Monday, December 29, 2014

Keerthivasan

பிரமாணம்

பிரமாணம் பற்றி...
- திரு.. சரவணன் சிவதாணு அவர்களின் எண்ண சிதறல்கள்


தமிழில் இதற்கு அளவை என்று பொருள்.
1 - காண்டல் அளவை.
2 - கருதல் அளவை.
3 - அனுமான அளவை.
4 - ஏகதேச அளவை என்று பலவகையிலும் உண்டு.

கண்ணுக்கு தெரிகின்ற பொருட்களை பற்றிக் கொண்டே கண்ணுக்கு தெரியாத இறைவனை அறிய முயலும் ஒரு முயற்சி இப்படி தான் தொடங்குகிறது.
அளவை என்பது வடமொழியில் பிரமாணம் என்ற சொல்லால் குறிப்பிடப்படும். பிரமா என்ற சொல் அறிவு என்ற பொருளைத் தரும். எதன் வழியாக அறிவு பெறப்படுகிறதோ அது பிரமாணம் ஆகும். அளவையை அறிவு அளவை என்றும் வழங்குவர். ஆங்கிலத்தில் இது எபிஸ்டமாலஜி எனப்படும்.

அளவை காண்டல், கருதல், உரை, அபாவம், பொருள், ஒப்பு ஆறு என்பர்;
அளவை மேலும் ஒழிபு, உண்மை, ஐதி கத்தோடு, இயல்பு என நான்கு
அளவை காண்பர்; அவையிற்றின் மேலும் அறைவர்; அவை எல்லாம்
அளவை காண்டல், கருதல், உரை என்ற இம்மூன்றில் அடங்கிடுமே

அளவை என்பது காண்டல் அளவை, கருதல் அளவை உரை அளவை, இன்மை அளவை, பொருள் அளவை, உவமை அளவை, என்று ஆறு வகைப்படும் என்பர். சிலர் இவற்றுக்கு மேலும் ஒழிபு அளவை, உண்மை அளவை, ஐதிக அளவை, இயல்பு அளவை, என்ற நான்கனையும் கூட்டி அளவைகள் பத்து வகைப்படும் என்று கூறுவர். வேறுசிலர் இப்பத்துக்கு மேலும் அளவைகள் உண்டு எனக் கொள்வர். இவ்வாறு அளவைகளைப் பலவகைப்படுத்திக் கூறினாலும் அவை யாவும் காண்டல் அளவை, கருதல் அளவை, உரை அளவை எனும் மூன்றனுள் அடங்கும்.

காண்டல் அளவை என்பது காட்சி என்றும், பிரத்தியட்சப் பிரமாணம் என்றும் வழங்கும். ஒரு பொருளைக் கண் முதலிய ஐம் பொறிகளாலும் நேர் முகமாக அறிதல் காண்டல் அளவை ஆகும்.

கருதல் அளவை என்பது அனுமானப் பிரமாணம் எனவும் கூறப்படும். ஒரு பொருளை நேர்முகமாகக் காண முடியாத போதும், அதனை ஒருபோதும் விட்டு நீங்காத தன்மை உடைய மற்றொரு பொருளைக் கண்டு முதலில் கூறப்பட்ட பொருள் உள்ளது என்று கருதி அறிதல் கருதல் அளவை ஆகும். எடுத்துக்காட்டாக தீயோடு விட்டு நீங்காத தன்மையை உடையது புகை. விட்டு நீங்காத் தன்மையை அவிநா பாவம் என்ற சொல்லால் குறிப்பர். தொலைவில் ஓரிடத்தில் புகை எழுவதைக் கண்டு நெருப்பு கண்ணுக்குப் புலனாகாத போதும் அங்கே நெருப்பு உள்ளது. என்று அறிந்து கொள்வது கருதல் அளவையின் பாற்படும்.

உரைஅளவை ஆகமப் பிரமாணம் என்றும், சத்தப் பிரமாணம் என்றும், ஆப்தவாக்கியம் என்றும் வழங்கப்படும். கண்டும் கருதியும் அறிய முடியாத பொருள்களைப் பற்றி நூல்களின் வாயிலாக அறிதல் உரை அளவை ஆகும். இங்கு நூல்கள் எனப்பட்டன. இறைவனால் அருளப்பட்டனவும், இறைவனின் மெய்யடியார்களால் அருளப்பட்டனவுமாகிய மெய்ந்நூல்களையே குறிக்கும்.

விகற்பம்- வேறுபாடு. நிருவிகற்பம்- வேறுபாடு அற்றது. சவிகற்பம்- வேறுபாட்டுடன் கூடியது.

எதிரே ஒரு மரம் தோன்றுகிறது. அதனைப் பொதுவாக அறிதல் நிருவிகற்பக் காட்சி. எதிரே தெரிவது ஒரு மரம் (பெயர்) அது மாமரம் (இனம்). இம்மரம் இன்னின்ன பண்புகள் உடையது (பண்பு) இது இப்போது பூத்துக் காய்த்து விளங்குகிறது (தொழில்). இம் மரத்தில் நல்ல கனிகளும் பழுத்துள்ளன. எனவே இது தேமாமரம் (பொருள்) இவ்வாறு அறிவதே சவிகற்பக் காட்சி

கருதல் அளவையில் ஐந்து உறுப்புகள் உள்ளதாக வைத்துக் காணுதல் வேண்டும். அதனைக் கீழ்காணுமாறு கொள்ளுதல் வேண்டும்.

1. இம்மலையில் தீ உண்டு - மேற்கொள்
2. புகை உடைமையால் - காரணம்
3. எங்கே புகை உண்டோ அங்கே தீ உண்டு: அடுக்களையைப் போல - எடுத்துக்காட்டு
4. இங்கே புகை உண்டு (ஆதலால்) - பொருத்திப் பார்த்தால்
5. இங்கே தீ உண்டு - முடிப்புரை.

கருதல் அளவை எனப்படும் அனுமானமும் மூன்று வகைப்படும். முன்பே மல்லிகை மலரின் மணத்தினை அறிந்தவன் ஒருவன் ஓர் அறைக்குள்ளே நுழைந்த போது அங்கு மல்லிகையின் நறுமணம் வீசுவதை முகர்ந்து பூவைக் கண்ணால் காணாத போதும் இங்கே மல்லிகை மலர் உண்டு என உணர்தல் பூர்வக் காட்சி அனுமானம் எனப்படும்.

ஒருவன் பேசுவதைக் கேட்டு அவன் சொற்களின் ஆழத்தையும் நுட்பத்தையும் கொண்டு இவன் அறிவால் மிக்கவன்; கல்வியால் நிறைந்தவன் என்று உய்த்து உணர்வது கருதல் அனுமானம் எனப்படும். இந்தப் பிறவியில் முறையாக வந்து பொருந்துகின்ற இன்ப துன்பங்கள் முந்திய பிறவியில் செய்த நல்வினை தீவினைகளின் பயன் என்று அருள் நூல்கள் உரைப்பதைக் கொண்டு, இப்பிறவியில் செய்யும் நல்வினை தீவினைகள் இனி வரும் பிறவியில் இன்பமும் துன்பமுமாக நம்மை வந்தடையும் என்று உய்த்து உணரும் அறிவுரை அளவையால் வரும் அனுமானம் ஆகும்.

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :