Friday, December 26, 2014

Keerthivasan

யார் தமிழ்க் கடவுள்? - 2

சங்க இலக்கியத்தில் தமிழ்க் கடவுள்.

தமிழ்க் கடவுள் என்றால்= சங்க காலத் தமிழ்க் குடிகள், பரவலாக ஏற்று வணங்கிய இறைத் தொன்மம்.

= மாயோனும் சேயோனும் (திருமாலும், முருகனும்)
= பூர்வ குடி வழிபாடு; இன்றைய மதக் கடவுள்கள் அல்ல!
சேயோன்-முருகன்
மாயோன்-பெருமாள்

ஈழத்துத் தமிழறிஞர் கா.சிவத்தம்பி ஆய்ந்து சொல்வதைப் பாருங்கள்:
"மாயோன் வழிபாடு தமிழ் நாட்டின் பூர்வீக வழிபாடுகளில் ஒன்றானதாகும். மாயோன் என்பது கருமை நிறமுடையவன், திருமால் எனப் பொருள்படும்; (தமிழில் இலக்கிய வரலாறு, கா.சிவத்தம்பி, பக்.58. http://www.noolaham.net/project/02/175/175.htm)

இதோ..பெரும் தமிழறிஞரான திரு.வி.க அவர்கள், முருகன் (அ) அழகு என்னும் நூலில் சொல்வது; "தங்கள் கண்ணுக்கு, பச்சைப்பசேல் எனக் காட்சி வழங்கிய காட்டின் இயற்கை அழகை, "மால்" என்று பண்டைத் தமிழர்கள் வழுத்தினர்"
சில அறிஞர்கள் இப்படிச் சொல்ல...வேறு சிலரோ....

மாலவனோ அந்நியப்பட்டுத்தான் நிற்கிறான். இரண்டொரு பாடல்களால் சுட்டப்படுவதால் எல்லாம், தமிழர் தம் தனிப்பெருங்கடவுள் ஆகிவிட முடியாது! முருகன் மட்டு"மே" தமிழ்க் கடவுள்
சரி, இவர்கள் அறைகூவலுக்கு என்ன பதில்? = ஓரிரு சங்கத் தமிழ்ப் பாடல்கள் தானா?

சங்க இலக்கியங்களில் கொட்டிக் கிடக்கும்,
தமிழ்க் கடவுள் = திருமாலின் பாடல்கள் அத்தனையும்...
இங்கே......இனி.......ஒவ்வொன்றாகத் தொகுத்து வைக்கப்படும்!
= One stop shop.Information is Power. Course-Correcting is Gentlemanly,

சரியாக நோக்குங்கள்:
"விஷ்ணு" தமிழ்க் கடவுள் அல்ல= "திருமால்" தான் தமிழ்க் கடவுள்.
"ஸ்கந்தன்" தமிழ்க் கடவுள் அல்ல="முருகன்" தான் தமிழ்க் கடவுள்.
அண்மைக் காலங்களில், முருகனைத் "தமிழ்க் கடவுளாகப்" பேசிய அளவு, திருவிளையாடல் ஏபி நாகராஜன் வசனங்களில் காட்டிய அளவு,
திருமாலைப் பேசாததால்/ காட்டாததால்...அவன் தமிழ்க் கடவுள் இல்லை என்று ஆகி விட மாட்டான்.

* புரட்சித் தலைவர் = எம்.ஜி.ஆர் என்று சொல்வதால்...
* தந்தை பெரியார் = புரட்சித் தலைவர் இல்லை என்று ஆகி விட மாட்டார்.
யார் செய்த புரட்சி அதிகம் என்று உங்களுக்கே தெரியும்.

நினைவில் வையுங்கள்:மாயோனாகிய பெருமாளும், சேயோனாகிய முருகனும் = இருவரும் தமிழ்க் கடவுளே!!!
பழந்தமிழ் மக்கள் வணங்கியது இயற்கையை.
அதுவே இயற்கை ஒட்டிய தெய்வங்களாக நாளடைவில் வளர்ச்சி பெற்றது!

மாயோன் மேய காடுறை உலகமும்,
சேயோன் மேய மைவரை உலகமும்
- என்று முதலில் முல்லை நில மாயோனைச் சொல்லி, அப்புறம் தான் குறிஞ்சி நிலச் சேயோனைச் சொல்கிறார் தொல்காப்பியர்.

தமிழில் கிடைக்கக் கூடிய மிகப் பழமையான நூல்=தொல்காப்பியம.
அது பண்டைத் தமிழ்ச் சமுதாயத்தை படம் பிடித்துக் காட்டுகிறது.
தொல்காப்பியர் காலத்தில் இயற்கை/நடுகல் வணக்கம் தான் பரவலாக இருந்திருக்கிறது! நடுகல் பற்றிப் பல செய்திகள் தருகிறார்.
நடுகல் நட்ட இடத்தில் வழிபாடும் ஆட்டங்களும் நடைபெற்றதாக அறிகிறோம். வேலன் வெறியாட்டம், குரவைக் கூத்து போன்ற ஆட்டங்கள் பற்றிய இலக்கியக் குறிப்புகள் உள்ளன!

மறைந்த முன்னோர்கள் நினைவாக, நடுகல் வைத்துப் படையல் போடும் வழக்கம், எங்கள் கிராமத்தில் இன்னிக்கும் உண்டு.
மாயோன், சேயோன் என்பவர்கள் அந்தந்த நில மகன்களாகக் கூட இருந்திருக்கலாம்! அவர்கள் நினைவைக் குறித்த நடுகல் வணக்கமே நாளடைவில் சிறு தெய்வ / பெருந் தெய்வ வணக்கமாக வளர்ச்சி பெற்றும் இருக்கலாம்.

முதலில் இயற்கை என்பது நடுகல்லானது.
பின்னர் நடுகல் என்பது தெய்வம் ஆனது.

இயற்கை வழிபாட்டின் படியே, மாயோன், முல்லை நிலத்தின் கடவுள் ஆனான்.  கருப்பொருள்/உரிப்பொருளைக் கவனிச்சிப் பாருங்க.
தமிழ் வகுப்பில் படிச்ச நினைவிருக்கா? இல்லை choice-இல் வுட்டுட்டீங்களா?

* முல்லை = காடும் காடு சார்ந்த இடமும் = பச்சைப் பசேல்-ன்னு தானே இருக்கும்? அதனால் பச்சை மாமலை போல் மேனி!
* பெரும்பொழுது = கார் காலம்! அதனால் கார் மேனி வண்ணன்!
* சிறுபொழுது = மாலை! அதனால் மால்! திருமால்!
* ஆயர்கள் நிலம்! அதனால் ஆயர் தம் கொழுந்தே!
* தொழில் = ஆநிரை மேய்த்தல்! அதனால் பசுக்களை மேய்த்தான்!
* விளையாட்டு = ஏறு தழுவுதல்! அதனால் காளைகளை அடக்கி நப்பின்னையை மணம் புரிந்தான்!
* முல்லை நிலத்தில் காதல் மிகுதி! அதனால் இவன் காதல் மன்னன்!
இப்படி எல்லாமே இயற்கையை ஒட்டிய வழிபாடு தான்! இயற்கைக் கடவுளாகவே திருமால் அறிமுகமானான்!
மாயோன்-சேயோன் = நாட்டு வழக்காக பெருமாள்-முருகன்!
--------------------
பின்னாளில்....வந்த பண்பாட்டுக் கலப்பு.....
மாயோன்-சேயோன் = "விஷ்ணு-ஸ்கந்தன்" என்றும் ஆகி வடக்கே சென்றனர்...

* ஆனால் போன இடத்தில், மாயோன் என்ற விஷ்ணுவைக் கொண்டாடிய அளவுக்கு, ஏனோ சேயோன் என்னும் ஸ்கந்தனை அவனுங்க அதிகம் கொண்டாடவில்லை! "ஸ்கந்த" புராணம் எழுதினார்கள், ஆனால் அதிகம் கொண்டாடவில்லை.

* முல்லை நில முதல்வனை, மும்மூர்த்திக்குள் ஒருவராய் வைக்க முடிந்த அளவுக்கு, குறிஞ்சி நில முதல்வனை ஏனோ வைக்கவில்லை! இத்தனைக்கும் முல்லையின் கண்ணன் கருப்பு! குறிஞ்சியின் முருகன் தான் வெள்ளை
இங்கிருந்து சென்ற இரு குழந்தைகள்!

* அங்கே ரொம்ப போற்றாத குழந்தை "மட்டுமே" இனி என் குழந்தை.
* அவர்கள் அதிகம் ஏற்றுக் கொண்டால், இனிமேல் அது என் குழந்தை அல்ல.
- என்று தமிழ்த் தாய் சொல்லுவாளா? அப்படி ஒரு தாய் சொல்லுவா-ன்னு சொல்றவங்க கையைத் தூக்குங்க பார்ப்போம்.

நினைவில் கொள்க:
எங்கு சென்றாலும்...மாயோனும் சேயோனும் என்றும் தமிழ்க் கடவுளரே.
தமிழ்க் கடவுளான திருமாலைத், தமிழ்த் தொன்மத்தில் இருந்தே ஒதுக்கி வைத்து.. இறையியலில் தமிழ்த் தொன்மத்தை நாமே சிதைக்கலாமா?
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு!

* எல்லாம் கடந்த இறைவனை மொழிக் குறுகலுக்குள் அடக்குவது நம் நோக்கம் இல்லை.
* அதே சமயம், நம் மொழியில், நம் இறையியல் வளர்ந்த பரிமாணத்தை அறிவதே நோக்கம்.
* இறைவனுக்கு நாம் தரும் பட்டங்கள் - தமிழ்க் கடவுள், தெலுங்கு தேவுடு, English Lord - ஒரு பொருட்டே அல்ல.
* இது நம் பண்பாட்டை நாம் அடையாளம் காணும் முயற்சி மட்டுமே!


தொல்காப்பியம்,
எட்டுத் தொகை,
பத்துப்பாட்டு,
பதினெண் கீழ்க் கணக்கு,
சிலப்பதிகாரம்,
மணிமேகலை,
சீவக சிந்தாமணி,
இறையனார் அகப் பொருள்,
நன்னூல்...
என்று அத்தனை சான்றுகளும், இனி இங்கே ஒவ்வொன்றாக வரும்......

//மாலவனோ அந்நியப்பட்டுத்தான் நிற்கிறான். தமிழர் தம் தனிப்பெருங்கடவுள் ஆகிவிட முடியாது//
= இப்படிச் சொல்பவர்கள் யார்? ஏன் சொல்கிறார்கள் என்பதையும் சற்றுப் பார்க்க வேண்டும்.

= சாதி/ பெரும்பான்மைப் போக்கு தான் காரணம்!
பார்ப்பனீயம் என்று பேசினாலும், "மே(வே)ளாளப் போக்காலும் இது போன்ற கருத்து எதேச்சாதிகாரங்கள் இல்லையென்றால், சமணம் தழைத்த காலத்தை, நீதி நூல்கள் தழைத்த களப்பிரர் காலத்தை, ஒட்டு மொத்தமாக "இருண்ட காலம்"-ன்னு பாடநூல்களில் முத்திரை குத்தி வைப்பார்களா? காலங்காலமாக இவர்கள் எழுதியதே வரலாறு.

* ஒட்டு மொத்த தமிழ் மரபையே பதுக்கி வைத்து,
* தாங்கள் மனம் போன போக்கே, தமிழ்ப் போக்கு என்று கதை கட்டி,
* அதைத் திரும்பத் திரும்பக் கட்டி...
* சமயப் "பெரும்பான்மைத்தனம்", சாதிப் "பெரும்பான்மைத்தனம்" தந்த அதிகாரத்தால்...
* சிறுபான்மைச் சமூகங்கள் தமக்கு அடங்கியே தங்கள் மரபைப் பேண வேணும்,
* மரபுச் சிறப்பில் சிறுபான்மைச் சமூகங்கள் தம்மை ஒரு போதும் முந்தி விடக் கூடாது போன்ற புத்தியுமே இப்படிச் சொல்லக் காரணம்!

தரவுகள் எதுவுமே தராமல், "மனம் போன போக்கில்", கருத்துரைக்கும் "பான்மை". இன்றைய இணைய உலகில், சங்கத் தமிழ் இலக்கியங்கள், அனைவரின் பார்வைக்கும் கிடைக்கின்றன.

அவரவர்களே மூலநூலைப் படித்து உண்மை உணர்ந்து கொள்ளலாம்!

அத்திலக வாசனை போல் "அனைத்துலகும் இன்பமுற"
எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெரும் தமிழ் அணங்கே.
- இது தமிழ்த்தாய் வாழ்த்தின் ஒரு சிறிய பகுதி.

இன்றைய நடைமுறையைக் காண்போமா?
* தமிழ்ப் பாசுரங்கள் ஓதிக் கொண்டு முன்னே செல்ல...
* தமிழின் பின்னால் பெருமாள் பவனி/ ஊர்வலம் வர...
* வடமொழி வேதங்களைத் தமிழுக்கும் பெருமாளுக்கும் பின்னே தள்ளி, சொற்ப அளவில் தான் சொல்லிக் கொண்டு...இன்றும் நடந்து வருகிறார்கள்.
இந்தக் காட்சியைத் திருமால் ஆலயங்களைத் தவிர வேறு எங்கு காண முடியும், சொல்லுங்கள்?

இப்படி ஒரு நிலைமை முருகன் ஆலயங்களிலும் வந்திடாதோ என்று ஏங்குகிறார், சிறந்த கவிஞரான குமரகுருபரர் - "பச்சைத் தமிழின் பின் சென்ற பசுங் கொண்டல் திருமாலே"

திருமாலின் கருவறைகளில் இன்றும் "பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு" என்று தமிழ் ஒலிக்கின்றது

"அடியார்கள் வாழ, சடகோபன் தமிழ் நூல் வாழ...." தமிழ் வாழ வேண்டும் என்று வாழ்த்தப்படுகிறது! - இதைத் தில்லை என்னும் சிதம்பரத்தில் காட்ட முடியுமா?

அட, கருவறைகளை விடுங்கள்!வெளியில் உள்ள அம்பலத்தில் நின்று பாடவே, கூத்தாட வேண்டியுள்ளதே.

எத்தனைப் பாடுபட்டார்கள் தமிழ் ஆர்வலர்கள்? ஓதுவார்கள் ஒரு ஓரமாய் இருந்து தானே....கடமைக்கு ஓத முடிகிறது, அதுவும் அரசாணையால்.
நிலைமை இப்படி இருக்க...

இன்றளவும் நடைமுறையில் தமிழைத் தாங்கிப் பிடிக்கும் ஒருவரையா தமிழ்க் கடவுள் இல்லை என்பது? "நாங்கள் தான் தலையில் இருந்து பிறந்தவர்கள், நாங்கள் மட்டு"மே" மூத்த குலம் என்போர்க்கும் இவர்களுக்கும், என்ன பெருசா வித்தியாசம்???

ஒப்புக்குத் தமிழ்த் தோல் போர்த்தி, உள்ளுக்குள் மதப் புலிகள்-ன்னு வேணும்ன்னாச் சொல்லலாம்!

செய்ய "தமிழ் மாலைகள்" யாம் தெளிய ஓதி
தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே!!!
இறையியலில், தமிழ் ஒருக்காலும் குறைவுபட்டது அல்ல இறைத்தமிழ் தொன்மம் மிக்கது. அந்தத் தமிழ்த் தொன்மத்தைத் தேடி...நம் வேர்களைத் தேடி...

இதோ.....இனி ஒரு திறனாய்வு...முருகனருளால்.....முருகா!!!
(இந்தத் திறனாய்வுக்கான உசாத்துணை (References):
1. தமிழர் மதம் - மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் = http://www.devaneyam.org/
2. தமிழ் இலக்கிய வரலாறு - டாக்டர் மு.வ
3. பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும் - தேவநேயப் பாவாணர்
4. தமிழ் இலக்கிய வரலாறு - தேவநேயப் பாவாணர்
5. தமிழ் இலக்கிய வரலாறு - டாக்டர். தமிழண்ணல்
6. முல்லைப் பாட்டு - மறைமலை அடிகள் உரை
7. தமிழ் இணையப் பல்கலைக்கழக நூலகத் திரட்டு = http://www.tamilvu.org/library/l0100/html/l0100001.htm )

அடுத்த பதிவில் ஒவ்வொரு இலக்கியத்திலும் யார் தமிழ் கடவுள் என்று அலசுவோம்....

ஆக்கம்:  Ramachandran Krishnamurthy

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :