Monday, December 29, 2014

Keerthivasan

ஓம் என்றால் என்ன? - பாகம் 2

ஓம் என்றால் என்ன? - பாகம் 2


வாங்க மக்களே! "ஓம்" இந்து மதத்துக்கு மட்டுமே உரியதா? ஓம்-ன்னா, அ-உ-ம் = இறைவன்-உறவு-உயிர்கள்-ன்னு சென்ற பதிவில் பார்த்தோம்
ஓம்-ஓங்காரம்-பிரணவம், ஏதோ இந்து மதத்துக்கு மட்டுமே சொந்தம்-ன்னு யாரும் நினைச்சிறக் கூடாது! சென்ற பதிவில் சொன்னது போல், ஓம் என்பது அழகானதொரு இறை-ஒலித் தத்துவம்.

சமணம் (ஜெயின்), புத்த மதம், சீக்கியர்கள், அட...சைனாவில் கூட "ஓம்" இருக்குதுங்க! கேள்விப்பட்டு இருக்கீங்களா? அட, நெசம் தானுங்க.
சமணத்தில் "ஓம்":
"ஓம் நமஹ"-ன்னு சமணர்கள் நவ்கார் மந்திரத்தை இன்னிக்கும் சொல்றாங்க."ஓம் ஏகாட்சர-பஞ்ச பரமேஷ்டி-நாம தீபம்" என்பது சமண மந்திரம்
.
ஓம் = அ-அ-அ-உ-ம்
என்று பிரித்துப் பொருள் சொல்லுவாய்ங்க சமணர்கள். பஞ்ச பரமேஷ்டித் தத்துவம்-ன்னு இதுக்குப் பேரு.
அதாவது .

அ = அரிஹந்த (மகாவீரர் ஈறான 24 தீர்த்தங்கரர்கள்)
அ = அசீரி (சித்தர்கள்)
அ = ஆச்சார்யர்
உ = உபாத்தியாயர்
ம் = முனி
என்று "குரு வணக்கமாக மட்டும்" சமணர்கள் ஓங்காரத்தைக் கருதுவார்கள்.
பெளத்தத்தில் "ஓம்":

வித்யா சடாக்ஷரி என்னும் முக்கியமான பெளத்த மந்திரம்! அதோடு, ஓம்-ஐ உடன் சேர்ப்பார்கள் பெளத்தர்கள்! கிட்டத்தட்ட நம்ம சைவத்தின் பஞ்சாட்சரம் போலத் தான் இதுவும்,

* நம சிவாய என்னும் திரு-ஐந்து-எழுத்தோடு, தனியாக "ஓம்" என்பதை வெளியில் இருந்து சேர்ப்பதைப் போல...

* மணி பத்மேஹூம் = ம + ணி + பத் + மே + ஹூம் என்னும் ஐந்து எழுத்தோடு, "ஓம்" என்பதைச் சேர்ப்பது பெளத்த வழக்கம்.

போதிசத்வரை குறிப்பது தான் இந்த மணிபத்மேஹூம் = தாமரைத் திரு
இவரைச் சிந்திக்க "ஓம் மணிபத்மேஹூம்" என்னும் மந்திரம் உதவுகிறது. இப்படி "ஞான சொரூபமாக" தியானித்தால், களங்க உரு/மனம் நீங்கி, பரிசுத்தமான புத்த உரு/மனம் கிடைக்கும்! அதுக்குத் தான் இந்த "ஓம்"

* இப்படி ஓங்காரத்தை "ஞான சொரூபமாக மட்டும்" காண்கிறார்கள் பெளத்தர்கள்.

* சீனாவில் இந்தப் பெளத்த பிரணவ-த்தை "பிண்யின்" என்கிறார்கள்! அதன் எழுத்துரு "唵"

சீக்கியத்தில் "ஓம்":
இது, இந்து தர்ம அடிப்படையான உபநிடதங்களில் இருந்து வந்தது தான்! ஆனால் சமுதாயத்துக்காக அதைக் கொஞ்சம் மேம்படுத்தித் தருகிறது சீக்கியம்.

"ஏக் ஓம்கார்" = "ஓம் என்பது ஒன்றே பொருள்!" - இது குரு நானக் அவர்களின் வாக்கு இங்கு "ஏக்(ஒன்றே)" என்பது முக்கியமான சொல்!

"ஒன்றேயான ஓம்-இல் இருந்து தான் பிரம்மா தோன்றினார்! ஓம்-ஐ தன் ஞானத்தில் நிறுத்தினார். பின்பு அந்த ஓம்-ஐக் கொண்டே, உலகம்/உயிர்கள் எல்லாம் படைத்தார்.அதனால் எல்லாப் படைப்புக்கு மூலம் ஓம்!" - இவ்வாறு சீக்கிய நூல்கள் சொல்லும்.

ஆனால் அதோடு நின்று விடாமல், எல்லா உயிர்களும் "ஒரே" மூலமான ஓம்-இல் தோன்றியதால், வேற்றுமை பாராட்டக் கூடாது. "ஒன்றே"-ன்னு இதைச் சீக்கியம் குறிக்கும்.

வேற்றுமை பாராட்டக் கூடாது-ங்கிற பகுதியை மட்டும் நீக்கி விட்டுப் பார்த்தால், கிட்டத்தட்ட மாண்டூக்ய உபநிடதம், கடோபநிடதம் சொல்வது போலவே தான் இதுவும் இருக்கும்.

இன்னிக்கும் குருத்வாராக்கள் முகப்பில், சீக்கிய "ஓம்" எழுத்துருவை ("ੴ") காணலாம்.

கிறித்துவத்தில் "ஓம்"???:
ஆதியிலே தேவன் வார்த்தையாய் இருந்தார்! = இது வேதாகமத்தின் (பைபிள்) வரிகள்.

"ஓம்" என்ற வார்த்தையாய் இருந்தார் என்று பைபிள் குறிப்பிடவில்லை. ஆனால் "வார்த்தையாய் இருத்தல்" என்பது கிட்டத்தட்ட ஓங்காரத் தத்துவம் தான்.

ஆதியிலே வார்த்தையாய் இருத்தல் = ஆதியிலே ஒலியாய் இருத்தல் = ஆதியிலே நாதமாய் இருத்தல் = நாத விந்து கலாதீ நமோ நம - என்று அருணகிரியார் பாடும் அதே பிரணவப் பொருளே.

இந்து மதத்தில் "ஓம்":
ஓம் என்பதே வேதம் தான்! ஓம் = வேதத்தின் ஆணி வேர்.
ஓம் என்பது ஆதி சப்தம்.அனைத்து வேதங்களையும் சுருக்கினால், மிஞ்சுவது "ஓம்" மட்டுமே.

* படைப்புக்கு முன் இருப்பதும் = ஓம்
* பிரளயத்துக்குப் பின் எஞ்சி ஒடுங்குவதும் = ஓம்
அதனால் தான் இன்னிக்கும் வேதம் ஓதும் போது, ஓம்-இல் தொடங்கி, ஓம்-இலேயே முடிப்பது வழக்கம்

அடிப்படை அ+உ+ம என்று இருந்தாலும், விளக்கம் மட்டும் பல
அ = உருவம், உ = அருவம், ம் = அருவுருவம்
அ = ஆக்கம், உ = காத்தல், ம் = அழிப்பு
அ = பிரம்மா, உ = விஷ்ணு, ம் = சிவன் (புராணம்)
என்றெல்லாம் பல மேல் விளக்கங்கள் மாண்டூக்ய, கடோ உபநிடதங்களில் உண்டு! ஆனால் அடிப்படை ஒன்று தான். ஓம் = ஆதி மூலம்! Very Beginning
எழுத்துக்களில் அ-கரமாய் இருக்கிறேன். சேனாதிபதிகளில் முருகனாய் இருக்கிறேன்.

மாதங்களில் மார்கழியாய் இருக்கிறேன்! வேதங்களில் சாமமாய் இருக்கிறேன்.

என்றெல்லாம் கீதையில் சொல்லிக் கொண்டே வருபவன்...

அனைத்திலும் "ஓம்" என்னும் ஜீவப் பொருளாய் இருக்கிறேன் என்று உரைக்கின்றான்.

சிலர் "ஓம்" என்ற சொல்லைக் கூட வெளிப்படையாகச் சொல்ல மாட்டார்களாம்! அது மந்திர ரகசியமாம்! அதனால் அதன் வேறு பெயர்களான பிரணவம், தாரக மந்திரம், உத்கீதா என்று தான் அதைக் குறிப்பார்கள்.

ஆனால் கீதையிலும், கீதைக்குப் பிந்தைய காலத்திலும் இதெல்லாம் சற்று தளர்ந்து போயின! இஸ்லாமியரான கபீர் முதற்கொண்டு பலரும் "ஓம்" பற்றி அழகான விளக்கங்கள் எழுதி உள்ளனர்.

சரி, மற்ற இடங்களில் எல்லாம் "ஓம்"-ன்னா என்னா-ன்னு பாத்துட்டோம்! வெண்ணையை வச்சிக்கிட்டு நெய்க்கு அலைவாங்களா?

வாங்க, நம்ம திருமந்திரத்தில், தமிழில், திருமூலர் என்ன சொல்றாரு-ன்னும் ஒரு தடவை பாத்துருவோம்!

சைவ சித்தாந்தத்தில் ஓங்காரம்:
ஓம் = அ + உ + ம + நாதம் + விந்து
விந்து-ன்ன உடனே, கன்னா பின்னா-ன்னு எல்லாம் அர்த்தம் எடுத்துக்கக் கூடாது! பொறுமை! பொறுமை.

அது என்னமோ பாவம், விரிசடைக் கடவுளான நம்ம சிவபெருமான் ராசி போலும்! லிங்கம், நாத விந்து-ன்னு பெயர்கள் எல்லாம் இந்தக் காலத்துக்கு விவகாரமாவே அமையுது.

* அ = சிவம்! சலனமற்று இருப்பது! சிவனே-ன்னு கிடக்கிறேன்-ன்னு சொல்றோம்ல?

* உ = சக்தி! சக்தியின் உந்துதலால் சலனம் பெறுவது.

* ம = மாயை! அதாச்சும் சலனமற்று இருந்த பொருள் இப்போ சலனம் பெறுவது.

* நாதம் = இந்தச் சலனத்தால் ஒலி உண்டாக,

* விந்து = அதனால் தோற்றம் ஆரம்பிக்கிறது.

இதுவே நாத-விந்து-கலாதீ! ஆதியிலே தேவன் "ஓம்" எனும் நாதமாய் நின்று உலகைத் துவக்கினான்!

ஓம் எனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி
ஓம் எனும் ஓங்காரத் துள்ளே உருஅரு
ஓம் எனும் ஓங்காரத் துள்ளே பலபேதம்
ஓம் எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே - (திருமந்திரம் 9ஆம் தந்திரம்)
ஓம் என்னும் ஓங்காரம் ஒரே மொழி தான்! (ஒப்பு நோக்குக: வடமொழி ஏகாட்சரம், சீக்கிய ஏக்-ஓம்கார்)
ஓம் என்பதற்குள் உருவமும் இருக்கு! அருவமும் இருக்கு
ஓம் என்பதற்குள் பல பேதம் இருப்பது போலத் தெரியலாம்
ஆனால் அது ஒன்றாகும் போது முக்தி சித்திக்கும்

ஹிஹி! என்ன? ஏதாச்சும் புரிஞ்சுதா? ஒரே "ஞான பரமா"-ல்ல இருக்கு? இதை இன்னும் கொஞ்சம் எளிமையாச் சொல்ல முடியாதா? சரி, திருமூலர் சொல்வதை மேலும் கேளுங்கள்.

ஓங்காரத் துள்ளே உதித்த ஐம் பூதங்கள்
ஓங்காரத் துள்ளே உதித்த சராசரம்
ஓங்காரத் தீதத்து உயிர் மூன்றும் உற்றன
ஓங்கார சீவ பரசிவ ரூபமே

சீவனுக்கும் "ஓம்" தான் ரூபம்! சிவனுக்கும் "ஓம்" தான் ரூபம்! இதை மட்டும் உணர்ந்தால் சீவன் = சிவன் ஆகி விடும்

ஐயோ! என்னைய அடிக்க வராதீங்க! எதுனா புரியலைன்னா பேசித் தீர்த்துக்கலாம்! அடி தடி எல்லாம் வேணாம்

என்ன மக்கா, சீவன்-சிவன், ஏதாச்சும் புரிஞ்சுதா? எல்லாத்தையுமே எளிமையாச் சொல்லீற முடியுமா என்ன? நாமளும் மெனக் கெட்டால் தானே புரியும்-ன்னு சிலர் சொல்லலாம்

ஆனால்.....

நான் அப்படிச் சொல்ல மாட்டேன் --- இறை விஷயத்தில் மட்டும்
ஏன்னா இறைவன் எளிமையானவன். ரொம்பவே எளிமையானவன்.
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்-ன்னு சொல்றாரு மாணிக்க வாசகப் பெருமான்.

"போதம்"(ஞானம்) கொடுப்பவன்-ன்னு சொல்லி இருக்கலாம். "போகம்"(இன்பம்) கொடுப்பவன்-ன்னு ஏன் சொல்றாரு?

ஏன்னா எல்லா உயிர்களுக்கும், போகம்(இன்பம்)-ன்னா என்ன?-ன்னு "தானாவே" புரியும்

* மாம்பழம் சாப்பிட்டா தித்திப்பா இருக்கும்

* காதலியின் இதழ்களில் தேன் ஊறும்-ன்னு யாருமே சொல்லிக் கொடுக்க வேணாம்.பெருசா "ஞான பரமா" எல்லாம் இதுக்குச் சிந்திக்கத் தேவையில்லை! "போகமாம்" பூங்கழல்கள் = அந்த இன்பம் "தானே" புரியும்
அப்புறம் எதுக்கு இத்தனை நூல்கள்?-ன்னு கேட்கறீங்களா? = இன்பத்தைப் பற்றிப் பேசுவதும் இன்பம் தானே! அதான்!

இன்பத்தைப் பற்றிச் சிந்திப்பது, வந்திப்பது, பேசுவது, ஏசுவது, இன்பத்தைப் பற்றி நண்பர்களிடம் அரட்டை அடிப்பது, இன்பத்தைப் பற்றிக் காதலன்-காதலியிடம் வழிவது எல்லாமே இன்பம் தானே! அதான் இத்தனை பேச்சு! இத்தனை நூல்கள்! :))

திருமந்திரம் = சைவ சித்தாந்தப் பெருநூல்.
நம் தமிழ் மொழியில், தியான/ யோக/ தந்திர வகையில் அற்புதமான ஒரு நூல். பல சிக்கலான சமயக் கருத்துக்களை விரிவாக விளக்கும் நூல்.

ஆனால் என்னமோ தெரியவில்லை, ஓங்காரம் பற்றிச் சுருக்கமாகச் சொல்லி முடித்து விடுகிறார் திருமூலர்.உடனே பஞ்சாட்சரத்துக்குத் தாவி விடுகிறார்,
அதை விரிவாகப் விரித்துப் பேசுகிறார்! ஆர்வமுள்ளோர் ஒன்பதாம் தந்திரத்தைப் படித்துப் பார்க்கவும்!

இப்படிப் பல சமயங்களும் "குரு வணக்கம்", "ஞான சொரூபம்"-ன்னே ஓங்காரத்தைப் பற்றிப் பேசுகின்றன.

பலவற்றிலும் "ஞான பரம்" தான் அதிகமா இருக்கே தவிர...கொஞ்சம் எளிமையா "எல்லா மக்களுக்கும் ஓங்காரத்தால் என்ன பயன்?" என்பதை அவ்வளவு வெளிப்படையாகப் பேசவில்லை.

* ஓங்காரம் - அது ரகசியப் பொருள் - யாருக்கும் சொல்லீறக் கூடாது என்பார்கள் சிலர்.

* ஓங்காரம் - அது மந்திரம் - கிழக்கு பார்த்து உட்கார்ந்து, ஆச்சாரமா, நியமமா ஜபம் பண்ணனும் என்பார்கள் சிலர்.

* ஓங்காரம் - அது மந்திரப் பொருளாய் இருப்பதால் - அதை முறையாக ஆசிரியரிடம் வாங்கி, முழுக் கவனமாக (Total Concentration) சொல்ல வேண்டும் என்பார்கள் சிலர்.

இது முற்றிலும் உண்மை தான்! முழுக் கவனம் தேவை தான்! - ஆனால் அது யோகப் பயிற்சியில் மட்டுமே! மந்திரமாகச் சொல்லும் போது மட்டுமே.
மற்ற நேரங்களில் மந்திரமாக இல்லாமல், பொதுவான பொருளாகச் சொல்லலாமே! தவறில்லையே,

ஓங்காரத்தின் பொருள் உலகில் "வேறு யாருக்குமே" தெரியாது அதாண் யாரும் அதைப் பத்தி ரொம்ப பேசறதில்லை!"

"அந்தப் பிரம்மனுக்கும் தெரியாமல் தானே இருந்தது? அதானே முருகப் பெருமான், பிரம்மாவின் தலையில் குட்டினான்?

சிவ பெருமானுக்குத் தெரியும்.ஆனால் அவர் அதை மறந்திருந்தார். தந்தைக்கு உபதேசம் செய்து, அதை மீள் ஞாபகப் படுத்தினான் முருகன்"
"ஓங்காரத்தின் பொருள் "வேறு யாருக்குமே" தெரியாது! முருகன், சிவன், உமையன்னை - இந்த மூவருக்கு மட்டும் தான் ஓங்காரப் பொருள் தெரியும் என்பார்கள் சில "தீவிர" சைவப் பெருமக்கள்! (என் அன்பு நண்பர்கள் உட்பட :)))

* உமா = உ + ம + அ!
அது தான் ரிவர்ஸில் அ,உ,ம என்று ஆகி, அப்புறம் "ஓம்" ஆனது என்றெல்லாம் வார்த்தை விளையாட்டு காட்டுவார்கள்

* உமா = உ,ம,ஆ என்று "ஆ" தானே இருக்கு? "அ" இல்லையே-ன்னு கேள்வி கேட்டாக் கோவம் வந்துரும்
உமையன்னைக்கு மட்டும் தானா? பிரணவ சொரூபமாகத் திகழ்கிறானே என் முருகப் பெருமான்?அவன் பெயரில் மட்டும் அ,உ,ம இல்லையா?-ன்னு கேட்டா, அதுக்கும் பதில் வராது

ஹிஹி...எல்லாருக்கும் பொதுவான ஒரு தத்துவத்தை...இப்படிக் கதையெல்லாம் சொல்லி, "எங்களுக்கு மட்டும்"-ன்னு தனிப்பட்டு ஆக்கி வைத்தால்...வரும் பிரச்சனை இது தான்
இந்த டகால்ட்டி எல்லாம் ஈசனோ, அன்னையோ, முருகனோ செய்வதில்லை!அத்தனையும் மனுசன் தான் செய்யறான்

* மூவர் மட்டுமே அறிந்து, மற்றவர் அறிய முடியாது-ன்னா, இது என்ன குலக் கல்வியா? "எங்களுக்கு மட்டுமே தெரியும்"-ன்னு சொல்வதிலா ஈசனுக்கும் அன்னைக்கும் பெருமை?

* பிரம்மனுக்குத் தெரியவில்லை என்று முருகன் தண்டித்த வரை சரியே. ஆனால் அவரை வெளியே விடும் போது, அவருக்குச் சொல்லிக் கொடுத்தல்லவா அனுப்ப வேண்டும்? அப்போது தானே அடுத்த முறை படைக்கும் போது, பிரம்மா பிரணவம் அறிந்து படைப்பார்?

* மூவர் மட்டுமே அறிந்தது என்றால், ஞானசம்பந்தர், அப்பர் சுவாமிகள், சுந்தரமூர்த்தி நாயனார், மணிவாசகப் பெருந்தகை, திருமூலர் - இவர்கள் எல்லாம் பிரணவப் பொருள்-ன்னா என்னன்னே தெரியாமல் ஓங்காரம் பற்றி எழுதினார்களா?

எளிமையா, எல்லாருக்கும் பயன்படுறா மாதிரி, ஓங்காரத்தின் பொருள் தான் என்ன? என்ன? என்ன?

முருகன் பிரம்மனுக்கு அதைச் சொல்லிக் கொடுத்து அனுப்பினானா இல்லையா?

ஓங்காரத்தின் பொருள் உண்மையிலேயே "வேறு யாருக்குமே" தெரியாதா?
(.....தொடரும்)

உசாத்துணை (References):
1. Jaina Sutras - http://www.sacred-texts.com/jai/sbe22/index.htm
2. Avalokiteswara Mantra - http://www.visiblemantra.org/avalokitesvara.html
3. Moola Mantra - http://www.sikhismguide.org/
4. பத்தாம் திருமுறை - திருமந்திரம் - ஒன்பதாம் தந்திரம் - பிரணவ சமாதி - http://thevaaram.org/thirumurai_1/songview.php…
5. விளக்கப் புத்தகங்கள் தந்து உதவிய ஜைன நண்பர் Suresh Jain, மற்றும் சீக்கிய நண்பர் Nikki baidwaan-க்கும் நன்றி.

ஆக்கம்:  Ramachandran Krishnamurthy

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :