Monday, January 12, 2015

Keerthivasan

எங்கே பிராமணன் ? – 12 – உணவின் முக்கியத்துவம் - 3

சோவின் பதில் தொடர்கிறது...
சமையல் செய்பவர்களிடம் விசாரித்து, பின்னர் சேவகர்களிடமும் விசாரித்தபோது, அமைச்சர்களுக்கு ஒரு விஷயம் தெரிய வந்தது. அன்றைய தினம் ஒரு கொள்ளைக்காரன் பிடிபட்டிருந்தான். அவன் அரிசி மற்றும் பல்வேறு தானியங்களைப் பெரும் அளவில் கொள்ளை அடித்து வைத்திருந்தான். அவனிடம் இருந்த பயம் காரணமாக, அரிசி முதலியவற்றைப் பறி கொடுத்தவர்கள், அவனைப் பற்றிப் புகார் செய்யவும் இல்லை; தானியங்கள் கிடைத்த பின்னரும் யாரும் முன் வந்து, ‘இவை தன்னுடையது’ என்று கூறவும் இல்லை.

இந்தச் சூழ்நிலையில், அந்த அரிசி முதலியவை அரண்மனைச் சமையலறைக்கு அனுப்பப்பட்டன. அவை எல்லாமே மிக விசேஷமான தரமுள்ளவையாக இருந்தன. அரசர் மனம் விரும்பி, ஒரு பெரியவருக்கு விருந்து படைக்கச் சொன்னபோது, சமையலறைப் பொறுப்பாளர்கள், ‘இந்த விசேஷமான அரிசியைச் சமைத்து முதலில் அந்தப் பெரியவருக்குப் படைப்போம்; பின்னர் மற்றவர்கள் அதை சாப்பிடட்டும்’ என்று தீர்மானித்தனர். அதன்படியே, அந்தப் பெரியவருக்கு அன்று அந்த அரிசிதான், உணவாகத் தரப்பட்டது.


இந்த விவரங்களைக் கேட்டவுடன் அந்தப் பெரியவர் சொன்னார்: ‘ஒரு கொள்ளைக்காரன்; திருட்டுப் புத்தி உடையவன்; அவனிடமிருந்து பெறப்பட்ட அரிசியை நான் உண்டேன்! அதனால்தான் எனக்கும் அந்தத் திருட்டுப் புத்தி வந்துவிட்டது! ஏதோ வித்தியாசமாக நடந்திருக்கிறது என்று தவித்தேன். இப்போதுதான் புரிகிறது!’ இம்மாதிரி அவர் கூறி, உணவின் தன்மையை விளக்கி, ‘சுத்தமான உணவு’ என்றால், மனதளவில் கூட சுத்தமானவர்கள் படைக்கிற உணவு என்று பொருள் என்பதையும் எடுத்துச் சொன்னார். அரசனும் உணவின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டான்.



கேள்வி : அந்தக் கொள்ளைக்காரனுடைய திருட்டுப் புத்தி, அவனிடம் இருந்த அரிசியில் குடியேறி விடுமா? நம்புகிற மாதிரி இல்லையே! ஒருவனுடைய மனதில் இருக்கிற எண்ணம், வெளியில் எப்படி ஒரு பாதிப்பை ஏற்படுத்த முடியும்?

சோ : நான் ஒன்று கேட்கிறேன். ‘லைடிடெக்டர்’ என்கிற உபகரணம், பயன்படுத்தப்படுகிறதே – அது எப்படி ஒருவனுடைய மனதில் உள்ள எண்ணத்தை, அறிந்து கொண்டு விடுகிறது? சில மின் அதிர்வுகள்… என்று ஏதாவது விளக்கம் கொடுக்கலாம். ஆனால், ஒருவனுடைய மனதில் உள்ளது, அவன் உடலில் சில பாதிப்புகளை உண்டாக்கி, அது ஒரு பொருளில் பதிவாகிறது. ஒருவனுக்கு உடலில் நோய் இருந்தால், அவன் தொடுகிற உணவில் கிருமிகள் இருக்கக் கூடும் அல்லவா? அதே போல, ஒருவனுடைய எண்ணத்தில் மாசு இருந்தால், அது அவன் சம்பந்தப்பட்ட உணவையும் பாதிக்கும் என்று நம்பப்பட்டது; அந்த நம்பிக்கை இன்றும் பலரிடம் தொடர்கிறது. ‘அவன் வீட்டிலே சாப்பாடா? வேண்டவே வேண்டாம். அவன் பண்ற பாவம், நமக்கும் வந்து சேரும்’ என்கிறார்கள். இது நம்பிக்கையின்பாற்பட்ட விஷயம். நம்புவதும், நம்பாததும் அவரவர் மனப்போக்கைப் பொறுத்தது.

உணவின் தன்மை பற்றி, பகவத் கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் பேசியிருக்கிறார். ஸத்வ, ரஜோ, தமோ குணங்கள் பற்றி விரிவாகப் பிறகு பார்ப்போம். சுருக்கமாகச் சொன்னால், மனிதர்கள் இந்த மூன்று குணங்களை உடையவர்களாக இருக்கிறார்கள்; இந்த மூன்றில் ஒன்று ஒருவனிடம் ஓங்கி இருந்தால், அவன் அந்த குணம் படைத்தவனாகக் கருதப்படுகிறான். ஸத்வ குணம், தூய்மையை உடையது; இக்குணம் கொண்டவன் தனது ஞானத்தை விருத்தி செய்து கொள்ள முனைவான். ரஜோ குணம், உணர்ச்சிகளின் ஆதிக்கத்தை உடையது; இக்குணம் உடையவன் ஆசைகளினால் தூண்டப்பட்டவன்; அவனுக்கு கோபமும் அதிகமாக இருக்கும். தமோ குணம், அறியாமையைக் குறிப்பது; இக்குணம் உடையவனுக்கு சோம்பல் மிகுந்திருக்கும்; அறியாமையில் மூழ்கி, மன மயக்கத்தில் சிக்குகிற இயல்பு இக்குணம் உடையவர்களுக்கு இருக்கும். இந்த முக்குணங்கள் பற்றி, வெவ்வேறு கோணங்களில் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் விளக்கியிருக்கிறார். அதில் உணவு பற்றியும் வருகிறது.

ஆஹாரஸ் த்வபி ஸர்வஸ்ய
த்ரிவிதோ பவதி ப்ரிய: (17/7)
– என்கிறார் கிருஷ்ணர்.

அதாவது –

ஒவ்வொருவன் உண்ணும் உணவும் கூட, (முக்குணங்களின் தன்மைக்கேற்ப) மூன்று விதமாக உள்ளது.

இப்படிக் கூறிவிட்டு, ஸ்ரீ கிருஷ்ணர், மேலும் விவரித்துக் கூறுகிறார்.

ஆயு: ஸத்வ பலாரோக்ய
ஸீகப்ரீதி விவர்தனா:
ரஸ்யா: ஸ்நிக்தா: ஸ்திரா ஹ்ருதயா
ஆஹாரா: ஸாத்வீக ப்ரியா:
கட்வம்ல லவரைத்யுஷ்ண
தீக்ஷ்ண ரூக்ஷ விதாஹின:
ஆஹாரா ராஜஸஸ்யேஷ்டா
துக்க சோகாமயப்ரதா:
யாதாயாமம் கதரஸம்
பூதி பர்யுஷிதம் ச யத்
உச்சிஷ்டம் அபி சாமேத்யம்
போஜனம் தாமஸப்ரியம்
(17/8,9,10)

இந்த ஸ்லோகத்தின் கருத்து :
இனிமையான, ரஸமுள்ள, நற்சுவை பொருந்திய உணவு வகைகள் ‘ஸத்’ குணத்திற்குரியவை: இது பலத்தையும் தந்து, சுகாதாரமாகவும் இருக்கும். ‘ரஜோ’ குணத்தில் உள்ளவர்கள், மிகவும் காரமான, அல்லது புளிப்பான உணவு வகைகளை விரும்புவார்கள்; இவை உடலுக்குத் துன்பம் தரக் கூடியவை.‘தமோ’ குணத்தை உடையவர்கள் பழையதும், ஒரு வித நாற்றம் வருகிறதுமான உணவை விரும்புவார்கள்; இது மனத் தூய்மையைக் கெடுக்கும். நாம் உண்ணுகிற உணவைப் பற்றி இவ்வாறெல்லாம் ஹிந்து மதம் விவரித்துச் சொல்கிறது. இன்றைய மருத்துவர்கள் எவ்வகையான உணவுகள் உட்கொள்ளத் தக்கவை என்பதைப் பட்டியலிடுகிறார்கள். ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தக் கூடியவை, ஜீரணத்தைப் பாதிக்கக்கூடியவை போன்ற உணவுகள் எவை என்பது புத்தகங்களில் எல்லாம் வருகிறது. ஏன்? இப்படிப்பட்ட பாதிப்புகள் உடலில் தோன்றுகிறபோது, மனிதனின் குணமும் மாறுகிறது.அதனால்தான் கீதை, எந்தெந்த உணவுகள், எந்தெந்த குணத்தை குறிக்கும் என்பதை மேற்கண்டவாறு சொல்லியிருக்கிறது.

 – CHO
– தொகுப்பு : அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன்

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :