Wednesday, December 24, 2014

Keerthivasan

விவாதிப்போம் வாருங்கள் - II - எஸ் குருமூர்த்தி

இதுநாள்வரை மதமாற்ற நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்கள் இந்துக்கள் மட்டும்தான் என்பதையும், இந்தியாவிலுள்ள இந்துகள் அல்லாதவர்கள் அனைவரும் இந்து மதத்திலிருந்து வேறு மதத்துக்கு மதமாற்றம் செய்யப்பட்டவர்கள்தான் என்பதையும் யாரும் மறுக்க முடியாது. மதமாற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் இந்துக்கள்தான். அதனால்தான் மதமாற்றத் தடைச் சட்டம் வேண்டும் என்று இந்து அமைப்புகள் நெடுங்காலமாக வலியுறுத்தி வருகின்றன. ஆனால், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் மற்றும் வாக்கு வங்கிக்காகத் தங்களை மதச்சார்பற்றவர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் இதைக் கடுமையாக எதிர்த்து வந்தனர்.

இப்போது ஆக்ராவில் முஸ்லிமாக மதம் மாறியவர்கள் மீண்டும் இந்துக்களாக மதமாற்றம் செய்யப்பட்ட சம்பவத்தின் மூலம் மதமாற்றம் என்பது விவாதிக்கப்பட வேண்டிய பிரச்னை என்று வாக்குவங்கி அரசியலுக்காகத் தங்களை மதச்சார்பற்றவர்கள் என்று கூறிக்கொண்டவர்களைப் பேச வைத்திருக்கிறது. கட்டாய மதமாற்றத்தைத் தடைசெய்யச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று கோரியபோது, மதச்சார்பற்றவர்கள் என்று கூறிக்கொள்பவர்கள், இது மதச் சுதந்திரத்தின் குரல்வளையை நெரிக்கும் செயலாகும் என்பதுபோல் கருத்துத் தெரிவித்தனர். இந்து மதத்திலிருந்து வேறு மதத்திற்கு மதமாற்றம் செய்வது சரியென்றால், வேறு மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மதமாற்றம் செய்வது மட்டும் எப்படித் தவறாக இருக்க முடியும்?

மத்தியப் பிரதேச மாநிலமும், ஒடிஸா மாநிலமும் மதமாற்றத் தடைச்சட்டம் கொண்டுவந்தபோது 1967-இல் உச்ச நீதிமன்றம் அது சரியான நடவடிக்கை என்று கூறியிருக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்ட நியோகி குழு விசாரணை நடத்தி, அப்பாவிப் பழங்குடியினர் ஆசை காட்டியும், மோசடியாகவும், வலுக்கட்டாயமாகவும், தூண்டுதல் பேரிலும் மதமாற்றம் செய்யப்படுவதாக தனது அறிக்கையில் கூறியது. இதைத் தொடர்ந்து அங்கே மதமாற்றத் தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், கிறிஸ்துவ தேவாலயங்கள் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றன. அரசமைப்புச் சட்டம் 25 பிரிவு (1)-இன் கீழ் ஒருவர் ஒரு மதத்தின்மீது வைத்துள்ள நம்பிக்கையும், அந்த மதத்திற்காகப் பிரசாரம் செய்யும் உரிமையும் தடுக்கப்படுவதாக வாதிட்டன. ஆனால், உச்ச நீதிமன்றம் இந்த வாதத்தை ஏற்கவில்லை. மதப்பிரசாரம் என்பது தங்கள் மதத்தின் கொள்கைகளை எடுத்துக்கூறுவதுதான். வேறு ஒரு மதத்தவரைத் தங்களது மதத்துக்கு மதமாற்றம் செய்வதற்கான உரிமையாக இதை எடுத்துக்கொள்ள முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடிசெய்துவிட்டது.

மதப்பிரசாரம் என்பதும் மதமாற்றம் என்பதும் ஒன்றல்ல. மதப்பிரசாரம் சட்டப்படி அனுமதிக்கப்பட்ட ஒன்று; ஆனால் மதமாற்றம் செய்ய சட்டப்படி அனுமதியில்லை என்பது தெளிவாகிறது.

மதச்சார்பற்ற கட்சியோ அல்லது அதன் தலைவர் என்று கூறிக்கொள்பவர்களோ 1977-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் மதப்பிரசாரம், மதமாற்றம் பற்றி கூறிய விளக்கத்தை நாடாளுமன்றத்தில் சொல்லத் தயாராக இருக்கிறார்களா? அப்படிச்செய்தால் அவர்கள் இந்துக்கள் மதமாற்றம் செய்யப்பட்டதையும் கூறவேண்டியிருக்கும். ஆக்ரா மதமாற்ற சம்பவத்தைத்தான் அவர்கள் பெரிதுபடுத்திப் பேசுகிறார்களே தவிர, மதமாற்றம் பற்றி விவாதிக்க அவர்கள் தயாராக இல்லை.

ஏழை இந்துக்கள் ஆசைவார்த்தை காட்டி முஸ்லிமாகவும், கிறிஸ்தவர்களாகவும் மதமாற்றம் செய்யப்படுவதை சாதாரண நிகழ்வாக எடுத்துக்கொள்ளும் மதச்சார்பற்ற கட்சிகளும் காட்சி ஊடகங்களும் ஆக்ரா சம்பவத்தை மட்டும் சுட்டிக்காட்டி ஏதோ நடக்கக்கூடாத சம்பவம் நடந்துவிட்டதுபோல் ஓலமிடுகிறார்களே என்? மதமாற்றம் செய்வதை ஏதோ தங்களது ஏகபோக உரிமையாக ஒரு சில மதங்கள் மட்டுமே கடைபிடிக்கும் என்று சொன்னால் பெருவாரியான இந்துக்கள் ஏமாளிகளா?

ஆக்ரா மதமாற்ற சம்பவத்தைத் தொடர்ந்து குரல் எழுப்பும் மதச்சார்பற்றவர்கள், மதமாற்றத் தடைச் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவரத் தயார் என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு சொன்னபோது ஏன் வாயடைத்துப் போனார்கள்?

கட்டாய மதமாற்றத்தை தடை செய்ய மத்தியில் ஆளும் மோடிஅரசால் சட்டம் கொண்டுவர முடியும். அப்படிஒரு சட்டம் கொண்டுவந்தால் அதை மதச்சார்பற்றவர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் எதிர்ப்பார்களா, இல்லை ஆதரிப்பார்களா? எதிர்த்தால், ஆக்ரா மதமாற்ற சம்பவம் பற்றி அவர்கள் கூக்குரல் எழுப்பக் கூடாது. ஆதரித்தால், பிரச்னை முடிந்து விடுகிறது. அதற்குப் பிறகு மதமாற்றம் பற்றிய விவாதத்திற்கே இடமில்லை.


பல ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தியும், குரலெழுப்பியும் சாதிப்பதற்கு இயலாததை ஆக்ராவில் ஒருசில முஸ்லிம்களை இந்துக்களாக மாற்றியதன் மூலம் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் இப்போது சாதித்துவிட்டது. அதன்மூலம் கட்டாய மதமாற்றத் தடை சட்டம் தொடர்பான விவாதத்திற்கு வழிகோலி இருக்கிறது.

பின்குறிப்பு: மதமாற்றத் தடைச் சட்டம் என்பது 2008-ஆம் ஆண்டு டிசம்பர் 10-ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் ஆம்ஸ்டர்டாமில் நடைபெற்ற, உலக மதத் தலைவர்கள் கலந்துகொண்ட மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பிரகடனத்தை அடிப்படையாகக் கொண்டு இருக்க வேண்டும்.

இந்துகள், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என அனைத்து மதத்தவர்களும் பரஸ்பரம் ஒரு மதத்தை மற்றவர்கள் மதித்து நடக்க வேண்டும், பிற மதத்தைத் தூஷிக்கக்கூடாது, மதத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையைச் சீர்குலைக்கக்கூடாது என்று அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டு கையெழுத்திடப்பட்டு பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது.

ஒருவர் ஒரு குறிப்பிட்ட மதத்தில் தொடர்ந்து நீடிக்கவும், வேறு ஒரு மதத்துக்கு மாறுவது குறித்தும் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது. மதமாற்றத்துக்கு நிர்பந்தமோ அல்லது தூண்டுதலோ காரணமாக இருந்துவிடக்கூடாது என்பதுதான் இதன் பொருள். அதைத்தானே ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறது?

ஆக்கம்: எஸ் குருமூர்த்தி
தமிழாக்கம்: ஜெ. ராகவன்
(தொடரும்)

சுட்டி: தினமணி பதிவு

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :