Wednesday, December 24, 2014

Keerthivasan

குருவின் அவசியம் - 4 - ஸ்ரீ ராமானுஜர் வரலாறு

கடந்த பதிவில் ஆதி சங்கரரின் பூர்விகம் பற்றியும் ஸ்ரீ மாத்வாசாரியாரின் வரலாற்றையும் பார்த்தோம். இந்த பதிவில் விசிஷ்டாத்வைதத்தை அறிமுகப்படுத்திய ஸ்ரீ ராமானுஜரின் வரலாற்றை பார்ப்போம்.

அத்வைத தத்துவத்தை அறிமுகப்படுத்திய ஆதி சங்கரர் வாழ்ந்த காலத்திற்கும் துவைத தத்துவத்தை அறிமுகப்படுத்திய மாத்வாச்சாரியார் வாழ்ந்த காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர் தான் ஸ்ரீ ராமானுஜர். இவர் கி.பி. 1017 ஆண்டு காஞ்சிபுரம் அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் அசூரி கேசவ சோமயாஜி தீட்சிதர் மற்றும் காந்திமதி தம்பதிகளுக்கு பிறந்தார். சிறு வயது முதலாகவே வேதங்களிலும் உபநிடதங்களிலும் இருக்கும் மிகவும் நுணுக்கமான தத்துவங்களை மிக எளிதாக புரிந்து கொண்டார். தனது 16-வது வயதில் ரக்ஷகாம்பாள் என்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவர் திருமணத்திற்கு பிறகு நான்கு மாதங்களில் அவர் தந்தை இறந்து விட்டார். அதன் பிறகு ஸ்ரீபெரும்புதூரில் இருந்து காஞ்சிபுரத்திற்கு குடியேறினார்.

காஞ்சிபுரத்தில் அத்வைத தத்துவத்தில் கரை கண்ட யாதவ பிரகாசர் என்கிற பண்டிதரிடம் சிஷ்யராக சேர்ந்தார். கல்வி, கேள்வி ஞானங்களில் தேர்ச்சிபெற்றவரான யாதவ பிரகாசர் அளித்த சில அத்வைத விளக்கங்களில் ராமானுஜருக்கு உடன்பாடு ஏற்படவில்லை. பெருமாளின் ஞானத்தை இயல்பிலேயே பெற்றிருந்த ராமானுஜருக்கு தன்னுடைய குருவின் பொருந்தாத விளக்கங்கள் கேட்டுக் கண்ணீர் பெருகியது. வாதத்தில் குருவை மிஞ்சிய சீடனாக இருக்கும் ராமானுஜரால் தனக்கு சிறுமையே ஏற்படும் என்று எண்ணிய யாதவ பிரகாசர், அவரை கங்கையில் தள்ளி ஜலசமாதி செய்துவிடும் எண்ணத்தோடு, காசிக்கு சீடர்களுடன் பயணமானார். காசியை நெருங்கிவிட்ட நேரத்தில் ராமானுஜரின் தம்பி கோவிந்தன், குருவின் திட்டத்தைக் கூறி ராமானுஜரைக் காப்பாற்றினார். காசியிலிருந்து காஞ்சிக்கு ஒரே இரவில் பெருமாளின் கருணையால் வந்து சேர்ந்தார் ராமானுஜர். ராமானுஜர் இறந்து விட்டதாக நினைத்து யாதவ பிரகாசரும் அவரது சீடர்களும் மகிழ்ந்தனர். சில காலம் கழித்து அவர்கள் காஞ்சிபுரம் வந்ததும் ஸ்ரீ ராமானுஜர் உயிருடன் இருப்பதை கண்டு திகைத்தனர். இறையருள் இருக்கும் ராமானுஜரை இனி கொல்ல முயற்சிக்க கூடாது என்று முடிவு செய்தனர்.

இந்த நிலையில் ராமானுஜர் துறவறம் மேற்கொண்டு தன் மனைவியை விட்டு பிரிந்தார். ராமானுஜரின் இள வயது நண்பர் காஞ்சிபூர்ணர் என்பவர் ராமாநுஜரிடம் தனது குருவான யமுனாசாரியாரை பார்ப்பதற்கு ஸ்ரீரங்கம் செல்லுமாறு கேட்டுக்கொண்டார். அதன்படியே ஸ்ரீரங்கம் சென்ற ராமானுஜர் யமுனாசாரியாரின் இருப்பிடம் வந்து சேர்வதற்குள் யமுனாசாரியாரின் உயிர் பிரிந்து விட்டது. ஆனால் அவர் உடலில் வலது கையில் மூன்று விரல்கள் மட்டும் மூடியிருந்தது. இதன் அர்த்தத்தை புரிந்து கொண்ட ராமானுஜர் யமுனாசாரியாரை தனது மானசீக குருவாக ஏற்று கொண்டு அவரது மூன்று லட்சியங்களை நிறைவேற்றுவதாக சபதம் செய்தார். அவை

1) வேதாந்த சூத்திரத்திற்கு விசிஷ்டாத்வைத தத்துவ முறையில் விளக்கம் எழுதுவது

2) பராசர முனிவரின் விஷ்ணு புராணத்தை உலகிற்கு எடுத்து சொல்வது.

3) விசிஷ்டாத்வைதத்தை உலகிற்கு எடுத்து சொல்லி அறியாமையில் மூழ்கி கிடக்கும் பக்தர்களுக்கு ஸ்ரீ மன் நாராயணனின் அருள் கிடைக்குமாறு செய்வது.

இந்த மூன்றையும் செய்வதாக ராமானுஜர் அறிவித்ததும் அதுவரையில் மூடி இருந்த யமுனாசாரியாரின் மூன்று விரல்களும் ஒன்றன் பின் ஒன்றாக திறந்தது. அதன் பிறகு பல தேசங்களில் சுற்று பயணம் செய்த ராமானுஜர் தனது விசிஷ்டாத்வைத தத்துவங்களை பற்றி அங்கு வாழும் பண்டிதர்களிடம் விவாதம் செய்து வெற்றி பெற்றார். அவரது தத்துவங்களை பல பண்டிதர்கள் ஏற்று கொண்டு அவரிடம் சிஷ்யர்களாக சேர்ந்து அவரது கொள்கைகளை பரப்பினார்கள். பெரிய நம்பிகள் என அழைக்கப்படும் மகாபூரணர், திருக்கோட்டியூர் நம்பி, திருமலை நம்பி, திருவரங்கப் பெருமாள் அரையர், திருமலையாண்டான் எனப்படும் மாலாதரர் என்னும் ஐவரும் ராமானுஜரின் குரு பீடத்தை அலங்கரித்தவர்கள்.

சாதி ஏற்றத்தாழ்வை ராமானுஜர் கடுமையாக எதிர்த்தார். சாதி ஏற்றத்தாழ்வை தம்முடைய மனைவி கொண்டிருந்தார் என்பதே அவரின் துறவறத்துக்கு ஒரு காரணம். 120 வயது வரை வாழ்ந்த ஸ்ரீ ராமானுஜர் கிபி 1137 ஆண்டு இறைவனடி எய்தினார். ஸ்ரீ ராமானுஜர் வரலாறு பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஒவ்வொன்றிலும் நிகழ்வுகள், சம்பவங்கள் சிலவற்றில் மாறுபாடு இருக்கிறது.

ஸ்ரீ ராமானுஜர் வேதாந்த சங்கிரகம், ஸ்ரீ பாஷ்யம், கீதா பாஷ்யம் (பகவத் கீதையின் விளக்கம்), வேதாந்த தீபம், வேதாந்த சாரம், ஸ்ரீ ரங்க காத்யம், ஸ்ரீ வைகுண்ட காத்யம், நித்ய கிரந்தம் போன்ற நூல்களை எழுதினார்.

அடுத்த பதிவில் துவைத - அத்வைத - விசிஷ்டாத்வைத தத்துவங்களும் அதற்கிடையே உள்ள வேறுபாடுகளும் பற்றி பதிவு செய்கிறேன்


ஆக்கம்: விவேக ஜோதி

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :