Tuesday, December 23, 2014

Keerthivasan

வாரணம் ஆயிரம் சூழ வலஞ்செய்து - நாச்சியார் திருமொழி பதிகம்

பெரியாழ்வார் திருமகளாரான ஆண்டாள் இவ்வுலகத்தில் திருவாடிப்பூரத்தில் அவதரித்து, உலகு உய்ய அருளிச் செய்த திவ்யப் பிரபந்தங்கள் இர ண்டு. ஒன்று, திருப்பாவை; இன்னொன்று நாச்சியார் திருமொழி.

ஆண்டாளுக்கு எம்பெருமானைக் காண வேண்டும் என்ற ஆசை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வந்தது. ஆனால், அவள் ஆசைப்பட்டபடி அவனைக் காணமுடியவில்லை.

இவளுடைய காதலை மேலும் பெருக்க வேண்டுமென்று எம்பெருமான் எண்ணினான் போலிருக்கிறது! அதனாலேயே அவனும் பாராமுகமாக இருந்தான்! ஒரு கட்டத்தில் இவளை நாம் முற்றிலுமாகப் புறக்கணித்தால் இவள் உயிர் தரித்திருக்க மாட்டாள் என்ற நிலை வந்தபோது, அவளது கனவிலாவது காட்சி தருவது என்று தீர்மானித்துக் கொண்டான் கண்ணபிரான்.

கனவில் வெறும் தோற்றம் மட்டுமல்ல, ஒரு திருமண ஏற்பாட்டையே நடத்தி, தான் அவளை மணந்து கொள்வதாகவே சம்பவங்களை அமைத்தான். அப்படி தான்கனவில் அனுபவித்தவற்றைத் தன் உயிர்த் தோழிக்குச் சொல்லுவதாக அமைந்துள்ளதுதான் வாரணமாயிரம் என்ற பதிகம். இது நாச்சியார் திருமொழில் இடம் பெற்றுள்ளது.

andals nachiyar thirumozhi


வாரணம் ஆயிரம் சூழ வலஞ்செய்துநாராணநம்பி நடக்கின்றானென்று எதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீ!

நான்
ஸ்ரீமந் நாராயணன் என்னை மணம் புரியத் தீர்மானித்துவிட்டான். என்னைப் பெண் கேட்டு வரும் சம்பிரதாயமாக ஆயிரம் யானைகள் சூழ வீதியில் வலம் வருகிறான். அவனை வரவேற்கும் வகையில் நகரெங்கும் கட்டப்பட்ட தோரணங்கள், மக்கள் தம் கரங்களில் வைத்திருக்கும் பூர்ண கும்பங்கள் மற்றும் பல மங்கள அலங்காரங்கள் எல்லாவற்றையும் நான் என் கனவில் கண்டேனடி, என் தோழி!



நாளை வதுவை மணமென்று நாளிட்டு
பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்
கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர்
காளை புகுதக் கனாக் கண்டேன் தோழீ!

நான்
மறுநாள் அவனுக்கும் எனக்கும் திருமணம் என்று முகூர்த்தம் நிச்சயித்தான் கண்ணன். கமுகு பாளையால் வேயப்பட்டிருந்த பந்தலின் கீழ் அந்த மாதவன், கோவிந்தன் ஒரு காளை போல வீற்றிருந்து இவ்வாறு அறிவிப்பதை நான் கனவில் கண்டேனடி என் தோழி!



இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாமெல்லாம்
வந்திருந்து என்னை மகட் பேசி மந்திரித்து
மந்திரக்கோடி யுடுத்தி மணமாலை
அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ! 

நான்
இந்திரன் மற்றும் தேவர்கள் எல்லோரும் இந்தத் திருமணத்தை இனிதாக நிறைவேற்றிட இப்பூவுலகிற்கு இறங்கி வந்தார்கள். என்னை அவர்கள் கண்ணனுக்கு தாரை வார்த்துக் கொடுக்க விரும்புகிறார்களாம்! அதற்காக துர்க்கை என்ற நாத்தனாரிடம் பலவாறாக அவர்கள் பேச, அந்த து ர்க்கையும் எனக்குக் கல்யாணப் புடவையை உடுத்தி விட்டு, மலர்ச் சரங்களை என் கூந்தலில் சூட்டியதை நான் கனவில் கண்டேனடி என் தோழி!



நாற்றிசைத் தீர்த்தங் கொணர்ந்து நனி நல்கி
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லார் எடுத்தேத்திப்
பூப்புனை கண்ணிப் புனிதனோடு என்ற
ன்னைக்காப்பு நாண் கட்டக் கனாக் கண்டேன்

தோழீ! நான்
அந்தணர்கள் பலர் நான்கு திக்குகளிலிருந்தும் தாம் கொண்டுவந்திருந்த தீர்த்தங்களை எங்கள் இருவர் மீதும் தெளித்து மங்களாசாசனம் செய்தார்கள். அது மட்டுமா, கண்ணபிரானோடு என்னை இணைத்து கங்கண நூல் அந்த மெய்சிலிர்க்கும் காட்சியையும் நான் கனவில் கண்டேனடி என் தோழி!



கதிரொளி தீபம் கலசமுடன் ஏந்திச்
சதிரிள மங்கையர் தாம் வந்து எதிர்கொள்ள
மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டு
எங்கும் அதிரப் புகுதக் கனாக் கண்டேன் 

தோழீ! நான்
அழகிய இளம் பெண்கள் மங்கல தீபங்களையும் பூர்ண கும்பங்களையும் ஏந்தி எதிர்கொண்டு வர, கண்ணபிரான் பாதுகை அணிந்து இந்த பூமியே அதிரும்படியாக நடந்து வந்த அந்த அற்புதக் காட்சியை நான் கனவில் கண்டேனடி என் தோழி!



மத்தளங் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன்நம்பி மதுசூதன் வந்தென்னைக்
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ! 

நான்
மங்கள வாத்யங்கள் முழங்க, சங்குகள் ஒலிக்க, முத்துப் பந்தலின் கீழ் என் கண்ணபிரான் புன்னகையுடன் என் கரம் பற்றி, திருமண பந்தத்தில் தன்னோடு என்னைப் பிணைத்துக் கொண்டதை நான் கனவில் கண்டேனடி என் தோழி!



வாய்நல்லார் நல்ல மறை யோதி மந்திரத்தால்
பாசிலை நாணல் படுத்துப் பரிதி வைத்துக்
காய்சின மாகளிறன்னான் என் கைப்பற்றித்
தீவலஞ் செய்யக் கனாக் கண்டேன் தோழீ! 

நான்
வேதியர்கள் வேதம் ஓதினார்கள். அந்த மந்திரங்களை கண்ணன் பின் மொழிந்து அக்னி கொண்டு இயற்ற வேண்டிய சடங்குகளை மேற்கொண்டான். பிறகு என் கரத்தைப் பற்றிக்கொண்டு அந்த ஹோமத் தீயைச் சுற்றி வலம் வந்ததை நான் கனவில் கண்டேனடி என் தோழி!



இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான்
நம்மை வுடையவன் நாராயணன் நம்பி!
செம்மையுடைய திருக்கையால் தாள் பற்றி
அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழீ! 

நான்
இப்பிறவிக்கு மட்டுமல்லா, ஏழேழ் பிறவிக்கும் நம் நற்கதிக்குக் காரணமானவன் நாராயணன். அவன் தன்னுடைய தாமரை போன்ற திருக்கரங்களால் எனது பாதங்களைப் பற்றி அம்மி மிதிக்க வைத்ததை நான் கனவில் கண்டேனடி என் தோழி!



வரிசிலை வாண்முகத் தென்னைமார் தாம்
வந்திட்டு எரிமுகம் பாரித்தென்னை முன்னே
நிறுத்திஅரிமுகன் அச்சுதன் கைம்மேல் என்
கைவைத்து பொரிமுகந் தட்டக் கனாக் கண்டேன்

தோழீ! நான்
கண்ணபிரான் திருக்கரத்தின் மீது என் கையை வைத்து, அதில் பொரிகளை அள்ளிப் பரிமாறினார்கள். அந்தப் பொரியை என் கரங்களைப் பற்றியவாறே அக்னியில் ஆஹுதி செய்வதை நான் கனவில் கண்டேனடி என் தோழி!


குங்குமம் அப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து
மங்கல வீதிவலஞ் செய்து மணநீர்
அங்கவனோடு முடன் சென்று
அங்கானைமேல் மஞ்சன மாட்டக் கனாக் கண்டேன்

தோழீ! நான்
குங்குமக் குழம்பையும் சந்தனத்தையும் நாங்களிருவரும் பூசிக்கொண்டு, இருவருமாக யானையின் மீதேறி வீதி ஊர்வலம் வந்தோம். எங்கள் இரு வரையும் வசந்த நீரில் நேராட்டியதை நான் கனவில் கண்டேனடி என் தோழி!



ஆயனுக்காகத் தான் கண்ட கனாவினை
வேயர் புகழ் வில்லிபுத்தூர்க்கோன் கோதை
சொல் தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்
வாயு நன்மக்களைப் பெற்று மகிழ்வரே.

ஆயனாரை (அரங்கனை) அடைவதாகத் தான் கண்ட கனாவினை வேயர் புகழும் வில்லிபுத்தூர்க் கோன் பட்டர்பிரான் கோதை சொல்லும் இந்தத் தூய தமிழ் மாலை பத்துப் பாடல்களும் வல்லவர் பெறற்கரிய நல்ல பிள்ளைகளைப் பெற்று மகிழ்ந்திருப்பார்கள்.

மாதவனுடன் மணம் நடந்த மகிழ்ச்சியில் கோதைக்கு சொற்கள் முன்னும் பின்னுமாய் வருகின்றன. குங்குமம் அப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து மணநீர் மஞ்சனமாட்டி அங்கவனோடும் உடன் சென்று அங்கானை மேல் மங்கல வீதி வலம் செய்யக் கனாக் கண்டேன் என்று சொல்லாமல் இரண்டு நிகழ்ச்சிகளையும் ஒன்றில் ஒன்றாய்க் கலந்துச் சொல்கிறாள்.



இவ்வாறு ஸ்ரீவில்லிபுத்தூராரின் மகளான கோதை தான் கனவில் கண்ட தன் திருமண வைபவங்களை தூயத் தமிழ்ப் பாமாலையாகத் தொடுத்து அருளியிருக்கிறாள்.

இந்த நூலினை கற்கும் எல்லா பெண்களும் இனியதோர் திருமண பந்தத்தில் ஈடுபடுவர். அவர்கள் இல்லறம் தழைத்து நல்லறம் வளர, நன்மக்கட் பேறும் எய்திட இந்தத் திருப்பதிகம் அருள் செய்யும்.

இந்த வாரணமாயிரம் பாசுரங்களை திருமணத்திற்கு காத்திருக்கும் பெண்கள் நித்தமும் பாடிப்பரவினால் திருமண வாய்ப்பு விரைவில் கிட்டும். மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று ஆண்டாளுக்கும் ரங்கமன்னாருக்கும் பூமாலைகள் சமர்ப்பிப்பதாக வேண்டுதலும் செய்துகொள்ளலாம். அதேபோல திருமணம் முடிந்ததும் தம்பதியராகச் சென்று ஸ்ரீவில்லிபுத்தூர் இறைத் தம்பதிக்கு மாலைகள் சமர்ப்பித்து நன்றி காணிக்கை செலுத்தலாம். மார்கழியில் மனமொப்பி இப்பாடல்களைச் சொல்லி வாருங்கள், தை மாதத்திற்குப் பிறகு உங்களுக்கு டும் டும் டும் தான்! -

தொகுப்பு: Ramachandran Krishnamurthy

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :