Wednesday, December 17, 2014

Keerthivasan

ஆதி சங்கரர் வரலாறு - 1

ஆதி சங்கரர் வரலாறு - 1

 

 

ஆதி சங்கரர் பூவுலகில் அவதரித்த கால கட்டங்களில் சார்வாகர்கள், லோகாயதிகர்கள், காபாலிகர்கள், சக்தி வழிபாடு செய்யும் சாக்தர்கள், சாங்கியர்கள், பௌத்தர்கள், மாத்யமிகர்கள் என்று ஏறத்தாழ எழுபத்திரண்டு வெவ்வேறு மதவாதிகள் தம் கருத்து வேறுபாடுகளின் அடிப்படையில் தம்முள் சண்டையிட்டுக்கொண்டு பெரும் குழப்பத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தார்கள். தொன்றுதொட்டு ரிஷி, முனிவர்களும், யோகிகளும் வளர்த்த புண்ணிய பூமியாகிய நம் பாரத அன்னை பொலிவிழந்து இருந்த நேரத்தில் சங்கரர் தன் குறுகிய வாழ்நாளில் வைதிக தர்மத்திற்கு புதுப் பொலிவூட்டி உயிர்ப்பித்தார். முந்தைய அவதாரங்களான ராமரும், கிருஷ்ணரும் க்ஷத்திரிய குலத்தில் பிறந்து வாளும், வில்லும் எடுத்துப் போரிட்டு தர்ம ஸ்தாபனம் செய்தனரெனில், கலியுகத்தில் நிலவிய சூழ்நிலைக்கேற்ப அந்தணர் குலத்தில் பிறந்த சங்கரர் தன் அறிவாலும், உள்ளத் தூய்மையாலும் மாசு படிந்த மக்களின் மனதை தூய்மைப்படுத்தினார். அவர் வரலாற்றை இப்போது பார்ப்போம்.

கேரளா மாநிலம் ஆலவாய் என்னும் கிராமத்தில் இருந்து சுமார் ஆறு மைல் தூரத்தில் காலடி என்கிற சிறிய கிராமம். அங்கே வாழ்ந்து வந்த வித்யாதி ராஜா என்பவருக்கு சிவகுரு என்று ஒரு மகன் இருந்தார். அவர் மனைவி ஆர்யாம்பாள். அவர்களுக்கு திருமணம் ஆகியும் வெகு ஆண்டுகளாக குழந்தைப்பேறு யில்லை என்கிற கவலை. ஆகவே அதற்காக அருகே உள்ள திருச்சூர் வடக்கு நாதர் கோவிலில் 48 நாட்கள் விரதம் இருந்து தினசரி வழிபாடு செய்தனர்.

ஒரு நாள் சிவன் அவர்கள் கனவில் தோன்றி நீண்ட ஆயுளுடைய நிறைய பிள்ளைகள் வேண்டுமா? அல்லது சகல ஞானமும் கொண்ட குறுகிய ஆயுளை உடைய ஒரே பிள்ளை வேண்டுமா என்று கேட்க, தம்பதிகள் குறுகிய ஆயுள் இருந்தாலும் ஞானம் உள்ள குழந்தையையே வேண்டினர். கிபி 788, நந்தன ஆண்டு, வைகாசி மாதம், சுக்கில பட்சம், பஞ்சமி திதி தினத்தன்று திருவாதிரை நட்சத்திரத்தில் ஆர்யாம்பாள் ஒரு ஆண் பிள்ளையை பெற்றெடுத்தாள். ஈசனின் அருளால் பிறந்த குழந்தைக்கு ஈசனின் பெயரான சங்கரன் என்று பெயர் சூட்டினர்.

சங்கரருக்கு நான்கு வயதான போது சிவகுரு மண்ணுலகை விட்டு நீங்கினார். தாயாரால் வளர்க்கப்பட்ட சங்கரருக்கு அவருடைய ஏழாம் வயதில் உபநயனம் செய்வித்து அவரை அக்கால வழக்கப்படி குருகுலத்திற்கு அனுப்பி ஹிந்து மதத்தின் புனித நூல்களை பயிலச் செய்தார். அவர் அவ்வாறு ஒரு நாள் ஒரு ஏழை பெண்மணியின் வீட்டிற்குச் சென்று பிஃக்ஷ கேட்க நேரிட்டது. அன்று துவாதசி. தன்னிடம் ஒன்றும் இல்லாத காரணத்தினால் அந்த எளிய பெண்மணி தான் உண்ண எடுத்து வைத்திருந்த ஒரே ஒரு நெல்லிக்கனியை மனப்பூர்வமாக சங்கரருக்கு கொடுத்தார். அப்போது சங்கரர் உள்ளம் குளிர்ந்து செல்வத்தின் கடவுளான ஸ்ரீ லக்ஷ்மி தேவியை வேண்டி கனகதாரா ஸ்தோத்திரம் என்கிற ஸ்லோகத்தை பாட, அப்போது ஸ்ரீ லக்ஷ்மி தேவி அருளால் அந்த எளியவளின் கூரை வீட்டின் மீது தங்க நெல்லிக்கனிகள் மழையாக பொழிந்தது.

சங்கரர் தான் உலகிற்கு வந்த செயலை நிறைவேற்ற வேண்டிய வேளை நெருங்கியது. அவருடைய தாயார் உலக வழக்கிற்கேற்ப தன் மகனுக்கு உரிய வயதில் திருமணம் செய்விக்க எண்ணினார். ஆனால் தான் அவதரித்த நோக்கம் வேறு என்று சங்கரருக்கு தெரிந்திருந்ததால் அவர் ஒரு யுக்தியைக் கையாள நேர்ந்தது.. ஒரு முறை பூர்ணா நதியில் தன் தாயுடன் சென்று குளிக்கச் சென்றார். அப்பொழுது ஒரு முதலை அவர் கால்களைக் கவ்வி நீரினுள் இழுக்கத் துவங்கியது. அப்பொழுது சங்கரர் தன் தாயிடம் தான் ஆபத் சந்நியாசம் பெற வேண்டி அனுமதி கேட்டுப் பெற்றார். வேறு வழியின்றி அவ்வம்மையாரும் அனுமதி அளித்த பின்னர் குளிக்க ஆற்றில் இறங்கிய சங்கரர் சன்னியாசியாகி வீடு திரும்பினார். அவர் தம் தாயாருக்கு ஒரு சத்தியம் செய்தார். அவர் தாயார் உலகைத் துறக்கும் காலம் வந்த பொழுது தாம் எங்கிருந்தாலும் தன் தாயிடம் வந்து தம் தாயின் இறுதிச் சடங்குகளைச் செய்து மகனாகத் தன் கடமையை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார். தனக்குரிய உடமைகளை தன் உறவினர் வசம் ஒப்புவித்துவிட்டு, தன் தாயாரைப் பார்த்துக் கொள்ளுமாறு சொல்லி, தன் வாழ்வின் குறிக்கோளை நோக்கி பயணிக்கத் துவங்கினார்.

ஆதி சங்கரரின் வரலாறு தொடரும்


விவேக ஜோதி

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :