Tuesday, August 6, 2013

Keerthivasan

எனக்கு பிடித்த நிஜ மனிதர்கள் - மயிலிறகு நடராஜன்.


எனக்கு பிடித்த நிஜ மனிதர்கள் - மயிலிறகு நடராஜன்.



கள்ளழகர் கோவிலுக்கு ஆடி 18ம் பெருக்கிற்கு சென்றிருந்தேன். நீண்ட வரிசையில் நின்று, நூபுர கங்கையில் நீராடி (தலை நனைத்து) வந்தேன். வழக்கம் போல் ஒவ்வொரு இடத்திலும் வசதிகள் செய்யப்படாத நிலை. குளியறை மற்றும் கழிவறைகள் அறநிலயத்துறை என்று ஒன்று இருக்கிறதா எனும் கேள்வியோடு, மிக கேவலமாக இருந்தன. பணம் செலுத்தினால் விரைவாக சென்று நீராட முடியும், இல்லையென்றால் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய நிலை. நீராடி விட்டு செல்லும் பக்தர்களிடம், அங்குள்ள வியாபாரிகள் வெறுங்கையோடு செல்லாதீர்கள், ஏதாவது பொருள் வாங்கி செல்லுங்கள் என்று பயமுறுத்தி வியாபாரம் செய்து கொண்டிருந்தனர்.

கீழே கள்அழகர் கோவிலின் முகப்பிலும் மடிப்பிச்சை கேட்பதாய் ஏமாற்றும் சில பெண்களையும், பக்தர்களை ஏக வசனத்தில் பேசும் பெண் கான்ஸ்டபிள்களையும் பார்க்க முடிந்தது. கள்ளழகரை தரிசனம் செய்யும் நீண்ட வரிசைக்கு இடையேயும், அர்ச்சனை டிக்கேட் விற்கும் வியாபாரிகளையும், சுவாமிக்கு மாலை சாத்துவதற்கு (அணிவதற்கு) 100 ரூபாய் பெற்றுக் கொள்ளும் அர்ச்சகர்களையும் பார்க்க முடிந்தது. ஒவ்வொரு நிலையில் இறைவனை தரிசிக்க நாம் கொள்ளை அடிக்கப்படுவதையும், பக்தர்கள் ஒரு வியாபார பொருளாக மட்டுமே பார்க்கப் படுவதும் வேதனையாக இருந்தது. ஆப்ரகாமிய மதத்தவர்கள் நவீன வசதிகளோடு, பெரிய பெரிய கட்டிடங்களையெலாம் கட்டி பக்தர்களை கவர பல முயற்சிகளை மேற்கொண்டுவரும் நிலையில் நாம் பல இன்னல்களுக்கு இடையே வரும் பக்தர்களை அணுகும் முறை இதுதானா என்ற கேள்வி எழும்பியது.

தரிசனம் முடித்து வெளியேறும் பக்தர்களை, கருவறைக்கு நேர் எதிரே ஒரு பெரியவர் கையில் பெரிய மயில் தோகை விசிறியோடு விசிறிக் கொண்டிருந்தார். "இதை ஒரு சேவையாக செய்கிறீர்களா ?" என்று அவரிடம் கேட்டேன். "ஆமாம்" என்றார் அவர். நான் ஒரு பத்திரிகையாளன் என்று சொல்லி, உங்களை ஒரு புகைப்பட எடுத்துக் கொள்ள முடியுமா என்றேன். அவர் புகைப்படத்திற்கு அனுமதி இல்லை என்றார்.

நான் அவரிடம், "நல்ல விஷயங்கள் நாலு பேருக்கு செல்ல வேண்டும் அல்லவா ?" என்றேன்.

பின்னர் அவர் தயக்கத்துடன் பக்கத்தில் உள்ள தனி அறைக்கு என்னை அழைத்துச் சென்றார். அவர் பெயர் நடராஜன் என்றும் தன்னை "மயிலிறகு நடராஜன்" என்றே அனைவரும் சொல்வார்கள் என்றும் கூறினார். மதுரை யானைக்கல் பகுதி வாசியாம்.

"உங்களுக்கு எவ்வளவு வயது ஐயா" என்று கேட்டேன்.

"எண்பத்து ஐந்து" என்றார் பெரியவர்.

"எத்தனை வருடமாக இதை செய்து வருகிறீர்கள்"

"கிட்டத்தட்ட 70 வருடமாய், சுதந்திரத்திற்கு முன்பிலிருந்து" என்றார் பெரியவர்.

"பக்தர்களிடம் ஏதாவது கேட்பதுண்டா ?"

"அடியவர்களுக்கு அடியவனாக இருப்பதுதானே, வைணவ சித்தாந்தம் ? பக்தர்கள் ஏதாவது மணமுவந்து கொடுத்தால் மட்டுமே வாங்கிக் கொள்வேன், தவிர யாரிடமும் எதுவும் கேட்பதில்லை" என்றார் பெரியவர்.

தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் சென்று வரும் பக்தர்களை மயிலிறகு விசிறியால் விசிறுவதுதான் அவர் சேவையாம். அவர் செல்லாத பழமைவாய்ந்த கோவில்களே இல்லையாம். ஹிந்து நாளிதழில் கூட அவரை குறித்து செய்திகள் வந்துள்ளதாம்.

அவருக்கு கைக்கூப்பி வணங்கிவிட்டு விடைப்பெற்றேன். மனதில் நம் தர்மத்தை அழிக்க யாராலும் முடியாது எனும் என் நம்பிக்கை இன்னும் பலம் கூடி இருந்தது. திரு மயிலிறகு நடராஜன் போன்றோர்கள்தான் நம் தர்மத்தின் விழுதுகள்.

உடல் முழுவதும் பண்ணிரண்டு திருநாமங்களை மட்டும் இட்டுக் கொண்டோ, ஐந்து கச்சங்களை அணிந்துக் கொண்டோ, மனதில் அகங்காரத்தோடு திரிபவன் வைண‌வன் இல்லை, அடியவனுக்கு அடியவன் என்கிற எண்ணத்தோடு வாழ்பவன் தான் உண்மையான வைண‌வன், அத்தகைய உண்மையான வைணவர்களை காப்பாற்று கள்ளழகா என்று பிரார்த்தித்துக் கொண்டே திரும்பினேன்.


 Nandri Enlightened Master

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :