![]() |
https://avishjoseph.deviantart.com/art/Super-star-Rajinikanth-564963049 |
3ஆவது மெட்ராஸ் மாநில தேர்தல்(இன்றைய தமிழ்நாடு) 1962ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக தேர்தலில் 27% வோட்டுகள் , அதற்கு முன் 1957ல் 14%வோட்டுகளை பெற்றது. இந்த இடைபட்ட காலத்தில் வளர்ச்சி அடைந்து திமுக 1967ல் 52.59% வோட்டுகளை பெற்று ஆட்சிக்கு வருகிறது. காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வருகிறது.
இந்த காங்கிரஸ் வீழ்ச்சிக்கு காரணம் என்ன?
திமுக கொள்கை , அதன் நேர்மை நியாயமான அரசியல் முன்நெடுப்பு , சமூக சமத்துவ கொள்கை , பொதுவுடைமை சிந்தனை என்று எந்த மண்ணாங்கட்டியும் கிடையாது. பின்ன காரணம் என்ன???
எம்ஜிஆர் என்ற பிரபலம்... அவர் மக்கள் மீது ஏற்படுத்திய ஈர்ப்பு... 1962 முதல் 1967 உள்ளாக அவருக்கு ஆயிரத்தில் ஒருவன் , எங்கள் வீட்டுபிள்ளை , விவசாயி , நான் ஆணையிட்டால் என்று உச்சகட்ட பிரபலம் ஆகிவிட்டார். அது போதாது என்று எம்ஜிஆர் சுடபட்டார்.. இந்த அதிர்வும் , அனுதாபமும் அவர் ஆதரவுடன் தான் திமுக 52.59% வோட்டுகளை பெற்று வெற்றிபெற காரணம். மற்றபடி கட்சி கொள்கை புண்ணாக்குக்கு எல்லாம் எவரம் வோட்டு போட்டதாக வரலாற்றை எங்கும் தேடி பார்த்தவரை எனக்கு தெரியவில்லை.
அதற்கு முந்தய தேர்தல்களில் திமுக 15%சராசரியாக வாங்க காரணம் என்ன? உணர்வை தூண்டும் கவர்ச்சி பேச்சுக்கள். மேடை மேடைக்கு எதுகை மோனை பேசியே திரிந்தவர்கள் இவர்கள். அந்த கவர்ச்சி பேச்சுதான் இன்னொரு காரணம் என்று வைத்து கொள்ளலாம். அடுத்து 1971ல் கருணாநிதி கொடுத்த கேவலமான ஆட்சி எம்ஜிஆர் பிரிவு - 1977 முதல் தொடர்ந்து மூன்று முறை ஆட்சியை பிடிக்க 1984 வரை அதிமுக வெற்றி நீள்கிறது. அதன் பின் அதிமுக திமுக மாறி மாறி ஆட்சியை பிடிக்கின்றன.
இதை ஏன் கூறுகிறேன் என்றால் - மக்களை சென்று சேர்வதில் கொள்கை எல்லாம் தாண்டி - ஒரு populist movement அதாவது சாதாரண வெகுஜனங்களை சென்று சேரும் அளவுக்கு ஒரு அரசியல் கட்சி தான் தமிழகத்தில் தேர்தல் மாற்றத்தை தரமுடியும். (இது தான் எதார்த்தம்... அப்துல்கலாம் அரசியலுக்கு வந்தாலும் வெற்றி பெற முடியாது என்பது இதனால் தான் கூறுவர்.)
எனவே அந்த வகையில் ரஜினி என்ற பிம்பம் தமிழக அரசியலை சந்திக்க ஒரு நல்ல தேர்வு.
-------------------------------------------------
சரி அவருக்கு என்ன தகுதி இருக்கு?????
01)தேர்தல் அரசியல்:
12 மாநகராட்சி, 148 நகராட்சி, 561 பேரூராட்சிகள்,12618 ஊராட்சிகள் , 385 ஊராட்சி ஒன்றியங்கள் இந்த கட்டமைப்புக்கு நிர்வாகிகளை போடும் திறன் அதிமுக , திமுக இரண்டுகட்சிகள் தவிர்த்து உள்ள ஒரே நபர் இன்றைய தேதியில் ரஜினி மட்டுமே. ஏன் என்றால் அவருக்கு இருக்கும் ரஜினி ரசிகர் பட்டாளம் என்று பார்த்தால் விஜயகாந்தை விட பல மடங்கு அதிகம். 30 வயது முதல் 55வயதுக்குள் இருக்கும் ஒரு பெரும் கூட்டம் ரஜினியை விரும்புகிறது.விஷயம் ரஜினி ரசிகர்கள் அவர் மீது காட்டும் தீவிரமான பாசம் , அந்த ஈர்ப்பு நம்பமுடியாத அளவு அதிகம். அதை அவர் சினிமா மூலம் சம்பாரித்தார் என்று கூறுவது, ஒரு நடிகன் தானே என்று குறைகூற ஆயிரம் பேர் வரலாம், கூறலாம் - ஆனால் எது எப்படியோ அவரிடம் பெரும் பலம் இருக்கிறது என்பது அசைக்க முடியாத உண்மை.
முதலில் ஒன்றை புரிந்துகொள்ளுங்கள் - நானும் நீங்களும் கூட கட்சி ஆரம்பிக்கலாம். ஆனால் அமைப்பு ரீதியாக பலம் வேண்டும். அதாவது
தேர்தலுக்கு சுமார் 64000பூத்கள் ஆட்கள் போட்டு வேலை செய்யும் ஒரு நிர்வாக திறன் - அமைப்பு ரீதியான பலம் வேண்டும், அப்போ தான் மாநில தேர்தலை எதிர்கொள்ள முடியும். மாநில தேசிய கட்சிகள் யார் வேண்டுமானாலும் இருக்கலாம், விஜயகாந்த் தேமுதிக 2005ல் வந்தது. ஏறக்குறைய 10% வாக்குகளை பெறக்கூடிய அளவுக்கு அவர் அரசியலில் நல்ல வளர்சி அடைந்தார். (வைகோ, திருமா, கம்யூனிஸ்ட் கூட்டணி வச்சு நாசம் ஆகும் வரை)
விஜயகாந்த் எப்படி காணாமல் போனார்?
அந்த மனிதரை எந்நேரமும் செய்தியாளர்கள் விட்டு கேள்வி கேட்பதாக கூறி திக, திமுக , அதிமுக ஆதரவு பத்திரிக்கையாளர்கள் வம்பிழுத்து - அவமானம் செய்து - அவரை பற்றி தவறாக கருத்துகள் பரப்பி - காமடிகள் உருவாக்கி - ஒரு கடத்தில் அவரை முழுநேர நகைச்சுவை நடிகர் போல அரசியலில் மாற்றினர்- செய்தது இதே திராவிட கூட்டங்கள் தான்.
தேசியகட்சிகள் நிலை???
தேசிய கட்சிகள் வளரவிடகூடாது என்றால் இங்கே மிக எளிய பார்முலா என்னவென்றால் - கம்யூனிஸ்ட் தீவிரவாத குழுக்கள் நக்சல் , மாவோஸ்ட் ஆதரவாளர்கள் பேசவிடுவது - நாட்டில் உள்ள பிரிவினைவாதிகளை விட்டு தமிழ் தனி தேசியம் பேச சொல்லி இடம் கொடுப்பது.. அத்துடன் அனைத்து பிரச்சனைகுக்ம் மத்திய அரசு தான் காரணம் - நாங்கள் என்ன செய்வோம் என்று நல்லவன் வேடம் போடுவது. {ஆனால் கூட்டணி வச்சுபாங்க.. மத்திய மந்திரியாக எல்லாம் இருந்துபாங்க.)எனவே இது மறைமுகமாக தேசியகட்சிகள் வளர்ச்சியும் சாத்தியம் இல்லாமல் பார்த்து கொள்ளும் வேலையை திக என்ற பெரியார் கூட்டம் மூலம் செய்கிறார்கள்.
ஆகா திமுக , அதிமுக இரண்டையும் எதிர்க்கும் அமைப்பு ரீதியாக தேர்தலை சந்திக்கும் பலம் ரஜினியிடம் உண்டு.
02)கொள்கை அடிப்படையில்?:
ஆன்மீக அரசியல் என்ற ஒற்றை வரி கொள்கையை நாம் எப்படி புரிந்து கொள்ளவேண்டியுள்ளது ?
விசயத்தை நன்கு புரிந்து கொள்ளுங்கள்: "ஆம்ப்ரகாம் வழி தோன்றல்களால் ஜெருசலம் , பாலஸ்தீன பகுதிகளில் உருவான மதங்களான யுதம் , கிறிஸ்தவம் , இஸ்லாம் தான் Theocracy என்ற மதம் கொண்டு ஆட்சி முறையை வகுக்கும் பழக்கம் கொண்டவை. கிருஸ்தவர்கள் தனி மதமாக உருவாக காரணம் யூதர்களிடம் இருந்த பெரிய வேறுபாடு எல்லாம் இல்லை. ஆட்சி அதிகார முறையால் மதங்களாக அங்கீகரிக்கபட்டது தான்". அதாவது மதம் என்ற விஷயம் உருவானதே மேற்கத்திய நாடுகளில் தான் ஒழிய இந்தியாவில் அல்ல.
இந்தியாவை பொறுத்தவரை அனைத்தும் ஒன்றிணைத்து ஆன்மவியல் பரப்பும் வேலை மட்டுமே உண்டு. புத்தம் , மாகவீர் என்ற இந்துமத கிளைகள் எல்லாமே ஆன்மிகம் பரப்பும் வேலையை மட்டுமே செய்தார்கள் தவிர பெரிய அளவில் கடவுள்கள் வழிபாட்டால் பிரியவில்லை, பெரும் சண்டைகள் போட்டுகொண்டவர்கள் இல்லை. அதாவது கிருஸ்தவர்கள் , இஸ்லாமியர் , யூதர்களிடம் இருக்கும் ஒருவர் மீது ஒருவருக்கு இருக்கும் ஒரு மத வெறுப்பு இங்கே உருவான சிவன் , பெருமாள் , முருகன் , புத்தம் , மகாவீர் , சீக்கியர்கள் என்று இவரகளுக்குள் இருக்காது. காரணம் இங்கே ஆன்மிகம் பரப்ப மட்டுமே அனுமதி உண்டு. மதத்தை பரப்ப பெரியவர்கள் சொல்லி தரவில்லை.
இன்றும் உலகம் முழுவதும் இந்த இந்தியாவில் தோன்றிய எந்த மதமும்- தங்கள் மதம் பரப்பும் கேடுகெட்ட வேலையை செய்யாது. ஆனால் ஆப்ரகாம் வழி தோன்றல்களால் உருவான மாதங்கள் கடமையாகவே மதம் மாற்றுவர். அதனால் தான் ரஜினி ஆன்மிகம் என்கிறார் - மதம் என்னும் சொல்லை தவிர்க்கிறார்.
எனவே ஆன்மிகம் என்றால் என்ன என்று நமக்கு தெளிவு கிடைக்கிறது. யாரும் எந்த மதமும் வழிபடலாம் - ஆனால் பரப்புவது இந்த நாட்டின் குணம் அல்ல. ஆக ரஜினி இந்த விசயத்தில் மிக தெளிவாக இருக்கிறார். (ரஜினி குழப்பவில்லை. சிலர் அவர் குழப்புவதாக உருவகம் செய்ய முயற்சிக்கிறார்கள். ரஜினி மிக தெளிவாக தான் இதனை கூறுகிறார். இந்துத்துவா என்றால் அர்த்தமும் இது தான்.}
ஆன்மீக அரசியலுக்கு அவசியம் என்ன??
பெரியார் பிறந்த பூமி என்ற எல்லா கேவலமும் அசிங்கமும் அருவருப்பும் நியாயம் பேசி திரியும் கூட்டம் ஒன்று இங்கே உருவாக்கி கடவுள் நம்பிக்கையை அருவருப்பாக திட்டி திரிவது மட்டும் அல்ல - நம்ம எல்லாரும் படிச்சத்துக்கு காரணம் முதல் அப்துல் கலாம் அணுஆயுத சாதனைகளுக்கு கூட காரணம் - ஈவேரா பெரியார் தான் என்று ஒரு மாய உலகத்தை உருவாக்கி கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் திரியும் கூட்டம் ஒன்று இங்கே இருக்கு. அது தான் திராவிட சிந்தனை.
திராவிட சிந்தனை எளிமையாக கூறினால் : தமிழ் தேசிய பிரிவினைவாதம் , இல்லாத திராவிட உணர்வை தூண்டிவிடுவது , கடவுள் நம்பிக்கை இல்லை என்ற பெயரில் இந்து கடவுகளை மட்டும் விமர்சிப்பது , மூடநம்பிக்கை ஒழிக்கிறேன் பேர்வழி என்று இந்து மக்கள் கொண்ட நம்பிக்கையை மட்டும் பேசி திரிவதாக இந்த மாநிலத்தை குழப்பிய ஒரு கேவலமான திராவிட சிந்தனை முடிவுக்கு வர எது சரி????- ஆன்மீக அரசியலை மேற்கொள்வேன் என்று ரஜினி கூறியது அவருடைய மிக மிக மிக பெரிய மாற்று அரசியலுக்கான சிந்தனையாக நான் பாராட்டுகிறேன். (திராவிட என்ற வார்த்தைக்கு அர்த்தம் வேறு - திக உருவாகிய திராவிட சித்தாந்தம் கொண்ட அர்த்தம் வேறு}
ஒன்றை நன்கு அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்:
இதுதான் "திராவிடம், திராவிடன்" என்று நிருபீக்க இன்றுவரை அறிவியல் ரீதியாக எந்த ஆதாரமும் சமர்பிக்காத50வருடம் மேலாக ஆட்சி செய்யும் இந்த திராவிட ஆட்சியர் கூட்டம் இன்றும் அதை ஒரு நம்பிக்கை சார்ந்த சிந்தனையாகவே விதைப்பது வெக்கம் கெட்ட அரசியல் தந்திரம். எனவே இந்த மாய திராவிட சிந்தனை ஒழிக்க இந்த கூட்டத்தை அடியோடு வீழ்த்தும் ஆன்மீக அரசியல் என்ற வார்த்தை 100% வரவேற்கதக்கதுவே. இந்த வகையிலும் ரஜினி ஒரு நல்ல மாற்றுதான்.
03)நேர்மை :
இன்றைய தேதியில் ரஜினி அளவுக்கு பிரபலமான நபர் தெனிந்தியாவில் இன்னொருவர் கிடையாது. ரஜினிக்கு இருக்கும் விளம்பர மார்க்கெட் மதிப்பு : 100கோடிக்கும் மேல் நிச்சயம் இருக்கும். ஆனால் அவர் விளம்பரங்களில் நடிப்பது இல்லை. ரஜினியால் எந்த பிராண்டையும் இங்கே விளம்பரபடுத்த முடியும். ஆனால் அவர் அவற்றை ஒரு கொள்கை ரீதியாக தவிர்ப்பது நிச்சியம் காசுக்காக வாழ்வில் வளைந்து கொள்ளகூடிய மனிதர் இல்லை என்று நம்மால் இந்த சின்ன விஷயம் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.
எவன் என்ன அசிங்கமா வேண்டுமானாலும் பேசிக்கோ , திட்டிகோ , ஜெயிலுக்கு போயிக்கோ , மக்கள் என்ன வேண்டுமானாலும் அவமானமா பேசுங்க, ஆனால் நாங்க அப்படமாக திருடி தான் வாழ்கை நடத்துவோம் என்று திரியம் இரண்டு திராவிட கட்சிகள் அதன் இரு பெரும் குடும்பங்கள் சசிகலா , கருணாநிதி இரண்டுக்கும் மாற்றாக - காசுக்கு ஆசைபடாத நபராக ரஜினி அரசியல் பிரவேசமும் நிச்சயம் மிக பெரிய மாற்று தான்... சந்தேகமுமே இல்லை.
இதனால் ரஜினியானால் ஒரு நேர்மையான அரசியலை கொடுக்க முடியும் என்று நம்புகிறேன். அதாவது குறைந்தபட்ச நேர்மையான அரசியலை நான் கூறுகிறேன். (முற்றும் துறந்த ஒரு புத்தனை நான் அரசியலில் தேடும் முட்டாள் அல்ல.)
04)நிர்வாக திறன்:
ஒருவர் சமூகத்தில் ஒரு உயரம் அடைகிறார் என்றால் அது சும்மா ஒரு இரவில் , ஒரு விபத்து போல நடப்பது இல்லை. அதற்காக அவரகள் பெரும் உழைப்பை கொடுக்கிறார்கள் - அத்துடன் நிர்வாக திறமையுடன் இருக்கவேண்டும். அப்போது தான் சமூகத்தின் உயரத்தை அடைய முடியும். அந்த வகையில் கருணாநிதி தொட்டு இன்று ஜோசப் விஜய் வரை அனைவரையும் நான் மதிக்கிறேன். நிர்வாக திறன் எல்லாம் கட்டாயம் ரஜினிக்கு இருக்கும். ஆனால்
கருணாநிதி போல என்ன தந்திரம் வேண்டுமானாலும் செய்வோம் என்ற குறுக்கு புத்தி இல்லாமல் - மனசாட்சிக்கு நேர்மையாக அந்த உயரத்தை அடைவது அசாதாரணமான காரியம். எனவே உயரம் வந்தால் போதாது - அதில் ஒரு நேர்மையான தகுதி இருக்கவேண்டும். அந்த விதத்திலும் ரஜினி யாரையும் அடித்து பிழைத்தவர் கிடையாது. யார் சொத்தையும் பிடிங்கி பிழைத்தவர் கிடையாது... அதாவது கருணாநிதி , சசிகலா குடும்பம் போல் கிடையாது.
எனவே நிர்வாக திறன் நிச்சயம் உண்டு. ஆனால் அது ஆட்சியில் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை நாம் ஒரு வாய்ப்பு கொடுத்துவிட்டு தான் பேச வேண்டும். அது தான் நியாயமும் கூட.
-------------------------------------------
இறுதியாக :
மேற்கூறிய இந்த காரணங்களால் தான் நான் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை ஒரு இந்தியனாக மிக மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். இனி என்ன கூத்து எல்லாம் நடக்கும்?
இனி ரஜினி பெயரை கெடுக்க திக என்ற தனது தாய் அமைப்பின் உதவியை நாடுவர் திமுக உடன்பிறப்புகள். திக - பெரியார் கூட்டம் இனி ரஜினியை ஏலனம் செய்ய ஆரம்பிக்கும். அவரை மறைமுகமாக அவமானம் செய்யும் , வித விதமாக மிமீஸ் முதல் பொய் செய்திகள், புரளிகள் அனைத்தையும் பரப்பிவிட திட்டம் போடும். அதை சாமர்த்தியமாக செய்யும் நரி தந்திரமும் திக கூட்டத்திடம் உண்டு. (அது இல்லாமலா தமிழை, தமிழரை அவமானமாக பேசிய ஈவேரா - பொய்யான வரலாற்றை உருவாக்கி வைக்கம் போராட்டம் வீரர் என்று கதையை கிளப்பி எல்லாமே பெரியார் தான் என்று வெக்கம் இல்லாமல் சொல்லி திரிகிறது. எனவே அருவருப்பான இந்த கூட்டம் என்ன வேண்டுமானாலும் செய்யும். முதல் எதிப்பு இங்கே தான் உருவாகும்.)
கம்யூனிஸ்ட் சொல்லவே வேண்டாம் ஆன்மீகம் எல்லாம் விசயமே இல்லை - சிறந்த தேசியவாதியாக ரஜினி இந்தியாவை நேசித்தால் அவரை எதிர்ப்பார் கம்யூனிஸ்ட். அவ்வளவு தான் கம்யூனிஸ்ட் கொள்கை. இன்னொரு பக்கம் நக்சல் மாவோஸ்ட் ஆதரவாளர்களாக திரியும் - இந்த ஒரு டஜன் புதிய போராளிகள் திருமுருகன் முதல் பியூஷ் மனுஷ் வரை அனைவருமே சத்தம் போடா ஆரம்பிப்பர். அவர்களுக்கு இந்தியா சிதற வேண்டும். ஆனால் இப்படி நாட்டுபற்றுள்ள ரஜினியை நிச்சயம் அவமானம் செய்ய கிளம்புவர். சீனாவின் அடிமைக்கு வேறு என்ன இங்கே வேலை. எனவே கம்யூனிஸ்ட் எதிர்ப்பு நிச்சயம் உண்டு.
அடுத்து மதம் மாற்றும் இயக்கங்கள் சார்ந்த கூடங்குளம் உதயகுமார் , செபாச்டீன் என்ற சீமான் போன்றவர்கள் இன்னும் வேகமாக ரஜினிக்கு அதிராக பிரச்சனை செய்வர். (கூடங்குளம் சுற்றி உள்ள சர்ச்சுகள் இந்நேரம் தீர்மானம் நிறைவேற்றி இருப்பர் - ரஜினியை எதிர்க்க வேண்டும் என்று. மதம் வெறிபிடித்தவர்கள் - மதசார்பின்மையின் பின்னால் ஒளிந்த கொண்டு ரஜினியை விமர்சனம் செய்ய ஆரம்பிப்பர். ஏன் என்றால் அவர் ஒரு இந்து என்பது நிச்சயம் பிரச்சனை தான் அவர்களுக்கு.)
இவை அனைத்தையும் விட நம்ம செய்தி ஊடகங்கள் சத்தம் இனி நாளுக்கு நாள் அதிகம் ஆகும்.
ரஜினி ரசிகர்கள் ஒன்றை நன்கு புரிந்து கொள்ளுங்கள்:
செய்தி ஊடகம் நடத்தும் ஒருத்தன் கூட யோக்கியவான் கிடையாது இந்த தமிழ் நாட்டில்... அது கல்வி கொள்ளையர்கள் நடத்தும் புதிய தலைமுறை செய்தி சேனல் முதல் மணல் மாபியா நடத்தும் நியுஸ்7 செய்தி நிறுவனங்கள் வரை அனைவருமே கேடு கெட்ட அயோக்கிய கும்பல்.
ஆக இங்கே தமிழக அரசியலில் எவனுக்கும் ரஜினியை குறை சொல்ல தகுதி இல்லை- எனவே எவரையும் எதிர்க்கும் துணிவுடன் - ரஜினி ரசிகர்கள் அரசியல் களத்தில் பணியை செய்தால் நிச்சயம் ரஜினி தமிழக முதல்வராக அமருவார்.
மதிப்பிற்குரிய ரஜினி - ரஜினி ரசிகர்களுக்கு மீண்டும் என் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்.
-மாரிதாஸ்