ஏன் அரசு தேவைப்படுகிறது? எதற்கு அரசாங்கம்? எப்படி அரசு உருவாகியது?
அரசு என்ற ஒரு அமைப்பால் தான் நாம் மற்ற விலங்குகளிடம் இருந்து வேறுபடுகிறோம். வலியது எளியதை தின்னும் எனும் காட்டுமிராண்டி வாழ்க்கையிலேயே இருந்து வெளியே வந்தது தான் அரசு எனும் கோட்பாடு.
முதலிலே எப்படி ஆரம்பித்தது? உறவினர்களை மட்டும் நம்புவதாக. அது சாதியாக உருப்பெற்றது. சொந்த சாதிக்காரனை மட்டும் காப்பாத்துறது.
பின்பு மதம் அல்லது கொள்கை என ஆனது. இதை நம்புவதால் நம்புவும் ஆட்களுக்கு மட்டும் என. சொந்த மதத்துக்காரன மட்டும் காப்பாத்துறது.
இதெல்லாம் கூட்டமான முறைகள் எனவே தனிமனிதனுக்கான கருத்துக்கோ உரிமைக்கோ எல்லாம் இடமில்லை. ஒரு சாதிக்காரன் தப்பு செஞ்சால் ஒன்னு அந்த சாதியே அவனை தண்டிக்கனும் இல்லாட்டி ஒட்டுமொத்த சாதியே விலக்கி வைக்கப்படும் என்றான நிலைகள். தனிமனிதன் தனியாக செயல்படமுடியாத நிலைகள்.
அரசமைப்பு அரசன் என்றொருவன் ஆட்சி செய்த போது இந்த பிரச்சினை இருக்கவில்லை. ஏன்னா அரசனிடம் முறையிடலாம் அவன் தண்டிப்பான். நீதி வழங்குவான்.
போரினாலும் கொள்ளையாலும் கொடூரன்கள் படையெடுத்ததாலும் அரசனே இல்லாமல் போனாதாலும், அப்படி வந்த அரசனே காமக்கொடூரன்களாக இருந்ததாலுமே இந்தியாவிலே சாதி என்பது இன்று வரை நீதி வழங்கும் முறையாக மக்களை பாதுகாக்கும் முறையாக இருக்கிறது?
இன்றைக்கு ஒரு பிரச்சினை என்றால் போலீஸுக்கு போகிறோமா அல்லது உறவினர்கள், நண்பர்களிடம் உதவி கேட்கிறோமா? ஏன் சாதி இன்னமும் இருக்கிறது என்பதற்கான பதில் இங்கேயே இருக்கிறது.
அதை தாண்டி தனிமனித உரிமை, சம உரிமை என எல்லாம் வந்தது அதற்கான தேவை வந்தபொழுது தான். அது ஒன்றும் வானத்திலே இருந்து குதித்துவிடவில்லை.
வெள்ளையர்களுக்கு கொள்ளையடிக்க நாடுகளும் அதிலே அடிமை வேலை செய்ய அடிமைகளும் தேவைப்பட்டபோதெல்லாம் அவர்கள் சமத்துவம், சகோரத்துவம் பேசவில்லை. இதை ஞாபகம் கொள்ளுங்கள்.
அமெரிக்க சுதந்திர பிரகடனத்தை எழுதிய தாமஸ் ஜெபர்சன் அடிமைகள் வைத்திருந்தார். சாதியை ஒழித்து எல்லோருக்கும் நல்வழி காட்டியதாக பீற்றிக்கொள்ளும் ஆங்கிலேயயே வெள்ளையன்களோ அடிமை முறையை ஒழிக்கமுடியாது ஏனெனென்றால் அது நல்ல வியாபாரம் பெருத்த நட்டம் ஏற்படும் என ஆங்கிலேயே பாராளுமன்றத்திலேயே பேசினார்கள்.
அடிமை முறையை ஒழித்தபின்பும் உடனே எல்லோருக்கும் சம உரிமை என கொடுத்துவிடவில்லை.
ஒரு இந்தியனுக்கு வெள்ளையன் அளவு அறிவு இல்லை எனவே இந்தியர்களே நாட்டை ஆள முடியாது என ஆங்கிலேயே நாடாளுமன்றத்திலேயே சொல்லியிருக்கிறார்கள். வின்ஸ்டன் சர்ச்சில் எனும் கொடூரன் இந்தியர்கள் எல்லோருக்கும் கிரிமினல்கள் நாட்டை கொள்ளையடிப்பார்கள் என சொன்னான்.
அமெரிக்க உச்சநீதிமன்றமே ஓரு கருப்பன் வெள்ளையனுக்கு சமமில்லை என தீர்ப்பு சொன்னது. 1960கள் வரை கருப்பர்களும் வெள்ளையர்களும் ஒரே பள்ளியிலே சேர்ந்து படிக்கமுடியாது. ஒரு உணவகத்திலே சேர்ந்து உணவருந்த முடியாது.
விஞ்ஞானம் முன்னேற முன்னேற வேலை செய்ய அடிமைகள் தேவையில்லை என்றான போது தான் நிலமை கொஞ்சம் கொஞ்சமாக மாறியது. கப்பலை நீராவியால் ஓட்டலாம் அடிமைகளை வைத்து துடுப்பு போடவேண்டியதில்லை என கண்டுபிடித்த பின்பு தான் ஆப்பிரிக்கர்களை அடிமையாக பிடிப்பதை நிறுத்தினார்கள்.
இதற்கும் சாதிக்கும் என்ன சம்பந்தம்? சாதி என்பதும் அடிமை முறை என சொல்லவருகிறேனா?
இல்லை. சாதி என்பது அடிமை முறையை தாண்டிய சம நிலைமுறை. ஒரு சாதியை அடிமைப்படுத்த முயன்றால் மற்ற சாதிகள் ஒத்துக்கொள்ளாது. வெள்ளையன்கள் போல மற்றவர்களை போய் அடிமைப்படுத்தினால் தான் உண்டு. அதற்கு இங்கே தேவையில்லை ஏன்னா ஏற்கனவே உணவு, உடை, இருப்பிடம் எல்லாம் நன்றாகவே இருக்கிறது.
இந்த இடத்திலே கண்டுபிடிப்புகளின் மீதான உரிமை, சொத்துரிமை இன்னபிற எல்லாவற்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
இது அரசமைப்பாக மாறுவதற்குள் கொள்ளையன்களின் படையெடுப்பு ஆரம்பித்துவிட்டது. 1200 வருட கொலை, கொள்ளையை விட்டு அப்பாடா என இருப்பதற்குள்
காங்கிரஸ் களவாணீகள் திரும்பவும் கொள்ளையை ஆரம்பித்துவிட்டன.
ஆனால் இது அனைத்துக்கும் காரணம், பார்ப்பான் - இந்து மதம் - சாதி. அப்பத்தானே இன்னுமொரு ஆயிரம் வருசத்துக்கு கொள்ளையடிக்கமுடியும்.
சாதி எப்படி ஒழியும் என கேட்பவர்களுக்கு என்னுடைய பதில் இது தான்.
என்றைக்கு உதவி என்றால் நண்பர்கள், உறவினர்கள் என போவதை விட அரசிடம் போகலாம் அரசு எல்லோருக்கும் உதவி செய்யும் என்ற நிலை வருமோ அன்று சாதி தேவையில்லாமல் போகும். அது இந்த ஊரிலே பிறந்தேன் என்பது போல ஒரு அடையாளமாக இருக்கும்.
சும்மா கலப்பு திருமண்ம், மதம் மாறுதல் என்றால் எல்லாம் சாதி ஒழியாது.
சாதியும் தேசியமும் எப்படி ஒன்றாக இருக்கின்றன என முன்பு எழுதிய பதிவு.
-
சாதியும் தேசியமும்
சாதி பற்றிய புரிதல்களில் அது வெறுமனே பார்பனர்கள் திட்டமிட்டு கொண்டுவந்ததாக சொல்லப்படும் கட்டுக்கதைகளே அதிகம் ஆனால் உண்மையில் சாதி என்பது என்ன பற்றிய விவாதங்களோ புரிதல்களோ தமிழில் இல்லாமல் இருக்கிறன. மேற்கொண்டு சாதி ஏன் இன்னமும் இருக்கிறது என்ற கேள்விக்கும் யாரிடமும் விடையில்லை.
சாதி என்பது என்ன? அது ஒரு அரசியல் அதிகாரம் கொண்ட அரசமைப்பு. இன்றைக்கு அரசாங்கம் செய்யும் அனைத்து வேலைகளையும் ஒரு சில வேலைகள் தவிர இன்னமும் சாதிகள் செய்து கொண்டு தான் இருக்கிறன. வரி விதிப்பது என்பது அரசு செய்கிறது, சாதிகளிலும் கோவில்களுக்காக அல்லது மற்றைய வேலைகளுக்காக ஒரு குடும்பத்தினர் இவ்வளவு தரவேண்டும் என வரிவிதிப்பது உண்டு. கூடவே யாரிடம் வரிவிதிக்கவேண்டும் யாரிடம் வரி விதிக்ககூடாது என்ற கட்டுப்பாடுகளையும் உடையது. ஒரு சாதியின் உறுப்பினர்களுக்கு இடையே வரும் பிரச்சினைகளையோ அல்லது ஒரு சாதி உறுப்பினருக்கும் இன்னோர் சாதி உறுப்பினருக்கும் வரும் பிரச்சினைகளையோ பஞ்சாயத்து மூலம் தீர்க்கும் வழிமுறைகளும் கூடவே சாதிக்கு என கட்டுப்பாடுகளையும் கட்டுமானங்களையும் கொண்டது. அதை மீறுபவர்களுக்கு தண்டனைகளையும் அளிக்கும் அதிகாரத்தையும் கொண்டது. சாதியின் மிக முக்கியமான அம்சம் யார் யாரெல்லாம் அதன் உறுப்பினர்கள் யார் யாரெல்லாம் அதன் உறுப்பினர் ஆகாமல் போகிறார்கள் என தீர்மானிக்கும் விதிகளே.
ஆக சாதி ஒரு அரசமைப்பு என கொண்டால் வேறு எதெல்லாம் அரசமைப்பு கொண்டவையாக இருக்கிறன? மதரீதியான அமைப்புகளை சொல்லலாம். கிறிஸ்துவ சர்ச்சுகள், முஸ்லீம் ஜமாத்துகள், சீக்கிய பிரபந்தக்கமிட்டிகள், பார்சி அமைப்புகள் என பெரும்பாலான மத அமைப்புகள் அரசியல்ரீதியான அதிகாரம் கொண்டவையாகவே இருக்கிறன. சாதியையும் மத அமைப்பையும் தாண்டி 19 அல்லது 20 ஆம் நூற்றாண்டில் தோன்றி வந்த கருதுகோளே தேசியம் என்பது.
தேசியம் என்பது நிலத்தை அடிப்படையாக கொண்ட அமைப்பு. ஒரு நாட்டின் எல்லைகள் புவியியல் ரீதியாக வரையறுக்கப்படுகிறன, அந்த எல்லைக்குள் யார் இருக்கலாம் யார் இருக்கமுடியாது, யார் வரலாம் யார் போகலாம் என்ற கட்டுப்பாடுகளை தேசிய அரசு விதிக்கிறது. யாரெல்லாம் அந்த தேசியத்தில் உறுப்பினர், புதிதாக யாரெல்லாம் உறுப்பினர் ஆக முடியும் எனவும் கட்டுப்பாடுகள் உண்டு. பெரும்பாலான நாடுகள் அந்த நாட்டில் பிறந்தவர்களை உடனடியாக உறுப்பினராக ஏற்றுக்கொள்கின்றன.
இந்த இடத்தில் ஒரு கேள்வி கேட்கலாம், மன்னராட்சி முறையை விட்டாச்சே அதுதானே மிக பரவலான ஒரு ஆட்சி முறை என. ஆமாம் அது பரவியிருந்த ஆட்சி முறை தான் ஆனால் அது சாதி அடிப்படையில் ஆனது தான். ஒரு பரம்பரையில் பிறந்தவர்கள் மட்டும் தானே வழி வழியாக அரசாள முடியும், மற்ற யாரும் எவ்வளவு தான் திறமை இருந்தாலும் ஆக முடியாது அல்லவா? இந்தியாவிலும் சரி மற்ற நாடுகளிலும் சரி ஒரு குறிப்பிட்ட சாதியினர் தங்களுக்கு ஒருவரை அரசனாக ஏற்றுக்கொள்வார்கள் பின்னர் அவர் மற்றைய நாடுகளை கைப்பற்றுவார் பேரரசராக ஆவார். இந்த இடத்தில் சாதி என்பதை இனக்குழு, சமூகம், பரம்பரை என என்ன சொன்னாலும் எதெல்லாம் பிறப்பை மட்டும் தகுதியாக வைக்கிறதோ அதை சாதி என்றே கொள்கிறேன்.
இந்தியாவில் முன்பு ஒரு மத்திய ஆட்சி இல்லை அதனால் இந்தியாவே இல்லை என சொல்லும் ஆட்கள் மத்திய ஆட்சி இல்லாமல் போயியும் எப்படி அந்நியர்களால் இந்தியாவை முழுமையாக அடிமைப்படுத்த முடியாமல் போயிற்று என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடிவதில்லை. ஏன் அடிமைப்படுத்த முடியவில்லை என்றால் இங்கு சாதி எனும் அரசமைப்பு அதுவும் பல்வேறு சாதிகளின் அரசமைப்பு இருந்தது. கொரில்லா போர் போல பல சாதிகளில் தாக்குதல்களை சமாளிக்க இயலவில்லை. இதற்கு மராத்தியர்கள், சீக்கியர்கள்,ராஜபுத்திரர்கள் என பல்வேறு உதாரணங்கள் உண்டு.
இன்றைக்கு சாதி எனும் கருதுகோளை விட்டுட்டு மொழி அடிப்படையிலான தேசியம் என்பதையெல்லாம் முன்வைக்கிறார்கள், ஒரு அமைப்பின் அடிப்படையே அதில் யாரெல்லாம் இருக்கமுடியும் இருக்க முடியாது என்ற அடிப்படை விதிதான். மொழி என்பது கற்றுக்கொள்வதாக இருக்கும் போது இந்த கட்டுப்பாட்டை விதிக்கமுடியாது என்பதாலே மொழிவாரி தேசியங்கள் அடிபட்டு போகின்றன. தெலுங்கானாவும் வளைகுடா நாடுகளும் இதற்கு சான்று.
இறுதியாக சாதி என்பதற்கும் தேசியம் என்பதற்கு பெரிதாக வித்தியாசம் ஒன்றுமில்லை. இரண்டுமே அரசமைப்புக்கள் மட்டுமே. இதிலே ஒன்று சரி இன்னோன்று தவறு என சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை.
- Raja Sankar