோம். இனி ஆயுதங்களை ஏற்றிக் கொண்டு புறப்பட வேண்டியதுதான்” என்று தெரிவித்தார்.

ஏ.கே.-47
இந்த ஆயுதங்கள் பற்றிய மற்றொரு தகவல் என்னவென்றால், ஆர்.பி.ஜி. போன்ற ஆயுதங்களும் கொடுப்பதாக கூறியிருந்தாலும், பெருமளவில் ஏ.கே.-47 ரக துப்பாக்கிகளை கொடுப்பதாகவே அல்ஜீரியாக்காரர் கூறியிருந்தார். அதற்கு அவர் கூறிய காரணம், 2-ம் உலக யுத்தத்தில் உபயோகிப்பதற்காக தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அவை. தயாரிப்பு முடிந்த நிலையில், 2-ம் உலக யுத்தமும் முடிந்து விட்டதால், அவற்றை ‘பல்க்’ விலையில் வாங்கலாம் என்பதுதான்.

அதன்படி புலிகளுக்காக கே.பி.யால் வாங்கப்பட்ட ஏ.கே.-47களை விட மிகக் குறைந்த விலையில், ஆயிரக்கணக்கான ஆயுதங்களை கொடுப்பதாக பேச்சு.

ஆயுதம் ஏற்ற வேண்டிய இடத்துக்கு வந்துவிட்டதாக சங்கர் தெரிவித்ததையடுத்து பிரபாகரன், புலிகளின் ராணுவ ரீதியான

வளர்ச்சிக்கான அடுத்த திட்டங்களை தீட்டினார். ஆயிரக்கணக்கில் துப்பாக்கிகள் வரவுள்ளதால், இயக்கத்தில் மேலதிக ஆட்களை இணைத்துக் கொள்ளுமாறு இலங்கையில் இருந்த தளபதிகளுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து, புலிகள் இயக்கத்தின் பயிற்சி அணிகள் வழமைக்கு மாறாக, குறுகிய காலப் பகுதியில், அதிக அளவில் ஆரம்பிக்கப்பட்டன.

புலிகள் அமைப்புக்கு இந்த எக்ஸ்பான்ஷன் அப்போது தேவையாகவும் இருந்தது. காரணம், டெலோ இயக்கம் அதீத வளர்ச்சி அடைந்து கொண்டிருந்த காலம் அது. இலங்கையில் சில தாக்குதல்களையும் டெலோ நடத்த துவங்கியிருந்தது.

விரைவில் ஆயுதங்கள் வந்துவிடும் என பிரபாகரன் நம்பிக் கொண்டு, புதிய உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டிருக்க, செங்கடலின் தெற்கு வாயில் பாப் எல் மான்டெப் பகுதியில் கப்பலுடன் காத்திருந்தார் சங்கர். நாட்கள் ஓடியதே தவிர, ஆயுதக் கப்பல் வருவதாக தெரியவில்லை.

சுமார் 1 மாத காலம் காத்திருந்த நிலையில், கப்பலில் இருந்த உணவுப் பொருட்கள் மற்றும் தண்ணீர் ஸ்டாக் குறைய துவங்கி விட்டது. இனி ஆயுதக் கப்பல் வந்து, ஆயுதங்களை ஏற்றினாலும், அதன்பின் எங்காவது துறைமுகத்துக்கு போய், உணவு மற்றும் தண்ணீர் ஸ்டாக் பண்ண வேண்டும் என்று சொன்னார் கேப்டன் சின்னவர்.

சங்கர், பிரபாகரனிடம் “ஆயுதக் கப்பல் வருவதற்கு சிறிது தாமதமாகிறது. அதற்குமுன் கப்பலில் உணவு, மற்றும் தண்ணீர் தீர்ந்துவிடும் போலிருக்கிறது” என்றார்.

பிரபாகரன், கே.பி.-யை தொடர்பு கொண்டு, ஏதாவது செய்யும்படி கூறவே, ஆபிரிக்க நாடான ட்ஜிபோடிக்கு (Djibouti) தமது ஆள் ஒருவரை அனுப்பி வைத்தார் கே.பி.

இந்தக் கப்பலுக்கு 2 மாதங்களுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் சப்ளை செய்வதற்கு ட்ஜிபோடி நாட்டு துறைமுகத்தில் (Port of Djibouti) ஏற்பாடு செய்யப்பட்டது. கப்பல், பாப் எல் மான்டெப் பகுதியில் இருந்து ட்ஜிபோடி துறைமுகத்துக்கு சென்று பொருட்களை நிரப்பி வந்து, மீண்டும் காத்திருக்க துவங்கியது.

கப்பலில் இருந்த 20 பேருக்கும் பொழுதுபோக்கு வாலிபால் விளையாடுவதும், சீட்டுக்கட்டு விளையாடுவதும்தான்.

சங்கர் அவ்வப்போது பிரபாகரனுடன் தொடர்பு கொண்டு, அல்ஜீரியாகாரரின் ஆயுதக் கப்பல் ‘இதோ வருகிறது, அதோ வருகிறது’ என்று சொல்லிக் கொண்டிருந்தார். பாவம், அவரும்தான் என்ன செய்வது? லண்டனில் இருந்து ‘அமைச்சர்’ கூறியதை, இந்தப் பக்கம் கூறிக்கொண்டிருந்தார்.

அதன்பின், மற்றொரு தடவை சங்கர் பிரபாகரனுடன் தொடர்பு கொண்டு, “கே.பி.-யின் ஆளை ட்ஜிபோடிக்கு அனுப்ப சொல்லுங்கள்” என்றார்! அதன் அர்த்தம், கப்பலில் ஏற்றப்பட்ட 2 மாத சப்ளை முடிகிறது! கப்பல் இன்னமும் செங்கடல் வாயிலில் காத்திருக்கிறது.

கதை அத்துடன் முடியவில்லை. கே.பி.-யின் ஆள் அதற்குப் பின்னரும் இரு தடவைகள் ட்ஜிபோடிக்கு செல்ல வேண்டியிருந்தது!

கப்பல் வெற்றிகரமான 8-வது மாதத்தை செங்கடலில் பூர்த்தி செய்தது! அதுவரை சங்கரும், இதோ வருகிறது ஆயுதக் கப்பல், அதோ வருகிறது ஆயுதக் கப்பல் என்று சொல்லிக்கொண்டு இருந்தார். புலிகள் அமைப்பில் புதிதாக இணைக்கப்பட்ட பலருக்கு கொடுப்பதற்கு ஆயுதங்கள் இல்லை. டெலோ இயக்கம், புலிகளை விட வெற்றிகரமாக இயங்கத் துவங்கியது.

கே.பி.-யை தொடர்பு கொண்டார் பிரபாகரன். “உடனடியாக ஆயுதங்கள் வேண்டும்” என்றார்.

“ஆயுதங்களை 10 நாட்களில் ஏற்பாடு செய்து விடலாம். ஆனால் அவற்றை ஏற்றி வருவதற்கு கப்பல் இல்லையே? கப்பல்தான் 8 மாதங்களாக செங்கடலில் நிற்கிறது” என்றார் கே.பி.

இந்த 8 மாதங்களில் கொஞ்சம் கொஞ்சமாக பொறுமையை இழந்திருந்தார் பிரபாகரன்.

சங்கர் ஏற்பாடு செய்த ஆயுதங்களுக்காக 1 மில்லியன் பவுண்ட்ஸ் முன்பணம் கொடுக்கப்பட்டுள்ளது. அரை மில்லியன் பவுண்ட்ஸ், ட்ரவலர்ஸ் செக்குகளாக மாற்றப்பட்டு, லண்டனில் உள்ள அமைச்சரின் வீட்டில் இருக்கிறது. ஒரு கப்பலும், அதில் 20 பேரும், செங்கடலில் வாலிபால் விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள். அந்த ஆயுதங்களை நம்பி, புலிகள் இயக்கத்தில் புதிதாக இணைக்கப்பட்டவர்கள், ஆயுதங்கள் இல்லாமல் இருக்கிறார்கள்.

பொறுமை இழக்காமல் இருக்க முடியுமா?

“அல்ஜீரியாக்காரரை தேடிப்பிடித்து, 1 மில்லியன் பவுண்ட்ஸை உடனே வாங்கவும். கப்பலுடன் திரும்பி வரவும்” என்று இரண்டு.

உத்தரவுகள் பிரபாகரனிடம் இருந்து சங்கருக்கு சென்றன. சங்கர், இதை தனது லண்டன் கூட்டாளிகளுக்கு தெரியப்படுத்தினார்.

“இதற்குப் பிறகு, அல்ஜீரியாக்காரரிடம் இருந்து 1 மில்லியன் பவுண்ட்ஸ் பணத்தை, லண்டனில் இருந்த அமைச்சரும், மற்றையவரும் வாங்கியிருப்பார்களா?”

இந்தக் கேள்விக்கான பதிலை அநேகமாக நீங்கள் ஊகித்திருப்பீர்கள். “அது பட்டை நாமம்தான்” என்று பட்டென்று சொல்லியும் விடுவீர்கள்.

ஆனால், அதுவல்ல கிளைமாக்ஸ்!

லண்டனில் இருந்து நமது அமைச்சர், அவசர அவசரமாக சங்கரை தொடர்பு கொண்டார். “அல்ஜீரியாக்காரருடன் கொஞ்சம் கடுமையாக பேசினோம். பணத்தை கொடுத்து விடுமாறு கடுமையாக கூறினோம்” என்று துவங்கினார்.

“பணம் கிடைத்ததா?”

“நான் சொல்ல வந்தது வேறு விஷயம்” என்ற அமைச்சர், “அல்ஜீரியாக்காரர் என்னுடைய வீட்டுக்கு வந்து, வீட்டை உடைத்து, நாம் வைத்திருந்த அரை பில்லியன் பவுண்ட்ஸ் ட்ராவலர்ஸ் செக்குகளையும் எடுத்துச் சென்றுவிட்டார்” என்றார்!

ஓலலா!

பின்கதை சுருக்கம் என்ன?

1) வாலிபால் கப்பல் திரும்பி வந்தது.

2) சங்கர் வந்து பிரபாகரனை கட்டிப் பிடித்து அழுதார். லண்டனில் இருந்தவர்கள் (அமைச்சரும், மற்றையவரும்) சொதப்பி விட்டார்கள் என்று அந்தப் பக்கம் கையை காட்டிவிட்டார்.

3) சங்கருடன் சென்றிருந்த மனோ மாஸ்டர், சங்கர்மீது கடும் கோபத்தில் குமுறிக் கொண்டிருந்தார்.

4) “இவர்கள் சொன்ன விலைக்கு ஆயுதங்கள் வாங்குவதற்கு சான்சே இல்லை. அதுவும் இப்படி புடலங்காய் வாங்குவதுபோல ஏ.கே.47 வாங்க முடியாது என்று நான் ஆரம்பத்தில் இருந்தே சொன்னேன்” என்றார் கே.பி., பிரபாகரனிடம்.

5) சங்கர் கூறிய காரணங்களை பிரபாகரன் ஏற்றுக் கொண்டார். சங்கர் மன்னிக்கப்பட்டார்.

6) லண்டன் கூட்டாளிகள் வசமாக சிக்கினர். ஆனால், இதில் வரும் அத்தனை பேரிலும், அதிஷ்டசாலி ஒருவர் உண்டென்றால், அந்த மச்சக்காரர், நம்ம லண்டன் அமைச்சர்தான்!

7) லண்டன் கூட்டாளிகள் இருவரையும் இலங்கைக்கு அழைத்து தண்டனை கொடுப்பது என்று முதலில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், நம்ம அமைச்சரின் குடும்பத்தில் வேறு ஆட்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தனர். வெளியே இருந்த ஒரேயொரு நபர் இவர்தான். இவர்தான் குடும்பத்துக்காக உழைக்க வேண்டும் என்ற காரணத்துக்காக, இலங்கைக்கு அழைக்கப்படாமல், தப்பித்துக் கொண்டார்.

8) லண்டனில் இருந்த மற்றையவர், இலங்கைக்கு அழைக்கப்பட்டார். இயக்கத்தில் இருந்த அனைத்துப் பொறுப்புகளும் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டன. அதன்பின், வன்னியில் அவருக்கு கொடுக்கப்பட்ட ‘வேலை’ என்ன என்பதை எழுத நாம் விரும்பவில்லை. விஷயமறிந்த யாரிடமாவது விசாரித்து கொள்ளவும். வன்னியில் நடைப்பிணம் போல வாழ்ந்த அவர், பின்னர் மாரடைப்பில் மரணமடைந்தார்.

9) 2009-ல் யுத்தம் முடிந்து, யாரும் இல்லை என்ற நிலை ஏற்பட்டபின், இந்த மச்சக்காரர், உருத்திரகுமாரனின் நாடு கடந்த அரசில் அமைச்சரானார். அவரது வீட்டை உடைத்து களவாடப்பட்டதாக கூறப்பட்ட அரை மில்லியன் பவுண்ட்ஸ் பற்றி ‘வேறு கதை’ ஒன்றும் இப்போது தெரியவந்துள்ளது.

எத்தனையோ மில்லியன் போய்விட்டதாம், இந்த அரை மில்லியனும் போகட்டும், விட்டு விடலாம்!

இந்த விவகாரம் முடிந்தபோது, புலிகளுக்கு ஆயுதங்கள் மிக மிக அவசரமாக தேவைப்பட்டன. இல்லாவிட்டால், டெலோவின் கை பல விஷயங்களில் உயர்ந்துவிடும் என்ற நிலை இருந்தது. ஆயுதம் வாங்குவதற்காக உடனடியாக லெபனான் புறப்பட்டார் கே.பி.

யாரிடமும் சிக்காமல், மும்பை வழியான சென்னைக்கு ஆயுதம் கொண்டுவந்த கதையை, அடுத்த பாகத்தில் பார்க்கலாம்!

தொடரும்...

Source
nadunadapu 
Read More

Monday, September 25, 2017

Keerthivasan

ஈழப் போரின் இறுதி நாட்கள் – 16

புலிகளுக்காக லண்டனில் அல்ஜீரியரிடம் ஆயுதம் வாங்கிய ‘அமைச்சர்’!


விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எந்த தடங்கலும் இல்லாமல் தொடர்ச்சியாக ஆயுதக் கப்பல்கள் வந்தபோது கிடைத்த பல வெற்றிகள், ஆயுத சப்ளை ட்ரை-அவுட் ஆனபோது மாயமாக மறைந்து போயின. 2002-ம் ஆண்டு, ஆயுத சப்ளை கைமாறியது. அதன்பின் எந்தவொரு தாக்குதலிலும் புலிகள் ஜெயித்து புதிய இடங்களை கைப்பற்றவில்லை.

ஏற்கனவே 2002-க்கு முன் கிடைத்த ஆயுதங்களை வைத்துக் கொண்டு, இலங்கை ராணுவம் முன்னேறுவதை சிறிது காலம் தடுக்க முடிந்தது. அதன்பின் தொடர்ச்சியான பின்வாங்கி, (தேசிய வரைவிலக்கணத்தில், ‘தந்திரோபாய பின்வாங்கல்’) முள்ளிவாய்க்காலில் அனைத்தும் முடிந்து போனது.

“விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் 2002-ல் ஆயுத சப்ளையை தெரியாமல் கைமாற்றி விட்டார். என்ன நடக்கிறது என்பதை ரியலைஸ் பண்ணும் முன், வெள்ளம் தலைக்குமேல் போய்விட்டது” என்றும் ஒரு தரப்பு சொல்கிறது. அது அவ்வளவு சரியான கருத்து அல்ல. காரணம், அதற்கு முன்பும் சில தடவைகள் வேறு ஆட்களை வைத்து செய்ய முயன்ற ஆயுத இறக்குமதி முயற்சிகள், செம அடி வாங்கியிருந்தன.

2002-ம் ஆண்டு ஆயுத சப்ளை இலாகாவையும், கப்பல்களையும் கே.பி.-யிடம் இருந்து கைமாற்றுவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு, மற்றொருவரை வைத்து செய்ய முயன்ற ஆயுத இறக்குமதி பற்றி பார்க்கலாம். இந்த விவகாரத்தை ஏன் பிரஸ்தாபிக்க வேண்டியுள்ளது என்றால், “விஷயம் தெரியாதவர்கள் ஆயுத இறக்குமதி செய்ய முயன்றால், சொதப்பலில் முடியும்” என்பதை பிரபாகரன், ‘ஹார்டு வேயில்’ பல வருடங்களுக்கு முன்பே அனுபவ ரீதியாக அனுபவித்தவர் என்பதை காட்டுவதற்காகவே!

அப்படியிருந்தும், 2002-ல் ஆயுத சப்ளையை முழுமையாக கைமாற்றி விட்டதை, என்னவென்று சொல்வது? நாகரீகமாக சொல்வதானால், விதியின் விளையாட்டு என்று வைத்துக் கொள்வோம்.

நாம் கூறும் சம்பவம் துவங்கியது தமிழகத்தில். 1980-களின் நடுப்பகுதியில். எம்.ஜி.ஆர். ஆட்சி நடந்துகொண்டிருந்த காலம் அது. அதுவரை புலிகளிடம் அதிகமாக இருந்தவை, இந்திய அரசால் ரகசியமாக கொடுக்கப்பட்ட ஏ.கே-47 ரக துப்பாக்கிகள்தான். இந்திய அரசே, தமது ராணுவத்தில் போட்டு அடித்து, அடிமாடாக கொடுத்த, பழைய துப்பாக்கிகள்.

அப்படியான நிலையில், தோளில் வைத்து டாங்கிகளையே சுடக்கூடிய புத்தம்புதிய ஆர்.பி.ஜி. (RPG – Rocket Propelled Grenade) ரக துப்பாக்கிகள் லெபனானில் வைத்து கே.பி.-யால் வாங்கப்பட்டன. அவற்றை கார்கோ கப்பல் ஒன்றில் ஏற்றி அனுப்பும் ஏற்பாடுகளும் கே.பி.யால் செய்யப்பட்டன.

அந்த நாட்களில், புலிகளின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட, பல தளபதிகள் தமிழகத்தில்தான் தங்கியிருந்தார்கள். இதனால், ஆயுதக் கப்பலை இந்தியாவுக்கு கொண்டுவருவது என்றும், அதன்பின் படகுகள் மூலம் வேதாரண்யத்தில் இருந்து இலங்கை கொண்டு செல்வது என்றுமே திட்டமிடப்பட்டது.

லெபனானில் பெறப்பட்ட ஆயுதங்கள், பெரிய கார்கோ கண்டெயினர் (40 அடி கண்டெயினர்) ஒன்றில் ஏற்றப்பட்டு, அவற்றுக்கு மேல் மறைப்பு ஒன்று போடப்பட்டது. அதன்மேல் ஒரு பழைய பிரிண்டிங் மெஷின் ஏற்றப்பட்டது. இந்த 40 அடி கண்டெயினர், போர்ட் ஆஃப் பெய்ரூட் துறைமுகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

போர்ட் ஆஃப் பெய்ரூட் துறைமுகம், பெய்ரூட்டின் கடற்கரை (மெடிட்டரேனியன் கடல்) ஓரமாக, செயின்ட் ஜோர்ஜ் பேயின் (Saint George Bay) கிழக்கு பகுதியில் உள்ளது. இங்கிருந்து கார்கோ கப்பல்கள், ட்ரான்ஸ் ஷிப்மென்ட் கண்டெயினர்களுடன் இந்தியா செல்வது வழக்கம். கப்பலில் ஆயுதங்கள் ஏற்றப்பட்ட நேரத்தில், கே.பி. அங்கிருந்தார். கப்பல் சென்னை துறைமுகத்தை நோக்கி புறப்பட்டது.

அதன்பின் விமானம் மூலம் புறப்பட்ட கே.பி., சென்னை வந்தடைந்தார்.

கப்பல் சென்னை துறைமுகத்தை அடையும் முன், தமிழக முதல்வர் எம்.ஜி.ஆருடன் அவரது ராமாவாரம் தோட்டத்தில் சந்திப்பு ஒன்று நடந்தது. பிரபாகரனும், கே.பி.-யும் எம்.ஜி.ஆரை சந்தித்தனர். கப்பலில் கண்டெயினர் ஒன்று வருகிறது என்ற விஷயம் எம்.ஜி.ஆருக்கு சொல்லப்பட்டது.

“கண்டெயினரை திறந்தவுடன், பழைய பிரிண்டிங் மெஷின் மட்டுமே தெரியும்” என்று எம்.ஜி.ஆரிடம் சொல்லியபோது, அவர் விஷயத்தை புரிந்து கொண்டார். ஒரு சிரிப்புடன், அப்போதைய தமிழக தலைமைச் செயலக அதிகாரி ஒருவரை போனில் அழைத்து, “நமக்கு வேண்டியவர்களுக்கு பிரிண்டிங் மெஷின் ஒன்று கப்பலில் வருகிறது. அவர்கள் உங்களிடம் விபரம் சொல்வார்கள். கிளியர் பண்ண ஏற்பாடு செய்யுங்க” என்றார்.

சந்திப்பு முடிந்து புறப்படும்போது எம்.ஜி.ஆர்., “உங்களுடைய ஆயுதங்கள் ஒவ்வொரு தடவையும் வரும்போது, அதில் உள்ள ஆயுதங்களில் ஒன்றை எனக்கு கொடுத்து விடுங்கள். ஞாபகார்த்தமாக வைத்திருக்க வேண்டும்” என்றார்.

சென்னை துறைமுகத்தில் கண்டெயினர் எவ்வித சிக்கலும் இன்றி இறக்கப்பட்டது. ட்ரக் ட்ரெயிலர் ஒன்றில் ஏற்றப்பட்டது.

பிரபாகரன் அப்போது தங்கியிருந்த வீடு, திருவான்மியூர் அருகே கடற்கரை ஓரமாக இருந்தது. வீட்டைச் சுற்றி பெரிய கம்பவுண்ட் மற்றும் இடவசதி உடைய தனி வீடு அது. வீட்டின் கம்பவுண்டுக்கு உள்ளே கண்டெயினர் கொண்டுவந்து திறக்கப்பட்டது.

புலிகள் இயக்கத்துக்கு முதல் தடவை ஒரு கண்டெயினரில் ஆயுதங்கள் வந்தது அப்போதுதான். பிரபாகரன் உட்பட, அனைவருக்கும் த்ரில்.

எல்லாமே சரியாக முடிந்தபின் பிரபாகரன், மீண்டும் ராமாவாரம் தோட்டம் சென்று எம்.ஜி.ஆரை சந்தித்து, நன்றி தெரிவித்ததுடன், அவர் கேட்டபடியே, ஞாபகார்த்தமாக புத்தம்புதிய ஏ.கே.-47 துப்பாக்கி ஒன்றையும் கொடுத்துவிட்டு வந்தார். (ஆர்.பி.ஜி. கொடுக்கவில்லை)

இந்த விவகாரம், விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குள் ஆயுதம் இறக்கி பெயரை தட்டிச் செல்லும் ஆசையை சிலருக்கு ஏற்படுத்தியது. அதில் முக்கியமானவர், சங்கர். அவரும் அப்போது சென்னையில்தான் தங்கியிருந்தார்.

சங்கரின் நிஜப் பெயர் சொர்ணலிங்கம், பிரபாகரனின் ஸ்கூல்மேட். இளமைக் கால நண்பர். கனடாவில் சிறிதுகாலம் வசித்தபோது, ஏர்-கனடாவின் மொன்ட்ரியல் மெயின்டெனென்ஸ் ஹாங்கரில் பணிபுரிந்தவர்.

ஏர்-கனடா, பிரெஞ்ச் தயாரிப்பு ஏர்-பஸ் விமானங்களின் திசையில் போவதற்கு முந்திய காலம் அது. மொன்ட்ரியல் ஹாங்கரில் அப்போதெல்லாம் DC-9 மற்றும் 727 விமானங்களுக்கே அதிகமாக மெயின்டெனென்ஸ் ஒர்க் செய்து கொண்டிருந்தார்கள். (இந்த இரு ரகங்களையும் ஏர்-கனடா 1990-களின் ஆரம்பத்திலேயே தலைமுழுகி விட்டது) சங்கர் பணிபுரிந்தது, DC-9 ராஸ்டரில்.

1983-ல் ஏர்-கனடா வேலையை உதறிவிட்டு, சென்னை வந்த சங்கர், தமது இளமைக்கால நண்பர் பிரபாகரனைச் சந்தித்து, விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார். வெளிநாட்டில் இருந்து வந்தவர் மற்றும், பிரபாகரனின் இளமைக்கால நண்பர் என்பதால், இயக்கத்தில் இணைந்த நாளில் இருந்தே சங்கருக்கு முக்கியத்துவம் இருந்தது.

இந்த சங்கருக்குதான், ஆயுதம் இறக்கும் ஆசை வந்தது.

அந்த நாட்களில், விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு சென்னை அடையாறில் அரசியல் அலுவலகம் ஒன்று இருந்தது. ஆன்டன் பாலசிங்கம், பேபி சுப்ரமணியம் போன்றவர்கள் அந்த அலுவலகத்தில் இருந்து செயல்பட்டனர். யாரும் வந்து போகக்கூடிய இடம் அது. அதைத் தவிர மற்றொரு அலுவலகமும் இருந்தது. அங்கே வெளியாட்களுக்கு அனுமதி இல்லை.

திருவான்மியூரில் இயங்கிய அந்த அலுவலகத்தை அப்போது எம்.ஓ. (மிலிட்டரி ஆபீஸ்) என்று சொல்வார்கள். மனோ மாஸ்டர் அந்த அலுவலகத்துக்கு பொறுப்பாளராக இருந்தார். சங்கர் அதிகம் தென்படுவது அங்கேதான்.

ஆயுதம் இறக்கும் ஆசை வந்தவுடன், சங்கர் அங்கிருந்து தமக்கு நெருக்கமானவர்களை தொடர்பு கொண்டார். அவர் முக்கியமாக தொடர்பு கொண்டது, லண்டனில் இருந்த இருவரை. அந்த இருவரில் ஒருவர் தற்போது உயிருடன் இல்லை. மற்றையவர் இப்போதும் பிரிட்டனில்தான் உள்ளார். அவர் தற்போது, நாடு கடந்த தமிழீழ அரசு என்ற அமைப்பின் முன்னணி பிரமுகராக உள்ளார்.

நாடு கடந்த தமிழீழ அரசு என்பது, உருத்திரகுமார் தலைமையில், அமெரிக்காவை தலைமையகமாக கொண்டு இயங்கும் ஒரு அமைப்பு. அதில் விவசாய துறையில் இருந்து, விண்வெளி துறை வரை, பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தைவிட அதிக எண்ணிக்கையில் அமைச்சர்கள் உள்ளார்கள். நாம் குறிப்பிடும் நபரும், ‘பிரதமர்’ உருத்திரகுமாரின் அமைச்சரவையில் ஒருவர்.

சென்னையில் இருந்த சங்கர் தமது ஆயுதம் இறக்கும் ஆசையை இவர்களிடம் சொன்னதில், இவர்கள் லண்டனில் நாலைந்து இடங்களில் விசாரித்து ஒரு கனெக்ஷனை பிடித்து விட்டார்கள். அந்த நபர் ஒரு அல்ஜீரிய பிரஜை. “ஆயுதங்கள்தானே.. பேஷா இறக்கிடலாம்” என்றார் அவர்.

ஆயுத வியாபார தொடர்பு இவ்வளவு சுலபமாக கிடைத்ததில் அமைச்சருக்கு பேரானந்தம். “இதைத்தானா ஏதோ பெரிய விஷயம் என்று சொல்லிக் கொள்கிறார்கள்? ஆயுதம் சப்ளை செய்ய அருமையான ஆள் கைவசம் உள்ளார். உடனே புறப்பட்டு வந்தால், ஆயுதங்களை அள்ளிவிடலாம்” என்று சங்கருக்கு தகவல் கொடுத்தார் அமைச்சர்.

சங்கர் கனடாவில் இருந்து வந்தவர் என்பதால், லண்டன் செல்வதில் சிக்கல் ஏதும் இல்லை. பிரபாகரனிடம் விஷயத்தைக் கூறியதில்,

அவரும், இவரை லண்டனுக்கு அனுப்பி வைத்தார். லண்டனில், தமது அல்ஜீரிய தொடர்பாளரிடம் சங்கரை அழைத்துச் சென்றார் அமைச்சர். அந்த அல்ஜீரியரோ, இவர்கள் அனைவரையும் விட கெட்டிக்காரர். இவர்கள் எந்த ரக ஆயுதம் கேட்டாலும், அடுத்த இரண்டு மணி நேரத்திலேயே காட்டிவிடுவார். ஒரேயொரு விஷயம், ஆயுதத்தை போட்டோவில் காட்டுவார்.

போட்டோவில் காண்பிக்கும் ஆயுதம் பற்றி, அந்த ஆயுதத்தை தயாரித்தவருக்கே தெரியாத புள்ளிவிபரம் எல்லாம் சொல்லி அசத்தினார் அவர்.

அவரது ஆயுத டெமொன்ஸ்ட்ரேஷன் இவர்களுக்கு நன்றாக பிடித்துப் போனது. லண்டனில் இருந்தே பிரபாகரனுடன் தொடர்பு கொண்ட சங்கர் விபரங்களை கூறினார். கே.பி. லெபனானில் இருந்து பெற்றுக் கொடுத்த ஆயுதங்களின் விலைப் பட்டியலை அனுப்புமாறு கேட்டுக் கொண்டார். அதுவும் போய் சேர்ந்தது.

விலை பேசும் படலம் ஆரம்பமானது. சங்கருக்கும், அமைச்சருக்கும், கே.பி. ஏற்கனவே ஆயுதம் வாங்கிய விலை, பிரபாகரன் அனுப்பிய பட்டியலில் இருந்து தெரியும் என்பதால், அதை மையமாக வைத்தே விலை பேச திட்டமிட்டார்கள். ஆனால் அல்ஜீரியாக்காரர் சொன்ன விலை, இவர்களை புளகாங்கிதம் அடைய வைத்தது.

உடனே சங்கர், பிரபாகரனை தொடர்பு கொண்டார். “கே.பி. ஆயுதங்களுக்கு லெபனானில் அதிக விலை கொடுத்து ஏமாந்து விட்டார். அவர் 1800 அமெரிக்க டாலருக்கு வாங்கிய ஆர்.பி.ஜி.-யை, இங்கே ஒருவர் 1675 டாலருக்கு கொடுக்க ரெடியாக உள்ளார்” என்றார்.

ஆயுதங்களை வாங்கி அனுப்புமாறு பிரபாகரன் உத்தரவிட்டார்.

அமைச்சரும், சங்கருமாக அல்ஜீரியாக்காரருடன் டீல் பேசி முடித்தார்கள். மொத்தம் 1.5 மில்லியன் பிரிட்டிஷ் பவுண்ட்ஸ் டீல். அதில் 1 மில்லியன் பவுண்ட்ஸ் முன்பணம் கொடுத்துவிட வேண்டும். புலிகள், தமது சொந்த கப்பலை பாதி தூரம் கொண்டுவர வேண்டும்.

செங்கடலில், சூயஸ் கால்வாய் இணைப்பு ஏற்படும் Gulf of Suez பகுதிக்கு புலிகளின் கப்பல் வந்து காத்திருக்க வேண்டும். அல்ஜீரியாக்காரரின் ஆயுதக் கப்பல் அங்கே வந்து சேரும். கடலில் வைத்தே ஆயுதங்களை அந்தக் கப்பலில் இருந்து இந்தக் கப்பலுக்கு மாற்றி விடுவார்கள்.


Gulf of Suez பகுதிக்கு ஆயுதக் கப்பல் வந்து, ஆயுதங்களை சரிபார்த்த உடன், மீதி அரை மில்லியன் பவுண்ட்ஸை லண்டனில் வைத்து ட்ரவலர்ஸ் செக்காக கொடுத்துவிட வேண்டும். அந்த பணம் கிடைத்த பின்தான், புலிகளின் கப்பலில் ஆயுதங்கள் ஏற்றப்படும். இதுதான் டீல்.

பிரபாகரனின் ஒப்புதலும் கிடைக்கவே, முன்பணம் 1 மில்லியன் அல்ஜீரியாக்காரருக்கு கொடுக்கப்பட்டது. மீதி, அரை மில்லியன் பவுண்ட்ஸை ட்ரவலர்ஸ் செக்காக எடுத்து, அமைச்சர் தமது லண்டன் வீட்டில் வைத்துக் கொண்டார்.

செங்கடலுக்கு கப்பலை கொண்டுவரும் ஏற்பாடுகளை செய்ய, சங்கர் மீண்டும் சென்னை திரும்பினார்.

புலிகளின் கப்பல் போக்குவரத்து அப்போது, கே.பி.-யின் வசம் இருந்தது. அதனால், சங்கர் கேட்டபடி கப்பல் ஒன்றை அனுப்பி வைக்குமாறு பிரபாகரன் கே.பி.-யிடம் சொன்னார்.

டீலை இதுவரை முடித்துவிட்டு, சென்னையில் தங்கிவிட சங்கர் விரும்பவில்லை. எனவே அந்தக் கப்பலில் தாமும் செல்ல வேண்டும் என்றார்.

புலிகளின் திருவான்மியூர் எம்.ஓ. அலுவலகத்தில் பொறுப்பாளராக இருந்த மனோ மாஸ்டர் பற்றி ஏற்கனவே குறிப்பிட்டோம். அவர்தான் அந்த நாட்களில், பிரபாகரனுக்கு அருகே டெக்னிகல் ஆலோசகர் போல செயல்பட்டவர். “சங்கரும் கப்பலில் போவதுதான் நல்லது” என்று கூறிய மனோ மாஸ்டர், “நானும் சங்கருடன் போகிறேன்” என்றார்.

சங்கர், மனோ மாஸ்டர் ஆகிய இருவருடன், தினேஷையும் அழைத்து செல்லுமாறு பிரபாகரன் கூறினார். இந்த தினேஷ், தமிழ்ச்செல்வன் அல்ல. (தமிழ்ச்செல்வனின் ஆரம்பகால பெயரும் தினேஷ்) இவர் வேறு. அப்போது சென்னையில் பிரபாகரனின் கம்யூனிகேஷன் தொடர்பாளராக இருந்தவர் இந்த தினேஷ்.

ஒரு காரியத்துக்கு ஒருவரை அனுப்பினால், தமது நம்பிக்கைக்குரிய மற்றொருவரையும் சேர்த்து அனுப்புவது பிரபாகரனின் வழக்கம். அந்த வகையில் தினேஷூம் இதில் இணைக்கப்பட்டார்.

கே.பி. தம்மிடம் இருந்த கப்பல் ஒன்றை சிங்கப்பூரில் இருந்து அனுப்பினார். அந்தக் கப்பல் செங்கடல் நோக்கிச் செல்லுமுன், இந்திய கடல் பகுதிக்குள் வந்தது. சென்னையில் இருந்து சங்கர், மனோ மாஸ்டர், தினேஷ் ஆகியோர் ஒரு படகு மூலமாக சென்று இந்தக் கப்பலில் ஏறிக் கொண்டனர். கப்பலில் சுமார் 20 விடுதலைப்புலிகள், மற்றும் மாலுமிகள் இருந்தனர்.

கப்பல், செங்கடலை நோக்கி செல்ல துவங்கியது.

தொடரும்...
Source
nadunadapu 
Read More
Keerthivasan

ஈழப் போரின் இறுதி நாட்கள் – 15

பொட்டு அம்மானின் ‘ஐவரி கோஸ்ட்’ கப்பல், வந்து கொண்டே இருக்கிறது!



விடுதலைப் புலிகள் அமைப்பின் உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மானால் செய்யப்பட்ட முதலாவது ஆயுத இறக்குமதி முயற்சி 2006-ம் ஆண்டு பிற்பகுதியில் துவங்கியது. உக்ரேனில் இருந்து விமானம் மூலம் ஆயுதம் இறக்க பொட்டு அம்மான் செய்த முயற்சிக்கும் இதற்கும் உள்ள பெரிய வேறுபாடு, இந்த டீலுக்காக பொட்டு அம்மான் பிரத்தியேகமாக யாரையும் வன்னியில் இருந்து அனுப்பவில்லை.

ஏற்கனவே பிரான்ஸில் வசித்து வந்த ஒருவர்தான், பொட்டு அம்மானின் முதலாவது ஆயுத இறக்குமதி டீலின் முகவர். நாம் குறிப்பிடும் நபர் தற்போதும் ஐரோப்பாவில் வசிப்பதால், பெயர் வேண்டாம். வேறு சில விபரங்கள் தருகிறோம்.

இந்த நபர், வன்னியில் பொட்டு அம்மானின் கீழ் பணிபுரிந்தவர். இலங்கையின் முக்கிய அரசியல் தலைவர் ஒருவரை கொல்லும் மனித வெடிகுண்டு தாக்குதல் முயற்சியில் தொடர்புடையவர். அந்த தாக்குதலுக்காக பொட்டு அம்மானால் வன்னியில் இருந்து கொழும்பு அனுப்பி வைக்கப்பட்டவர்.

கொழும்பில் குண்டு வெடித்தது. ஆனால், அரசியல் தலைவர் காயத்துடன் தப்பித்துக் கொண்டார்.

இதையடுத்து, இலங்கை உளவுத்துறை அதனுடன் தொடர்புடைய சிலர் பற்றி தெரிந்து கொண்டு தேடத் துவங்கியது. இவருக்கும், அந்த குண்டு வெடிப்புக்கும் இடையிலுள்ள தொடர்பை இலங்கை உளவுத்துறை தெரிந்து கொண்டதை புலிகளின் உளவுப்பிரிவு தெரிந்து கொண்டது.

அதையடுத்து இவரை கொழும்புவில் இருந்து வன்னிக்கு வருமாறு சொன்னார்கள். அவரோ, வன்னிக்கு செல்லாமல், கொழும்பில் இருந்து வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார். அவர் போய் சேர்ந்த இடம், பிரான்ஸ்.

பிரான்ஸில் இருந்து அவர், பொட்டு அம்மானுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். அப்போதுதான், பொட்டு அம்மான் புலிகளின் உளவுப்பிரிவு சார்பில் ஆயுதம் இறக்க யோசித்துக் கொண்டிருந்த காரணத்தால், ஏற்கனவே வெளிநாட்டில் இருந்த இவர் உதவ முன்வந்தார்.

மேற்கு ஆப்பிரிக்க நாடு ஐவரி கோஸ்ட்டில் (Ivory Coast) இருந்து ஆயுதம் இறக்கலாம் என்ற ஐடியாவை இவர் கொடுத்தார். அந்த முயற்சிக்கு இவரையே தமது பிரதிநிதியாக நியமித்துக் கொண்டார் பொட்டு அம்மான்.

ஆயுதம் வாங்குவதற்கு ஐவரி கோஸ்ட் நாட்டை இவர் எப்படி தேடிப் பிடித்தார்?


ஐவரி கோஸ்ட் ஒருகாலத்தில் பிரான்ஸ் நாட்டின் காலனியாக இருந்த நாடு. 1960-ல் பிரான்ஸிடம் இருந்து சுதந்திரம் பெற்றாலும், அதன்பின்னரும் பிரான்ஸ் நாட்டுடன் பல விஷயங்களில் தொடர்பில் இருந்தது. அந்த ஆப்பிரிக்க நாட்டின் அரசு மொழியே பிரெஞ்ச்தான்.

ஐவரி கோஸ்ட்டின் பிரஜைகள் பலர் பிரான்ஸில் வசிக்கிறார்கள் (நம்ம பாண்டிச்சேரிக்காரர்கள் பிரான்ஸில் வசிப்பது போல). அப்படி வசித்த ஒருவர், ஐவரி கோஸ்ட் ராணுவத் தளபதி ஒருவரின் உறவினர். அவர்தான், பொட்டு அம்மானின் பிரதிநிதியின் ஐவரி கோஸ்ட் தொடர்பாளர்.

பொதுவாகவே ஆப்பிரிக்க நாடுகளில் ஊழல் அதிகம். அரசு அலுவல்களில் பணம் கொடுத்து பல காரியங்கள் செய்யலாம். அதே நேரத்தில் ஏமாற்றுபவர்களும் அதிகம். பிரான்ஸிலுள்ள ஐவரி கோஸ்ட்காரர், “நீங்க நேரில் சென்றால், எனது உறவினர் மூலம் சுலபமாக ஆயுதம் வாங்கலாம்” என்று பொட்டு அம்மானின் ஆளிடம் கூறியிருக்கிறார்.

இந்தக் கதை வன்னிக்கு செல்லவே, தமது பிரதிநிதியை, பிரான்ஸில் இருந்து ஐவரி கோஸ்ட்டுக்கு அனுப்பி வைத்தார் பொட்டு அம்மான். அனுப்பி வைக்கப்பட்ட நபர், அதற்குமுன் வாழ்க்கையில் ஒரு தடவைகூட ஆயுதம் வாங்கிய அனுபவமற்ற ஆள்!

இவர்கள் ஐவரி கோஸ்டில் இருந்து ஆயுதம் இறக்கலாம் என்று எப்படி நம்பினார்கள் என்பதே மகா ஆச்சரியமான விஷயம். ஒருவேளை ஐவரி கோஸ்ட்டின் ராணுவ நிலவரம் பற்றி இவர்களுக்கு அவ்வளவாக தெரிந்திருக்கவில்லையோ, என்னவோ!

ஐவரி கோஸ்ட், பிரான்ஸில் இருந்து சுதந்திரம் பெற்றபின் ஒரு வருடத்துக்கு நாட்டுக்கு ராணுவமே இல்லாமல் இயங்கியது. அதன்பின் பிரான்ஸின் உதவியுடன் சிறியதாக ராணுவம் ஒன்றை அமைத்துக் கொண்டது. Force Republiques de Cote d’Ivoire (FRCI) என்பதே அவர்களது ஆயுதப் படைகளின் பொதுப் பெயர்.

ஐவரி கோஸ்ட்டில், 550 கி.மீ. நீளமான கடல் எல்லை இருந்தும், அவர்களது கடற்படை மிகவும் சிறியது. வெறும் 650 பேரை மட்டுமே கொண்டிருந்த படை அது. விமானப்படையில் 100-க்கும் குறைவானவர்களே இருந்தார்கள்.

1987-ல் FRCI மாற்றியமைக்கப்பட்டது. ராணுவம், ஐந்து பிராந்திய தலைமையகங்களாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொன்றுக்கும் தலைவராக ஒவ்வொரு கர்னல் நியமிக்கப்பட்டார். இந்த ஐந்து பிரிவுகளில் ஒன்று Bouaké என்ற இடத்தில் அமைந்திருந்தது. அதன் தலைவரான கர்னலின் உறவினர்தான், நம்ம பொட்டு அம்மானின் பிரான்ஸ் பிரதிநிதியின், ஆபிரிக்க வழிகாட்டி.

Bouaké-வில் அமைந்திருந்த ராணுவ தலைமையகத்தில் ஐவரி கோஸ்ட்டின் இன்ஃபான்ட்ரி, ஆட்டிலரி, மற்றும் இஞ்சினியரிங் பட்டாலியன்கள் இருந்தன. ஆனால், இவர்கள் நேரடியாக ஆயுதம் வாங்குவதில்லை. நாட்டின் பெரிய நகரமான Abidjan-ல் (தலைநகர் அல்ல) இருந்த தலைமை அலுவலகமே ராணுவத்துக்கு ஆயுதம் வாங்கும் பணியை கவனித்தது.

அப்படியிருந்தும், Bouaké ராணுவ கர்னலால் ஆயுதம் பெற்றுக் கொடுக்க முடியும் என்பதை பொட்டு அம்மானின் ஆட்கள் எப்படி நம்பினார்கள் என்பது புரியவில்லை.

அதைவிட, பொட்டு அம்மானின் ஆள் ஐவரி கோஸ்ட்டில் போய் இறங்கிய 2006-ம் ஆண்டு, ராணுவ ரீதியில் அவர்களுக்கே மகா சிக்கலான காலப்பகுதி.

2004-ல் பிரான்ஸ் நாட்டு அமைதிப்படை ஐவரி கோஸ்ட்டில் இருந்தது. பிரான்ஸ் அமைதிப்படை மீது ஐவரி கோஸ்ட் விமானப்படை முட்டாள்தனமாக குண்டு வீசியது. அப்போது பிரான்ஸ் ஜனாதிபதியாக சிராக் இருந்தார். அவர் போட்ட உத்தரவு என்ன தெரியுமா? “ஐவரி கோஸ்ட் விமானப் படையின் அனைத்து விமானங்களையும் அழித்து விடுங்கள். யமோசோக்ரோ விமான நிலையத்தையும் கைப்பற்றி விடுங்கள்”

பிரெஞ்ச் ராணுவம் களத்தில் இறங்கி, ஐவரி கோஸ்ட் விமானப்படையை துடைத்து எடுத்துவிட்டது. விமானப் படையின் Su-25 தரை தாக்குதல் விமானங்கள், Mi-24 தாக்குதல் ஹெலிகாப்டர்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன. யமோசோக்ரோ விமான நிலையம் கைப்பற்றப்பட்டது.

அதன்பின் ஐவரி கோஸ்ட் ராணுவ ரீதியாக என்ன செய்கிறது என்பதில் பிரான்ஸ் எப்போதும் ஒரு கண் வைத்திருந்தது. பிரான்ஸை மீறி, ஐவரி கோஸ்ட்டுக்கு யாரும் ஆயுதம் விற்க முடியாது என்ற நிலைமை இருக்கையில்தான், ஆயுதம் வாங்க ஐவரி கோஸ்ட் போய் இறங்கினார் பொட்டு அம்மானின் ஆள்.

2006-ல் துவங்கிய இந்த முயற்சியால், 2007-ம் ஆண்டு நடுப்பகுதிவரை ஐவரி கோஸ்ட் ஆயுதங்கள் வருகின்றன என்று பொட்டு அம்மான், பிரபாகரனுக்கு சொல்லிக் கொண்டு இருந்தார். சுமார் 6 மில்லியன் டாலர் பணம் முன்பணமாக கொடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.

2002-ம் ஆண்டு அமைதிப் பேச்சுக்களின்பின், வெளிநாடுகளில் உள்ள தமிழர்களிடம் பெருமளவு பண வசூலில் புலிகள் அமைப்பு இறங்கியிருந்த காரணத்தால், இந்த 6 மில்லியன் டாலர் பெரிய விஷயமாக அவர்களுக்கு இருக்கவில்லை.

2007-ன் நடுப் பகுதியில் பொட்டு அம்மானின் பிரான்ஸ் பிரதிநிதி, “ஆயுத டீல் ஊத்திக் கொண்டது” என்பதை வன்னிக்கு அறிவித்தார். ”ஆனால், மற்றொரு டீலை பிடித்திருக்கிறேன். ஐவரி கோஸ்டில் புலிகளுக்காக கப்பல் ஒன்றை வாங்கலாம். மேலும் கொஞ்சம் பணம் தேவை” என்றார்.

இந்த கப்பல் நிதிக்காக, ஐரோப்பிய நாடு (சுவிஸ்) ஒன்றில் தமிழ் மக்களிடம் பிரத்தியேக வசூல் செய்யப்பட்டது. “உங்கள் பெயரில் பேங்கில் கடன் எடுக்கிறோம். அதன் மாத இன்ஸ்டால்மென்டை நாமே கட்டி விடுகிறோம்” என்ற டீலில் சில மில்லியன் டாலர்கள் சேர்ந்தன. அவை ஐவரி கோஸ்ட் கப்பலுக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

கடல் புலிகளின் தலைவர் சூசை இயக்கிய கப்பல்கள் ஒவ்வொன்றாக ஆயுதங்களுடன் வந்து அடிபட்டு மூழ்கிவிட்ட நிலையில், இந்த ஐவரி கோஸ்ட் கப்பல் எங்கே என்று கேட்டார் பிரபாகரன்.

“வந்துகொண்டு இருக்கிறது” என்று சொன்னார்கள். 2009-ம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடியும்வரை ஐவரி கோஸ்ட் கப்பல் வரவில்லை. அதற்குப் பின், “கப்பல் எங்கே?” என்று கேட்க ஆளில்லை.

வராத கப்பலுக்காக சுவிஸ்ஸில் பல தமிழர்கள் இன்னமும் இன்ஸ்டால்மென்ட் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

சரி. கப்பல் வாங்க போன பொட்டு அம்மானின் ஆள் எங்கே? அவர் ஐரோப்பிய நாடு ஒன்றில், 3 சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு உரிமையாளராக ஜம்மென்று இருக்கிறார். அடுத்த ஈழப் போர்வரை அவர் வியாபாரத்தை கவனிக்கட்டும்.
“புலிகள் ஏன் தோற்றார்கள்?” என்று கேட்டால், “அவர் காட்டிக் கொடுத்தார், இவர் காட்டிக் கொடுத்தார்” என்று திரும்பிய திசையில் எல்லாம் கைகளை காட்டுகிறார்கள். புலிகள் தோற்ற முக்கிய காரணமே, யுத்தம் புரிய போதிய ஆயுதங்கள் இல்லாமைதான். 2002-ம் ஆண்டின்பின், வன்னிவரை போய் சேர்ந்ததே மொத்தம் சுமார் 25 டன் (25,000 கிலோ) மட்டுமே. அதாவது 7 ஆண்டுகளில், அடிபடாமல் போய்ச் சேர்ந்தவை அவ்வளவுதான்.

ஆயுத வியாபாரத்தின் அரிச்சுவடிகூட தெரியாத ஆட்கள் ஆயுதம் வாங்க நியமிக்கப்பட்ட நிலையில், இவர்களை காட்டிக் கொடுக்க யாராவது வெளியே இருந்து வரவும் வேண்டுமா? சொந்த முயற்சியிலேயே சொதப்பினார்கள் என்று பச்சையாக சொல்ல முடியாது. “யாரோ காட்டிக் கொடுத்தார்கள்” என்றே கௌரவமாக வைத்துக் கொள்வோம்.

லண்டனில் உள்ள புலிகளின் முக்கியஸ்தர் ஒருவர், கடல் புலிகளுக்காக Naval Optronics Radar Tracker சாஃப்ட்வேர் ஒன்றை வாங்க, தமது சொந்த கிரெடிட் கார்டில் ஆர்டர் கொடுத்ததை சொல்லவா? கனடாவில் இருந்து ஆயுதம் வாங்க அமெரிக்கா போன புலிகளின் பிரதிநிதிகள் இருவர், ஆயுத வியாபாரி அமெரிக்க உளவுத்துறை FBI ஏஜென்ட் என்பதைகூட புரிந்து கொள்ளாமல், பேரம் பேசி சிக்கிக் கொண்டதை சொல்லவா?

சொந்தமாகவே சிக்கிக் கொள்ளும் திறமைசாலிகளை காட்டிக் கொடுக்க, வெளியே இருந்து யாராவது ‘துரோகி’ வரவும் வேண்டுமா?

2002-ம் ஆண்டுவரை புலிகளுக்கு கே.பி.-யின் ஆயுத சப்ளை ஒழுங்காக சென்று கொண்டிருந்த காரணம், அந்த ட்ரேடின் நெளிவு சுழிவுகள் அவருக்கு தெரிந்திருந்ததே. அப்போது போய் இறங்கிய ஆயுதங்கள்தான் புலிகளின் ராணுவ வெற்றிகளுக்கு பெரிதும் காரணமாக இருந்தன.

தோளில் வைத்து டாங்கிகளையே சுடக்கூடிய RPG (Rocket Propelled Grenade – shoulder-fired, anti-tank weapon system which fires rockets equipped with an explosive warhead) கே.பி.-யால் புலிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட போது, இலங்கை ராணுவத்திடமே அவ்வகை ஆயுதங்கள் இருக்கவில்லை. புலிகள் அவற்றை உபயோகித்தபோது, அது என்ன என்று புரியாமல் திணறியது இலங்கை ராணுவம்.

புலிகள் அந்த ஆயுதத்தை உபயோகித்து தாக்குதல் நடத்தியபோது, புலிகளின் தளபதிகள் மட்டத்தில், “இதை யார் அனுப்பியது?” என்ற பேச்சே பிரதானமாக இருந்தது. அப்போது, புலிகளின் சில தளபதிகள் சென்னையில் இருந்தனர். ஆயுதங்கள் அனுப்பியதால் இயக்கத்துக்குள் ஏற்படும் கியாதி எப்படியானது என்பதை, புலிகளுக்கு RPG போய்ச் சேர்ந்த நாட்கள் காட்டின.

பின்னாட்களில், வன்னிக்குள் இலங்கை ராணுவத்தின் கமாண்டோ தாக்குதலில் கொல்லப்பட்ட புலிகளின் தளபதி சங்கரும் அப்போது சென்னையில் இருந்தார். (சங்கர்தான் புலிகளின் விமான பிரிவை ஆரம்பத்தில் உருவாக்கியவர்)

சென்னையில் இருந்த சங்கர், தமது சோலோ முயற்சி ஒன்றில் புலிகளுக்கு ஆயுதம் இறக்க முயன்றார். அவருடைய தொடர்பாளர்கள் இருவர் லண்டனில் இருந்தார்கள். இவர்களது முயற்சியில் ஆயுதம் இறக்க, சூயஸ் கால்வாய் அருகே, செங்கடலில் புலிகளின் கப்பல் ஒன்று காத்திருந்த கதையை அடுத்து பார்க்கலாம்… 

தொடரும்...

Source
nadunadapu 
Read More
Keerthivasan

ஈழப் போரின் இறுதி நாட்கள் – 14

புலிகளின் பகுதிக்கு, சொன்னது போல ஒரு விமானம், அதிகாலை 4.30-க்கு வந்தது!

Just for Representation mentioned in this Article | Image Source: http://imgproc.airliners.net

விடுதலைப் புலிகளின் ஆயுத சப்ளைக்கான கப்பல் போக்குவரத்து கே.பி.-யின் கையில் இருந்து எடுக்கப்பட்டது. புலிகளின் கப்பல்கள் கடல் புலிகளின் தளபதி சூசையிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது, கடல் புலிகளால் இதை ஹான்டில் பண்ண முடியுமா என்ற சந்தேகத்தை எழுப்பிய பொட்டு அம்மான், தமது உளவுப் பிரிவு ஆட்களை வைத்து டெவலப் செய்த, Plan-B பற்றி கடந்த அத்தியாயத்தில் கூறியிருந்தோம்.

பொட்டு அம்மானால் ஆயுதம் வாங்க உக்ரேன் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக நாம் குறிப்பிட்ட இரண்டுபேரும், அங்கே இவர்கள் டீல் பண்ணிய ஆயுத வியாபாரியால் ரொம்பவும் அலைய விடப்பட்டனர். அத்துடன், அந்த வியாபாரிக்கும், இலங்கை உளவுப் பிரிவுக்கும் இடையே ஏற்கனவே இருந்த தொடர்பும், உக்ரேனில் புதிதாக போய் இறங்கிய இவர்கள் இருவருக்கும் தெரிந்திருக்கவில்லை.

உக்ரேனில் உள்ள Simferopol ஏர்போர்ட்டில் இருந்து புலிகளின் ஆயுதங்களுடன் புறப்பட்டதாக இவர்களுக்கு காட்டப்பட்ட விமானம், ஒரு AN-72 ரக விமானம்.


AN-72 விமானம். இது ஒரு மீடியம் சைஸ் ஜெட் விமானம். ரஷ்ய தயாரிப்பு.

அதில் ஆயுதங்கள் வருவதாகவும், விமானம் இரணமடுவில் உள்ள ரன்வேயில் இறங்குவதற்கு ஏற்பாடு செய்யுமாறும், வன்னியில் இருந்த பொட்டு அம்மானுக்கு தகவல் அனுப்பியிருந்தார்கள்.

யுத்தம் முடிவுக்கு வந்தபின், 2011-ல் இதில் தொடர்புடைய ஒருவரை சந்திக்க நேர்ந்தது. அவரிடம், “2008-ம் ஆண்டு உக்கிரேனில் இருந்து புறப்பட்ட அந்த விமானத்தில் நிஜமாகவே ஆயுதங்கள் லோட் செய்யப்பட்டு இருந்தனவா என்பது உங்களுக்கு தெரியுமா?” என்று கேட்டேன்.

“தெரியாது. அது நடந்த நேரத்தில் வன்னி யுத்தத்தில் நாம் (புலிகள்) பின்வாங்கிக் கொண்டிருந்தோம். அவசரமாக ஆயுதங்கள் தேவையாக இருந்தன. விமானத்தில் ஆயுதங்கள் ஏற்றப்பட்டு இருந்ததாக அவர்கள் கூறியதை நம்புவதை தவிர எமக்கு வேறு வழி இருக்கவில்லை” என்றார்.

தற்போது எல்லாவற்றையும் இணைத்துப் பார்த்தால், புலிகளுக்கு கூறப்பட்டதுபோல அந்த விமானத்தில் ஆயுதங்கள் ஏதும் இருக்கவில்லை என்று ஊகிக்க முடிகிறது.

விமானம் Simferopol ஏர்போர்ட்டில் இருந்து புறப்பட… விமானம் வரும் என்று வன்னியில் புலிகள் காத்திருக்க… “விமானம் தவறுதலாக மும்பைக்கு அருகில் உள்ள ரத்னகிரி ஏர்போர்டில் தரையிறங்கி விட்டது” என்றார் உக்ரேன் ஆயுத வியாபாரி! அதன்பின் இந்திய அதிகாரிகளை ‘எப்படியோ சரிக்கட்டி’ விமானத்தை மீட்டு வந்துவிட்டோம். ஆயுதங்களை இந்திய அதிகாரிகள் பறிமுதல் செய்து விட்டார்கள்” என்றும், ஆயுத வியாபாரி கூறிவிட்டார்.

வன்னியிலோ இலங்கை ராணுவம் வேகமாக முன்னேறிக்கொண்டு இருந்தது. சூசையின் ஆயுதக் கப்பல்கள் வந்து சேரும் என்ற நம்பிக்கை இயக்கத்தின் உயர்மட்டத்தில், விஷயம் தெரிந்த பலருக்கும் அற்றுப் போயிருந்தது. ஆயுதங்கள் வந்து சேராவிட்டால், தோல்வி நிச்சயம் என்ற நிலை சிறிது சிறிதாக ஏற்பட்டுக் கொண்டிருந்தது.

வன்னியில் இருந்து பொட்டு அம்மான், “மீண்டும் ஒரு தடவை விமானம் மூலம் ஆயுதம் அனுப்ப முயற்சி செய்யுங்கள்” என்று உக்ரேனுக்கு அவசர தகவல் அனுப்பினார்.

இவர்கள் ஏற்கனவே, போய்ச் சேராத ஒரு லோட் ஆயுதங்களுக்காக உக்ரேன் ஆயுத வியாபாரியிடம் பணம் கொடுத்திருந்தார்கள். அந்த ஆயுதங்கள் இந்திய அதிகாரிகளிடம் சிக்கி விட்டதால், மறுபடியும் பணம் கொடுத்தால்தான், அடுத்த முயற்சி செய்ய முடியும் என்று ஆயுத வியாபாரி சொல்லி விட்டார்.

இந்த விபரம் பொட்டு அம்மானுக்கு தெரிவிக்கப்பட்டது.

அடுத்த லோட் ஆயுதங்களுக்காக பணம் ஏற்பாடு செய்வதாக பொட்டு அம்மான் தெரிவித்தார். இந்த விபரம் புலிகளின் தலைவர் பிரபாகரன் வரை போய், அப்போது புலிகளின் வெளிநாட்டு பிரிவுக்கு பொறுப்பாக இருந்த காஸ்ட்ரோ என்கிற மணிவண்ணனின் ஐரோப்பிய முகவர் மூலமாக பணம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரு வாரத்துக்குள் பணமும், உக்ரேன் போய் சேர்ந்தது.

உக்ரேன் ஆயுத வியாபாரியின் விமானம் இந்தியாவில் தரையிறங்கிய ‘கதை’ நிஜம் என்று பொட்டு அம்மான் நம்பினாரா? அல்லது, யுத்தத்தின் முடிவு நெருங்குவதை புரிந்து கொண்டு, வேறு வழியில்லாமல் மீண்டும் அதே உக்ரேன் ஆயுத வியாபாரிக்கு பணம் கொடுத்து ஒரு முயற்சி செய்ய முடிவு செய்தாரா? இது, சரியாக தெரியவில்லை.

பொட்டு அம்மானால் அனுப்பி வைக்கப்பட்ட சில மில்லியன் டாலர் தொகை, இரண்டாவது தடவையும் உக்ரேன் ஆயுத வியாபாரிக்கு கொடுக்கப்பட்டது.

ஆனால், இம்முறை பணம் கொடுக்கும் முன், உக்ரேனில் இருந்த பொட்டு அம்மானின் ஆட்கள் இருவரும், ஆயுத வியாபாரியுடன் சற்று கடுமையாகவே நடந்து கொண்டார்கள். ஆயுத விமானம் வன்னிக்கு செல்வது தொடர்பான அனைத்து விபரங்களையும் கொடுக்கும்படி கேட்டார்கள். “அந்த விபரங்கள் திருப்திகரமாக இருந்தால்தான் டீல்” என்றார்கள்.

கிடைத்த விபரங்களை, பொட்டு அம்மானிடம் அனுப்பி வைத்தார்கள்.

பொட்டு அம்மான், வெளிநாட்டில் விமானங்களுடன் தொடர்புடையவராக இருந்த தமது சோர்ஸ் ஒருவரிடம் சொல்லி, “இப்படியொரு விமான ஆபரேஷன் சாத்தியமா?” என்று விசாரித்த போது, “அது சாத்தியம்தான்” என்று பதில் கிடைத்திருக்கிறது. அதன் பின்னரே, பணம் கொடுக்குமாறு பொட்டு அம்மான் கூறியிருந்தார்.

மீண்டும் அதே AN-72 ரக விமானம். இம்முறை அதில் ஆயுதங்கள் உள்ளனவா என பார்க்க வேண்டும் என்று முன்கூட்டியே பொட்டு அம்மானின் ஆட்கள் கூறியதில், விமானத்தில் ஆயுதங்கள் லோட் செய்யப்பட்டது அவர்களுக்கு காண்பிக்கப்பட்டது.

விமானம் புறப்படும் நேரம், பறக்கும் நேரம், வன்னிக்கு அருகே விமானம் வரும் நேரம், இரணமடு ரன்வேயில் தரையிறங்கப் போகும் நேரம் அனைத்துமே துல்லியமாக வழங்கப்பட்டிருந்தன. அனைத்து தகவல்களும், வன்னியில் பொட்டு அம்மானுக்கும் கொடுக்கப்பட்டிருந்தது.

இது நடைபெற்ற காலப்பகுதியை சரியாக சொல்ல வேண்டுமென்றால், 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தின் 2-வது வாரத்தில் நடைபெற்றது. புலிகளின் விமான ரன்வே அமைந்திருந்த இரணமடுவுக்கு அருகே யுத்தம் வந்துவிட்டிருந்தது. இலங்கை ராணுவத்தின் 57-வது டிவிஷன், மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் தலைமையில் வன்னியில் கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன் குளக்கட்டு அருகே வந்து விட்டது.

அக்கராயன் குளத்தில் இருந்து, ஏ-9 வீதியை கடந்துவிட்டால், இரணமடு!

அதாவது, புலிகள் தமது விமான ரன்வே அமைந்திருந்த இரணமடுவை இழப்பதற்கு சில வாரங்களுக்கு முன், அங்கே உக்ரேன் விமானத்தை தரையிறக்க ஏற்பாடு செய்யப்பட்டது. குறிப்பிட்ட தினத்தில் விமானம் அதிகாலை 4 மணியில் இருந்து 4.30க்குள் ரன்வேயை அப்ரோச் பண்ணும் என்று உக்ரேனில் கூறினார்கள்.

விமானமும் புறப்பட்டது. இரணமடு ரன்வே இருகே ஆயுதங்களை ஏற்றிச் செல்வதற்கு ஆயத்தமாக பொட்டு அம்மானின் ஆட்கள் வாகனங்களுடன் காத்திருந்தார்கள். எல்லாமே ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன. அந்த நாட்களில், இலங்கை விமானப்படை குண்டுவீச்சு விமானங்கள், இரவு நேரங்களில் குண்டுவீச வருவது அபூர்வம். இதனால், விமானப்படை குண்டுவீச்சு பயமின்றி, ஆயுதங்களை ஏற்றிச் செல்லலாம் என்று நினைத்திருந்தார்கள்.

அதிகாலை 4.30 மணி. விமானம் வரும் ஓசை கேட்டது. கீழே நின்றிருந்தவர்கள் தயாரானார்கள்.

வந்த விமானம் திடீரென இரணமடு பகுதியில் குண்டுவீச துவங்கியபோதுதான், அது இலங்கை விமானப்படையின் குண்டுவீச்சு விமானம் என்று புரிந்தது. ஒன்றல்ல இரண்டு விமானங்கள்!

குண்டுவீச்சில் இரணமடு ரன்வே சேதமடைந்தது.

மறுநாள் பொட்டம்மானின் ஆட்கள் பேசுமுன்னே, உக்ரேனில் இருந்த ஆயுத வியாபாரி எகிறத் துவங்கி விட்டார். “எமது விமானத்தை வரச் சொல்லி விட்டு, அந்த தகவலையும் உங்கள் ஆட்கள்தான் எப்படியோ இலங்கை விமானப் படைக்கு லீக் செய்து விட்டார்கள். எமது விமானமும், விமானியும் உயிர் தப்பியதே பெரிய விஷயம். இனியும் வேண்டாம் இந்த வியாபாரம்” என்றார் அவர்.

இரண்டாவது தடவை கொட்டிக் கொடுத்த பணமும் கோவிந்தா!

அத்துடன், புலிகள் விமானம் மூலம் ஆயுதம் இறக்கும் முயற்சி முடிவுக்கு வந்தது. அதன்பின் முயற்சி செய்ய முடியாதபடி, இலங்கை ராணுவத்தின் 57-வது டிவிஷன் டிசம்பர் 1-ம் தேதி அக்கராயன்குளத்தை கடந்து ஏ-9 வீதியில் கொக்காவில் என்ற இடத்தைக் கைப்பற்றியது. மற்றொரு படைப்பிரிவான 58-வது டிவிஷன், ஜனவரி 8-ம் தேதி முரசுமோட்டை என்ற இடத்தைக் கைப்பற்றியது.

இந்த இரு இடங்களுக்கும் நடுவே அமைந்திருந்தது, புலிகளின் விமான ரன்வே!

யுத்தம் முடிந்தபின் சமீபத்தில், இலங்கை விமானப்படை சோர்ஸ் ஒருவரிடம் இருந்து ஒரு விபரம் தெரியவந்தது. அந்த விபரம் என்னவென்றால், இரணமடுவில் புலிகள் காத்திருந்த தினத்தில், உக்ரேன் விமானம் வரவே இல்லை.

உக்ரேன் ஆயுத வியாபாரி, இலங்கை உளவுத்துறைக்கு முன்கூட்டியே தகவல் கொடுத்து, அன்று அதிகாலை இரணமடு ரன்வே அருகே புலிகளின் உளவுப்பிரிவு முக்கியஸ்தர்கள் காத்திருக்க சான்ஸ் உள்ளது என்று கூறியிருந்தார். அதையடுத்தே சரியான நேரத்தில், இலங்கை விமானப்படை விமானம் குண்டுவீச வந்து சேர்ந்தது.

புலிகள் யுத்தத்தில் தோல்வியடைந்தது ஏன் என்று ஆளாளுக்கு பல காரணங்களை கூறுகிறார்கள். ஆனால், திரை மறைவில் நடைபெற்ற இதுபோன்ற பல சம்பவங்கள்தான் முக்கிய காரணம் என்பது தெரியப்படாத உண்மையாகவே உள்ளது. காரணம், இந்த விஷயங்கள் ரகசியமாக நடந்தவை. இவற்றில் சம்மந்தப்பட்ட ஓரிருவர் மட்டுமே தற்போது உயிருடன் உள்ளார்கள்.

2002-ம் ஆண்டுக்குப் பின், கே.பி.-யிடம் இருந்து ஆயுதக் கொள்வனவும் கப்பல் போக்குவரத்தும் கைமாறியபின், ஈறுதி யுத்தம் முடியும்வரை வன்னிக்கு போய் சேர்ந்த ஆயுதங்கள் மொத்தமாகவே சுமார் 25 டன் (25,000 கிலோ) மட்டுமே. அதாவது 7 ஆண்டுகளில், அடிபடாமல் போய்ச் சேர்ந்தவை அவ்வளவுதான்.

2002-க்கு முன், புலிகள் யுத்தத்தில் வெற்றிமுகம் காட்டிய நாட்களில், சில சமயங்களில் மாதம் ஒன்றுக்கு 25 டன் ஆயுதங்கள் போய் சேர்ந்த காலமும் இருந்தது.

ஆயுதம் வாங்குவதும், அதை அனுப்பி வைப்பதும், ஒரு கலை. அதை யாராலும் செய்ய முடியும் என்று சிலர் கூறியதை, புலிகளின் தலைவர் பிரபாகரன் ஏற்றுக் கொண்டார். அதற்கான விலையையும் அவர் கொடுக்க நேர்ந்தது. ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஆயுத இறக்குமதி அடிபட்டிருந்தால் பரவாயில்லை. அல்லது யாரோ ஒருவர் செய்த முயற்சி அடி வாங்கியிருந்தால் பரவாயில்லை என்று ஏற்றுக் கொள்ளலாம்.

ஆனால், 2002-க்கு பின் அனைவர் செய்த அனைத்து முயற்சிகளும் ஒவ்வொன்றாக அடி வாங்கியதை என்னவென்று சொல்வது?

நடந்த சம்பவங்களில் உள்ள ரகசியங்கள் வெளியாகும்போதுதான், காரணங்கள் பல புரியவரும். ரகசியங்களை பேண வேண்டிய அவசியமும் இனி கிடையாது என்பதால், தோல்விக்கான காரணங்களை புரிந்துகொள்ள விரும்பியவர்கள் புரிந்து கொள்ளுங்கள். தற்போது புரிந்துகொள்ள விரும்பாதவர்களை, எதைச் சொல்லியும் நம்ப வைக்கவும் முடியாது. நம்ப வைக்க வேண்டிய அவசியமும் யாருக்கும் கிடையாது.

அப்படியானவர்கள் இன்னமும் 5 வருடங்களின்பின், அல்லது 10 வருடங்களின்பின் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் புரிந்து கொள்ளுங்கள். அது உங்க இஷ்டம்.

கடல் புலிகளின் தலைவர் சூசையின் ஆயுதக் கப்பல்கள் ஒவ்வொன்றாக அடிபட்ட பின்னணியிலும் பல விஷயங்கள் உள்ளன. சூசையின் கப்பல் முயற்சியில் நம்பிக்கை இழந்த பொட்டு அம்மான் செய்த விமான முயற்சியை தந்திருக்கிறாம்.

உண்மையில், ஆயுதங்களை வன்னிக்கு கொண்டுவர பொட்டு அம்மான் செய்திருந்த 2-வது முயற்சி அது. அதற்குமுன் 2006-ல் பொட்டு அம்மான் செய்த மற்றொரு முயற்சியும் உள்ளது. மேற்கு ஆபிரிக்க நாடு ஐவரி கோஸ்ட்டில் (Ivory Coast) இருந்து ஆயுதம் கொண்டுவர செய்த முயற்சி அது.

தொடரும்...

Source
nadunadapu  
Read More
Keerthivasan

ஈழப் போரின் இறுதி நாட்கள் – 13

புலிகளின் ஆயுத விமானம் ரத்னகிரியில் (மும்பை அருகே) தரையிறங்கிய ரகசியம்!


வன்னியில் இறுதி யுத்தத்தில் ஈடுபட்டிருந்த புலிகள், ஆயுதங்களை பெறுவதற்கு எடுத்த அனைத்து முயற்சிகளும், நடுக்கடலில் அடிபட்டுப் போன விவகாரம் பற்றி கடந்த அத்தியாயத்தில் எழுதியிருந்தோம்.

கடல் புலிகளின் தளபதி சூசையால் ஒரு கப்பல் ஆயுதங்களை கூட கொண்டுவந்து சேர்க்க முடிந்திராத நிலையில், புலிகளின் உளவுப் பிரிவின் தலைவர் பொட்டு அம்மான் செய்த சோலோ முயற்சி ஒன்று பற்றியும் குறிப்பிட்டிருந்தோம்

ஆச்சரியகரமாக பொட்டு அம்மானால் ஏற்பாடு செய்யப்பட்ட கப்பல், முல்லைத்தீவு கடலுக்குள் அடிபடாமல் வந்து சேர்ந்தது. அதற்கு காரணம் என்ன? புலிகளின் கப்பல் நடமாட்டங்களை கண்காணித்துக் கொண்டிருந்த உளவுத்துறைகள் எவையும், கம்யூனிகேஷன் விஷயத்தில் இவர்கள் செய்த ட்ரிக்கை உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை.

கப்பலில் வெவ்வேறு இலக்கமுடைய 10 சட்டலைட் செல்போன்கள். கனடாவில் 10 வெவ்வேறு இலக்கமுடைய சட்டலைட் போன்கள் ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்தி, அந்தக் கப்பல் நகர்ந்திருந்தது. கப்பலும் கார்கோ கப்பல் அல்ல,  மீன்பிடி  ட்ரோலர். அதிலிருந்த  மாலுமிகளோ, இந்தோனேசியர்கள்.  இவை  எல்லாவற்றுக்கும்  மேலாக,  இந்தக் கப்பலில்  எந்தவொரு  துறைமுகத்தில்   வைத்தும் ஆயுதங்கள் ஏற்றப்படவில்லை.

பொட்டு அம்மானின் திட்டத்தில் இவ்வளவு திசை திருப்பல்களும் இருந்ததால், எந்தவொரு உளவுத்துறையும் இந்தக் கப்பல்மீது சந்தேகம் கொள்ளவில்லை.

புலிகளுக்கு என பிரத்தியேகமாக வந்த இறுதிக் கப்பல் இதுதான். யுத்தம் முடிவதற்கு 3 மாதங்களுக்கு முன், பிப்ரவரி மாதத்தில் (2009) முல்லைத்தீவு கடலை சென்றடைந்தது இந்தக் கப்பல்.

கடல் புலிகளின் தளபதி சூசையுடன் சவால் விட்டு, கடல் புலிகளால் முடிந்திராத காரியத்தை கடலில் செய்த வகையில் இந்த சோலோ முயற்சி பொட்டம்மானுக்கு வெற்றிதான். ஆனால், இறுதி யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், புலிகளுக்கு இந்தக் கப்பலால் பலன் ஏதும் இருக்கவில்லை.

காரணம், கப்பலில் ஆயுதங்கள் ஏதும் வரவில்லை. பொட்டு அம்மானின் உளவுப்பிரிவினர் தமக்கு தேவையான சில பொருட்களையே அதில் இறக்கியிருந்தனர்.

அதன்பின் யாரும் இதுபோன்ற கப்பல் முயற்சி ஒன்றை செய்ய முடியாதபடி, யுத்தம் இறுதிக் கட்டத்தை அடைந்துவிட்டது. இறுதி நாட்களில், பொட்டு அம்மானும் வேறு சில சிக்கல்களில் சிக்கியிருந்தார். அவற்றையெல்லாம், தொடரின் இறுதிப் பகுதியில் பார்க்கலாம்.

இப்போது மற்றொரு கேள்வி.

பொட்டு அம்மானால், யுத்தத்தின் இறுதி நேரத்தில் ஒரு கப்பலை தருவிக்க முடிந்ததுபோல, யுத்தம் துவங்கிய நாளில் இருந்து கடல் புலிகளின் தளபதி சூசையால் ஏன் ஒரு கப்பலைக்கூட கொண்டுவர முடியவில்லை? தொடர்ந்து முயற்சி செய்தும், ஒவ்வொரு கப்பலாக ஏன் அடி மேல் அடி வாங்கி, அனைத்தும் கடலடியே போயின?

இந்தக் கேள்விக்கு மிக சிம்பிளான பதில் ஒன்று உள்ளது. கிராமப் பகுதிகளில் சர்வ சாதாரணமாக கூறும் ஒரு வாக்கியமே அந்தப் பதில். “குதிரையின் வேலையை, குதிரைதான் பார்க்க வேண்டும். கதிரையில் (சேரில்) இருப்பவர் பார்க்க முடியாது”

எமது நோக்கம், யுத்தத்தில் உயிரிழந்தவர்கள் பற்றி விமர்சிப்பது அல்ல. தனிப்பட்ட ஒருவர் இறந்த விவகாரமல்ல இது. ஒரு விடுதலை இயக்கமும், அவர்களது போராட்டமும் முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான போராளிகளின் உயிர் தியாகத்தால் உச்ச நிலையை அடைந்த இயக்கம் அது.

அந்த இயக்கத்தை வளர்ப்பதற்காக தமது மகனை, மகளை, சகோதரனை, சகோதரியை, தந்தையை, தாயை பலி கொடுத்த குடும்ப உறுப்பினர்களுக்கு, தோல்விக்கான காரணத்தை தெரிந்து கொள்ள உரிமை இல்லையா?

அதை இப்படிப் பாருங்கள். யுத்தம் 18-ம் தேதி, புலிகளுக்கு தோல்வியில் முடிந்தது. புலிகள் தரப்பில் யுத்தத்தை நடத்தியவர்களுக்கு அந்த முடிவு நிச்சயம் தெரிந்திருக்கும். அப்படியிருந்தும், 16-ம் தேதி, யுத்தத்தில் ஜெயிக்கலாம் என்று நம்பிக்கை ஊட்டப்பட்டு, துப்பாக்கியுடன் முன்னரணுக்கு அனுப்பப்பட்டு உயிரிழந்த ஒரு போராளியின் குடும்பத்தினருக்கு, தோல்விக்கான காரணம் சொல்லப்பட வேண்டுமா, இல்லையா?

“உஷ்.. இதெல்லாம் இனியும் ரகசியம்” என்றால், இது மக்களுக்காக நடத்தப்பட்ட யுத்தம் இல்லையா? எந்தவொரு ரகசியத்தையும் காக்க வேண்டிய அவசியமும் தற்போது இருப்பதாக தெரியவில்லை. காரணத்தை தெரிந்து வைத்திருப்பவர்கள், அதை இப்போது சொல்ல வேண்டிய தார்மீக கடமையும் உள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கம் ஏன் தோல்வியைத் தழுவ நேர்ந்தது என்ற கேள்விக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், பிரதான காரணங்களில் ஒன்று, ஆயுத சப்ளை இல்லை என்பதே.

ஆயுதங்கள் கடல் மூலமாகவே வந்து சேர வேண்டியிருந்தன. ஆயுதங்களுடன் வந்த ஒவ்வொரு கப்பலும் மூழ்கடிக்கப்பட்டன. அப்படியிருந்தும், மீண்டும் மீண்டும், மில்லியன் டாலர்கள் பெறுமதியாக ஆயுதங்களுடன் கப்பல்களை ஏன் தருவிக்க முயன்றார்கள்? காரணம், புலிகளின் வெற்றி தோல்வியை அந்த ஆயுதங்கள்தான் முடிவு செய்ய வேண்டிய நிலையில், யுத்தம் இருந்தது.

2002-ம் ஆண்டு வரை ஆயுதங்கள் எந்தத் தடையுமின்றி ஸ்மூத்தாக கப்பல் கப்பலாக வன்னிக்கு போய்க்கொண்டிருந்தன. புலிகள் ராணுவத்தை தாக்கினார்கள். பல வெற்றிகள் கிடைத்தன. 2002-ன் பின் கப்பல் போக்குவரத்து, கடல்புலிகளின் தளபதி சூசையிடம் போனது. கப்பல்கள் அடிபட்டன. ஆயுத சப்ளை வெட்டுப்பட்டது.

கையிருப்பில் இருந்த ஆயுதங்களை வைத்துக் கொண்டு தற்காப்பு யுத்தம் புரிந்தபடி புலிகள் பின் வாங்க துவங்கினார்கள். அதன்பின் ஏற்பட்ட முடிவு அனைவருக்கும் தெரிந்ததுதான்.

இப்போது, உங்களுக்கு 2 கேள்விகள் எழலாம்.

1) 2002-ம் ஆண்டுவரை எப்படி தடங்கல் இல்லாமல் வெற்றிகரமாக ஆயுதங்கள் அனுப்பி வைக்கப்பட்டன?

2) ஆயுத சப்ளை தடங்கல் இல்லாமல் கிடைத்தால்தான் வெற்றி பெறலாம் என்ற நிலையில் இருந்த புலிகள் இயக்கம், கடல் மார்க்கம் சறுக்கினால் என்ன செய்வது என்பதை முதலிலேயே யோசிக்கவில்லையா? Plan-B என்று எதுவுமே அவர்களிடம் கிடையாதா?

இரண்டுக்குமே பதில்கள் உள்ளன. இரண்டாவது கேள்விக்கான பதிலை முதலில் பார்க்கலாம்.

ஆம். புலிகளிடம் ஒரு Plan-B இருந்தது. இது பற்றிய விபரங்கள், புலிகள் இயக்கத்தில் இருந்த பலருக்கேகூட தெரிந்திராது. காரணம் இந்த Plan-B, புலிகளின் உளவுப் பிரிவின் கைகளில் இருந்தது. மொத்தம் 5 பேர்தான் இதில் தொடர்பு பட்டிருந்தனர். அதில் 2 பேர் இன்னமும் வெளிநாடுகளில் உயிருடன் உள்ளனர்.

ஆயுத சப்ளைக்கான கப்பல் போக்குவரத்து கே.பி.-யின் கையில் இருந்து எடுக்கப்பட்டு, கடல் புலிகளின் தளபதி சூசையிடம் ஒப்படைக்கப்பட்ட பின், கடல்புலிகளால் இதை ஹான்டில் பண்ண முடியுமா என்ற சந்தேகத்தை முதலில் எழுப்பினார் பொட்டு அம்மான். ஆனால், புலிகள் இயக்கத்துக்குள் இருந்த ‘உள்வீட்டு அரசியல்’, முழுமையாக கப்பல் போக்குவரத்தையும் கடல் புலிகள் வசமே போகும்படி செய்தது.

அதையடுத்து பொட்டு அம்மான் தமது ஆட்களை வைத்து டெவலப் செய்ததுதான், Plan-B.

கப்பல் விவகாரத்தை முழுமையாக சூசையிடம் விட்டுவிட்டு, விமானம் மூலம் ஆயுதங்களை இறக்க முயற்சி செய்தார் பொட்டு அம்மான்.

மொத்தம் 5 பேர் அடங்கிய டீம் அது. அதில் இருந்த இருவர், 2006-ல் வெளிநாடுகளுக்கு வேறு பெயர்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

வெளிநாடுகளில் புலிகளின் அன்டர்-கவர் ஆபரேஷனாக இயங்கிய அந்த இருவரையும், வெளிநாட்டு ஈழத் தமிழர்களுக்கு ‘வேறு பெயரில்தான்’ தெரியும் என்பதால், அவர்களது பெயர்களை விட்டுவிடலாம். மூன்றாவது நபர், பொட்டு அம்மான். மற்றைய இருவரும் வன்னியில் இருந்து இந்த விமான ஆபரேஷனை கவனித்த ஞானவேல், தமிழ் குமரன்.

2006-ம் ஆண்டில் இருந்து துவங்கிய இந்த ஆபரேஷனில், விமான மூலம் ஆயுத இறக்குமதிக்கான தொடர்புகளை மேற்கொள்ளவே, 2 வருடங்கள் பிடித்தன. 2008-ம் ஆண்டு ஆபரேஷன் செயல்பட தயாராகியது. இதற்கிடையே யுத்தம், வன்னியில் உக்கிரமாக நடந்து கொண்டிருந்தது.

வெளிநாட்டில் இயங்கிய இருவரும் பிடித்த தொடர்புகள் அனைத்துமே உக்ரேன் நாட்டில் இருந்தன. இங்கிருந்த ஆயுத வியாபாரி ஒருவரும், அவர் மூலமான அறிமுகமான கார்கோ விமான நிறுவனம் ஒன்றும்தான் இவர்களது தொடர்புகள். குறிப்பிட்ட கார்கோ விமான நிறுவனம், ஆபிரிக்க நாடுகள் சிலவற்றுக்கு ஆயுத சப்ளை செய்த ஆட்கள்.

எல்லாம் தயார் என்ற விபரம் உக்ரேனில் இருந்து வன்னிக்கு அறிவிக்கப்பட்டது. ஆயுதங்களுக்கான பண ஏற்பாடுகளை ஞானவேல் கவனித்துக் கொண்டார்.


உக்ரேனின் simferopol ஏர்போர்ட்டில் கார்கோ விமானங்கள் லோட் செய்யப்படும் பகுதி

ஆரம்பத்தில் தமிழ் குமரன், உக்ரேனில் இருந்தவர்களுக்கும், பொட்டு அம்மானுக்கும் இடையே வன்னியில் தொடர்பாளராக இருந்தார். ஏற்பாடுகள் அனைத்தும் ரெடி என்ற நிலையில், உக்ரேனில் இருந்த இருவருடன் பொட்டு அம்மானே நேரில் டீல் பண்ண துவங்கினார்.

உக்ரேனில் இவர்கள் டீல் பண்ணிய ஆயுத வியாபாரிக்கு ‘சுற்றி-வளைத்து’ இலங்கை உளவுத் துறையுடன் தொடர்புகள் இருந்தன என்பது, ஆயுத டீலில் புதிதாக இறங்கியிருந்த இவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை.

முதலாவது விமான லோட் ஆயுதங்களுக்கான பணம் உக்ரேனில் வைத்து செட்டில் செய்யப்பட்டது. முதல் ட்ரிப்புக்கான தேதியும் குறிக்கப்பட்டது.

குறிப்பிட்ட தேதி ஒன்றில், இரணமடுவில் இருந்த புலிகளின் விமான ஓடுதளத்தில் உக்ரேன் விமானம் இறங்குவதற்கான ஏற்பாடுகளை ஞானவேல் கவனித்தார். அன்றைய தினத்தில் விமானத்தில் ஆயுதங்கள் வருகின்றன என்ற விபரம், புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு பொட்டு அம்மானால் சொல்லப்பட்டது.

கப்பலில் ஆயுதங்களை இறக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த சூசைக்கு இந்த விபரங்கள் ஏதும் தெரிவிக்கப் பட்டிருக்கவில்லை. (அந்த நேரத்தில் அவரது கப்பல்கள் பல அடிபட்டிருந்தன)

அன்றைய தினத்தில், உக்ரேனில் உள்ள Simferopol (IATA code: SIP) என்ற சிறிய ஏர்போர்ட்டில் இருந்து இவர்கள் ஏற்பாடு செய்த கார்கோ விமானம் புறப்பட்டதை, பொட்டு அம்மானால் அனுப்பி வைக்கப்பட்ட இருவரும் பார்த்தார்கள். 1930-களில் அமைக்கப்பட்ட பழைய விமான நிலையம் அது.

அதன் கார்கோ டர்மினலில் இருந்து புறப்பட்ட விமானத்துக்குள் நிஜமாக என்ன லோட் செய்யப்பட்டிருந்தது என்பதை அருகில் நெருங்கி செக் பண்ண இவர்கள் அனுமதிக்கப்படவில்லை.

Simferopol விமான நிலையத்தில் வைத்து, இரணமடுவுக்கு செல்வதற்கான பிளைட்-பிளான் ஒன்று இவர்களுக்கு காட்டப்பட்டது. அங்கிருந்து சுமார் 6450 கி.மீ. தொலைவில் உள்ளது இரணமடு.

இரணமடுவில், அதிகாலை நேரத்தில் விமானம் வந்து சேரும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், விடிந்த பின்னரும் வந்து சேரவில்லை. வன்னியில் இருந்து உக்ரேனுடன் தொடர்பு கொள்ளப்பட்டது. உக்ரேனில் இருந்தவர்கள், ஆயுத வியாபாரியை தொடர்பு கொண்டார்கள். விமானத்தை எப்படியும் தொடர்பு கொண்டபின் விபரம் தெரிவிப்பதாக கூறினார் ஆயுத வியாபாரி.

சில மணி நேரத்தின்பின் ஆயுத வியாபாரி விசித்திரமான தகவல் ஒன்றை கொடுத்தார்.

“விமானம் தரையிறங்கி விட்டது. ஆனால், தவறான இடத்தில் இறங்கியுள்ளது. அங்கே சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார் விமானி” என்றார் ஆயுத வியாபாரி!

தரையிறங்கியதாக கூறப்பட்ட தவறான இடம் எது என்று தெரிந்தால் ஆச்சரியத்தின் உச்சிக்கே செல்வீர்கள்.

அது, இந்தியாவில், மும்பைக்கு அருகில் உள்ள ரத்னகிரி ஏர்போர்ட்! (Ratnagiri Airport – IATA code RTC)

2008-ல் இந்த சம்பவம் நடந்ததாக சொல்லப்பட்ட காலத்துக்கு சில வாரங்களின்பின் மகாராஷ்டிரா மாநில பொதுப்பணித் துறையிடம் இருந்து, இந்திய கடலோரப் பாதுகாப்பு படையிடம் ஒப்படைக்கப்பட்ட விமான நிலையம் அது. புலிகளுக்கு ஆயுதம் ஏற்றிச் சென்றதாக கூறப்பட்ட உக்ரேன் விமானம் ஏன், எதற்கு, எப்படி அங்கே தரையிறங்கியது?

அதை, அடுத்த அத்தியாயத்தில் சொல்கிறோம்!

தொடரும்...

Source
nadunadapu  
Read More