Tuesday, July 9, 2013

Keerthivasan

மோட்டார் கொலைகாரர்கள்


மோட்டார் கொலைகாரர்கள்


கொலைகாரர்களையும், கொள்ளைக்காரர்களையும் குறித்து நாம் திணசரிகளில் படிக்கிறோம். ஆனால் இந்த மோட்டார் கொலைகாரர்களை குறித்து ஏன் நாம் சித்திப்பதில்லை. இந்த மோட்டார் கொலைகாரர்களால் நடக்கும் கொலைகள் இடைவிடாது நிகழ்கின்றனவே !!

அதுவும் சென்னை, பெங்களூர், கோவை போன்ற பெருநகரங்களில் கேட்கவே வேண்டாம். வாகணம் ஒட்டி வீடு திரும்புவது என்பது ஒரு மிகப்பெரும் சாதனையாக உள்ளது. நீங்கள் மகிழுந்து (உபயம் - மக்கள் தொலைக்காட்சி) ஓட்டுபவராக இருந்தால், உங்கள் இடப்பக்கம், வலப்பக்கம் என்று மாறி மாறி இருசக்கர வாகணங்கள் சூழ்ந்து திக்குமுக்காட செய்து விடுகிறார்கள். சென்னையில் கேட்கவே வேண்டாம், அதுவும் இந்த மீன் பாடி வண்டி எனப்படும் "யம வாகணம்" இப்போது குறைந்திருப்பதால் பரவாயில்லை. இல்லையென்றால் நம்மை திக்கு முக்காடச் செய்து, இறுதியில் "வூட்ல சொல்லிட்டு வந்தியா" என்று வேறு உபதேசம் சொல்லி விட்டு போவார்கள்.

இரு சக்கரங்களில் பயனிக்கும் பல மனநோயாளிகள், ஏதோ இன்னும் இரண்டு நிமிடங்களில் எட்டு புள்ளி ரிக்டர் ஸ்கேல் அளவில் பூகம்பம் வரப்போவது போல் பைக்கை முறுக்கிக் கொண்டு செல்கிறார்கள். சற்று நேரம் கடந்து நாம் பார்க்கையில் ஒரு தேநீரகத்தில் சிகரெட்டும் கையுமாக ஆற அமர உட்கார்ந்திருப்பார்கள்.

இது இப்படி இருக்க நெடுஞ்சாலைகளில் வரும் பேருந்துகளும், லாரிகளும் இரு சக்கர வாகண ஓட்டிகளை ஏதோ ஈமூ கோழிகளை போல் ஒதுக்கி சாலைகளில் எல்லைக்கு கொண்டு போய் சேர்ந்து விடுகிறார்கள். இன்றைய அதி நவீன கார்களை நெடுஞ்சாலைகளில் ஓட்டும் நவநாகரீக மனிதர்கள் தங்களை சிங்கப்பூர் சாலையில் இருப்பதாய் அவதானித்துக் கொண்டு பறக்கிறார்கள். ஆட்டோ ஓட்டுனர்களோ, 360 டிகிரியில் சட்டென்று திருப்பி, பின்னே வருபவர்களை திக்குமுக்காட செய்கிறார்கள்.

சமீபத்தில் பெங்களூரின் பிரதான‌ சாலையில் மூளை வெளிவந்த நிலையில் ஒரு இளைஞரின் (ஜீன்ஸ் அணிந்திருந்தார்) உடலை பார்த்தது கண் முன்னே நிற்கிறது. பைக்கில் பின் சீட்டில் உட்கார்ந்த நிலையில் ஒரு பெண், தலை சற்றே சாய்ந்திருந்த படியால் பேருந்தால் அடிப்பட்டு இறந்த சென்னை சம்பவத்தையும் நேரில் பார்த்த அனுபவம் உண்டு. கோவை உடுமலை ரோட்டில் பேருந்தை முந்தி சென்ற இளைஞர் எதிர்பாராமல் எதிரே வந்த லாரி அடித்து துடித்து துடித்து இறந்த சம்பவமும் கண் முன்னே நிற்கிறது.

நம் நாட்டில் உயிர்களுக்கு மதிப்பு இல்லை. விபத்து என்பதை நாம் மிக சாதாரணமாக நினைத்து விடுகிறோம். உயிர் போகாமல் வாழ்நாள் முழுதும் கைகால், முதுகெலும்பு செயலிழந்து கிடப்பவர்கள் பலரை பார்க்கிறோம். ஒரு உயிர் போவதால் அவர்களின் அன்புக்குரிய குடும்பத்தார் காலம் முழுதும் அவர்களை நினைத்து துயர் கொள்ளும் காட்சியையும் பார்கிறோம். ஆனால் விபத்துக்கள் தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது.

இரண்டு நிமிடம் தாமதித்து போனால் உலகம் மாறிவிடப்போவதில்லை. அத்தனை அவசரமாக செல்லும் நிலையில், முன்கூட்டியே அதற்கு நாம் தயார் செய்துக் கொள்ள வேண்டும். உயிர் விலைமதிப்பற்றது. அத்தகைய உயிரை பறிக்கும் வெறி பிடித்த வாகண ஓட்டிகளின் மேல் கொலை வழக்கு பதிவு செய்யப்பட‌ வேண்டும். இல்லையென்றால் வெறும் வாகண உரிமத்தை தானே இழப்போம் என்கிற ஒரு கேடுகெட்ட நினைப்பினால்தான் பல விபத்துகள் நடக்கின்றன.

குண்டு குழியுமான ரோடுகள், கொள்ளை அடிப்பதையே நோக்கமாக கொண்ட பெரும்பாலான போக்குவரத்து காவலர்கள், அரசாங்கத்தின் அக்கறையின்மை, கறாரான சட்டங்கள் இல்லாமை, மற்றும் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத மக்கள் இருக்கும் வரை இது தொடர்ந்துக் கொண்டே இருக்கும்.

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :