Monday, December 29, 2014

Keerthivasan

எங்கே பிராமணன் ? – 8 – உயர்ந்த எண்ணம் இது

கேள்வி : திவசம் – சிராத்தம் பற்றிச் சொன்னீர்கள். அதுபற்றி ஒரு சந்தேகம் – ஒரு வீட்டில் திவசம் செய்யப்படுகிறது; அப்போது செய்யப்படுகிற உணவை எந்த வர்ணத்தவர் வேண்டுமானாலும் சாப்பிடலாமா? ‘அது முடியாது – பிராமணர்கள் மட்டும்தான், அந்த உணவை சாப்பிட முடியும்’ என்று கூறுகிறார்களே? அதுதான் சாஸ்திரம் கூறும் விதிமுறையா?

சோ : அப்படிச் சொல்ல முடியாது. சிராத்தத்தைச் செய்கிறவர், தனக்கு இஷ்டமானவர்களுடன் சேர்ந்து சாப்பிடலாம் – என்பதுதான் விதிமுறை என்று சொல்லலாம். சிராத்தத்திற்கு உரிய சடங்குகள் எல்லாம் முடிந்த பின், புரோகிதர்கள் சாப்பிட்ட பிறகு, சிராத்தம் செய்தவன் ஒரு கேள்வி கேட்கிறான்.

‘அன்ன சேஷம் கிம் க்ரியதாம்?’

இதற்கு, ‘மிகுந்துள்ள உணவை என்ன செய்யலாம்?’ – என்பது பொருள்.

இப்படி அவர் கேட்டவுடன், சிராத்தத்தை நடத்தி வைக்கிற புரோகிதர் இவ்வாறு பதில் அளிக்கிறார் :

‘இஷ்டை: ஸஹ புஞ்ஜியதாம்’

இதற்கு – ‘இஷ்டமானவர்களுடன் சாப்பிடலாம்’ – என்பது பொருள்.அதாவது, இதன்படி பார்த்தால், சிராத்தத்தைச் செய்கிறவர், தனக்கு விருப்பமானவர்கள் – அவர்கள் எந்த வர்ணத்தவர் என்பது கேள்வியல்ல – உடன் அமர்ந்து சாப்பிடலாம்.ஆனால், நடைமுறையில் இது மாறியிருக்கிறது. சிராத்தம் செய்பவரின் குடும்பத்தார் மட்டுமே, அன்று தயாரிக்கப்பட்ட உணவை சாப்பிடுவார்கள் – என்பது வழக்கமாகி இருக்கிறது.இதில் கூட ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். ‘பிராமணர்கள் மட்டும்தான்’ என்பதல்ல இந்த வழக்கத்தின் அடிப்படை. அந்தக் ‘குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மட்டும்’ என்பதே வழக்கம். தந்தைவழி உறவினர்கள், தன் குடும்பம். ஆனால், தாய்வழி உறவினர்களை அப்படிச் சொல்ல முடியாது. ஆகையால், மனைவிவழி உறவினர்கள், தாய்வழி உறவினர்கள் கூட அந்த உணவைச் சாப்பிடுவதில்லை.இது நாளாவட்டத்தில், எல்லா குடும்பங்களிலும் ஒரு மரபாகி விட்டது. இன்னும் சொல்லப் போனால், ஒரு வீட்டில் சிராத்தம் நடந்தால், ‘அதற்காகத் தயாரிக்கப்பட்ட உணவை, நாம் உட்கொள்வது, நமக்குக் கெடுதல்’ என்ற எண்ணம் கூட பலரிடமும் நன்றாகப் பதிந்து விட்டது.தர்ம சாஸ்திரங்களை விளக்குகிறவர்களில் சிலர், இது பற்றி என்ன சொல்கிறார்கள்? “இஷ்டமானவர்களுடன் சாப்பிடலாம் – என்று புரோகிதர்கள் கூறுவதைக் கூட, ‘குடும்பத்தில் உள்ளவர்களில் நமக்கு விருப்பமானவர்கள்’ என்றுதான் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்” என்பது சிலர் கூறுகிற விளக்கம்.

ஆனால், சொல்லப்படுகிற மந்திரத்தின் நேர் அர்த்தம் அப்படி அமையவில்லை. அதன்படி, ஏற்கெனவே கூறப்பட்டபடி, விருப்பமானவர்களுடன் சேர்ந்து, சிராத்தம் செய்தவர், அன்றைய உணவைச் சாப்பிடலாம். இதில் வர்ண பேதம் இல்லை.



கேள்வி : திவசம் செய்கிறவர், தன் முன்னோருக்குச் செய்கிற காரியம் என்பதால், மற்றவர்களுக்கு இதில் இடம் இல்லை என்பது வழக்கமாகி விட்டது போலிருக்கிறது…

பதில் : இருக்கலாம். ஆனால் ஒன்று. சிராத்தம் செய்கிறவர், தன் முன்னோருக்கு மட்டுமல்லாமல், சிராத்தம் செய்யக் கூடிய உறவினர்கள் இல்லாமல் இறந்து விட்டவர்களுக்காகவும் கூட, எள்ளையும் தண்ணீரையும் அர்ப்பணிக்கிறான். அதற்கான மந்த்ரம் இது :

யேஷாம் ந மாதா ந பிதா – ந ப்ராதா
ந ச பாந்தவா: நான்ய கோத்ரிண:
தே ஸர்வான் த்ருப்திமாயாந்து
மயோ ஸ்ருஷ்டை: குசோதகை:

அதாவது, தாய், தந்தை, சகோதரன் இல்லாமலும், தன் குலத்தைச் சார்ந்தவர்கள் இல்லாமலும், யார் யார் இறந்து விட்டார்களோ, அந்த பித்ருக்கள் அனைவரும் திருப்தி அடைய இந்த எள்ளையும், தண்ணீரையும் அர்ப்பணிக்கிறேன்.

வர்ணம், ஜாதி என்ற பிரிவு எதையும் மனதில் கொள்ளாமல், தர்ப்பணம் செய்ய யாரும் இல்லாத பித்ருக்கள் அனைவருக்காகவும் – இப்படி நன்மை வேண்டுகிற உயர்ந்த எண்ணம் இது.



 – CHO
– தொகுப்பு : அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :