Thursday, December 18, 2014

Keerthivasan

எங்கே பிராமணன் ? – 4 – பொய் என்று ஒதுக்கினால், நஷ்டம் நமக்குத்தான்

எங்கே பிராமணன் ? – 4 – பொய் என்று ஒதுக்கினால், நஷ்டம் நமக்குத்தான்


(‘சோ’வின் பதில் தொடர்கிறது)
ப்போது சிசுபாலன் பதில் சொல்கிறான்: ‘உன் கேவலத்தைக் காட்டுவதற்கு இதைத் தவிர, வேறு எதுவுமே தேவையில்லை. தன்னுடைய மனைவி மீது வேறு ஒருவன் கண் வைத்திருந்தான் என்று இப்படி ஒரு சபையில் சொல்கிறாயே, இது ஒன்று போதாதா, உன்னுடைய கேவலத்தைக் காட்ட? உனக்குப் போய் இங்கு முதல் மரியாதை நடந்திருக்கிறது!’




இப்படியெல்லாம் சிசுபாலன் பேச, இதன் பிறகு பீஷ்மர், கிருஷ்ணரின் பல அவதாரங்களைப் பற்றிக் கூறி பதில் உரைக்கிறார். ஒவ்வொரு அவதாரத்திலும் அவர் சாதித்த செயல்களைச் சொல்லி, ‘அப்பேற்பட்ட புருஷோத்தமனுக்குத்தான் இங்கு மரியாதை நடக்கிறது’ என்பதை அவர் எடுத்துரைக்கிறார். ஆனால், ஒரு கற்பனையாக இருந்திருந்தால், கிருஷ்ணரைப் பற்றி சிசுபாலன் சொல்பவையெல்லாம் இடம் பெற்றிருக்காது. அவனுடைய வாதங்கள் பலவீனமாகக் காட்டப்பட்டிருக்கும். மஹாபாரதத்திலோ அப்படி இல்லை. அவனும் வலுவான வாதங்களையே முன் வைக்கிறான்.

இதே போல யுத்தத்தின் முடிவில் துரியோதனன், கிருஷ்ணரைப் பார்த்து, “நீங்கள் எல்லாம் வென்றது ஒரு வெற்றியா? மோசடியின் மூலமாகத்தானே நீங்கள் ஜெயித்தீர்கள்? யாராவது ஒரு வீரனை நேர்மையாக யுத்தத்தில் கொன்றீர்களா? துரோணர், பீஷ்மர், கர்ணன், நான் எல்லோரையும் மோசடியின் மூலமாகத்தானே வீழ்த்தினீர்கள்? கதை யுத்தத்தில், இடுப்பிற்குக் கீழ் அடிப்பது விதிகளுக்கு முரணானது என்று, நன்றாகத் தெரிந்தும் – என்னை இடுப்பின் கீழ், தொடையில்தானே அடித்தான் அந்த பீமன்? அதற்கு சைகை காட்டியது நீதானே? இதை நான் கவனிக்கவில்லை என்று நினைத்தாயா? நான் வீர மரணமடைந்து சொர்க்கத்திற்குச் செல்வேன். நீங்கள் எல்லாம் நரகத்தில் உழல்வீர்கள்’ என்று ஏசுகிறான்.

இதோடு விட்டிருந்தால் கூட பரவாயில்லை. அந்தக் கட்டத்தில் வியாஸர் கூறுகிறார்: ‘துரியோதனன் மீது தேவர்கள் பூமாரி பொழிந்தனர்; தெய்வ வாத்தியங்கள் முழங்கின; எங்கும் நறுமணம் வீசியது; கிருஷ்ண பரமாத்மா வெட்கி தலை குனிந்து நின்றார்.’

அதைத் தவிர கிருஷ்ணரும் பிறகு சொல்கிறார். ‘நேர்மையாக மட்டுமே யுத்தம் நடத்தியிருந்தால், துரியோதனன் தரப்பு வென்றிருக்கும்’ என்று அவரே கூறுகிறார்.

இதை நன்றாக நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். கிருஷ்ணர், பகவானின் அவதாரம். அவரைப் பற்றி ஒரு மானிடனாகிய துரியோதனன் ஏசுகிறான். தேவர்கள் அதற்காக அவன் மீது பூமாரி பொழிகிறார்கள். இவையெல்லாம் ஒரு கற்பனைக் கதையில் வருமா? ஆனால், சரித்திரம் என்று வந்தால், நடந்ததை நடந்தபடி சொல்ல வேண்டும். அதில் ஒருவனிடம் நல்ல குணம் இருக்கும்; சில கெட்ட குணங்களும் இருக்கும்; ஒருவன் நிறைய நல்லதையே செய்வான்; ஆனால், ஓரிரு தவறுகளையும் செய்வான். சரித்திரம் எல்லாவற்றையும் பதிவு செய்யும். ஆகையால்தான், மஹாபாரதத்திலும், ராமாயணத்திலும் இப்படிப்பட்ட பகுதிகள் வருகின்றன. இந்த நூலில் யார் மிகவும் போற்றப்படுகிறார்களோ, அவர்களிடம் உள்ள குறைகளும் தெளிவாகவே சொல்லப்பட்டு விடுகின்றன. அவர்களுடைய சறுக்கல்களும் எடுத்துக் காட்டப்படுகின்றன. காரணம், அவை நடந்ததை நடந்தபடி கூறுகிற சரித்திர நூல்கள்.சேது பாலத்தை எடுத்துக் கொள்ளுங்கள். உலகில் அந்த மாதிரி வேறு ஒரு அமைப்பு இருப்பதாக இதுவரை யாரும் சொல்லவில்லை.

ராமாயணத்தில், யுத்தமெல்லாம் முடிந்து, புஷ்பக விமானத்தில் எல்லோரும் திரும்பி வரும்போது, ராமர், அந்த விமானத்தில் இருந்தவாறே, ஸீதைக்கு அந்த சேது பாலத்தைக் காட்டுகிறார். “இதுதான் நான் கட்டிய சேது. நான் வானரங்களின் உதவியோடு கட்டிய சேது பாலம் இது. இதைக் கடந்துதான் நாங்கள் இலங்கைக்குச் சென்றோம்” என்பதையெல்லாம் சொல்லி, “இது மிகவும் புனிதமானது; எந்த பாவத்தை ஒருவன் செய்திருந்தாலும், இதை வந்து அவன் தரிசித்தான் என்றால், அவனுடைய பாவம் நீங்கி விடும்” என்று ராமர் கூறுகிறார்.

அமெரிக்காவினுடைய ‘நாஸா’ என்கிற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், சாட்டிலைட் வழியாக சேது பாலத்தை எடுத்த படத்தை, அந்த நிறுவனமே வெளியிட்டிருக்கிறது. அந்த படத்தில் இந்தியாவின் தென்கோடிக்கும், இலங்கைக்கும் இடையே இப்படி ஒரு பாலம் போவது தெரிகிறது. இது எப்படி ராமாயணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது? இன்று அங்கே இருக்கிற ஒரு அமைப்பு ராமாயணத்தில் வருவானேன்? ராமாயணம் சரித்திரம் – அதனால்தான் வந்திருக்கிறது.

அதேபோல் துவாரகையில் மஹாபாரதம் தொடர்பான பல விஷயங்கள் இன்றும் கிடைப்பதாகச் செய்திகள் கூறுகின்றன.இத்தனை விஷயங்கள் இருந்தாலும், இவையெல்லாம் கற்பனை என்று நீங்கள் சொல்வதாக இருந்தால், அது வெறும் பிடிவாதம்தானே தவிர, வேறு எதுவும் இல்லை.
இதிஹாசம்’ என்றாலே, ‘இவ்வாறு நடந்தது’ என்றுதான் அர்த்தம். நடந்த விஷயங்களை இதிஹாசங்களான மஹாபாரதமும், ராமாயணமும் எடுத்துரைக்கின்றன.

அவற்றில் சொல்லப்பட்டிருக்கிற ராஜ நீதிகளும், மனித தர்மங்களும் பிரமிக்கத்தக்கவையாக இருக்கின்றன. இவற்றையெல்லாம் பற்றி எவ்வளவு தூரம் அந்தக் காலத்தில் சிந்தித்திருக்கிறார்கள் என்று நினைத்தால், வியப்பாக இருக்கிறது. அப்படிப்பட்ட விஷயங்களை பொய் என்று கூறி, ஒதுக்கி விடுவதால், அந்த இதிஹாசங்களுக்கோ, அதை எழுதின வால்மீகி, வியாஸர் போன்றவர்களுக்கோ எந்த நஷ்டமும் கிடையாது. நஷ்டம் முழுவதும் நமக்குத்தான்.


 – CHO
– தொகுப்பு : அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன்

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :