![]() |
Srimad Bhagavad Gita |
இந்த அவனியில் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஒரு தனித்தன்மை இருக்கிறது, தனிப்பட்ட கடமை இருக்கிறது. மக்கள் தங்களை தாம் செய்யும் கடமைகள் மூலமாக வெளிப்படுத்திக் கொள்கின்றனர். அக்கடமைகளை சமுதாயத்திற்கு சேவையாக செய்தல் வேண்டும். நான் செய்யும் செயல்களின் பலன்களை இறைவனுக்கு அர்ப்பணித்து அதன் பலன் மேல் இச்சை கொள்ளாதிருத்தல் வேண்டும்.
இவ்வகையாக தொடர்ச்சியாக கடமைகளைப் பல முறை ஆற்றுவதன் மூலம் ஒருவர் சம்சார பந்தம் எனும் இவ்வாழ்க்கையில் இருந்து விடுதலை பெறுகின்றனர். அதனால் இறைவனை அடைகின்றனர். கடமை எனப்படும் கர்மாவே வாழ்க்கையின் அடிப்படைத் தத்துவம். அதனின்றி இவ்வுலகம் செயல் படுவதில்லை.
2. வெவ்வேறு மனிதர்கள் தனித்திறமை படைத்தவர்களாகவும், பல்வேறு குணாதிசயங்கள் கொண்டவர்களாகவும், வெவ்வேறு தொழில் புரிபவர்களாகவும் இருக்கின்றனர்! இதை யார் முடிவு செய்கின்றனர்?
ஒவ்வொருவரும் வாழ்வில் ஏதோ ஒரு காரணத்திற்காக ஜனித்துள்ளனர். ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு தனித்துவமான குணாதிசயமும் திறமையும் உள்ளது. அதுவே அவர் செல்லும் பாதையையும் அவரின் தொழிலையும் தீர்மானிக்கிறது. இந்த இயற்கையான சுபாவத்தினோடு நமது கடமையை திறம்பட ஆற்றி, மனிதகுலத்துக்கும் பகவானுக்கும் சேவை செய்வதே இலட்சியமாகக் கொள்ள வேண்டும்.
பரந்து விரிந்த இவ்வுலகில், மனிதரின் தொழில், பிராம்ஹணம், க்ஷத்திரியம், வைஷியம், சூத்திரம் ஆகிய நான்கு பிரிவுகளுக்குள் அடங்கிவிடுகிறது. ஒவ்வொருவரும், இவை நான்கில் ஏதாவது ஒன்றில் வருகின்றனர். நாட்டை ஆள்பவர், ஒரு நிறுவனத்தை நிர்வாகம் செய்பவர், இராணுவ வீரர் போன்றோர் எல்லாம் க்ஷத்திரியத்திலும், வணிகம் குறித்த தொழில் செய்வோர் வைஷியத்திலும், திறமையால் பொருள், சேவை படைப்போர் சூத்திரத்திலும், கல்வி அறிவு புகட்டும் ஆசிரியர், வழக்குகள் குறித்த தொழில் செயவோர் பிராம்ஹணத்திலும் வருவர்.
இவர்கள் யாரும் ஒருவருக்கு ஒருவர் தாழ்ந்தவரோ, உயர்ந்தவரோ இல்லை, பிறப்பால் தீர்மாணிக்கப் படுபவர்களும் இல்லை. செய்யும் தொழ்iல் கொண்டே பிரிக்கப் படுகின்றனர்.
இவ்வகையான நான்கு குணாதிசயங்களும் வெவ்வேறு அளவீடுகளில் ஒரே மனிதரிடம் இருக்கலாம். உதாரணமாக பிராம்ஹண குணாதிசயமுடைய, கல்வி கற்று கொடுக்கும் ஆசிரியர் ஒருவருக்கு க்ஷத்திரியக் குணமான நிர்வாகத் திறமையும் கூடவே இருக்கலாம். அவர் ஒரு கல்வி நிலையத்தின் தாளாளராக இருப்பது இயற்கை.
ஒவ்வொருவரும் தத்தமது கடமையை பிரதிபலன் பாராது சமூகத்திற்கு செய்யும் சேவையாகவும், பகவானுக்குச் செய்யும் தொண்டாகவும் செய்தல் அவசியம், அந்த கடமை அவருக்குப் பிடிக்காதக் கடமையாயினும்!
ஆக்கம்: விஷ்வலிங்க சூர்யா