Thursday, August 6, 2015

Keerthivasan

சைவ சித்தாந்தம்: நான் புரிந்து கொண்டது. – 13

சைவ சித்தாந்தம்: நான் புரிந்து கொண்டது. – 13

திருச்சிற்றம்பலம்

 


மனம்.வாக்கு,காயம் மூன்றையும் இறைவனுக்குத் தொண்டு செய்யும் அடிமையாக்கச் சித்தாந்தம் நான்கு நெறிகளைக் கூறும்.

இறைவனுக்கு மனமுவந்து

1.உடலால் தொண்டு செய்தல் - சரியை
2.வாயாலும் உடலாலும் செய்தல் - கிரியை
3.அந்தக்கரணங்களால் செய்தல் - யோகம்
4.சிந்தித்து தெளிந்து மெய்ப்பொருள் காண்பது - ஞானம்

இப்பதிவில் ஞானம் பற்றிக் காண்போம்.

ஞானத்தில் பாசம், பசு, பதி என மூன்று வகை உண்டு.

பாச ஞானம்:

உயிர்கள்,கண்,செவி முதலிய புறக் கருவிகளாலும் மனம்,புத்தி முதலிய அகக்கருவிகளாலும் படித்தும் கேட்டும், உணர்ந்தும் பொருட்களை அறியும்.உயிர்கள் சார்ந்தவண்ணம் ஆகும் தன்மை உடையன.அதனால் அப்பாசக்கருவிகளால் அறிந்த பொருட்களைச் சார்ந்து, அவை தாமே யாம் என்று மயங்கி அறியும்,அவ்வறிவே பாசஞானம்.

பசு ஞானம்:

மேற்கூறியவாறு அறிந்தவை அறிவில்லாத சடக் கருவிகளால் பெற்றவை என்ற உண்மையை உயிர் உணர்ந்த நிலையில் அவையாவும் அசத்துப் பொருள்கள் என்றும் தாம் அதற்கு வேறான சித்துப்பொருள் என்ற உணர்வு தோன்றும்.அவை அனைத்திலிருந்தும் தம்மை வேறான உயர்ந்த பொருளாக காணும்.அந்நிலையில் கருவி காரணங்களுக்குத் தானே தலைவன் என்ற எண்ணம் தோன்றும்.அதன் பயனாக தானே பதியாவோம் என்ற மயக்க அறிவும் தோன்றும்.அவ்வறிவே பசுஞானம்.(வேதாந்திகள் தாமே கடவுள் என்று கூறுவது இவ்வறிவின் பயனேயாகும்).

பதி ஞானம்;

உயிர்தாம் அறிவுடைப்பொருள் என்பதை அறிந்து, அவ்வறிவிற்கு அறிவாய் இறைவன் இருக்கிறான் என்பதை உணரும் நிலை தோன்றும்.அப்பொழுது முன் கண்டு அனுபவித்த பாச ஞானத்தில் அறிவு சற்றும் செல்லாது எப்பொழுதும் பதியையே நோக்கும்.அதுவே பதிஞானம் என்னும் சிவஞானம்.

திருவைந்தெழுத்து
ந-ம-சி-வ-ய - இதனை உச்சரிக்கும் பொழுது வகாரக் குறிலை நெடிலாக்கி நமசிவாய என்பர். இறைவன் நாமமாகக் கூறும் பொழுது நமச்சிவாய என்பர்.

ந - மறைப்பாற்றல்(மருள்)
ம - மும்மலங்கள் (இருள்)
சி - சிவபெருமான் (பதி)
வ - திருவருள் (சக்தி)
ய - உயிர் (ஆன்மா)

நமசிவய என்பதை தூல பஞ்சாட்சரம் என்பர்.இதனைக் கணிப்பதன் மூலம் உலக இன்பங்களைப் பெறலாம்.பொருள் அறிந்து கணித்தல் வேண்டும்.
பொருள்:(இறைவன்) மறைப்புச் சக்தியால் மும்மலங்களும் நீங்கி சிவபெருமான் திருவருளால் ஆன்மா உய்வு பெரும்.இதை மனத்தில் நிறுத்தி ஜெபம் செய்ய வேண்டும்.சிவயநம என்பதை சூட்சும பஞ்சாட்சரம் என்பர்.இதனைக் கணித்தால் முத்திப் பேறு கிட்டும்.இதன் பொருள் சிவபெருமான் திருவருளால் ஆன்மா, (இறைவன்) மறைப்புச் சக்தியால் மலம் நீங்கப் பெற்று உய்வு பெறும்.
ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி, ஒண் சுடர்
ஞானவிளக்கினை ஏற்றி, நன் புலத்து
ஏனை வழி திறந்து, ஏத்துவார்க்கு இடர்
ஆன கெடுப்பன அஞ்சு எழுத்துமே.
- திருஞான சம்பந்தர் சுவாமிகள்.

பொருள்:உடம்பில் பிராணாயாமத்தால் உயிர்ப்புச்
சக்தியை ஒடுக்கி, ஞானவிளக்கம் பெறச் செய்து, அறிவைப் பெறும்
வாயில்களால் நல்ல மெய்யறிவை நாடி இறைவனைப்
போற்றுவார்கட்கு அறியாமையால் வரும் துன்பங்களைக் கெடுப்பன
திருவைந்தெழுத்தேயாகும்.

மாசில் வீணை என்ற பதிகத்தின் இரண்டாம் பாடலில் நமச்சிவாய என்னும் தூல பஞ்சாட்சரத்தின் பெருமை பேசுகின்றார். நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்தை முறையாக ஓதினால் அதுவே அவனை நன்னெறிக்கண் கொண்டு செலுத்தும் என்கிறார். ஏதும் ஒன்றும் அறிவிலர் ஆயினும் இப்பஞ்சாக்கரத்தை ஓதினால் அதுவே கல்வியைத் தரும். அதன்வாயிலாகக் கலைஞானத்தையும் மெய்ஞ்ஞானத்தையும் தரும். மந்திர சாத்திர வித்தையும் கைவரும். எல்லாம் ஐந்தெழுத்தை இடைவிடாது ஓதுவதால் கிடைக்கும். நல்ல நெறியும், அதனால் வீடுபேறும் கிடைக்கும் என்கிறார் திருநாவுக்கரசு சுவாமிகள்.
நமச்சி வாயவே ஞானமும் கல்வியும்
நமச்சி வாயவே நான்அறி விச்சையும்
நமச்சி வாயவே நாநவின் றேத்துமே
நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே. 
-தி.5 ப.90 பா.2

- திருநாவுக்கரசு சுவாமிகள்.


நானேயோ தவம் செய்தேன்? `சிவாய நம' எனப் பெற்றேன்?
தேன் ஆய், இன் அமுதமும் ஆய், தித்திக்கும் சிவபெருமான்
தானே வந்து, எனது உள்ளம் புகுந்து, அடியேற்கு அருள் செய்தான்
ஊன் ஆரும் உயிர் வாழ்க்கை ஒறுத்து அன்றே, வெறுத்திடவே!
- மாணிக்கவாசகர் சுவாமிகள்

விளக்கம் : நகாரத்தை முதலாகக்கொண்ட நமசிவாய என்பது தூல பஞ்சாட்சரம்; சிகாரத்தை முதலாகக் கொண்ட சிவாயநம என்பது சூக்கும் பஞ்சாட்சரம். தூல பஞ்சாட்சரம் போகத்தைக் கொடுப்பது; சூக்கும பஞ்சாட்சரம் வீடு பேற்றை அளிப்பது. ஆதலின், அடியேனுக்கு வீடு பேற்றை அளிப்பதற்குச் சூக்கும பஞ்சாட்சரத்தை அருளினான் என்பார், 'சிவாயநம எனப் பெற்றேன்' என்றார்.
திருச்சிற்றம்பலம்.
பதிவை பற்றிய உங்கள் கருத்துக்களுக்கு: Janarthanam Karthik

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :