Friday, December 26, 2014

Keerthivasan

யார் தமிழ்க் கடவுள்? - 3

யார் தமிழ் கடவுள் ??- ஓர் அலசல் : பாகம் 3

சங்க இலக்கியத்தில் தமிழ்க் கடவுள்.
வாருங்கள்....ஒவ்வொரு இலக்கியமாக, சுருக்கமாகப் பார்க்கலாமா?

தொல்காப்பியம்:
* இன்றைக்கு கிடைக்கும் மிக மிகத் தொன்மையான தமிழ் நூல் = தொல்காப்பியம் = கி.மு 300க்கும் முன்னால்! = அதில் திருமால் உள்ளாரா?
* முல்லையா? குறிஞ்சியா? - தொல்காப்பியருக்கு எது முதலில்?
* மாயோன்/ சேயோன் தமிழ்க் கடவுள்-ன்னா, அப்போ வேந்தன்/ வருணன் நிலைமை என்ன?அவர்களையும் தொல்காப்பியர் குறித்து வைக்கிறாரே?
= அவர்கள் மக்கள் வாழ்வியலில் இல்லை, வெறும் நில அடையாளங்களாக மட்டும் சொல்கிறார்! துறை, கூத்து என்று அவர்கட்கு ஒன்றும் இல்லை.
வேந்தன் = மருத நில மன்னன், வருணன் = கடல் காற்று; மாறிக் கொண்டே இருப்பவை; மாயோன்-சேயோன் போல் நிலைத்த தொன்மம் அல்ல.
= கொற்றவை, பாலை நிலத்து எயினர்/ கள்வர்கள் தெய்வமாகச் சங்க நூல்களில் சித்தரிக்கப்பட்டதால், அதிகப் பாடல்கள் இல்லை; எனினும் பிற்பாடு பெரிதும் பரவியவள்; கொற்றவையும் தமிழ்க் கடவுளே.
* அரும்பெறல் மரபின் பெரும்பெயர் = யார்?
* முன்னை மரபின் முதுமொழி முதல்வன் = யார்?
தொல்காப்பியத்தில் தமிழ்க் கடவுள்
தொல்காப்பியம்:
இன்றைக்கு கிடைக்கலாகும் மிகத் தொன்மையான தமிழ் நூல் தொல்காப்பியம் - > கி.மு 300 - சங்கத் தமிழின் காலக் கண்ணாடி.
பழந்தமிழ் மக்கள் வணங்கியது இயற்கையை.
அதுவே இயற்கையை ஒட்டிய தெய்வங்களாக நாளடைவில் வளர்ச்சி பெற்றது.
பழந்தமிழ் மக்கள் வணங்கிய இரு பெரும் இயற்கைத் தெய்வங்கள் = மாயோன், சேயோன்.
* மாயோன் = கண்ணன் = பெருமாள் = முல்லைக் கடவுள்
* சேயோன் = முருகன் = குறிஞ்சிக் கடவுள்

"தங்கள் கண்ணுக்குப் பச்சைப்பசேல் எனக் காட்சி வழங்கிய காட்டின் இயற்கை அழகை மால் என்று வழுத்தினர்" - இவ்வாறு சொல்வது மூத்த பெரும் தமிழறிஞரான திரு.வி.க.

"காடுறை கடவுள் கடன் கழிப்ப" என்று பொருநராற்றுப்படை பேசுகிறது குமரன்! அடர்ந்த காட்டில் செல்லும் போது நோக்கத் தக்கனவாக ஒவ்வொன்றாகச் சொல்லும் போது, இப்படிப் பேசுகிறது.
ஆனால் காட்டுக்கு மால் என்ற நேரடிப் பொருள் இல்லை-ன்னே நினைக்கிறேன். காட்டின் தெய்வம் மால் என்பது தொல்காப்பியம்!

கரும்பசுமை உள்ள காட்டை/மலையை மால் என்று அடைமொழி சொல்வது தான் வழக்கம்! மால்வரை நிவந்த சேணுயர் வெற்பு என்பது திருமுருகாற்றுப்படை.

காட்டின் அடர்த்தியும், கரும்பசுமையும், அடர்த்தியால் கதிரொளி புக முடியாதபடி இருப்பதால் மயக்குறு அமைப்பும் - இதெல்லாம் சேர்ந்து வேண்டுமானால் "மால்" என்று பெயர் பெற்றதாகச் சொல்லலாம்! மால் என்பது காட்டுக்கும்/மலைக்கும் அடைமொழியே தவிர, காடே மால் அல்ல.
மால்-வரை
மால்-முகடு
மால்-தண்கா
மால்-பொழில்
மால்-இருஞ்சோலை
மால்-வனம்
இது போன்ற மால் அடைமொழி கொண்டு திரு.வி.க அப்படிச் சொல்லி இருப்பார்.

இன்றைய நவீன காலத்து மால்கள் சென்னையில் உள்ள அல்சா மால் பீனிக்ஸ் மால் போன்ற மால்கள் யாவையும் திருமால் என்று பொருள்படத்தான் அமைந்ததோ என்று யாரவது தர்க்கம் பேசினால் ஓடி ஒழிவதை தவிர வேறு வழியே இல்லை...ஹஹஹஹஹஹஹ

இயற்கை வழிபாட்டின் படி, மாயோன், முல்லை நிலக் கடவுள் ஆனான்,இயற்கை நடுகல்லாகி, நடுகல் தெய்வம் ஆனது.

வைதிகச் சடங்குகளிலும், குறிப்பாக இறுதிச் சடங்குகளில், மூன்று கற்களை - நடுவில் இறந்தவர் நினைவாக, வலப்புறம் பித்ரு/முன்னோர் நினைவாக, இடப்புறம் யமன் நினைவாக - வைத்து அதன் முன் படையல் இடுவது இருக்கிறது. இரண்டாவது நாள் பால் ஊற்றி சிதையை அணைத்த பின் அங்கேயே இப்படி மூன்று கற்களை வைத்துப் படையல் இடுகிறார்கள் இதற்க்கு சஞ்சயனம் என்று பெயர் . பின்னர் ஆற்றில்/நீர்நிலையில் அஸ்தியைக் கரைத்த பின்னர் ஆற்றங்கரையில்/நீர்நிலைக்கரையில் செய்யும் சடங்குகளிலும் அப்படியே செய்கிறார்கள்.

பாயிரம்:
வட வேங்கடம் தென் குமரி ஆயிடைத்
தமிழ் கூறும் நல் உலகத்து
வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்
எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி
....
வேங்கடத்தைத் தமிழகத்துக்கு வட எல்லையாகக் காட்டும் தொல்காப்பியம்
வேங்கடத்தின் மேல் நின்றான் யார்? அதைச் சிலப்பதிகாரப் பகுதியில் காணலாம்!
பொருளதிகாரம் - அகத்திணை இயல்:
சிறப்புடை பொருளை முற்படக் கிளத்தல் என்னும் தொல்காப்பிய மரபுப் படி, முல்லை நில மாயோனை முதலிற் சொல்லி,
பின் குறிஞ்சியைச் சொல்லிப் போந்தார்,
நம் முதல் தமிழ்ச் சான்றோனான தொல்காப்பியர்.
மாயோன் மேய காடு உறை உலகமும்
சேயோன் மேய மை வரை உலகமும்
வேந்தன் மேய தீம் புனல் உலகமும்
வருணன் மேய பெரு மணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே......
குறிஞ்சி, முல்லை....என்று தானே நாம் படிச்சது? இங்கே வரிசை மாறி இருக்கே? முல்லை, குறிஞ்சி-ன்னு ஏன் சொல்லணும் தொல்காப்பியர்?
நிலத்துக்கு உரிய கருப் பொருள்/உரிப் பொருள் பார்த்தீங்கன்னா கூட, இந்த இயற்கை முறை எளிதா விளங்கும்.
முல்லை: பெரும் பொழுது = கார் காலம் (மழைக் காலம்), இப்போதைய புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை
குறிஞ்சி: பெரும் பொழுது = கூதிர் காலம் (குளிர் காலம்), இப்போதைய கார்த்திகை, மார்கழி, தை
முல்லை: சிறு பொழுது = மாலை
குறிஞ்சி: சிறு பொழுது = யாமம் (இரவு)
முல்லை: உரிப்பொருள் = இருத்தலும் இருத்தல் நிமித்தமும்
குறிஞ்சி: உரிப்பொருள் = புணர்தலும் புணர்தல் நிமித்தமும்

அதாச்சும் முதலில் அவனுக்காக/அவளுக்காகக் காத்தி்ருந்து, அப்பறமா புணர்தலும் புணர்தல் நிமித்தமும்! இந்த விசயத்தில், எனக்கு குறிஞ்சி தான் ரொம்ப பிடிக்கும்-ப்பா

இப்போ தெரியுதா, முல்லையை முதலில் சொல்லி, பின்னர் குறிஞ்சி ஏன் என்று. கால நேரப்படி பார்த்தாலும் முல்லையின் பொழுதுகள் முன்னமேயே அமைந்து விடுகின்றன
.
நீரே அடிப்படை! நீரின்றி அமையாது உலகு.

அதான் மழையில் தொடங்கி, இயற்கையிலேயே முல்லை-மாயோன், பிறகு குறிஞ்சி-சேயோன் என்று தொல்காப்பியம் விரிக்கிறது.

சரி....மாயோன்/சேயோன் சரி! தமிழ்க் கடவுள் தான்.
ஆனா வேந்தன், வருணன் என்றும் காட்டுகிறதே தொல்காப்பியம்?
வேந்தன்-வருணன் வெறும் நில அடையாளங்களாக மட்டும் நின்று விடுகின்றனர்.

மாயோன்-சேயோன் போல் மக்கள் தெய்வங்களாக பரிணமிக்கவில்லை.
தொல்காப்பியமே, வேந்தன்-வருணனுக்குத் துறைகள் ஒதுக்க வில்லை.
திணை என்னும் நில அடையாளம்! துறை என்னும் மக்கள் வாழ்வு.

மாயோனுக்கு = பூவை நிலை என்னும் துறை.
சேயோனுக்கு = வெறியாடல் என்னும் துறை.
வேந்தன்-வருணனுக்கு இப்படியான துறைகள் எதுவும் தொல்காப்பியம் காட்டவில்லை.

மாயோன்-சேயோன் என்ற இரு தெய்வங்களும், நிலத்துக்குரிய தெய்வங்களாக மட்டும் இல்லாது, மக்களின் அன்றாட வாழ்வியல் (காதல்/வீரம்/அகம்/புறம்) தெய்வங்களாகவும் திகழ.......

வேந்தன், வருணன் என்ற மற்ற இருவர்கள், நிலத்துக்கு அடையாளமாக மட்டும் நின்று விட்டனர். இவர்களைப் பற்றிய கோயில்களோ, கூத்தோ, மக்கள் அன்றாட வாழ்வில் குறிப்புகளோ ஒன்னுமே இல்லை! மக்கள் செல்வாக்கு-ன்னு ஒன்னு வேணுமில்ல?
மாயோன்/சேயோனைப் பேசும் அளவுக்குச் சங்க நூல்கள் இவர்களை அதிகம் பேசவே இல்லை.

மருதம், நெய்தலில் கூட, நிலங் கடந்த தெய்வங்களாக, மாயோன்-சேயோன் ஆலயங்களே காணப்படுகின்றன.

திருவேங்கடம், அரங்கம், திருச்செந்தூர், ஏரகம், செங்கோடு போன்ற ஆலயக் குறிப்புகளைக் காட்டும் இலக்கியங்கள், வேந்தன்/வருணனுக்கு ஒன்றுமே காட்டுவதில்லை. மக்களின் அன்றாட வாழ்வியல் தெய்வங்களாக அமையாமல், நிலத்துக்கான அடையாளமாக மட்டும் நின்று விட்டனர்!
பொருளதிகாரம் - புறத்திணை இயல்:

நாடு காப்பவனை, சிறப்பித்துப் பாடும் துறைக்கு பூவை நிலை என்று பெயர் இட்டு, மாயோனின் பெரும் சிறப்பு போல் மன்னவன் விளங்கப் பாடுவது......
ஒரு நாட்டின் முதல் குடிமகன்.....அவனை மாயோனோடு வைத்துப் பேச வேண்டிய அவசியம் என்ன?

மாயோன் "முதல்வன்", மன்னன் "முதல்" குடிமகன் என்பதால் தானே?
மாயோன் மேய மன் பெருஞ் சிறப்பின்
தாவா விழுப் புகழ்ப் பூவை நிலையும்
இயற்கையின் மூலப் படிவ உருவினனான மாயோன்...
மாந்தர் தம் வாழ்வியல் கூறுகள் வழியாக...
மூலப் படிவப் பாத்திரமாக (Archetypal Character) உயர்ந்தமை தொல்காப்பியம் காட்டும் இன்றியமையாக் குறிப்பாகும்.
(குறிப்பு: இந்தத் தொடர் சங்கப் பாடல்களுக்கான முழு விளக்கம் இல்லை!.திருமால் சங்க இலக்கியத்தில் எங்கெங்கெல்லாம் வருகிறான் என்பதற்கான அகச் சான்று - அறிதல் முயற்சி மட்டுமே.)

ஆக்கம்: Ramachandran Krishnamurthy

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :