Monday, December 29, 2014

Keerthivasan

குருவின் அவசியம் - 6 - துவைதம்

கடந்த பதிவில் அத்வைத தத்துவத்தை சில உதாரணங்களோடு விளக்கி இருந்தேன். இந்த பதிவில் துவைத தத்துவத்தின் விளக்கத்தை பார்க்கலாம்.

எல்லாமே பிரம்மம் என்னும் அத்வைத சாரம் பலருக்கும் அறிவுக்கு எட்டும் அளவுக்கு அனுபவத்தில் உணர சாத்தியப்படுவது கஷ்டம். ’பலவீனங்களும், குறைபாடுகளும், தேவைகளும், பிரச்சினைகளும் நிறைந்திருக்கிற நான் எங்கே? இவை எதுவுமே இல்லாமல் இருக்கும் மகாசக்திவாய்ந்த இறைவன் எங்கே? எப்படி இரண்டையும் ஒன்று என்று சொல்ல முடியும்?’ என்று சாதாரண மனிதன் குழம்புவது தவிர்க்க முடியாத யதார்த்தமாக இருக்கிறது.

எல்லாமே கற்பனை, மாயை என்று சொல்லித் தேற்றிக் கொள்ள அவனால் முடிவதில்லை. ’நான் இருக்கிறேன், இந்த உலகம் இருக்கிறது, உலகத்தில் எத்தனையோ உயிர்களும் பொருள்களும்
இருக்கின்றன, அந்தப் பொருள்களைத் தொட முடிகிறது, ஐம்புலன்களாலும் உணர முடிகிறது.பல வகைகளில் வித்தியாசப்படுகிற இதெல்லாமே ஒன்று என்றால் என்னால் ஒத்துக் கொள்ள முடிவதில்லையே. எல்லாவற்றிற்கும் மேலாக நானும், இறைவனும் எப்படி ஒன்றாக முடியும்? இறைவனுக்கு இருப்பதாக சொல்லப்படுகிற மகாசக்திகள் எதுவுமே என்னிடம் இல்லையே.” என்கிறான்.

மேலும் ’நானும் இறைவனும் ஒன்று என்றால் இறைவனை வணங்குவது என்னையே வணங்கிக் கொள்வது போல் இருக்கிறது. வணங்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?’ என்று அவனுக்குக் கேட்கத் தோன்றுகிறது.

சாதாரண மனிதனின் இந்தக் கேள்விகளுக்குப் பதிலாகவே த்வைதம், விசிஷ்டாத்வைதம் இரண்டும் தோன்றியது. முதலில் த்வைதம் பார்ப்போம். 'த்வி' என்ற சொல்லுக்குப் பொருள் ‘இரண்டு'
என்பதாகும். த்வைதம் என்றால்இரண்டாக விளங்குவது என்று பொருள் சொல்லலாம். இரண்டாக விளங்குவது என்றால் என்ன? ஜீவாத்மா, பரமாத்மா என்ற இரண்டைத்தான் அது குறிக்கிறது.
பரமாத்மா என்பது இறைவன். ஜீவாத்மா என்பது கடவுளால் படைக்கப்பட்ட உயிர். எப்பொழுதுமே, இந்த வேறுபாடு இருந்து கொண்டே தான் இருக்கும் என்பதே த்வைதம் சொல்லும் உண்மை. இந்தக் கோட்பாட்டை உபதேசித்தவர் தான் நான் ஏற்கனவே ஒரு பதிவில் சொன்ன மத்வாச்சாரியார்;

மத்வர் பரமாத்மா, ஜீவாத்மா, ஜடப் பொருள் என்ற மூன்றும் வெவ்வேறானவை என்று சொன்னார். இவர் ஐந்து வித வேற்றுமைகளைக் குறிப்பிடுகிறார்.

1.தனி ஜீவாத்மாக்களிலிருந்து பரமாத்மாவான கடவுள் வேறுபட்டவர்.
2. ஜடப்பொருளிலிருந்தும் பரமாத்மாவான கடவுள் வித்தியாசமானவர். ஜடப்பொருள் என்பது அறிவோ உயிரோ
இல்லாதது.
3. ஒரு ஜீவாத்மாவிலிருந்து இன்னொரு ஜீவாத்மாவிற்கு வேறுபாடு உள்ளது.
4. ஜீவாத்மாக்கள் ஜடப்பொருளான பிரகிருதியிலிருந்து வேறுபட்டு உள்ளவை.
5.ஜடப்பொருளான பிரகிருதியும் அது பகுக்கப்பட்டு பல பகுதிகளாகின்ற சமயத்தில் ஒரு பகுதிக்கும் இன்னொரு பகுதிக்கும் வேறுபாடு இருக்கிறது.

இப்படி இரண்டிரண்டாக எதையும் எதிர் எதிர் நிலையில் வைத்துச் சொல்லுவதால் இந்தத் தத்துவத்திற்கு த்வைதம் (இருமை) என்று பெயர் வந்ததாகவும் சொல்கிறார்கள்.

அறிவோனும், அறியப்படும் பொருளும் இன்றி எப்படிப்பட்ட அறிவும் சாத்தியமில்லை என்பது மத்வரின் வாதமாக இருந்தது. ஆகவே அவர் ஐம்புலன்களாலும் உணரப்படும் இந்த உலகம் உண்மை
என்றார். நம்மைச் சுற்றி உலகிலுள்ள பொருள் மாறுவதாகவோ, மாறாததாகவோ அறியப்படலாம். ஒருபொருள் மாறக்கூடியது என்பதாலும் நிரந்தரமற்றது என்பதாலுமே அது உண்மை இல்லாததாக
கருதச் செய்ய முடியாது. அந்த பொருள் இருக்கும் வரை அது உண்மை தானே!

இறைவன் சிருஷ்டி செய்வது போல ஜீவன்களும் தங்கள் அறிவிற்கேற்பவும் இறைவனால் அருளப்பட்ட சக்திக்கேற்பவும், தங்கள் குணத்தால் எழும் விருப்பங்களுக்கு ஏற்பவும் தம்மால் முடிந்த அளவில் சிருஷ்டி செய்கின்றனர். இந்த ஜீவன்களின் சிருஷ்டியே செயற்கை எனப்படுகிறது. ஜீவன்கள் உலக பந்தங்களிலிருந்தும், துன்பங்களிலிருந்தும் விடுதலை அடைய இறைவனை பக்தி செய்ய வேண்டும். தங்களை கடவுளிடம் அர்ப்பணித்துக் கொண்டு சரணாகதி செய்துவிட வேண்டும் என்று மத்வர் உபதேசிக்கிறார்.

மொத்தத்தில் இவரது கருத்துப்படி ஜீவர்கள், உலகம், கடவுள் என்ற மூன்று தத்துவங்களும் உண்மையாகும். இந்த மூன்றிற்குமிடையே உள்ள வேறுபாடும் உண்மையாக இருக்கின்றது. நிரந்தரமான உண்மையான பிரபஞ்சத்தை ஆளும் இறைவன் மட்டுமே சுதந்திரமானவர். ஜீவன்களும், பிரகிருதியும் அவருக்குக் கட்டுப்பட்டவை. இறைவன்எங்கும் இருப்பவராக, எல்லாம் அறிபவராக,எப்போதும் இருப்பவராக விளங்குகிறார் என்கிறார்.

கடவுளே மேலான உண்மை. உலகம் இறைவனின் படைப்பு. அனைத்து ஜீவராசிகளிலும் இறைவன் பிரகாசிக்கிறார் என்றாலும் அதை வைத்து அந்த ஜீவராசிகளையும் கடவுள் என்று கூறுதல் தவறு
என்கிறார். நீர் நிரம்பிய பாத்திரங்களில் எல்லாம் சூரியன் பிரதிபலிப்பதால் அந்தப் பாத்திரங்களை எல்லாம் சூரியனாகச் சொல்ல முடியுமா என்ன?

அவருடைய கூற்றுப்படி இயற்கையில் ஜீவன்கள் ஞானமுடையவர்களே. ஆனால் அவர்கள் ஞானம் எல்லைகள்
உள்ள ஞானம். அவர்கள் தங்களை விட மேலான கடவுளுக்குக் கட்டுப்பட்டவர்கள். ஐம்புலன்களுடன் ஓர் உடலைப் பெற்று உலகில் பிறக்கும் ஒவ்வொரு ஜீவனும் பந்தப்பட்டவனே. கட்டுப்பட்டவனே. இந்த பந்தத்திலிருந்து மோட்சம், விடுதலை பெறப் பற்பல பிறவிகளிலும் ஜீவன் உழைத்துப் போராடி கடைசியில் இறைவன் அருள் பெற்று அந்த விடுதலையைப் பெறுகிறான்.

ஒரு ஜீவன் ஞான அறிவு பெறும் வழிகள் மூன்று என்று மத்வர் கூறுகிறார்.அவை
1. பிரத்யட்சம் -நேரடியனுபவமாகக் கண்டறிதல்.
2. அனுமானம் - ஒன்றை வைத்து ஒன்றை ஊகித்து உணர்ந்து அறிதல்.
3. ஆகமம் -சான்றோர்களின் அனுபவமாகிய என்றும் உள்ள வேத நூல்கள் படித்து அறிதல். இந்த மூன்று வழிகளாலும் உயர் ஞானம் பெற முடிகின்றது என்று மத்வர் கூறுகிறார்.

அத்வைத சிந்தனைகள் பாமர மனிதனின் அறிவுக்கும், அனுபவத்திற்கும் எட்டாத போது அவனுக்கு புரிகிற விதமாய் த்வைதம் என்ற ஆன்மிக தத்துவத்தை உபதேசித்து பாரத தேசத்தில் ஆன்மிக ஞானம் நீடிக்க வழிவகுத்த பெருமை மத்வருக்கு என்றும் உண்டு.

அடுத்த பதிவில் விசிஷ்டாத்வைத ததத்துவத்தின் விளக்கத்தை பார்க்கலாம்

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :