Monday, January 12, 2015

Keerthivasan

ஒரு தத்வார்த்த பயணம் – 7 – மறுபிறவி உண்டா?

இதுகுறித்து இயற்பியல் ரீதியில் ஒரு அருமையான பதிவைக் கண்டபோது நான் எழுத நினைத்த தர்க்கவியல் ரீதியிலான விஷயம் ஒன்றைப் பகிர விரும்புகிறேன். இது தர்க்க ரீதியில் மட்டுமின்றி அறிவியல் ரீதியிலும் உள்ள விஷயம்தான்!

மனித உயிர் எப்படி ஜனிக்கிறது என்பது நாமெல்லோரும் அறிந்த ஒன்றாகவே இருக்கும்! ஆனாலும் கூட அந்த உயிர் என்பது தாயின் கர்ப்பத்தில் வந்து அமர்வது எப்படி என்பது நாமறியாத புதிரே! இது போன்ற விஷயம் ஒன்று நம்முடைய ஆறறிவுக்கும் எட்டாமல் வைக்கப்படுவதற்கும் எதாவது காரணம் இருக்கும்! இதையும் தெரிந்து கொண்டால் நம்ப மனிதன் அடுத்த பிறவியில் எப்படி வாழ்வது என்றெல்லாம் ப்ளான் பண்ண ஆரம்பித்து விடுவான் என்பதுங் கூட ஒரு காரணமாக இருக்கலாம்! இருப்பினும் முற்பிறவி நினைவுகள் சிலருக்கு உள்ளதாக வரும் செய்திகளை அடிக்கடிக் காண்கிறோம்! அவை மனோதத்துவ ரீதியில் கூடக் கண்டறிய முடியாத விஷயங்களாகவே உள்ளது!

ஆக பிறப்பு எப்படி என்பது ஒரு மர்மமாகவே இருக்கும் போது இறப்புக்குப் பின் என்ன என்பதும் மனிதனுக்கு மர்மமாகவே வைக்கப்பட்டுள்ளது! சொல்ல முடியாது இறந்த பின் என்ன ஆவோம் எங்கு போவோம் என்பதெல்லாம் தெரிந்தால் சுயநல மனிதன் முடிந்தால் தான் சேர்த்து வைத்த சொத்துக்களைக் கூட அங்கு கொண்டு போக முயற்சி செய்யக் கூடும்! இறப்புக்குப் பின் என்பது குறித்த பல மனோதத்துவ விஞ்ஞான ஆராய்ச்சிகள் நடந்த வண்ணமே உள்ளன! அதில் முக்கியமானது சிலர் இறந்து போய்ப் பிழைத்திருப்பார்! அதாவது இதயத் துடிப்பு முழுதும் நின்றபின் எப்படியோ இரண்டு மூன்று மணி நேரம் கழித்து ஆச்சரியப் படும் விதத்தில் பிழைத்தவர் உண்டு! அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் அனைத்துமே அவர்கள் ஒரே போன்ற நிகழ்வுகளை சொல்வதாக அமைந்துள்ளன! அதாவது ஒரு இருட்டுப் பாதையில் செல்வது போன்று!

இது எல்லாம் அறிவியல் ரீதியில் உண்மையா பொய்யா என்பது ஒரு புறமிருக்க அறிவியல் மற்றும் தர்க்க ரீதியாக மறுபிறப்பு என்ற ஒன்று இருக்கக் கூடும் என்கிற கருத்து பற்றி சொல்ல விரும்புகிறேன். இதுவும் கூட விஞ்ஞான மனப்பான்மை கொண்ட உண்மைப் பகுத்தறிவு நண்பர் ஒருவருக்கும் எனக்கும் நடந்த விவாதங்களின் சாரம்தான்:

நாமெல்லாம் அறிந்த ஒன்று நியூட்டனின் விதிகள்! அதில் நியூட்டனின் முதலாவது விதி : " ENERGY CAN NEITHER BE CREATED NOR DESTROYED BUT CAN BE CONVERTED FROM ONE FORM IN TO OTHER'' அதாவது '' சக்தி என்பது உருவாக்கவோ அழிக்கவோ இயலாதது! அதை ஒன்றிலிருந்து இன்னொரு வடிவத்துக்கு மாற்ற இயலும்'' இது இயற்பியலில் முக்கிய விதி! ஆக நம் வீட்டில் விளக்கு எறிவது மின்சார சக்தி ஒளிசக்தியாக மாறுவது! மோட்டார் ஓடுவது மின்சார சக்தி சுழல் சக்தியாக மாறுவது! ஒரு கார் இஞ்சின் ஓடுவதென்பது பெட்ரோலில் உள்ள ரசாயன சக்தி இயந்திரவியல் சக்தியாக மாறுவது அவ்வளவே!

நான் விளையாட்டாகச் சொல்வதுண்டு! நியூட்டனின் முதலாம் விதி இயற்பியலுக்கு மட்டுமில்லை வாழ்வியலுக்கும் பொருந்தும் என்று! ( அது உண்மையும் கூட!). நம்மமுடைய செயல்களுக்கு எதிர்வினை என்று கண்டிப்பாக உண்டு! என்ன, வாழ்வியலில் அந்த எதிர்வினை உடனே வராமல் கொஞ்சம் நாள் கழித்து வரும்! நமக்குத் துரோகம் செய்த ஒருவன் கண்டிப்பாக இன்னொருவனால் துரோகமிழைக்கப்படுவான் எனபது வாழ்வியலில் நாம் அன்றாடம் காணும் உண்மை! அவ்வாறின்றி உள்ளவன் அந்தப் பலனை அடுத்த பிறவியில் அடைவான் என்கிறன்றன நமது சாத்திரங்கள்! அவ்வளவே. இதையேதான் '' வினை விதைத்தவன் வினை அறுப்பான்!'' என்றும் சொல்கின்றனர்.

சரி இதற்கும் மறுபிறவிக்கும் என்ன சம்பந்தம் உள்ளதா என்று சிந்தித்தால் ஒரு சிந்தனை தோன்றுகிறது! மனிதன் என்பவன் உடல், உயிர் இரண்டாலுமே ஆனவன்! ஆக மனிதன் என்பதை உயிரும் உடலும் இணைந்த ஒரு நிலையையே கூறுகிறோம்! உயிரில்லா உடல் பிணம்! உடல் இல்லா உயிர் உள்ளதா என்பது நாமறியாதது! இதில் உடல் அசலமானது அதாவது மரம் போன்று அசைவுகள் இல்லாததே! அதில் உயிர் என்ற ஒன்று உள்ளதுதான் அந்த அசல உடலை இயங்க வைக்கிறது! ஆக மனிதன் என்பதில் சக்தி உயிர் சக்திதான்! உடல் வெறும் சக்தியில்லாத பொருள்தான்! உயிர் சக்திதான் இதயத் துடிப்பின் மூலம் உடலை இயங்க வைத்து உயிர் உள்ளதைக் காட்டுகிறது! ஆக உடலிலிருந்து உயிர் பிரிந்து விட்டால் உடல் ஒரு மரக்கட்டைக்கு ஒப்பானதே!

இப்போது எண்ணிப் பாருங்கள்! உயிர் சக்தி எங்கிருந்தோ நாமறியாத வகையில் தாயின் கருவறையில் வருகிறது! பின் மனிதன் பிறக்கிறான்! அவன் இறக்கும் பொது உயிர் சக்தி உடலில் இருந்து பிரிந்து விடுகிறது. சரி, எந்த சக்தியையும்தான் ஆக்கவோ அழிக்கவோ முடியாதே நியூட்டனின் விதிப்படி! அப்போது உடலிலிருந்து பிரிந்த உயிர் சக்தியும் வேறேதாவது ஒரு வடிவைத்தானே எடுக்க முடியும்! நமக்குத் தெரிந்து உயிர் சக்தி உடல் என்னும் அசலத்தில் இணைந்து மனிதனாகிறது! அந்த உடலிலிருந்து பிரிந்த பின் அந்தச் சக்தி இல்லைஎன்றா ஆகிவிடும்? அது நாமறியாத வேறு ஏதோ ஒன்றுடன் போய் இணைந்து அதை இயங்க வைக்கக் கூடும் அல்லவா?

ஆக இதையே நமது சாத்திரங்களில் இறந்தபின் மனித உடலில் இருந்து பிரியும் உயிர் வேறொரு வடிவில் தன் நினைவுடன் 'பித்ரு' என்னும் வடிவம் கொண்டு பிதுர்லோகம் எனும் இடத்தில் வசிப்பதாகக் கூறுகின்றன! அதனால்தான் இறந்தோருக்கு பிதுர்க்கடன்களை நிறைவேற்றச் சொல்கிறார்கள்! அது ஏன் உண்மையாக இருக்க வாய்ப்பில்லை? இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம்! ஆனால் சக்தியின் நிலைப்பாடு பற்றிய நியூட்டனின் முதலாம் விதியை உயிர்சக்திக்கும் பொருத்திப் பார்க்குமிடத்து அது உண்மையாகவே இருக்கும் என்றே நம்ப இடமுள்ளது!

தொடரும்

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :