Thursday, December 25, 2014

Keerthivasan

யார் தமிழ்க் கடவுள்? - 1

"இது என்னடா இது கேள்வி? அதான் எல்லாருக்கும் தெரியுமே! நம்ம முருகன் தான் தமிழ்க் கடவுள். என்னாச்சு ராமசந்திரன் உனக்கு?"

"ஹிஹி! நீங்க சொன்ன பதில்...பாதி தாங்க சரி.பதிலை முழுசா சொல்லலையே? முருகன் தமிழ்க் கடவுள் - சரி தான்!.ஆனா முருகப் பெருமான் மட்டும் தான் தமிழ்க் கடவுளா?"

"அட, நீங்க சொல்லுறத பார்த்தா இன்னொரு தமிழ்க் கடவுளும் இருக்காப் போலத் தெரியுதே! யாருங்க அவரு?"

"உங்களுக்கு, எனக்கு, எல்லாருக்கும்....நல்லா அறிமுகமானவர், "அரி"முகமானவர் தான்! "பெருமாள்" என்று நாட்டு வழக்காக அழைக்கும் திருமால் தான் இன்னொரு தமிழ்க் கடவுள்"

"அப்படியா சேதி! நான் பெருமாள் எல்லாம் வடக்கத்திச் சாமீ! தமிழகத்துக்கு உள்ளாற அப்பறமா வந்த சாமீ, வடமொழியோடு இறக்குமதி செய்யப்பட்ட சாமீ-ன்னு இல்ல நினைச்சிக்கிட்டு இருந்தேன்!"

"ஹிஹி! உங்க நினைப்பு தப்பு. முருகன் என்றிலிருந்து தமிழ்க் கடவுளா இருக்கத் தொடங்கினாரோ, அன்றிலிருந்தே பெருமாளும் தமிழ்க் கடவுளாத் தான் இருந்திருக்காரு.நம்ம முதல் நூலான தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், இலக்கணங்களில் இது பற்றிய குறிப்புகள் எக்கச்சக்கமாக் கொட்டிக் கிடக்கு"

"அச்சச்சோ! அவரை இம்புட்டு நாளாத் தமிழ்க்கடவுள் இல்லைன்னு கண்டுக்காம வுட்டுட்டனே முன்னமே சொல்லி இருந்தா நானும் ரொம்ப மகிழ்ந்து இருப்பேனே!"

"அட விடுங்க! இதுக்குப் போயி ஃபீல் பண்ணலாமா? புரட்சித் தலைவர்-ன்னு சொல்லுறோம்.. எம்.ஜி.ஆர் நினைவுக்கு வருவாரு ஆனா பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் செய்யாத புரட்சியா?
பெரியாரைப் புரட்சித் தலைவர்-ன்னு குறிப்பிடாததால், அவர் புரட்சியே பண்ணலை-ன்னு ஆயீருமா என்ன? அது போலத் தான்."

முருகப் பெருமானுக்கும், மதுரைத் தமிழ்ச் சங்கத்துக்கும் உள்ள "புராண ஐதீகத்தின்" காரணமாகப், பின்னாளைய புலவர் சில பேர், "தமிழ்க் கடவுள்" என்ற அடைமொழியை முருகனுக்குத் தந்து மகிழ்ந்தாங்க. ஆனால், எங்கே தந்தாங்க, தமிழ்க் கடவுள்-ன்னு சொல்லுற பாட்டு எங்கே இருக்கு?-ன்னு கேட்டுப் பாருங்க....பதில் வராது

சினிமாவில்.....ஏ.பி.நாகராஜன் வசனத்தில் கேட்டுக் கேட்டு, தமிழ்க் கடவுள் அடைமொழி, அப்படியே இன்னிக்கும் நிலைத்து நிற்கிறது அதனால்...முருகன் மட்டுமே "தமிழ்க் கடவுள்", "தமிழர் கடவுள்" என்ற எண்ணம் பரவலாக இருக்கு/

"பகுத்தறிவு" பேசும் சிலர் கூட, இந்தத் "தமிழ்த் தொடர்பு" என்ற ஒரே காரணத்துக்காக, முருகனை மட்டும் "நம்புவதில்" ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி கொள்கிறார்கள்.

ஆனால் உண்மையிலேயே, நம் தமிழ் இலக்கியங்கள், "தமிழ்க் கடவுள்" பற்றி என்ன தான் சொல்கின்றன? வாங்க பார்க்கலாமா?

(மு.கு: இன்றைய காலத்தில் முத்திரை குத்துதல் என்பது மிகவும் சுலபமான ஒன்று. சொல்லும் "கருத்தை" விட, அதை யார் சொல்லுறாங்க என்பது தான் பார்வை! அதனால் ஒரு மு.கு-வை இப்பவே சொல்லிக்கறேன்பா: பலரும் நினைத்துக் கொண்டபடி, நான் வைணவன் கிடையாது;எங்கள் குடும்பம் சைவக் குடும்பம்! குல தெய்வம் திருவாரூர் மாவட்டம் ஆந்தகுடி அம்பாள் மற்றும் வைதீஸ்வரன் கோவில் இனி மகிழ்ச்சியா மேற்கொண்டு படிங்க)

பழந்தமிழ் மக்கள் வணங்கியது இயற்கையை, அது தான் இயற்கையை ஒட்டிய தெய்வங்களாக நாளடைவில் வளர்ச்சி பெற்றது.

பழந்தமிழ் மக்கள் வணங்கிய இரு பெரும் இயற்கைத் தெய்வங்கள் = மாயோன், சேயோன்.

* மாயோன் = பெருமாள் = முல்லைக் கடவுள்
* சேயோன் = முருகன் = குறிஞ்சிக் கடவுள்

மாயோன் மேய காடுறை உலகமும்,
சேயோன் மேய மைவரை உலகமும்
- என்று முதலில் முல்லை நில மாயோனைச் சொல்லி விட்டு அப்புறம் தான் குறிஞ்சி நிலச் சேயோனைச் சொல்கிறார் தொல்காப்பியர்!.

ஏங்க இப்படிச் சொல்லுறாரு? = சிறப்புடைப் பொருளை முற்படக் கிளத்தல் - சிறப்புடைய பொருளை முதலில் சொல்லுதல் என்பதோர் தமிழ் மரபு.

பொதுவாகக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்...என்று தானே நாம் எல்லாரும் வரிசைப்படுத்துகிறோம்? ஆனால் தொல்காப்பியர் சொல்லும் வரிசையைப் பாருங்க.

மாயோன் மேய காடுறை உலகமும்,
சேயோன் மேய மைவரை உலகமும்,
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்,
வருணன் மேய பெருமணல் உலகமும்,
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே.

முல்லை, குறிஞ்சி-ன்னு வரிசை மாறி இருக்கு. இது ஏன் என்பது ஆய்வுக்கு உரிய ஒன்று. எது எப்படியோ...இன்று தமிழில் கிடைக்கக் கூடிய மிகப் பழமையான நூல் தொல்காப்பியம். அது மிகப் பழமையான தமிழ்ச் சமுதாயத்தை படம் பிடித்துக் காட்டுகிறது. இதில் மாற்றுக் கருத்தே இல்லை.

தொல்காப்பியர் காலத்தில் இயற்கை/நடுகல் வணக்கம் தான் பரவலாக இருந்திருக்கிறது. நடுகல் வணக்கம் பற்றிப் பல செய்திகளைத் தருகிறார் தொல்காப்பியர்.

நடுகல் நட்ட இடத்தில் வழிபாடும் ஆட்டங்களும் நடைபெற்றதாக அறிகிறோம்! வேலன் வெறியாட்டம், குரவைக் கூத்து போன்ற ஆட்டங்கள் பற்றிய இலக்கியக் குறிப்புகள் உள்ளன.

மறைந்த முன்னோர்கள் நினைவாக, மாட்டுப் பொங்கல் அன்று, நடுகல் வைத்துப் படையல் போடும் வழக்கம், எங்கள் கிராமத்தில் - இன்று வரை உண்டு.

மாயோன், சேயோன் என்பவர்கள் அந்தந்த நிலத்தின் வீரர்களாகக் கூட இருந்திருக்கலாம். நடுகல் வணக்கமே நாளடைவில் சிறு தெய்வ/பெருந் தெய்வ வணக்கமாக வளர்ச்சி பெற்று இருக்கிறது.

இதில் மாயோனும் சேயோனும் அதிகமாகப் பேசப்பட்ட அளவுக்கு,
வேந்தன், வருணன்.....மக்களால் அவ்வளவாகப் பேசப்படவில்லை.
வெறும் நில அடையாளங்களாக மட்டும் நின்று விட்டனரே அன்றி, மக்கள் வாழ்வியலில் ஒன்றவில்லை.

சங்க இலக்கியங்கள் மாயோன், சேயோன் கோயில்களைத் தான் காட்டுகின்றன! (திருவேங்கடம், செந்தில், அரங்கம், திருவேரகம்)!
மக்களும் தங்கள் கூத்துகளில் (குரவை/வெறியாட்டு), அன்றாட வாழ்வியலில், திணை/துறைகளில்(பூவை நிலை/வேலன் வெறி) என்று....மாயோன்/சேயோனையே வைக்கின்றனர்.

தமிழர் பண்பாட்டில் ஆரியம் கலப்பதற்கு முன்னரே மாற்றங்கள் ஏற்படத் தொடங்கி விட்டன...

முதலில் இயற்கை என்பது நடுகல்லானது.
பின்னர் நடுகல் என்பது தெய்வம் ஆனது!
இயற்கை வழிபாட்டின் படி, மாயோன், முல்லைக் கடவுள் ஆனான்.

முல்லை நிலத்தின் கருப்பொருள்/உரிப்பொருளைக் கொஞ்சம் கவனிச்சிப் பாருங்க! தமிழ் வகுப்பில் படிச்ச நினைவிருக்கா? இல்லை சாய்ஸில் வுட்டுட்டீங்களா?

* முல்லை-காடும் காடு சார்ந்த இடமும் = பச்சைப் பசேல்-ன்னு தானே இருக்கும்? அதனால் பச்சை மாமலை போல் மேனி!

* முல்லை-பெரும்பொழுது = கார் காலம்! அதனால் கார் மேனி வண்ணன்.
* முல்லை-சிறுபொழுது = மாலை. அதனால் மால் - திருமால்.
* முல்லை-ஆயர்கள் நிலம். அதனால் ஆயர் தம் கொழுந்தே.
* முல்லை-தொழில் = ஆநிரை மேய்த்தல் = பசுக்களை மேய்த்தான்
* முல்லை-விளையாட்டு = ஏறு தழுவுதல் = காளைகளை அடக்கி நப்பின்னையை மணம் புரிந்தான்
* முல்லை நிலத்தில் காதல் மிகுதி அதனால் இவன் காதல் மன்னன்:-)

இப்படி எல்லாமே இயற்கையை ஒட்டிய வழிபாடு தான் இயற்கைக் கடவுளாகத் தான் மாயோன்/திருமால் அறிமுகமானான்.

அரசனைத் திருமாலுக்கு ஒப்பிட்டு வாழ்த்துவது என்பது தொல்காப்பியர் காலத்திலேயே இருந்திருக்கிறது. இதற்குப் பூவை நிலை என்று பெயர்.

மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பின்
தாவா விழுப்புகழ் பூவை நிலையும்
என்பது தொல்காப்பியத்தில் புறத்திணை இயலில் வரும் பாடல். தமிழரிடையே மாயோனுக்கு "மன்பெரும்" சிறப்பாம்! சொல்லுவது தொல்காப்பியர்.

தொல்காப்பியர், பின்னாளைய கவிஞரான நக்கீரரைப் போல "பக்தர்" அல்லர்.. பக்தர் அல்லாத ஒருவரே சொல்லுறாரு-ன்னா, அப்போ "மன்பெரும்" சிறப்பு தெரிகிறது அல்லவா?

சிறப்பான ஒன்றைத் தானே இன்னொன்றுக்கு உவமையாகச் சொல்லுவாங்க? மாயோனின் சிறப்பை உவமையாச் சொல்றதுக்குன்னே ஒரு தனித் துறை - பூவை நிலை-ன்னு பண்டைத் தமிழர்கள் உருவாக்கி இருக்காங்க-ன்னா......மாயோன் தமிழர்களின் மிகப் பெரும் தெய்வமாக இருந்திருக்கிறான் என்பது தானாகவே விளங்கும்.

தொல்காப்பியருக்குப் பின் வந்த காலகட்டத்தில், ஆரியம் நன்றாகவே வந்து விட்டது!.

நம் பண்பாட்டில் பிறர் பண்பாடும் கலக்கத் துவங்கிய போது இன்னும் பலப்பல மாற்றங்கள் (சில வேண்டாத மாற்றங்களும் கூட)
ஆனால், வேள்வி/பலிகளை வழிபாடாகக் கொண்ட ஆரியப் பண்பாடு, தமிழிடம் கடன் வாங்கியது

பூவை நிலை, பூஜை நிலை ஆக மாறியது! தமிழ் மரபுப்படி மலரால் வழிபடுவது வழக்கமானது!

கலப்புக்கு முன்பு.....
* நடுகல், இயற்கை முறை ஆனது!
* ஆயர் குல மாயோன் = ஆயர் குலக் கண்ணன் ஆனான்
* காக்கும் தொழில் அரசன் = காக்கும் தொழில் திருமால் ஆனான்.

ஆரியக் கலப்புக்குப் பின்னரோ......
* முருகன் ஸ்கந்தன் ஆனான்.
* திருமால் விஷ்ணு ஆனான்.

ஆனால் அப்போது கூட மாயோனும் சேயோனும் தத்தம் தனித்தன்மைகளை இழக்கவில்லை.ஆரியர்கள் தமிழோடு சமரசம் செய்ய வேண்டிய கட்டாயம். ஆரிய இனமல்லாத கண்ணனைத் தங்கள் கடவுளாக ஏற்றுக் கொண்டார்கள்.

கார் மேக வண்ணன், ஆயர் குலம், பசுக்களை மேய்த்தல் என்று ஏற்கனவே எல்லா அம்சங்களும் பொருந்தி இருந்ததால், இணைப்பதற்கு இன்னும் ஈசியாப் போயிடுச்சி

கூடவே பலராமன் வழிபாடு, வாலியோன் வழிபாடாகச் சேர்ந்து கொண்டது.

தொல்காப்பியருக்குப் பின்னர்.....

புறநானூறு, அகநானூறு, கலித்தொகை, முல்லைப்பாட்டு, பரிபாடல், பதிற்றுப்பத்து என்ற சங்க நூல்களில் திருமாலைப் பற்றிய பலப்பல குறிப்புக்களைக் காணலாம். காதலன், காதலை நிரூபிக்கத் திருமால் மேல் சத்தியம் செய்றானாம் - கலித்தொகை சொல்வது.

சங்க காலத்தின் இறுதியில் சமணம், பவுத்தம், ஆரியம் என்று தமிழரிடையே பல சமயங்கள் பரவி விட்டன.

பின்னாளில் வந்த சிலப்பதிகாரம்...மாயோன், சேயோன், வேந்தன், வருணன் - இந்த மண்ணின் மைந்தர்களோடு மட்டும் நின்று விடவில்லை.

வாலியோன், பிறவா யாக்கைப் பெரியோன் (சிவன்), அருகன், புத்தன் என்று அனைத்து தெய்வங்களின் குறிப்புகளையும் தரத் துவங்கி விட்டது.

சிலப்பதிகாரத்தில் வேங்கட மலை மேல், திருமால் சங்கு சக்கரங்களோடு நிற்கும் காட்சி வர்ணிக்கப்படுகிறது.
இதை விட வேறென்ன அத்தாட்சி வேண்டும், வேங்கடவன் திருமாலே என்பதற்கு?

வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும்
ஓங்கு உயர் மலையத்து உச்சி மீமிசை
பகை அணங்கு ஆழியும், பால் வெண் சங்கமும்
தகை பெறு தாமரைக் கையில் ஏந்தி
என்று வேங்கடத்து நெடியவனை இளங்கோவடிகள் பாடுகிறார்.

அதே சிலப்பதிகாரத்தில், திருவரங்கக் காட்சிகள் சொல்லப்படுகின்றன! கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே,
கண்ணிமைத்துக் காண்பார் தம் கண் என்ன கண்ணே! என்றும் கேட்கிறார்.

சிலம்புக்குப் பின் வந்தது மணிமேகலை! அது இன்னும் ஒரு படி மேலே போகிறது! தமிழ்-ஆரிய கலப்பு விளக்கங்களும் அதில் வரத் தொடங்கி விட்டன.

காத்தல் தொழில், அலகிலா விளையாடல், பரந்து நிற்றல் போன்ற குணங்கள் எல்லாம் மணிமேகலையில் சொல்லப்படுகிறது.

காதல் கொண்டு கடல்வணன் புராணம்
ஓதினன் 'நாரணன் காப்பு' என்று உரைத்தனன்!
படைத்து விளையாடும் பண்பினோனும்
துடைத்துத் துயர் தீர் தோற்றத்தோனும்
தன்னில் வேறு தான் ஒன்று இலோனும்
அன்னோன் இறைவன் ஆகும் என்று உரைத்தனன்!

முல்லைப் பாட்டுக்கு நச்சினார்க்கு இனியர் உரை இருக்கு.

மறைமலை அடிகள் செய்த உரையை இங்கு படிக்கலாம்! அதில் //'மாதாங்கு' என்பதனை 'மால்' என்பதனொடு கூட்டித் 'திருமகளை மார்பில் தாங்கும் மால்' என்று பொருளுரைக்க// வேண்டும் என்று தான் மறைமலை அடிகளே சொல்லுகிறார்.

பரிபாடல், கலித்தொகை இரண்டிலும் திருமால் அடிக்கு அடி வருவாரு அத்தனை பாட்டையும் பதிவிலேயே கொடுத்தேன்னு வையுங்க... என்னைப் போட்டுத் தாக்கிருவீங்க:-)

இல்லையில்லை.. அத்தனைப் பாட்டையும் கண்ணால் பார்த்தால் தான், திருமாலைத் தமிழ்க் கடவுள்-ன்னு ஒத்துப்பேன்னு உங்களில் சில பேர் சொன்னீங்கனா, ஒன்னும் சொல்வதற்கு இல்லை!
பின்னூட்டத்தில் வேணும்னா ஒவ்வொரு பாட்டா தெரிஞ்சவங்க கொடுங்கப்பா! நானும் கொடுக்கிறேன்

ஆனால்...ஒன்னே ஒன்னை மட்டும் இங்கே கட்டாயம் கவனிக்க வேண்டும்.

இத்தனை கலப்புகள், இத்தனை மாற்றங்கள் ஏற்பட்ட பின்னரும் கூட...

இரண்டே இரண்டு தெய்வங்கள் மட்டும்....

தங்கள் தனித் தன்மையை, தமிழ்த் தன்மையை இன்னும் இழக்கவில்லை!

* இலக்கியத்தில் சேயோன் என்றால் பேச்சு வழக்கில் முருகன்!
* இலக்கியத்தில் மாயோன் என்றால் பேச்சு வழக்கில் பெருமாள்!!

முருகன் என்பது தமிழ்ப் பெயர்! முருகன் என்று தான் எங்கும் அழைக்கப்படுகிறான்.
பெருமாள் என்பது தமிழ்ப் பெயர்! பெருமாள் என்று தான் எங்கும் அழைக்கப்படுகிறான்.

யாரும் விஷ்ணு கோயில்-ன்னு சொல்லறதில்லை. பெருமாள் கோயில் என்று தான் அண்டை மாநிலத்தவர் கூடச் சொல்கிறார்கள்.

கூக்குரல் போடணும்னாக் கூட யாரும் "சுப்ரமண்யா", "விஷ்ணுவே"-ன்னு யாரும் கூப்பிடறதில்லை! "முருகா", "பெருமாளே" ன்னு தமிழ் மட்டும் தான், தமிழர்கள் வாயில் தானா வருது.

மாயோனின் மருமகன் முருகன் - அப்படின்னு பொருள்!

முருகன் எப்படிப் பெருமாளின் மருமகன் ஆவான்?
அதுக்குப் பல்வேறு பார்வைகள.!

1. சகோதரியின் பையன் நமக்கு மருமகன்; மலையன்னை பெருமாளின் சகோதரி - அதனால் முருகன் மாயோனின் மருகன்.

2. மாயவனின் இரு "ஐதீகப்" புதல்விகள் - அமிர்தவல்லி, சுந்தரவல்லி. அவர்கள் தான் தேவயானை வள்ளியாகத் தோன்றி முருகனை மணந்தனர் என்பது இன்னொரு கதை. அதனால் முருகன் மாயவனுக்கு மருமகன் ஆகிறான்.

3. புராணக் கதைகள் பற்றிய கலப்பு இல்லாமல் குறிஞ்சி-முல்லை நிலங்களுக்குரிய கொடுக்கல் வாங்கல் வழக்கமாகவும் சேயோன், மாயோன் பெண்டிரை மணந்து இருக்கலாம்.

அட இவ்வளவு எதுக்குங்க?

"தமிழ்க் கடவுள்" முருகப் பெருமான் ஆலயங்களில், இன்னிக்கி தமிழ் இடையறாது ஒலிக்குதா? சந்தேகம் தான். தில்லையில் தமிழ் நுழைய இன்னமும் கூத்தாட வேண்டியிருப்பதைப் பாக்குறோம?! ஆனால்...

"தமிழ்க் கடவுள்" திருமால் ஆலயங்களில், இன்னிக்கும் தமிழ் இடையறாது முழங்கிட்டுத் தான் இருக்கு! தமிழ்ப் பாசுரங்கள் ஒலிக்காமல் ஒரு பூசையோ, ஒரு புறப்பாடோ யாராச்சும் நடத்திறத் தான் முடியுமா?

ஒவ்வொரு புறப்பாட்டிலும் இறைவனுக்கும் முன்னால், தமிழ் தான் முழங்கிச் செல்கிறது! தமிழுக்கும் பின்னால் இறைவன் அவனுக்கும் பின்னால் தான் வேதங்கள்..

இதைப் பார்த்துவிட்டு "அச்சோ....இது போல் முருகன் ஆலயத்தில் இல்லையே"-ன்னு பெருமூச்சு விடுகிறார் ஒரு முருக பக்தர். யாரு?....

"பச்சைத் தமிழின் பின்னால் செல்லும் பசுங் கொண்டலே"-ன்னு தமிழ்க் கடவுள் திருமாலைப் பாடுகிறார் "குமர"குருபரர்/

அட, நம்ம அருணகிரி?..."வண்டமிழ் பயில்வோர் பின் திரிகின்றவன்"....தமிழை ஓதிச் செல்பவர் பின்னால் திரிகின்றவனாம் திருமால்! ஆகா, இதுவல்லவோ தமிழ்ப் பற்று.

பழம்பெருமை எல்லாம் விட்டுத் தள்ளுங்க! இன்றைய கதையை மட்டும் பேசுவோம்.

தமிழைத் தாங்கிப் பிடிப்பவன் தானே தமிழன்.

தமிழை அன்றாடம் தாங்கிப் பிடிக்கும் கடவுள் தானே தமிழ்க் கடவுள்.
- இப்போ சொல்லுங்க மக்களே, தமிழை வழிபாட்டில் அன்றாடம் தாங்கிப் பிடிக்கும் திருமால் தமிழ்க் கடவுள் தானே?

"முருகு" என்னும் பெயரிலேயே தமிழ் மணக்கவில்லையா.

மு - மெல்லினம்
ரு - இடையினம்
கு - வல்லினம்.

அத்துனையும் ஒருங்கே அமைந்த பெயர்கொண்ட முருகன் மட்டுமே தமிழினம் என்று சொல்லுவோருக்கு

தி=வல்லினம்
ரு=இடையினம்
மா=மெல்லினம்
ல்=இடையினம்,அவனோடு கூடிய பெண்ணுக்கும் ஒரு இடை-இனம்.

அத்துனையும் ஒருங்கே அமைந்து, பெண்ணுக்கும் இடம் தந்த தமிழாண், தமிழன்! - அவன் திருமால் மட்டுமே.

இவ்வளவு ஏங்க?? சென்னை தில்லக்கேணி பார்த்தசாரதி பெருமால எடுத்துக்குங்க..

அக்கால மறவனின் அடையாளம் என்ன? - மீசை.
அருந்தமிழ் ஆண்மகனின் அடையாளம் என்ன? - மீசை.
அன்புருகும் தமிழ்ப்பெண்ணின் ஆசை என்ன? - மீசை.
தமிழ் மறவன் கண்ணனுக்கு இருப்பதும்-மீசை.

முருகனுக்கு மீசையினைக் காட்டத் தான் முடியுமா?
மீசையுள்ள மறவனென நாட்டத் தான் முடியுமா??

ம்ம்ம்ம்ம் ...எல்லாம் நல்லாத் தான் சொல்றீங்க! ஆனால் எனக்கென்னமோ... எனக்கென்னமோ.... இல்லப்பா...நான் ஒத்துக்க மாட்டேன்! பெருமாள் தமிழ்க் கடவுள் இல்லை

தமிழர் தெய்வமான இறைவனை நிரூபிக்க நான் யார்?
கடந்து உள்ளவனைக் கடத்த யாரால் முடியும்?
இது நிரூபணம் அல்ல! உண்மை அறியும் முயற்சி!

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு

பின்ன என்னாங்க?...
மேலே சொன்னபடியெல்லாம், வாதாடி வாதாடித் தான், திருமாலைத் தமிழர் கடவுள், தமிழ்க் கடவுள்-ன்னு நிறுவணுமா என்ன?

*** சொன்னாலும், சொல்லாவிட்டாலும் - பெரியார் என்னிக்குமே புரட்சித் தலைவர் தான்,

*** சொன்னாலும், சொல்லாவிட்டாலும் - திருமால் என்னிக்குமே தமிழ்க் கடவுள் தான்.

கோதைத் "தமிழ்" ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை, வையம் சுமப்பதும் வம்பு,

முருகப் + பெருமாள் திருவடிகளே சரணம்!

உசாத்துணை (References):
தமிழ் இலக்கிய வரலாறு - டாக்டர். தமிழண்ணல்
தமிழர் மதம் - தேவநேயப் பாவாணர்
முல்லைப் பாட்டு - மறைமலை அடிகள் உரை
தமிழ் இணையப் பல்கலைக்கழக நூலகத் திரட்டு = http://www.tamilvu.org/library/l0100/html/l0100001.htm

பதிவின் நோக்கம்:
எல்லாம் கடந்த இறைவனை மொழிக் குறுகலுக்குள் அடக்குவது இல்லை.

நம் மொழியில், நம் இறையியல் வளர்ந்த பரிமாணத்தை அறிந்து கொள்வது மட்டுமே.

இறைவனுக்கு நாம் தரும் பட்டங்கள் -தமிழ்க் கடவுள், தெலுங்கு தேவுடு, English Lord - ஒரு பொருட்டே அல்ல.

இது நம் பண்பாட்டை நாம் அடையாளம் காணும் முயற்சி மட்டுமே

ஆக்கம்: Ramachandran Krishnamurthy

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :