Thursday, December 25, 2014

Keerthivasan

குருவின் அவசியம் - 5 - அத்வைதம்

அத்வைதம் இந்த உலகத்தில் பிரம்மத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று சொல்கிறது. ஜீவாத்மாவும், பரமாத்மாவும் வேறு வேறல்ல என்று சொல்கிறது. உலகத்தின் பல்வேறு தோற்றங்களை மாயை என்று அத்வைதம் சொல்கிறது. அத்வைதத்தின் படி நான், நீ, இன்னொருவன், ஜீவாத்மா போன்ற பேதங்கள் மாயையினால் ஏற்படுகின்றன. உண்மையில் எல்லாமே பிரம்மம் தான். நாம் காண்கின்ற எல்லா வேறுபாடுகளும் அறியாமை ஏற்படுத்தும் தோற்றப் பிழைகள் மட்டுமே.

இதற்கு சில உதாரணங்களை பார்ப்போம்.

திரைப்படம் பார்க்கையில் திரையில் பலவிதமான காட்சிகள் பார்க்கிறோம். வீடு, நகரம், மனிதர்கள், விலங்குகள் இயற்கைக் காட்சிகள் என வித விதமாய் காட்சிகள் தெளிவாக நம் கண் முன்னால் தெரிகிறது. ஆனால் அந்தக் காட்சிகள் உண்மையா? திரையில் தெரியும் நீரில் போய் நனைய முடியுமா? திரையில் தெரியும் வீட்டில் சென்று அமர முடியுமா? முடியாது அல்லவா?

எத்தனை தெளிவாகக் காட்சிகள் தெரிந்தாலும் அந்தக் காட்சிகளில் எத்தனை விதமான செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் உண்மையாக அங்கே இருப்பது ஒரு வெள்ளைத் திரை மட்டுமே. அந்த வெள்ளைத் திரை தான் பிரம்மம். பல விதமான காட்சிகள் தெரிவதும், செயல்கள் நடைபெறுவதாகத் தெரிவதும் வெறும் தோற்றமே. அப்படித் தோற்றத்தை ஏற்படுத்துவது மாயை. எப்போதும் நிலைத்து இருப்பது பிரம்மம் மாத்திரமே என்கிறது அத்வைதம்.

இன்னொரு உதாரணம் பார்ப்போம். இருட்டில் கயிற்றைப் பார்த்து பாம்பு என்று எண்ணிக் கொள்வதாக வைத்துக் கொள்வோம். அதனால் பயம் நம்மை ஆட்கொள்கிறது. பயத்தினால் இதயம் படபடக்கிறது. வியர்க்கிறது. இன்னும் என்னென்னவோ உணர்வுகள் ஏற்படுகின்றன. பிறகு விளக்கைப் போட்டதும் தான் பார்த்தது பாம்பு அல்ல வெறும் கயிறு தான் என்று தெரிகிறது. உடனே தெளிவு பிறக்கிறது. பயம் மறைந்து விடுகிறது. பயத்தின் மூலமாய் ஏற்பட்ட உணர்வுகளும் மறைந்து விடுகின்றன.

அது போல நாமும் அறியாமை இருட்டில் இருந்து கொண்டு நம் ஆத்மாவின் நிலையான தன்மையை மறந்து விட்டு நிலையற்ற கதாபாத்திரமாக நம்மைக் கண்டு படாதபாடு படுகிறோம். அந்தப் பாத்திரத்திற்கு பாதிப்பு என்றால் ஆத்மாவுக்கே பாதிப்பு ஏற்பட்டு விட்டதாக நினைக்கிறோம். அந்த நினைவாலேயே கஷ்டப்படுகிறோம். ஞானம் என்கிற வெளிச்சம் வரும் வரை நம் கஷ்டங்கள் தொடர்கின்றன. ஞான ஒளி வந்து விட்டாலோ உண்மை தெளிவாகிறது. மாயையை உண்மை என்று நம்பி ஏற்படும் அறியாமையினால் விளையும் துன்பங்கள் தாமாக நீங்கி விடுகின்றன.

ஒரு காலிப் பானையை குளத்தில் மூழ்க வைத்தால் பானையின் உள்ளே இருக்கும் தண்ணீர் பானைத் தண்ணீர், வெளியே இருக்கும் தண்ணீர் குளத்துத் தண்ணீர் என்று சொல்லலாம் என்றாலும் உண்மையில் இரண்டும் ஒன்றே அல்லவா? பானை உடைந்தால் முன்பு கண்ட வேறுபாடும் இல்லாமல் போகிறது அல்லவா? பானைத் தண்ணீர் ஜீவாத்மா. குளத்துத் தண்ணீர் பரமாத்மாவாகிய பிரம்மம். உடல் என்ற கதாபாத்திரம் உடையும் போது மிஞ்சுவது நிலைத்திருக்கும் ஒன்றேயான பிரம்மம் தான்.

இந்த அத்வைத சாரத்தை உபநிடதங்களிலும், பகவத் கீதையிலும் காண முடிகிறது. விவேகானந்தர் அத்வைத சாரத்தை ஞான யோகத்தில் மிகவும் ஆழமாகச் சென்று சிறப்பாக விளக்கி இருக்கிறார்.அஹம் ப்ரம்மாஸ்மி (நான் பிரம்மம்), தத்வமஸி (நீயே அது) என்ற மகாவாக்கியங்கள் அத்வைத ஞானத்தைப் பிரதிபலிப்பவை.



அத்வைத தத்துவத்திற்கு மற்றொரு விளக்கம்

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தது பார்முதல் பூதமே.

மரத்தால் செய்யப்பட்ட பெரிய மதயானை உருவம் சிற்பியின் கைவண்ணத்தால் மரத்தை உணர ஒட்டாமல் மறைத்து, மக்களை மயக்குகின்றது. ஆயினும் சிற்பியினது வேலைப் பாடுகளை அழித்து விட்டால், அந்த மத யானையாய் இருந்த பொருள் அழியாதிருப்பினும் மரத்தினுள்ளே மறைந்துவிடும். அது போல, பரம்பொருளால் இயங்குகின்ற உலகம், ஆன்மா உடலில் இருக்கும் காலத்தில் தானே சுதந்திரமாய் இயங்குவனவாய் அதற்குக் காட்சியளிக்கும். அதே போன்று குருவருளால் ஞானத்தைப் பெற்ற முத்தி காலத்தில் உண்மை ஞானம் பொது ஞானத்தை அழித்து எல்லாம் பிரம்மமே என்கிற உண்மை நிலையை உணர்த்தி விடும். இது தான் அத்வைத தத்துவத்தின் சாராம்சம்.

அடுத்த பதிவில் துவைத தத்துவத்தின் விளக்கத்தை பார்க்கலாம்.

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :