Monday, January 5, 2015

Keerthivasan

தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் - 02 - தில்லை - சிதம்பரம்



கோயில் - சிதம்பரம்.

சைவ ஆலயங்களில் தலைமை பீடம் எனலாம். தோன்றிய காலம் தெரியாதது. விஞ்ஞானமும் மெய்ஞானமும் ஒருங்கே விளங்கும் திருத்தலம். பஞ்ச பூத தலங்களில் இது ஆகாயத்திற்கு உரியது. இறைவன் இங்கு ஆகாய வடிவில் அருவமாகவும், திருமூலட்டான நாதர் வடிவில் அருவுருமாகவும், உருவ வடிவில் ஸ்ரீ நடராஜர் ஆகவும் காட்சி தருகிறார்.

சுவாமி : திருமூலநாதர்.
அம்பாள் : உமையாம்பிகை. சிவகாமசுந்தரி)
மூல மூர்த்தி : ஸ்ரீ நடராஜர்.
அம்மை : ஸ்ரீ சிவகாமி

தலவிருட்சம் : தில்லைமரம். இத்தலம் தில்லை என்னும் மரங்கள் அடர்ந்த காடாக இருந்ததால் இப்பெயர் பெற்றது. தில்லை என்னும் மரங்கள் இப்பொழுது சிதம்பரத்தில் காணக் கிடைக்கவில்லை. சிதம்பரத்திற்கு கிழக்கில் உள்ள பிச்சாவரத்திற்கு அருகே அமைந்துள்ள உப்பங்கழியின் கரைகளில் இம்மரங்கள் மிகுதியாக இருக்கின்றன.

தீர்த்தம் : சிவகங்கை, பரமானந்த கூபம், வியாக்கிரபாத தீர்த்தம், அனந்த தீர்த்தம், நாகச்சேரி, பிரம தீர்த்தம், சிவப்பிரியை, புலிமேடு, குய்ய தீர்த்தம், திருப்பாற்கடல்

புராண பெயர் : தில்லை
ஊர் : சிதம்பரம்
மாவட்டம் : கடலூர் 



பாடியவர்கள் : திருஞானசம்பந்தர் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்

திருவிழா : மார்கழி திருவிழா - 10 நாள் திருவிழா - திருவாதிரை அன்று ஆருத்ரா தரிசனம் மிக விஷேசமாக நடக்கும். திருவாதிரை நட்சத்திரத்திற்கு முன் கொடி ஏற்றி பத்து நாள் விழா நடைபெறும். இத்திருவிழாவில் ஒரு தனி விஷேசம் உண்டு. இவ்விஷேசம் மாணிக்கவாசகருக்கு அமைவது.

பத்து நாட்களிலும் சாயுங்கால தீபாராதனையின் போது மாணிக்கவாசகரை சுவாமியின் சன்னதிக்கு எழுந்தருளச் செய்து திருவெம்பாவை பாட்டுகள் பாடிச் சுவாமிக்குத் தீபாராதனை நடைபெறும். நாள்தோறும் காலை விழாவில் மாணிக்கவாசகரையும் எழுந்தருளச் செய்வதுடன் 10 ஆம் நாள் தரிசனம் முடிந்தவுடன் மாணிக்கவாசகருக்கும் தீபாரதனை நடைபெறும். சுவாமிக்கு விடையாத்தித் திருவிழா முடிந்த மறுநாள் மாணிக்கவாசகருக்கும் விடையாத்தித் திருவிழா நடைபெறும்.

ஆனித்திருமஞ்சனம் - 10 நாள் திருவிழா - ஆனி உத்திர நட்சத்திரத்திற்குப் பத்துநாள் முன் கொடிஏற்றி முதல்நாள் திருவிழா முதலாக எட்டாந்திருவிழா வரையில் உற்சவ மூர்த்திகளான சோமாஸ்கந்தர், சிவானந்த நாயகி, விநாயகர் , சுப்பிரமணியர், சண்டேசுவரர் முதலிய பஞ்சமூர்த்திகளும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வெள்ளி, தங்க வாகனங்களில் வீதியுலா வருவார்கள். சித்திரை வருடப்பிறப்பு, திருவாதிரை நட்சத்திரம், அமாவாசை முதலிய விசேச நாள்களில் நடராஜமூர்த்தி சிவகங்கையில் தீர்த்தம் கொடுத்தருள்வார். மற்ற மாதங்களிலும் இவ்வாறு தீர்த்தம் கொடுத்தருள்வார்.

சித்திரை முதல் பங்குனி முடிய பன்னிரு மாதங்களில் மாதப்பிறப்பு, பிரதோசம், வெள்ளிக்கிழமை, திருவாதிரை, கார்த்திகை, அமாவாசை, பௌர்ணமி ஆகிய நாட்களில் இரவு விழா நடைபெறும். திருப்பாவாடை உற்சவம்: சிதம்பரம் திருத்தலத்தில் நடைபெறுகின்ற பல உற்சவங்களுள் தைப்பூசத்திருநாளில் நடைபெறும் திருப்பாவாடை உற்சவமும் ஒன்று. இதற்கென்று ஒரு சாசனமும் எழுதப்பட்டுள்ளது. இந்த சாசனத்தில் திருப்பாவாடை உற்சவத்தை தைப்பூசத்தன்று விமரிசையாக நிகழ்த்துவதற்காக பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே நிலம் தானம் செய்யப்பட்டதாக பல குறிப்புகள் இருக்கின்றன.

அரிசி, பருப்பு, சர்க்கரை, தேங்காய், பலா முதலியவற்றைக் கொண்டு இனிப்புச் சுவை கொண்ட பொங்கல் திருவமுது செய்து தைப்பூசத் திருப்பாவாடை வைபவத்தின்போது இறைவனுக்குப் படைக்க வேண்டும் என்பதற்காக நிலம் தானம் செய்யப்பட்டது. இவை யாவும் தைப்பூசத்திருநாளில் சிதம்பரம் திருத்தலத்தில் தொன்மைக் காலம் தொட்டு நடைபெற்று வரும் சிறப்பினையும் மகிமையையும் எடுத்துக் காட்டுகிறது.

தல சிறப்பு :
இங்கு மூலவர் திருமூலநாதர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆனால் நடராஜரே இங்கு பிரதான மூர்த்தி. பஞ்ச பூத தலங்களில் இது ஆகாயம் தலம் ஆகும். மூவர் பாடிய தேவார திருப்பதிகங்களை கண்டெடுத்த தலம் இது. சைவத்தில் கோயில் என்றால் அது சிதம்பரத்தைக் குறிக்கும்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 1 வது தேவாரத்தலம் ஆகும்.

திறக்கும் நேரம் :
காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி :
அருள்மிகு தில்லை நடராஜர் திருக்கோயில்,
சிதம்பரம்- 608 001.கடலூர் மாவட்டம்.

கோயிலுக்குள் திருமூலட்டானக் கோயில் மேற்கு பிரகாரத்தின் மேல்பால் இருக்கின்றது. கருங்கல் வடிவத்தில் செய்து வைக்கப்பட்டுள்ளது. நடராஜர் சன்னதியின் எதிரில் உள்ள மண்டத்தில் நின்றபடி பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூவரையும் தரிசிக்கலாம். நடராஜர் சன்னதி அருகிலேயே 108 திவ்ய தேசங்களில் ஒன்றான கோவிந்தராஜப் பெருமாள் தலம் இருப்பது விசேஷத்திலும் விசேஷம். சிவனுக்கும், சக்திக்கும் நடந்த போட்டி நடனத்தில், ஆடிய தில்லை காளியின் கோயில் நடராஜர் கோயில் அருகில் உள்ளது. 51 ஏக்கர் பரப்பளவில் அமைந்த பிரம்மாண்டமான சிவ தலம் இது. மிகச் சிறந்த கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக அமைந்த அற்புத தலம். நடராஜரின் பஞ்ச சபைகளில் இது சிற்றம்பலம்.

தலபெருமை :
இறைவன் இத்தலத்தில், நடராஜர் என்ற உருவமாகவும், ஆகாயம் என்ற அருவமாகவும், ஸ்படிக லிங்கம் என்ற அருவுருமாகவும் அருள்பாலிக்கிறார். சைவத்தில் கோயில் என்றால் அது சிதம்பரத்தைக் குறிக்கும்.

சிதம்பர ரகசியம் : சித்சபையில் சபாநாயகரின் வலப்பக்கத்தில் உள்ளது ஒரு சிறு வாயில். இதில் உள்ள திரை அகற்றுப்பெறும். ஆரத்தி காட்டப் பெறும். இதனுள்ளே திருவுருவம் ஏதும் தோன்றாது. தங்கத்தால் ஆன வில்வ தளமாலை ஒன்று தொங்கவிடப்பட்டுக் காட்சியளிக்கும். மூர்த்தி இல்லாமலேயே வில்வதளம் தொங்கும். இதன் ரகசியம் இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கின்றார் என்பதுதான். ஆகாயத்துக்கு ஆரம்பமும் கிடையாது, முடிவும் கிடையாது. அவனை உணரத்தான் முடியும் என்பதே இதன் அர்த்தம். சிதம்பர ரகசிய ஸ்தானத்தில் அம்மனுக்குரிய ஸ்ரீசக்ரத்தையும், சிவனுக்குரிய சிவசக்ரத்தையும் இணைத்து, ஒன்றாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக ஒரு தகவல் உண்டு. இந்த சக்ரத்தில் நடராஜப்பெருமான் ஐக்கியமாகி, தன் ஆனந்த நடனத்தினால் உலகை படைத்து, காத்து, மறைத்து, அழித்து, அருளிக் கொண்டிருக்கிறார்.

சிதம்பர ரகசியம் : சித்+அம்பரம்=சிதம்பரம்.
தேவாரம் கிடைத்த தலம்:

இந்த ஊரின் தேரோடும் வீதிகளில் அப்பர் பெருமான் அங்கப்பிரதட்சணமே செய்தாராம். இலங்கையை சேர்ந்த புத்தமத மன்னனின் ஊமை மகளை மாணிக்கவாசர், நடராஜர் அருளால் பேசச் செய்த தலம். இத்தலத்து திருக்கோயிலில் சிற்றம்பலம், பொன்னம்பலம், பேரம்பலம், நிருத்தசபை, இராசசபை என்னும் ஐந்து மன்றங்களும் அமைந்திருத்தலும், சிவன் விஷ்ணு இருவர் திருச்சந்நிதிகள் ஒரே இடத்தில் நின்று தரிசிக்கும்படி அமைந்திருத்தலும் தனிச் சிறப்புகளாகும். பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மும்மூர்த்திகளும் கோயில் கொண்டுள்ள திருத்தலம் இது. இத்தலத்து முருகப்பெருமான் (சுப்ரமணியர்) குறித்து அருணகிரிநாதர் பத்து திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார்.

உடலின் அமைப்பில் நடராஜர் சன்னதி : மனிதனின் உருவ அமைப்பிற்கும், தங்கத்தால் ஆன நடராஜர் சன்னதிக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது. பொன்னம்பலத்தில் நமசிவாய மந்திரம் பொறிக்கப்பட்டு வேயப்பட்டுள்ள 21 ஆயிரத்து 600 தங்க ஓடுகள், மனிதன் ஒரு நாளைக்கு விடும் சுவாசத்தின் எண்ணிக்கையைக் குறிக்கும் அளவில் உள்ளது.. பொன்னம்பலத்தில் அடிக்கப்பட்டுள்ள 72 ஆயிரம் ஆணிகள், மனிதனின் நாடி நரம்புகளைக் குறிக்கிறது. கோயிலில் உள்ள 9 வாசல்கள் மனித உடலிலுள்ள 9 துவாரங்களைக் குறிக்கிறது. இதுதவிர ஆன்மிக ரீதியான அமைப்பும் உண்டு. ஐந்தெழுத்து மந்திரமான சிவாயநம என்பதின் அடிப்படையில் பொன்னம்பலத்தின் ஐந்து படிகளும், 64 கலைகளின் அடிப்படையில் சாத்துமரங்களும், 96 தத்துவங்களைக் குறிக்கும் விதமாக 96 ஜன்னல்களும், 4 வேதங்கள், 6 சாஸ்திரங்கள், பஞ்ச (5)பூதங்களின் அடிப்படையில் தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன.

ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்ரம் அம்மன் சன்னதியில் உள்ளது. அர்த்தஜாம பூஜை இத்தலத்தின் தனி சிறப்பு. அர்த்தஜாம பூஜையில் உலகில் உள்ள அனைத்து தெய்வங்களும் கலந்து கொள்வதாக ஐதீகம். இதை அப்பர் புலியூர் (சிதம்பரம்) சிற்றம்பலமே புக்கார் தாமே எனப்பாடுகிறார். சேக்கிழார் இங்குள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் தான் பெரியபுராணம் பாடி அரங்கேற்றினார். அருணகிரிநாதர் இத்தலத்தில் உள்ள முருகப்பெருமானை தனது திருப்புகழில் பாடியுள்ளார்.

தல வரலாறு:
முனிவர்களுள் சிறந்தவரான வசிஷ்ட மாமுனிவரின் உறவினரான மத்யந்தினர் என்ற முனிவருக்கு மாத்யந்தினர் என்ற மகன் பிறந்தான். அவனுக்கு ஆன்மஞானம் கிடைக்கவேண்டுமெனில் தில்லை வனக் காட்டில் உள்ள சுயம்பு லிங்கத்தை வணங்குமாறு முனிவர் சொன்னார்.இதையடுத்து மாத்யந்தினர் தில்லை வனம் வந்தடைந்தார். இங்குள்ள லிங்கத்தை தினமும் பூஜை செய்தார். பூஜைக்கு தேவையான மலர்களை, பொழுது விடிந்த பிறகு எடுத்தால் தம் பூஜை, தவம் முதலியவற்றிற்கு நேரமாகிறபடியாலும், மலர்களில் உள்ள தேனை வண்டுகள் எடுப்பதால் அம்மலர்கள் பூஜைக்கு ஏற்றவையல்ல என்பதாலும் ஒவ்வொரு நாளும் மிகவும் மனம்வருந்திக் கொண்டே மலரெடுத்துப் பூஜை செய்து கொண்டு வந்தார். இக்குறையை சுவாமியிடம் முறையிட்டார். சுவாமி தங்கள் பூஜைக்காக பொழுது விடியுமுன் மலர்களைப் பறிக்க இருட்டில் மலர்கள் தெரியவில்லை.

பொழுது விடிந்த பின்னர் மலர்களைப் பறிக்கலாம் என்றால் மலர்களில் உள்ள தேனை வண்டுகள் எடுத்துவிடுவதால் பூஜைக்கு நல்ல மலர்கள் கிடைக்கவில்லை என்று கூறினார். உடனே சுவாமி மரங்களில் ஏறுவதற்கு வசதியாக வழுக்காமல் இருக்கப் புலியினுடைய கை கால்கள் போன்ற உறுப்புகளும், இருளிலும் நன்றாகத் தெரியும்படியான கண்பார்வையும் உனக்கு கொடுத்தோம் என்று கூறியருளினார். மேலும் புலிக்கால் புலிக்கைகளைப் பெற்றதால் உன் பெயரும் வியாக்கிரபாதன் என்றும் கூறினார். மாத்யந்தினரும் பெருமகிழ்வு கொண்டு தினமும் மனநிறைவோடு பூஜை செய்து வந்தார் என தல வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது.

திருநாவுக்கரசர் தேவாரம் -
குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்,
பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும்,
இனித்தம் உடைய எடுத்த பொன்பாதமும் காணப் பெற்றால்
மனி(த்)தப் பிறவியும் வேண்டுவதே, இந்த மா நிலத்தே!

ஆக்கம்: சரவணன் சிவதானு

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :