Showing posts with label குரு பரம்பரை. Show all posts
Showing posts with label குரு பரம்பரை. Show all posts

Friday, January 2, 2015

Keerthivasan

குரு பரம்பரை - 7 - ஸ்ரீ ராமானுஜரும் விசிஷ்டாத்வைதமும்

இந்த பதிவில் விசிஷ்டாத்வைத தத்துவத்தின் விளக்கத்தை பார்க்கலாம்.



ஆதிசங்கரரின் அத்வைதம், மத்வரின் த்வைதம் என்ற இரு வேதாந்த சிந்தனைகளைகளையும் உள்ளடக்கியது விசிஷ்டாத்வைதம். ஆதிசங்கரர் மற்றும் மத்வர் இருவர் வாழ்ந்த காலத்திற்கு மத்தியில் வாழ்ந்த ராமானுஜாச்சாரியாரால் இந்த விசிஷ்டாத்வைதம் உபதேசிக்கப்பட்டது.

 



தமிழகத்தில் அவதரித்த ராமனுஜர் அவருக்கு முன்பிருந்த வியாசர், பாருசி, பாராங்குசர், நாத முனிகள், ஆளவந்தார் முதலிய மகான்களின் கொள்கைகளையே சேகரித்து, ஒவ்வொரு செய்தியிலும் அவர்களது மொழிகளையே மேற்கோள்களாக்கி விசிஷ்டாத்வைதத்தை நிலைநாட்டியுள்ளார். அந்தக் கொள்கைகளை விளக்கும் முகமாகத்தான் ராமானுஜர் பகவத்கீதை,பிரம்ம சூத்திரங்களுக்கு விளக்கமும் பொருளும் எழுதினார்.

அத்வைதத்தில் இருந்த சில விளக்கங்களில் ராமானுஜர் திருப்தி அடையவில்லை. அந்த விளக்கங்களில் எழும் கேள்விகளுக்குப் பதில் தரும் விதமாகவே ராமானுஜர் தன் விசிஷ்டாத்வைதத்தை பெருமளவு உருவாக்கினார் என்று சொல்லலாம். விசிஷ்டாத்வைதம் என்பதற்கு விசேஷத்தோடு கூடிய அத்வைதம் என்பது பொருள்.

உதாரணமாக அத்வைதத்தில் கயிறு பாம்பாகத் தோன்றுவதாகச் சொல்லப்படும் உதாரணம். கயிறு மாத்திரம் தான் உள்ளது. அது பாம்பாகத் தெரிகிறது. இதேபோல பிரும்மம் மட்டுமே உள்ளது, அது உலகாகத் தோன்றுகிறது என்பது அத்வைத விளக்கம். அப்படி பாம்பாக கயிறு தோன்றுவது யாருக்கு? பிரும்மத்தைத் தவிர இரண்டாவதாக யாராவது இருந்தால் தானே அது சாத்தியமாகும். அப்படி இரண்டாவதாக இருப்பவன் தான் ஜீவன் என்பது
விசிஷ்டாத்வைதக் கொள்கை.

பாம்பிடம் உள்ள நஞ்சு பாம்பின் உள்ளேயே இருந்தாலும் பாம்பைப் பாதிப்பதில்லை. அதே போல மாயை பிரம்மத்துடனேயே இருந்தாலும் அந்த பிரம்மத்தைப் பாதிக்காமல் உள்ளது என்று சொல்கிறது அத்வைத விளக்கம். அப்படியானால் மாயை பாதிப்பது யாரை? அது ஜீவனைத் தானே. அப்படியானால் அவன் பிரம்மம் அல்லாத வேறொருவனாகத் தானே இருந்தாக வேண்டும். அந்த மாயை பிரம்மத்தையே பாதிக்கிறது எனில் மோட்சம் எவ்வாறு உண்டாக முடியும்? ஆகவே பிரம்மத்தைத் தவிர்த்து ஜீவன் உண்டு என்கிறது விசிஷ்டாத்வைதம்.

பாலைவனத்தில் தோன்றும் கானல் நீர்க் காட்சியில் போல உலகத்தோற்றம் பொய் என்பது தவறு. அந்த கானல் நீரிலும் நீர் இருப்பது உண்மையே. உலகம் முழுவதும் பஞ்சபூதங்களின் கலப்பால் உருவாகிறது. எனவே உலகில் எங்கும் எல்லா பூதங்களும் கலந்தே உள்ளன. அதனால் பாலைவனத்திலும் நீர் உள்ள அம்சத்தை தொலைவிலிருந்து நமது கண்கள் பார்த்தறிவதே கானல் நீரின் காட்சி உண்டாகுதல். அதன் அருகில் சென்றால் அள்ளிக் குடிக்கும்படித் தண்ணீர் இல்லையே தவிர கண்ணால் காண முடியாவிடினும் நீரின் அம்சம் இல்லாமல் போய் விடுவதில்லை.

இப்படி இரண்டிலும் ஒரே அம்சப் பொருள் உள்ளவை தான் ஒன்று இன்னொன்றாகக் காணப்படுகின்றது. கயிற்றுக்கும், பாம்பிற்கும் ஒற்றுமையாக உள்ள நீண்ட, மெல்லிய, வளைவுகள் என்ற பொதுவான அடையாளங்களே கயிறைப் பாம்பாகக் கருதச் செய்கின்றதே தவிர ஒரு கல்லோ, செடியோ பாம்பாகத் தெரியாது. இவ்வாறு அத்வைதத்தில் மாற்றுக் கருத்துக்களை வாதமாக வைக்கும் ராமானுஜர் விசிஷ்டாத்வைதத்தில் பரமாத்மா, ஜீவாத்மா, உலகம் ஆகியவற்றை பின்வருமாறு விளக்குகிறார்.

பரமாத்மாவான இறைவன் ஒருவர் தான் இருக்கிறார். ஸ்ரீமந் நாராயணனனே அந்த முழுமுதற்கடவுள். அவருக்கு உடலாயிருப்பது ஜகத் என்கிற உலகம். அந்த உடலில் கணக்கற்ற உயிர்த்தத்துவங்களாயிருப்பது ஜீவன்கள். சூரியனிடமிருந்து எண்ணிலடங்கா கதிர்கள் தோன்றி வருவதுபோன்று ஜீவன்கள் பரமாத்மாவில் இருந்து உருவாகின்றனர்.

புற உலகையும் தனி மனித உயிர்களையும் (ஜீவான்மாக்கள்) ஒட்டுமொத்தமாக உடல் எனக் கொண்டால் இறைவனை (பரமாத்மா) அதில் உறையும் உயிர் என்று சொல்லலாம். எவ்வாறு உடலுக்கு உயிர் ஆதாரமோ அது போல புறஉலகு, ஜீவான்மாக்கள் ஆகியவற்றால் ஆன உடலுக்குப் பரமாத்மாவே உயிராவான்.

இறைவனே உயிர்கள் அனைத்துக்கும் உலகுக்கும் உள்நின்று அவையனைத்தையும் இயக்குகிறான். எனவே ஆன்மாக்கள் பலவாயினும் ஆன்மாக்களுக்கெல்லாம் ஆன்மாவாக நிற்பது
பரமாத்மா ஒன்றுதான். பரமாத்மாவைப் பூரணனென்றும் அதில் தன்னை ஓர் அம்சம் என்றும் ஜீவன் தன் சொந்த அனுபவத்தில் அறிந்துகொள்ளுதல் முக்தி. அதற்கு ஜீவன் பக்தியுடன் இறைவனை சரணாகதி அடைய வேண்டும் என்று ராமானுஜர் கூறுகிறார்.

மொத்தத்தில் ஞான மார்க்கத்தை விட முக்கியமாய் பக்தியும், சரணாகதியுமே இறைவனை அடையும் வழிகள் என்று சொல்லி விசிஷ்டாத்வைதம் பின் வரும் தலைமுறைகளுக்குப் பக்தி மார்க்கத்தைவழிகாட்டி இருக்கிறது.

அடுத்த சில பதிவுகளில் ஆதி சங்கரரின் வரலாறு பற்றியும் அவரது வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களையும் குறிப்பிடுகிறேன்.

 ஆக்கம்: விவேக ஜோதி
Read More

Monday, December 29, 2014

Keerthivasan

குருவின் அவசியம் - 6 - துவைதம்

கடந்த பதிவில் அத்வைத தத்துவத்தை சில உதாரணங்களோடு விளக்கி இருந்தேன். இந்த பதிவில் துவைத தத்துவத்தின் விளக்கத்தை பார்க்கலாம்.

எல்லாமே பிரம்மம் என்னும் அத்வைத சாரம் பலருக்கும் அறிவுக்கு எட்டும் அளவுக்கு அனுபவத்தில் உணர சாத்தியப்படுவது கஷ்டம். ’பலவீனங்களும், குறைபாடுகளும், தேவைகளும், பிரச்சினைகளும் நிறைந்திருக்கிற நான் எங்கே? இவை எதுவுமே இல்லாமல் இருக்கும் மகாசக்திவாய்ந்த இறைவன் எங்கே? எப்படி இரண்டையும் ஒன்று என்று சொல்ல முடியும்?’ என்று சாதாரண மனிதன் குழம்புவது தவிர்க்க முடியாத யதார்த்தமாக இருக்கிறது.

எல்லாமே கற்பனை, மாயை என்று சொல்லித் தேற்றிக் கொள்ள அவனால் முடிவதில்லை. ’நான் இருக்கிறேன், இந்த உலகம் இருக்கிறது, உலகத்தில் எத்தனையோ உயிர்களும் பொருள்களும்
இருக்கின்றன, அந்தப் பொருள்களைத் தொட முடிகிறது, ஐம்புலன்களாலும் உணர முடிகிறது.பல வகைகளில் வித்தியாசப்படுகிற இதெல்லாமே ஒன்று என்றால் என்னால் ஒத்துக் கொள்ள முடிவதில்லையே. எல்லாவற்றிற்கும் மேலாக நானும், இறைவனும் எப்படி ஒன்றாக முடியும்? இறைவனுக்கு இருப்பதாக சொல்லப்படுகிற மகாசக்திகள் எதுவுமே என்னிடம் இல்லையே.” என்கிறான்.

மேலும் ’நானும் இறைவனும் ஒன்று என்றால் இறைவனை வணங்குவது என்னையே வணங்கிக் கொள்வது போல் இருக்கிறது. வணங்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?’ என்று அவனுக்குக் கேட்கத் தோன்றுகிறது.

சாதாரண மனிதனின் இந்தக் கேள்விகளுக்குப் பதிலாகவே த்வைதம், விசிஷ்டாத்வைதம் இரண்டும் தோன்றியது. முதலில் த்வைதம் பார்ப்போம். 'த்வி' என்ற சொல்லுக்குப் பொருள் ‘இரண்டு'
என்பதாகும். த்வைதம் என்றால்இரண்டாக விளங்குவது என்று பொருள் சொல்லலாம். இரண்டாக விளங்குவது என்றால் என்ன? ஜீவாத்மா, பரமாத்மா என்ற இரண்டைத்தான் அது குறிக்கிறது.
பரமாத்மா என்பது இறைவன். ஜீவாத்மா என்பது கடவுளால் படைக்கப்பட்ட உயிர். எப்பொழுதுமே, இந்த வேறுபாடு இருந்து கொண்டே தான் இருக்கும் என்பதே த்வைதம் சொல்லும் உண்மை. இந்தக் கோட்பாட்டை உபதேசித்தவர் தான் நான் ஏற்கனவே ஒரு பதிவில் சொன்ன மத்வாச்சாரியார்;

மத்வர் பரமாத்மா, ஜீவாத்மா, ஜடப் பொருள் என்ற மூன்றும் வெவ்வேறானவை என்று சொன்னார். இவர் ஐந்து வித வேற்றுமைகளைக் குறிப்பிடுகிறார்.

1.தனி ஜீவாத்மாக்களிலிருந்து பரமாத்மாவான கடவுள் வேறுபட்டவர்.
2. ஜடப்பொருளிலிருந்தும் பரமாத்மாவான கடவுள் வித்தியாசமானவர். ஜடப்பொருள் என்பது அறிவோ உயிரோ
இல்லாதது.
3. ஒரு ஜீவாத்மாவிலிருந்து இன்னொரு ஜீவாத்மாவிற்கு வேறுபாடு உள்ளது.
4. ஜீவாத்மாக்கள் ஜடப்பொருளான பிரகிருதியிலிருந்து வேறுபட்டு உள்ளவை.
5.ஜடப்பொருளான பிரகிருதியும் அது பகுக்கப்பட்டு பல பகுதிகளாகின்ற சமயத்தில் ஒரு பகுதிக்கும் இன்னொரு பகுதிக்கும் வேறுபாடு இருக்கிறது.

இப்படி இரண்டிரண்டாக எதையும் எதிர் எதிர் நிலையில் வைத்துச் சொல்லுவதால் இந்தத் தத்துவத்திற்கு த்வைதம் (இருமை) என்று பெயர் வந்ததாகவும் சொல்கிறார்கள்.

அறிவோனும், அறியப்படும் பொருளும் இன்றி எப்படிப்பட்ட அறிவும் சாத்தியமில்லை என்பது மத்வரின் வாதமாக இருந்தது. ஆகவே அவர் ஐம்புலன்களாலும் உணரப்படும் இந்த உலகம் உண்மை
என்றார். நம்மைச் சுற்றி உலகிலுள்ள பொருள் மாறுவதாகவோ, மாறாததாகவோ அறியப்படலாம். ஒருபொருள் மாறக்கூடியது என்பதாலும் நிரந்தரமற்றது என்பதாலுமே அது உண்மை இல்லாததாக
கருதச் செய்ய முடியாது. அந்த பொருள் இருக்கும் வரை அது உண்மை தானே!

இறைவன் சிருஷ்டி செய்வது போல ஜீவன்களும் தங்கள் அறிவிற்கேற்பவும் இறைவனால் அருளப்பட்ட சக்திக்கேற்பவும், தங்கள் குணத்தால் எழும் விருப்பங்களுக்கு ஏற்பவும் தம்மால் முடிந்த அளவில் சிருஷ்டி செய்கின்றனர். இந்த ஜீவன்களின் சிருஷ்டியே செயற்கை எனப்படுகிறது. ஜீவன்கள் உலக பந்தங்களிலிருந்தும், துன்பங்களிலிருந்தும் விடுதலை அடைய இறைவனை பக்தி செய்ய வேண்டும். தங்களை கடவுளிடம் அர்ப்பணித்துக் கொண்டு சரணாகதி செய்துவிட வேண்டும் என்று மத்வர் உபதேசிக்கிறார்.

மொத்தத்தில் இவரது கருத்துப்படி ஜீவர்கள், உலகம், கடவுள் என்ற மூன்று தத்துவங்களும் உண்மையாகும். இந்த மூன்றிற்குமிடையே உள்ள வேறுபாடும் உண்மையாக இருக்கின்றது. நிரந்தரமான உண்மையான பிரபஞ்சத்தை ஆளும் இறைவன் மட்டுமே சுதந்திரமானவர். ஜீவன்களும், பிரகிருதியும் அவருக்குக் கட்டுப்பட்டவை. இறைவன்எங்கும் இருப்பவராக, எல்லாம் அறிபவராக,எப்போதும் இருப்பவராக விளங்குகிறார் என்கிறார்.

கடவுளே மேலான உண்மை. உலகம் இறைவனின் படைப்பு. அனைத்து ஜீவராசிகளிலும் இறைவன் பிரகாசிக்கிறார் என்றாலும் அதை வைத்து அந்த ஜீவராசிகளையும் கடவுள் என்று கூறுதல் தவறு
என்கிறார். நீர் நிரம்பிய பாத்திரங்களில் எல்லாம் சூரியன் பிரதிபலிப்பதால் அந்தப் பாத்திரங்களை எல்லாம் சூரியனாகச் சொல்ல முடியுமா என்ன?

அவருடைய கூற்றுப்படி இயற்கையில் ஜீவன்கள் ஞானமுடையவர்களே. ஆனால் அவர்கள் ஞானம் எல்லைகள்
உள்ள ஞானம். அவர்கள் தங்களை விட மேலான கடவுளுக்குக் கட்டுப்பட்டவர்கள். ஐம்புலன்களுடன் ஓர் உடலைப் பெற்று உலகில் பிறக்கும் ஒவ்வொரு ஜீவனும் பந்தப்பட்டவனே. கட்டுப்பட்டவனே. இந்த பந்தத்திலிருந்து மோட்சம், விடுதலை பெறப் பற்பல பிறவிகளிலும் ஜீவன் உழைத்துப் போராடி கடைசியில் இறைவன் அருள் பெற்று அந்த விடுதலையைப் பெறுகிறான்.

ஒரு ஜீவன் ஞான அறிவு பெறும் வழிகள் மூன்று என்று மத்வர் கூறுகிறார்.அவை
1. பிரத்யட்சம் -நேரடியனுபவமாகக் கண்டறிதல்.
2. அனுமானம் - ஒன்றை வைத்து ஒன்றை ஊகித்து உணர்ந்து அறிதல்.
3. ஆகமம் -சான்றோர்களின் அனுபவமாகிய என்றும் உள்ள வேத நூல்கள் படித்து அறிதல். இந்த மூன்று வழிகளாலும் உயர் ஞானம் பெற முடிகின்றது என்று மத்வர் கூறுகிறார்.

அத்வைத சிந்தனைகள் பாமர மனிதனின் அறிவுக்கும், அனுபவத்திற்கும் எட்டாத போது அவனுக்கு புரிகிற விதமாய் த்வைதம் என்ற ஆன்மிக தத்துவத்தை உபதேசித்து பாரத தேசத்தில் ஆன்மிக ஞானம் நீடிக்க வழிவகுத்த பெருமை மத்வருக்கு என்றும் உண்டு.

அடுத்த பதிவில் விசிஷ்டாத்வைத ததத்துவத்தின் விளக்கத்தை பார்க்கலாம்
Read More

Thursday, December 25, 2014

Keerthivasan

குருவின் அவசியம் - 5 - அத்வைதம்

அத்வைதம் இந்த உலகத்தில் பிரம்மத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று சொல்கிறது. ஜீவாத்மாவும், பரமாத்மாவும் வேறு வேறல்ல என்று சொல்கிறது. உலகத்தின் பல்வேறு தோற்றங்களை மாயை என்று அத்வைதம் சொல்கிறது. அத்வைதத்தின் படி நான், நீ, இன்னொருவன், ஜீவாத்மா போன்ற பேதங்கள் மாயையினால் ஏற்படுகின்றன. உண்மையில் எல்லாமே பிரம்மம் தான். நாம் காண்கின்ற எல்லா வேறுபாடுகளும் அறியாமை ஏற்படுத்தும் தோற்றப் பிழைகள் மட்டுமே.

இதற்கு சில உதாரணங்களை பார்ப்போம்.

திரைப்படம் பார்க்கையில் திரையில் பலவிதமான காட்சிகள் பார்க்கிறோம். வீடு, நகரம், மனிதர்கள், விலங்குகள் இயற்கைக் காட்சிகள் என வித விதமாய் காட்சிகள் தெளிவாக நம் கண் முன்னால் தெரிகிறது. ஆனால் அந்தக் காட்சிகள் உண்மையா? திரையில் தெரியும் நீரில் போய் நனைய முடியுமா? திரையில் தெரியும் வீட்டில் சென்று அமர முடியுமா? முடியாது அல்லவா?

எத்தனை தெளிவாகக் காட்சிகள் தெரிந்தாலும் அந்தக் காட்சிகளில் எத்தனை விதமான செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் உண்மையாக அங்கே இருப்பது ஒரு வெள்ளைத் திரை மட்டுமே. அந்த வெள்ளைத் திரை தான் பிரம்மம். பல விதமான காட்சிகள் தெரிவதும், செயல்கள் நடைபெறுவதாகத் தெரிவதும் வெறும் தோற்றமே. அப்படித் தோற்றத்தை ஏற்படுத்துவது மாயை. எப்போதும் நிலைத்து இருப்பது பிரம்மம் மாத்திரமே என்கிறது அத்வைதம்.

இன்னொரு உதாரணம் பார்ப்போம். இருட்டில் கயிற்றைப் பார்த்து பாம்பு என்று எண்ணிக் கொள்வதாக வைத்துக் கொள்வோம். அதனால் பயம் நம்மை ஆட்கொள்கிறது. பயத்தினால் இதயம் படபடக்கிறது. வியர்க்கிறது. இன்னும் என்னென்னவோ உணர்வுகள் ஏற்படுகின்றன. பிறகு விளக்கைப் போட்டதும் தான் பார்த்தது பாம்பு அல்ல வெறும் கயிறு தான் என்று தெரிகிறது. உடனே தெளிவு பிறக்கிறது. பயம் மறைந்து விடுகிறது. பயத்தின் மூலமாய் ஏற்பட்ட உணர்வுகளும் மறைந்து விடுகின்றன.

அது போல நாமும் அறியாமை இருட்டில் இருந்து கொண்டு நம் ஆத்மாவின் நிலையான தன்மையை மறந்து விட்டு நிலையற்ற கதாபாத்திரமாக நம்மைக் கண்டு படாதபாடு படுகிறோம். அந்தப் பாத்திரத்திற்கு பாதிப்பு என்றால் ஆத்மாவுக்கே பாதிப்பு ஏற்பட்டு விட்டதாக நினைக்கிறோம். அந்த நினைவாலேயே கஷ்டப்படுகிறோம். ஞானம் என்கிற வெளிச்சம் வரும் வரை நம் கஷ்டங்கள் தொடர்கின்றன. ஞான ஒளி வந்து விட்டாலோ உண்மை தெளிவாகிறது. மாயையை உண்மை என்று நம்பி ஏற்படும் அறியாமையினால் விளையும் துன்பங்கள் தாமாக நீங்கி விடுகின்றன.

ஒரு காலிப் பானையை குளத்தில் மூழ்க வைத்தால் பானையின் உள்ளே இருக்கும் தண்ணீர் பானைத் தண்ணீர், வெளியே இருக்கும் தண்ணீர் குளத்துத் தண்ணீர் என்று சொல்லலாம் என்றாலும் உண்மையில் இரண்டும் ஒன்றே அல்லவா? பானை உடைந்தால் முன்பு கண்ட வேறுபாடும் இல்லாமல் போகிறது அல்லவா? பானைத் தண்ணீர் ஜீவாத்மா. குளத்துத் தண்ணீர் பரமாத்மாவாகிய பிரம்மம். உடல் என்ற கதாபாத்திரம் உடையும் போது மிஞ்சுவது நிலைத்திருக்கும் ஒன்றேயான பிரம்மம் தான்.

இந்த அத்வைத சாரத்தை உபநிடதங்களிலும், பகவத் கீதையிலும் காண முடிகிறது. விவேகானந்தர் அத்வைத சாரத்தை ஞான யோகத்தில் மிகவும் ஆழமாகச் சென்று சிறப்பாக விளக்கி இருக்கிறார்.அஹம் ப்ரம்மாஸ்மி (நான் பிரம்மம்), தத்வமஸி (நீயே அது) என்ற மகாவாக்கியங்கள் அத்வைத ஞானத்தைப் பிரதிபலிப்பவை.



அத்வைத தத்துவத்திற்கு மற்றொரு விளக்கம்

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தது பார்முதல் பூதமே.

மரத்தால் செய்யப்பட்ட பெரிய மதயானை உருவம் சிற்பியின் கைவண்ணத்தால் மரத்தை உணர ஒட்டாமல் மறைத்து, மக்களை மயக்குகின்றது. ஆயினும் சிற்பியினது வேலைப் பாடுகளை அழித்து விட்டால், அந்த மத யானையாய் இருந்த பொருள் அழியாதிருப்பினும் மரத்தினுள்ளே மறைந்துவிடும். அது போல, பரம்பொருளால் இயங்குகின்ற உலகம், ஆன்மா உடலில் இருக்கும் காலத்தில் தானே சுதந்திரமாய் இயங்குவனவாய் அதற்குக் காட்சியளிக்கும். அதே போன்று குருவருளால் ஞானத்தைப் பெற்ற முத்தி காலத்தில் உண்மை ஞானம் பொது ஞானத்தை அழித்து எல்லாம் பிரம்மமே என்கிற உண்மை நிலையை உணர்த்தி விடும். இது தான் அத்வைத தத்துவத்தின் சாராம்சம்.

அடுத்த பதிவில் துவைத தத்துவத்தின் விளக்கத்தை பார்க்கலாம்.
Read More

Wednesday, December 24, 2014

Keerthivasan

குருவின் அவசியம் - 4 - ஸ்ரீ ராமானுஜர் வரலாறு

கடந்த பதிவில் ஆதி சங்கரரின் பூர்விகம் பற்றியும் ஸ்ரீ மாத்வாசாரியாரின் வரலாற்றையும் பார்த்தோம். இந்த பதிவில் விசிஷ்டாத்வைதத்தை அறிமுகப்படுத்திய ஸ்ரீ ராமானுஜரின் வரலாற்றை பார்ப்போம்.

அத்வைத தத்துவத்தை அறிமுகப்படுத்திய ஆதி சங்கரர் வாழ்ந்த காலத்திற்கும் துவைத தத்துவத்தை அறிமுகப்படுத்திய மாத்வாச்சாரியார் வாழ்ந்த காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர் தான் ஸ்ரீ ராமானுஜர். இவர் கி.பி. 1017 ஆண்டு காஞ்சிபுரம் அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் அசூரி கேசவ சோமயாஜி தீட்சிதர் மற்றும் காந்திமதி தம்பதிகளுக்கு பிறந்தார். சிறு வயது முதலாகவே வேதங்களிலும் உபநிடதங்களிலும் இருக்கும் மிகவும் நுணுக்கமான தத்துவங்களை மிக எளிதாக புரிந்து கொண்டார். தனது 16-வது வயதில் ரக்ஷகாம்பாள் என்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவர் திருமணத்திற்கு பிறகு நான்கு மாதங்களில் அவர் தந்தை இறந்து விட்டார். அதன் பிறகு ஸ்ரீபெரும்புதூரில் இருந்து காஞ்சிபுரத்திற்கு குடியேறினார்.

காஞ்சிபுரத்தில் அத்வைத தத்துவத்தில் கரை கண்ட யாதவ பிரகாசர் என்கிற பண்டிதரிடம் சிஷ்யராக சேர்ந்தார். கல்வி, கேள்வி ஞானங்களில் தேர்ச்சிபெற்றவரான யாதவ பிரகாசர் அளித்த சில அத்வைத விளக்கங்களில் ராமானுஜருக்கு உடன்பாடு ஏற்படவில்லை. பெருமாளின் ஞானத்தை இயல்பிலேயே பெற்றிருந்த ராமானுஜருக்கு தன்னுடைய குருவின் பொருந்தாத விளக்கங்கள் கேட்டுக் கண்ணீர் பெருகியது. வாதத்தில் குருவை மிஞ்சிய சீடனாக இருக்கும் ராமானுஜரால் தனக்கு சிறுமையே ஏற்படும் என்று எண்ணிய யாதவ பிரகாசர், அவரை கங்கையில் தள்ளி ஜலசமாதி செய்துவிடும் எண்ணத்தோடு, காசிக்கு சீடர்களுடன் பயணமானார். காசியை நெருங்கிவிட்ட நேரத்தில் ராமானுஜரின் தம்பி கோவிந்தன், குருவின் திட்டத்தைக் கூறி ராமானுஜரைக் காப்பாற்றினார். காசியிலிருந்து காஞ்சிக்கு ஒரே இரவில் பெருமாளின் கருணையால் வந்து சேர்ந்தார் ராமானுஜர். ராமானுஜர் இறந்து விட்டதாக நினைத்து யாதவ பிரகாசரும் அவரது சீடர்களும் மகிழ்ந்தனர். சில காலம் கழித்து அவர்கள் காஞ்சிபுரம் வந்ததும் ஸ்ரீ ராமானுஜர் உயிருடன் இருப்பதை கண்டு திகைத்தனர். இறையருள் இருக்கும் ராமானுஜரை இனி கொல்ல முயற்சிக்க கூடாது என்று முடிவு செய்தனர்.

இந்த நிலையில் ராமானுஜர் துறவறம் மேற்கொண்டு தன் மனைவியை விட்டு பிரிந்தார். ராமானுஜரின் இள வயது நண்பர் காஞ்சிபூர்ணர் என்பவர் ராமாநுஜரிடம் தனது குருவான யமுனாசாரியாரை பார்ப்பதற்கு ஸ்ரீரங்கம் செல்லுமாறு கேட்டுக்கொண்டார். அதன்படியே ஸ்ரீரங்கம் சென்ற ராமானுஜர் யமுனாசாரியாரின் இருப்பிடம் வந்து சேர்வதற்குள் யமுனாசாரியாரின் உயிர் பிரிந்து விட்டது. ஆனால் அவர் உடலில் வலது கையில் மூன்று விரல்கள் மட்டும் மூடியிருந்தது. இதன் அர்த்தத்தை புரிந்து கொண்ட ராமானுஜர் யமுனாசாரியாரை தனது மானசீக குருவாக ஏற்று கொண்டு அவரது மூன்று லட்சியங்களை நிறைவேற்றுவதாக சபதம் செய்தார். அவை

1) வேதாந்த சூத்திரத்திற்கு விசிஷ்டாத்வைத தத்துவ முறையில் விளக்கம் எழுதுவது

2) பராசர முனிவரின் விஷ்ணு புராணத்தை உலகிற்கு எடுத்து சொல்வது.

3) விசிஷ்டாத்வைதத்தை உலகிற்கு எடுத்து சொல்லி அறியாமையில் மூழ்கி கிடக்கும் பக்தர்களுக்கு ஸ்ரீ மன் நாராயணனின் அருள் கிடைக்குமாறு செய்வது.

இந்த மூன்றையும் செய்வதாக ராமானுஜர் அறிவித்ததும் அதுவரையில் மூடி இருந்த யமுனாசாரியாரின் மூன்று விரல்களும் ஒன்றன் பின் ஒன்றாக திறந்தது. அதன் பிறகு பல தேசங்களில் சுற்று பயணம் செய்த ராமானுஜர் தனது விசிஷ்டாத்வைத தத்துவங்களை பற்றி அங்கு வாழும் பண்டிதர்களிடம் விவாதம் செய்து வெற்றி பெற்றார். அவரது தத்துவங்களை பல பண்டிதர்கள் ஏற்று கொண்டு அவரிடம் சிஷ்யர்களாக சேர்ந்து அவரது கொள்கைகளை பரப்பினார்கள். பெரிய நம்பிகள் என அழைக்கப்படும் மகாபூரணர், திருக்கோட்டியூர் நம்பி, திருமலை நம்பி, திருவரங்கப் பெருமாள் அரையர், திருமலையாண்டான் எனப்படும் மாலாதரர் என்னும் ஐவரும் ராமானுஜரின் குரு பீடத்தை அலங்கரித்தவர்கள்.

சாதி ஏற்றத்தாழ்வை ராமானுஜர் கடுமையாக எதிர்த்தார். சாதி ஏற்றத்தாழ்வை தம்முடைய மனைவி கொண்டிருந்தார் என்பதே அவரின் துறவறத்துக்கு ஒரு காரணம். 120 வயது வரை வாழ்ந்த ஸ்ரீ ராமானுஜர் கிபி 1137 ஆண்டு இறைவனடி எய்தினார். ஸ்ரீ ராமானுஜர் வரலாறு பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஒவ்வொன்றிலும் நிகழ்வுகள், சம்பவங்கள் சிலவற்றில் மாறுபாடு இருக்கிறது.

ஸ்ரீ ராமானுஜர் வேதாந்த சங்கிரகம், ஸ்ரீ பாஷ்யம், கீதா பாஷ்யம் (பகவத் கீதையின் விளக்கம்), வேதாந்த தீபம், வேதாந்த சாரம், ஸ்ரீ ரங்க காத்யம், ஸ்ரீ வைகுண்ட காத்யம், நித்ய கிரந்தம் போன்ற நூல்களை எழுதினார்.

அடுத்த பதிவில் துவைத - அத்வைத - விசிஷ்டாத்வைத தத்துவங்களும் அதற்கிடையே உள்ள வேறுபாடுகளும் பற்றி பதிவு செய்கிறேன்


ஆக்கம்: விவேக ஜோதி
Read More

Monday, December 22, 2014

Keerthivasan

குருவின் அவசியம் - 3 - குரு பரம்பரை தோற்றமும் ஸ்ரீ மாத்வாச்சாரியார் வரலாறும்

கடந்த பதிவில் குரு என்கிறவர் நம் வாழ்க்கையில் இருக்கவேண்டியதன் அவசியம் பற்றி பதிவு செய்தேன்.


இந்த பதிவில் குரு பரம்பரை எப்படி தத்துவ ரீதியாக தோன்றியது என்று பார்க்கலாம்.

மனிதன் தோன்றியவுடன் அவனுடன் தத்துவங்கள் தோன்றவில்லை. நாகரீகம் வளர்ந்ததும் நல்லது, கெட்டது எது என்று சொந்த அனுபவம் மூலமும் மற்றவர்களின் அனுபவம் மூலமும், இறைவனின் அருள் மூலமும் உணர்ந்து, எப்படி வாழ வேண்டும், எதை செய்ய வேண்டும், எதை செய்ய கூடாது என்று ரிஷிகளும் முனிவர்களும் வகுத்தார்கள்.

கிருத யுகம், திரேதா, யுகம், துவாபர யுகங்களில் கடவுள் பூமியில் அவதாரம் செய்தார், பக்தர்களை காக்க நேரடியாக வந்தார். ஆகவே அந்த யுகங்களில் தத்துவ ரீதியாக மனிதர்களிடம் பேதம் இல்லை. ஆனால் கலி யுகத்தில் கடவுள் ரீதியாக பிளவு வந்தது.

சிவ பெருமான் மற்றும் மகா விஷ்ணுவை வணங்குகிறவர்கள் சைவர்கள், வைணவர்கள் என்று பிரிந்தார்கள். இது தவிர தத்துவ ரீதியாக அத்வைதம், துவைதம், விசிஷ்ட அத்வைதம் என்றும் தத்துவங்கள் தோன்றியது. இதை தோற்றுவித்தவர்கள் முறையே, ஆதி சங்கரர், மாத்வாச்சாரியார், ராமானுஜர் ஆவார்கள். இந்த மூன்று தத்துவங்களை விளக்குவதற்கு முன் இதை தோற்றுவித்தவர்களின் பின்னணியை பார்ப்போம்.

அகத்தியர், காஸ்யபர், அத்திரி, பரத்வாஜர், வியாசர், கவுதமர், வசிஷ்டர் ஆகிய ஏழு ரிஷிகளை சப்த ரிஷிகள் என்று அழைக்கிறோம். இவர்களில் வசிஷ்ட முனிவரின் வழி தோன்றலான பராசர முனிவரின் மகன் வேத வியாசர்.

வேத வியாசரின் சிஷ்யர் சுக பிரம்மர். சுக பிரம்மரின் சிஷ்யர் கெளட பாதர். கெளட பாதரின் சிஷ்யர் கோவிந்த பகவத்பாதர். கோவிந்த பகவத் பாதரின் சிஷ்யர் ஆதி சங்கரர். இவர் தான் அத்வைத தத்துவத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். இவர் 788 கிபி ஆண்டில் பிறந்து 820 கிபி வரையில் வாழ்ந்தார். இவர் 32 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தாலும் பாரத வர்ஷம் முழுவதும் விஜயம் செய்தார். இதை சங்கர விஜயம் என்று சொல்லுவார்கள். இது பற்றிய விவரங்களை பிறகு பார்ப்போம்.

துவைத தத்துவத்தை உலகிற்கு அறிமுகப்படுத்திய மாத்வாச்சாரியார் கிபி 1199 வருடம் உடுப்பிக்கு அருகே உள்ள ஒரு கிராமத்தில் நாராயண பட்டருக்கும் வேதவதிக்கும் பிறந்தார். அவர் பிறப்பதற்கு முன்பு அவர் பெற்றோர் அருகில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றார்கள். அப்போது இரண்டு கால்கள் இல்லாத ஒருவன் கோவில் கொடிமரத்தில் ஏறி "காற்றின் கடவுளாகிய வாயு தேவன் சனாதன தர்மத்தை காப்பதற்கு கூடிய விரைவில் பிறப்பார்" என்று சொன்னான். அதை பார்த்த இந்த தம்பதியர் மிகவும் ஆச்சரியம் அடைந்தனர்.


சில காலம் கழித்து தங்களுக்கு பிறந்த குழந்தைக்கு வாசுதேவர் என்று பெயர் சூட்டினர். அவரும் மிகச்சிறிய வயதிலேயே வேதம், சாஸ்திரம், சோதிடம், விளையாட்டு என்று எல்லாவற்றையும் வெகு வேகமாக கற்று வந்தார்.
அவரது பதினோராவது வயதில் அச்யுத ப்ரஞர் என்கிற சந்நியாசியிடம் சிஷ்யனாக சேர்ந்து சந்நியாசம் வாங்கி கொண்டார். வாசுதேவருக்கு அவரது குரு ஆனந்த தீர்த்தர் என்று பெயரிட்டார். பிறகு இவரே மாத்வாச்சாரியார் என்று அழைக்கப்பட்டார். துவைத தத்துவத்தை பாரத வர்ஷம் முழுவதும் பரப்பினார்.

தென்னிந்தியா மட்டுமின்றி வடக்கே உள்ள பத்ரிநாத் க்ஷேத்திரத்திற்கும் பயணம் செய்தார். பத்ரிநாத் செல்லும் வழியில் வேத வியாசர் வாழ்ந்த தலத்திற்கு சென்ற மாத்வாச்சாரியார் நர-நாராயணர்கள் தவம் செய்த தீர்த்தத்திற்கு சென்று அங்கே பகவத் கீதையின் தத்துவத்தை பற்றி விளக்கம் எழுதினார். அங்கிருந்து திரும்பி தென்னகம் வரும் வழியில் பிரம்ம சூத்திரம் என்கிற நூலை எழுதினார்.

உடுப்பிக்கு மீண்டும் வந்த மாத்வாச்சாரியார் உத்தர கன்னடம் மற்றும் தக்ஷின கன்னட மாவட்டங்களில் இருபது மடங்களை தோற்றுவித்தார். அந்த இருபது மடங்களுக்கும் தனது சிஷ்யர்களை மடாதிபதிகளாக நியமனம் செய்தார். உலக புகழ் பெற்ற பெஜாவர் மடம் மாத்வாச்சாரியார் தோற்றுவித்தது தான். இது மட்டுமின்றி தனது கடைசி காலங்களில் உடுப்பி மற்றும் அருகில் உள்ள கிராமங்களில் மூடநம்பிக்கையை ஒழித்து சமூக விழிப்புனர்ச்சியும் இறை பக்தியையும் மக்களிடம் ஏற்படுத்தினார். மாத்வாச்சாரியார் கிபி 1278 ஆண்டு பத்ரிநாத் க்ஷேத்திரத்தில் முக்தி அடைந்தார். அசரீரியின் வாக்குப்படி வாயு பகவானின் மூன்றாவது மகனாக தான் ஸ்ரீ மாத்வாச்சாரியார் பார்க்கப்படுகிறார்.

விசிஷ்ட அத்வைதத்தை தோற்றுவித்த ஸ்ரீ ராமானுஜர் பற்றியும் துவைத, அத்வைத, விசிஷ்ட அத்வைத தத்துவங்களை பற்றியும் அடுத்த பதிவில் பார்ப்போம்.

ஆக்கம்: விவேக ஜோதி
Read More

Thursday, December 18, 2014

Keerthivasan

குருவின் அவசியம் - 2

குருவின் அவசியம் - 2






கடந்த பதிவில் குரு நிந்தனை ஏன் தவிர்க்க வேண்டும் என்று சொல்லி இருந்தேன். உங்களுக்கு பிடிக்காத ஆன்மீகவாதிகளை ஒதுக்கி விட்டு பிடித்தவர்களை பற்றிக்கொள்ளுதல் நலம்.

பலருக்கு குரு என்றால் யார் என்கிற புரிதல் தவறாக இருக்கிறது. இதற்கு போலி சாமியார்களும் காரணம் என்றாலும் பலர் இது பற்றி தெரிந்து கொள்வதற்கு ஆர்வம் காட்டவில்லை. சில வருடங்களுக்கு முன் நண்பர் ஒருவர் சொன்னார் "BETWEEN ME AND MY MAKER, I DON'T NEED A BROKER" என்று. அவர் சொல்வது பாதி உண்மை. புரோக்கர் போல் செயல்படும் போலி ஆன்மீக வாதிகளை புறக்கணிப்போம். ஆனால் வழிகாட்டி (GUIDE) போல் செயல்படும் ஆன்மீகவாதிகளை பற்றுதல் நலம். எனக்கு எதற்கு ஆன்மீக வாதிகள் - நான் இறைவனிடம் நேரடியாகவே வேண்டுகிறேன் என்று சொல்வோர் அருணகிரிநாதரின் கந்தர் அநுபூதியின் கீழ்க்கண்ட வரிகளை படியுங்கள்:

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

இதில் கடைசி வரியை பாருங்கள். இறையருள் பெற்ற அருணகிரிநாதர் முருகப்பெருமான் தனக்கு குருவாக வந்து அருள வேண்டும் என்று சொல்கிறார். ஏன், கடவுள் கடவுளாகவே வந்து அருள்புரியட்டும் என்று சொல்ல வேண்டியது தானே? ஏன் குருவாக வந்து அருள வேண்டும் என்று விரும்புகிறார்? இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது அருணகிரிநாதர் போன்ற சித்தர்களுக்கே குரு என்று ஒருவர் தேவைப்படுகிறார். அவருக்கு முருக பெருமானுடன் நெருக்கம் இருந்ததால் முருக பெருமானே குருவாக அருள் புரிந்திருக்கிறார். நம்மை போன்ற சாதாரண பிறவிகளுக்கு குரு என்று ஒருவர் தேவை என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா?

இன்னொரு உதாரணத்தை பார்ப்போம். மழை நீரானது குளங்களிலும் குட்டைகளிலும் விழுகிறது. வெயில் அடிக்கும்போது வற்றி ஆவியாக மேலே எழும்பி மேகமாக மாறுகிறது. மீண்டும் மழை பொழிகிறது. மீண்டும் குளம் குட்டைகளில் நீராக தேங்குகிறது. ஆனால் கடல் நீரை எடுத்து கொள்ளுங்கள். கடல் நீர் வற்றுவதே இல்லை. ஆகவே அந்த மழை நீர் கடலிலே விழுந்தால் மீண்டும் வற்றாமல் கடலிலேயே தங்கும். அப்படி கடலிலே கலக்க வேண்டும் என்றால் மழை நீர் ஒரு நதியில் விழ வேண்டும். நதி நீர் கடலில் கலக்கும்போது அந்த மழை நீரை கடலில் சேர்க்கும். அது போல் குரு என்பவர் பிறப்பு - இறப்பு, மீண்டும் ஒரு தாய் வயிற்றில் உறக்கம் என்கிற நிலையில் இருந்து நம்மை விடுவித்து இறைவனின் ஜோதியில் நம்மை ஐக்கியமாக்கி விடுவார். எத்தனை பிறவிகள் எடுத்தாலும் ஏதாவது உருவில் வந்து நம்மை கை தூக்கி விடுவார்.

ஆதி சங்கரர் பஜ கோவிந்தம் என்னும் சுலோகத்தில் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார் :

புனரபி ஜனனம் புனரபி மரணம்
புனரபி ஜனனி ஜடரே சயனம்
இஹ சம்சாரே பஹு தூஸ்தாரே
கிருபயா பாரே பாஹி முராரே

ஆகவே பிறப்பு - இறப்பு என்கிற மீளா சக்கரத்திலிருந்து நம்மை விடுவிப்பதற்கு குரு என்று ஒருவர் தேவைப்படுகிறார் என்று நம்புகிறவர்கள் தொடர்ந்து வரும் பதிவுகளை படியுங்கள்.

அடுத்த பதிவில் குரு பரம்பரை தோன்றிய விதம் பற்றி எழுதுகிறேன்.
 
 
Read More