Saturday, August 1, 2015

Keerthivasan

விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள் – 02

Swamy Vivekananda 1893 with The East Indian Group

2. நாம் ஏன் ஒத்துப் போவதில்லை?

செப்டம்பர் 15, 1893
 
ஒரு சிறு கதை சொல்லப் போகிறேன். இப்போது பேசிய சிறந்த பேச்சாளர், 'நாம்ஒருவரை யொருவர் தூற்றுவதை நிறுத்த வேண்டும்' என்று கூறியதைக் கேட்டீர்கள். இவ்வளவு வேறுபாடுகள் இருப்பதற்காக அவர் வருத்தப்பட்டார். இந்த வேறுபாடுகளுக்குக் காரணம் என்ன என்பதை விளக்க ஒரு கதை சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.

ஒரு கிணற்றில் தவளை ஒன்று வாழ்ந்தது. நீண்ட காலமாக அங்கு அது வசித்து வந்தது. அங்கேயே பிறந்து அங்கேயே வளர்ந்த அந்தத் தவளை சின்னஞ் சிறியது. அது கண்களை இழந்து விட்டதா, இல்லையா என்று சொல்வதற்கு, நல்லவேளையாக அங்கே பரிணாமவாதிகள் யாரும் இல்லை. நம் கதைக்காக, அதற்குக் கண்கள் இருந்தன என்றே வைத்துக் கொள்வோம்.

அந்தத் தவளை நாள்தோறும் நீரிலிருந்து புழு பூச்சிகளையும் கிருமிகளையும் மிகவும் சுறுசுறுப்பாக அகற்றிச் சுத்தப் படுத்தியது. அந்தச் சுறுசுறுப்பு, நம் தற்காலக் கிருமி ஆராய்ச்சியாளர்களுக்கு இருந்தால் அது அவர்களுக்குப் பெருமை தரும் விஷயமாகும். அவ்வாறே வாழ்ந்ததால் அந்தத் தவளை சிறிது பருத்தும் விட்டது.

ஒரு நாள் கடலில் வாழ்ந்து வந்த தவளையொன்று அங்கு வந்து அந்தக் கிணற்றில் விழுந்துவிட்டது.

'நீ எங்கிருந்து வருகிறாய்?'

'கடலிலிருந்து'

'கடலா? அது எவ்வளவு பெரியது? எனது கிணற்றளவு பெரியதாயிருக்குமா?' என்று கூறி, ஒரு பக்கத்திலிருந்து எதிர்ப்பக்கத்திற்குத் தாவிக் குதித்தது கிணற்றுத் தவளை.

'நண்பா, இந்தச் சின்னக் கிணற்றோடு எப்படிக் கடலை ஒப்பிட முடியும்?' என்று கேட்டது கடல் தவளை.

கிணற்றுத் தவளை மறுபடியும் ஒரு குதிகுதித்து, 'உனது கடல் இவ்வளவு பெரிதாய் இருக்குமோ?' என்று கேட்டது.

'சேச்சே! என்ன முட்டாள்தனம்! கடலை உன் கிணற்றோடு ஒப்பிடுவதா?'
'நீ என்ன சொன்னாலும் சரி, என் கிணற்றை விட எதுவும் பெரிதாக இருக்க முடியாது. கண்டிப்பாக, இதைவிடப் பெரிதாக எதுவும் இருக்க முடியாது. இவன் பொய்யன், இவனை வெளியே விரட்டுங்கள்!' என்று கத்தியது கிணற்றுத் தவளை.

காலம் காலமாக இருந்து வரும் கஷ்டம் இது தான். நான் இந்து. நான் என் சிறிய கிணற்றிற்குள் இருந்து கொண்டு என் சிறு கிணறு தான் முழுவுலகம் என்று நினைக்கிறேன். கிறிஸ்தவன் தனது மதமாகிய சிறு கிணற்றிற்குள் அமர்ந்து கொண்டு, தன் கிணறுதான் முழுவுலகம் என்று நினைக்கிறான் அவ்வாறே முகம்மதியனும் தன் சிறு கிணற்றில் உட்கார்ந்து கொண்டு, அது தான் முழுவுலகம் என்று நினைக்கிறான். நமது இந்த சிறிய உலகின் எல்லைகளைத் தகர்த்தெறிய, அமெரிக்கர்களாகிய நீங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் பெரிய முயற்சிக்காக நான் உங்களுக்கு நன்றி செலுத்த வேண்டும். வருங்காலத்தில், உங்கள் விருப்பம் நிறைவேற இறைவன் அருள் புரிவான் என்று நம்புகிறேன்.

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :