Saturday, August 1, 2015

Keerthivasan

இதுதான் இந்துமதம் – 07

இதுதான் இந்துமதம் – 07

இந்து மதத்தின் அடிப்படைகளான ஜென்மா, கர்மா, ஆத்மா, தர்மா ஆகியவற்றை குறித்து நாம் பார்க்கும் முன், இந்துமதத்தின் பயனத்தை நாம் பார்த்தாக வேண்டும். இந்து மதம் எதையும் தினிப்பதில்லை. இதை நம்பு என்று கட்டாயப்படுத்துவதில்லை. அறிவால் அறிய முடியாதவன் இறைவன் என்று அது போதிக்கும் அதே வேளையில், எதையும் அறிவு கொண்டு உரசி பார், அறிவை இறைவன் நமக்கு காரணமில்லாமல் கொடுக்கவில்லை என்று அது தெளிவு படுத்துகிறது. அவ்வழியேதான் எந்த ஒரு சித்தாந்தமும், விவாதிக்கப்பட்டும், பல கோணங்களில் அலசி ஆராயப்பட்டுமே ஏற்கப்பட்டது. இது இப்படிதான் அதை கண் மூடித்தனமாய் நம்பு என்பது இந்துக்களின் அகராதியில் இல்லை.

கேள், அலசு, ஆராய்ச்சி செய், அறிவால் உரசி பார் என்றே அது போதிக்கிறது. கீதையில் கிருஷ்ணன் கேள்வி கேட்காதே என்று சொல்லவில்லை. மாறாக கேள்வி கேட்பதே ஞானத்தின் வழி என்கிறார். அர்ஜுனனின் பல கேள்விகளுக்கு இறைவன் பொறுமையோடு பதில் சொல்வதை பார்க்க முடிகிறது. இறைவனே தவறு செய்தாலும் அதை சுட்டிக் காட்டும் நக்கீரனை இறைவன் பாராட்டுவதும், அவரின் அப்பண்பை உலகரிய நாடகம் நடத்துவதையும் பார்க்க முடிகிறது. இப்படித்தான் உபநிஷத்துகள் முழுவதும் பல்வேறு கேள்விகளுக்கு பல்வேறு ரிஷிகளும் மகான்களும் முழு ஈடுபாட்டோடு பதில் சொல்கிறார்கள். மகாபாரதம், ராமாயனம் மற்றும் பல்வேறு இந்துதர்ம‌ புனித நூல்கள் முழுவதும் விவாதங்களும், கேள்வி பதில்களுமாக நிரம்பி நிற்கின்றன.

அவ்வழியே இந்துக்களின் அடிப்படை கோட்பாடுகளான ஜென்மா, கர்மா, தர்மா, ஆகியவற்றை நாம் யாருக்கும் நிரூபித்து காட்ட இயலும்.

ஒருவர் இறைவன் இருப்பதை ஏற்கிறார் என்றால் அவர் அந்த இறைவனை நிச்சயம் நற்பண்புகள் நிறைந்தவராகதான் பார்க்க முடியும். எந்த மதத்தை சாரந்தவராக ஒருவர் இருந்தாலும் அவர் இறை நல்லவன் என்றே சொல்வார். ஒரு அயோக்கியனை அசுரனை இறைவன் என்று யாரும் ஏற்க மாட்டார்கள். ஆகையால் இறைவன் நற்பண்புகள் நிறைந்தவன். அனைவருக்கும் நல்லதையே செய்பவன். பாரபட்சம் இல்லாதவன் சரிதானே ?

ஆனால் குழந்தைகள் பல்வேறாய் பிறக்கின்றனவே ? ஏன் இந்த பாரபட்சம் ? ஒரு குழந்தை மாட மாளிகையில் செல்வந்தன் வீட்டில், ஒரு குழந்தை குடிசையில், ஏழை வீட்டில், ஒரு குழந்தை ஆரோக்கியமாய், ஒரு குழந்தை பல்வேறு நோயுடன், ஒரு குழந்தை அறிவாளியாய், ஒரு குழந்தை பிறக்கும் போதே மனநோயுடன். ஏன் இந்த பாரபட்சம் ? முன்வினை இல்லை என்று ஆப்ரகாமிய மதங்கள் சொல்வது உண்மை என்றால் ஏன் இந்த பாரபட்சம் ? அப்படியேனில் இறைவன் கொடூரனா ? கொடிய சாத்தானா ? இறைவன் அப்பழுக்கற்றவன் அல்லவா ?

இந்து மதம் ஒன்றே இதற்கு தீர்வு தருகிறது. முன் ஜென்மங்களில் செய்த வினைப் பயனிற்கு ஏற்றவாறே உடல் கிடைக்கிறது என்பதை தெளிவாக வரையறுக்கிறது. இது வேறு எந்த மதமும் பதில் சொல்ல இயலாத கேள்வி.
அதனால்தான் இந்து தர்ம‌த்தின் தத்துவ கோட்பாடுகளின் அருகே கூட வேறு எந்த மதமும் வர இயலாது.

அடுத்த பதிவில் இது குறித்து மேலும் பார்ப்போம்.

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :