Wednesday, December 17, 2014

Keerthivasan

எங்கே பிராமணன் ? – 3 - கதாசிரியர் வில்லனை உயர்த்தி சொல்வாரா?

 எங்கே பிராமணன் ? – 3

கதாசிரியர் வில்லனை உயர்த்தி சொல்வாரா?
(‘சோ’வின் பதில் தொடர்கிறது)




சொல்லப் போனால் ராமாயணத்தில், ஜாபாலி என்று ஒருவர் மிகவும் கண்டிக்கப்படுகிறார். நாஸ்திக வாதம் பேசுவதால் அவரைப் பற்றி, வால்மீகி ராமாயணம் சாடுகிறது. ஒரு வாதத்திற்காக மட்டுமே, நாஸ்திகவாதம் புரிந்த ஜாபாலி என்கிற அந்தணர் இகழப்படுவதை நாம் பார்க்கிறோம்.

மஹாபாரதத்தில் அஸ்வத்தாமா மிகவும் கண்டிக்கப்படுகிறான். அவன் ஒரு பிராமணன். இப்படி இன்னும் பல உதாரணங்களைக் காட்ட முடியும்.

இன்னொரு விஷயத்தைப் பாருங்கள். கற்பனையாக ஒரு கதை எழுதுகிறபோது, ஒரு கதாசிரியர் என்ன செய்வார்? வில்லனை மிகவும் கெட்டவனாகவும், அயோக்கியனாகவும் காட்டுவார். ஹீரோவை ஒரு குற்றமும் இல்லாதவனாகவும், ஒரு களங்கமும் இல்லாதவனாகவும் காட்டுவார். கதை என்றால் அப்படித்தான் வரும். அப்போதுதான் அது சுவாரஸ்யமாகப் போகும். கதையோட்டம் தெளிவாக இருக்கும். ஆனால், ராமாயணத்திலோ, மஹாபாரதத்திலோ அப்படி இல்லை.

ராமரிடம் இருக்கும் குறைகள் வெளிப்படையாகக் கூறப்படுகின்றன. கிருஷ்ணரிடம் இருக்கும் குறைகள் பட்டவர்த்தனமாகச் சொல்லப்படுகின்றன.
யாராவது கதாசிரியர் வில்லனை உயர்த்திச் சொல்வாரா? ராமாயணத்தில் ராவணனைப் பற்றி மிக உயர்வாக வருகிறது.

இப்படி ஒரு மனிதனா? என்ன தேஜஸ்? சூரியனே இறங்கி வந்தது போல் இருக்கிறது. எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும்?’ என்றெல்லாம் ஹனுமாரே பிரமிக்கிறார்.

இப்படிப்பட்ட பொலிவான தோற்றமா இவனுக்கு’ என்று ராமரே திகைக்கிறார். அந்த அளவுக்கு ராவணன் உயர்த்தப்படுகிறான். கதையாக இருந்தால் யாராவது வில்லனை இப்படி உயர்த்துவார்களா?

ராவணனுடைய சிவ பக்தி அப்படி புகழப்படுகிறது. ராவணனைப் பற்றி காளிதாஸன் கூடச் சொல்கிறான்:
மற்றவர்கள் எல்லாம் பூஜைக்கு என்று ஒரு நேரம் ஒதுக்குவார்கள். அதற்காக ஒரு இடம் இருக்கும். அந்த இடத்தில் பூஜையை செய்வார்கள். ஆனால், ராவணன் அப்படியல்ல. கையிலேயே சிவலிங்கத்தை ஒரு சிறிய தங்கப் பெட்டியில் எடுத்துச் செல்வான். எங்கு நல்ல நறுமணம் உள்ள மலர்களும், தூய்மையான நீரும் கிடைக்கப் பெறுகின்றனவோ, அங்கேயே உட்கார்ந்து விடுவான்! சிவ பூஜையை நடத்துவான்! அப்பேர்ப்பட்ட சிவ பக்தன் அவன்.

அதேபோல், ‘அவனுக்குத் தெரியாத சாஸ்திரம் கிடையாது’ என்று ராமாயணம் கூறுகிறது. வேதத்தை நன்றாகக் கரைத்துக் குடித்தவன். இப்படிப்பட்ட குணாதிசயங்களைக் கொண்டவன் என்று ராவணன் போற்றப்படுகிறான். எந்த ஒரு கதையில் வில்லனைப் பற்றி இப்படியெல்லாம் சொல்வார்கள்?

மஹாபாரதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். கிருஷ்ணரைப் பற்றி, சிசுபாலன் பேசுகிற பேச்சு அவ்வளவு கடுமையாக இருக்கும். யுதிஷ்டிரர் யாகம் நடத்துகிறார். அதற்கு பல மன்னர்கள் வருகிறார்கள். எல்லோரும் பங்கு பெறுகிறபோது, ‘யாருக்கு முதல் மரியாதை செய்வது’ என்ற கேள்வி எழுந்தவுடன், கிருஷ்ணருக்கு முதல் மரியாதை செய்யும்படி பீஷ்மர் கூறுகிறார். அப்படியே நடக்கிறது.

சிசுபாலன் எழுந்து இதைச் சாடுகிறான். ‘என்ன தகுதி இருக்கிறது என்று கிருஷ்ணனுக்கு இந்த மரியாதை செய்யப்பட்டது? ஆசிரியர்களில் சிறந்தவருக்கு மரியாதை என்றால், துரோணருக்குச் செய்திருக்கலாம்; வீரர்களில் சிறந்தவனுக்கு மரியாதை என்றால், கர்ணனுக்குச் செய்திருக்கலாம்; மன்னர்களில் சிறந்தவனுக்கு மரியாதை என்றால் துரியோதனனுக்குச் செய்திருக்கலாம்; உங்களுக்கு மனம் இல்லை என்றால், வேறு மன்னனுக்கும் செய்திருக்கலாம்; வயதில் மூத்தவருக்கு மரியாதை என்றால், இப்பொழுது யோசனை சொன்ன அந்த பீஷ்மருக்கே செய்திருக்கலாம். எதற்காக, என்ன தகுதிக்காக, இந்த கிருஷ்ணனுக்கு மரியாதை? மன்னர்கள் எல்லோரும் கூடிய சபையில் எல்லோரையும் இகழ வேண்டும் என்பதற்காக, அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக, இந்த இடையர் குலத் தலைவனுக்கு நீங்கள் மரியாதை செய்திருக்கிறீர்கள்’ என்றெல்லாம் சொல்கிற சிசுபாலன் மேலும் சொல்கிறான்:“யோசனை சொன்னவனின் பிறப்பு ஒழுங்கானதல்ல. நதிக்குப் பிறந்தவன் அவன் (பீஷ்மர்). யோசனை கேட்டவனோ (தருமபுத்திரர்) தன் தந்தைக்குப் பிறந்தவன் அல்ல. வேறு ஒரு தேவனுக்குப் பிறந்தவன். இப்படிப்பட்ட ஒருவன் யோசனை கேட்க, அப்படிப்பட்ட ஒருவன் யோசனை சொல்ல, சொல்லப்படுகிற யோசனை எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும்” என்று சாடுகிறான்.பின்னர் கிருஷ்ணரைப் பார்த்து, ‘இவர்கள்தான் உனக்கு மரியாதை செய்வது என்று முடிவு செய்தார்கள்; இருக்கட்டும். ஆனால், அந்த மரியாதையைப் பெற்றுக் கொள்ளலாம் என்று நீ எப்படி நினைத்தாய்? நமக்கு என்ன தகுதி இருக்கிறது என்று நீ நினைத்துப் பார்த்திருக்க வேண்டாமா? தரையில் விழுந்து விட்ட தேனை நாய் நக்குவது போல், இந்த முதல் மரியாதையை நீ நக்கி விட்டாயே? உனக்கு வெட்கமாக இல்லையா?’ என்று சிசுபாலன் மிகக் கேவலமாகப் பேசுகிறான்.

பேச்சுவார்த்தை இப்படிப் போகிறபோது, கிருஷ்ணர், சிசுபாலனைப் பார்த்து, “உன்னை முன்பே நான் கொன்றிருக்க வேண்டும். நான் மணந்து கொண்ட ருக்மிணியை நீ கைப்பற்றிச் செல்ல நினைத்தாய். அப்போதே உன் கதையை நான் முடித்திருக்க வேண்டும்” என்று கூறுகிறார்.


 – CHO
– தொகுப்பு : அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன்

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :