Tuesday, March 24, 2015

Keerthivasan

எங்கே பிராமணன் ? – 13 – ஸோம பானம், ‘மது’வா ?



கேள்வி : ‘ஸோம பானம்’ என்று சொல்கிறார்களே – அது ‘மது’தானே? விஸ்கி, பிராந்தி மாதிரி அதுவும் ஒரு வகை – அவ்வளவுதானே? அதை தேவர்கள் குடித்தார்கள், ரிஷிகள் பருகினார்கள்… என்றெல்லாம் கூறப்படுகிறதே? அப்படியானால், அவர்கள் எல்லாம் குடிகாரர்களா?







சோ : பல விஷயங்களைப் புரிந்து கொள்ளாமலே மேலெழுந்தவாரியாக ஏதோ கேள்விப்பட்டு, அதன் அடிப்படையில், பலர் பல விஷயங்களைப் பற்றி தயங்காமல் அபிப்பிராயம் தெரிவித்து விடுகிறார்கள். அதுவும் ஹிந்து மதம் சம்பந்தப்பட்ட விஷயம் என்றால், கேட்கவே வேண்டாம். விவரம் தெரியாமலே, விமர்சனம் செய்ய பலர் தயாராக இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் கூறுகிற கருத்துக்களைக் கேட்டுக் கொண்டு, உங்களைப் போன்றவர்கள், இப்படி தாறுமாறாகக் கேள்வி கேட்பதும் நடந்து வருகிறது.

ஸோம பானம் என்பது மது பானம் என்றோ, மயக்கத்தைத் தருவது என்றோ எந்த நூலிலும் கூறப்படவில்லை. ‘ஸுரா பானம்’ என்பதுதான் மது, அதுதான் போதை தருவது. அதைத் தவிர்க்க வேண்டும் என்று ஹிந்து மத நூல்கள் வற்புறுத்துகின்றன.

ராமாயணத்தில் கூட இதுபற்றி வருகிறது. ‘ராமருக்குக் கொடுத்த வார்த்தையை மறந்து, ஸீதையைத் தேடுவதில் முனையாமல் சுக்ரீவன், இன்பத்தில் மூழ்கியிருக்கிறான். ‘அவன் ஸுரா பானம் அருந்திக் கொண்டு, மயங்கிக் கிடந்தான்’ என்று லக்ஷ்மணன் அவன் மீது கோபப்படுகிறான் என்று வர்ணிக்கப்படுகிறது. இங்கும் கூட ஸுரா பானம் என்றுதான் வருகிறதே தவிர, ஸோம பானம் என்று கூறப்படவில்லை.

‘ஸோமலதை’ என்பது ஒரு கொடி. அதிலிருந்து எடுக்கப்பட்ட சாற்றைப் பிழிந்து, அதை யாகங்களில் பயன்படுத்தி, பிரசாதமாக வழங்கினார்கள். தேவர்களுக்கு மிகவும் பிரியமானது என்பதால்தான், அது யாகத்தில் பயன்படுத்தப்பட்டது.

அந்த ஸோம பானம் புனிதமானது என்றும், ஆரோக்கியத்தைத் தருவது என்றும் கூறப்பட்டிருக்கிறது. அது மிகவும் உயர்ந்த விஷயம். மனிதர்களில் கூட, மிகவும் உயர்ந்த மனம் படைத்தவர்கள், பல முயற்சிகளைச் செய்துதான் அதைப் பெற்றார்கள். அதைப் போய் மதுபானம் என்று கூறுவது அபத்தமான பேச்சு.
பின்பு நாம் பார்க்கக்கூடிய ஒரு நிகழ்ச்சியின் முடிவில், அகஸ்தியர், ‘இனி பிராமணன் மது அருந்தக் கூடாது’ என்று விதிக்கிறார். அப்போது அவரும் ஸோம பானம் என்று கூறவில்லை. ஸுரா பானத்தைத்தான் அவர் குறிப்பிடுகிறார். இவையெல்லாம் தெரிந்தோ, அல்லது தெரியாமலோ, ஹிந்து மத பழக்க வழக்கங்களை தூற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் சிலர் சொல்வதுதான் ‘ஸோம பானம் – மது’ என்பது. அது பிதற்றல்.

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :