Saturday, May 23, 2015

Keerthivasan

தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் - 10 - திரிகூட மலை


தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் - 06 - திரிகூட மலை

 சித்திர சபையும், கஷாய நைவேத்யமும்....

அருள்மிகு குற்றாலநாதர் திருக்கோயில்



இறைவன் : அருள்மிகு ஸ்ரீ குற்றாலநாதர்
இறைவி : குழல்வாய்மொழி, பராசக்தி (இரண்டு அம்மன் சன்னதிகள்)
தல விருட்சம் : குறும்பலா
தீர்த்தம்:சிவமதுகங்கை, வட அருவி
புராண பெயர்:திரிகூட மலை
ஊர்:குற்றாலம்
மாவட்டம்:திருநெல்வேலி.





திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், பட்டினத்தார், அருணகிரிநாதர் ஆகியோரால் பாடல் பெற்ற தலம்.

தேவாரப்பதிகம்

திருந்த மதிசூடித் தெண்ணீர் சடைக்கரந்து தேவிபாகம் பொருந்திப் பொருந்தாத வேடத்தால் காடுறைதல் புரிந்த செல்வர் இருந்த இடம்வினவில் ஏலங்கமழ் சோலையின வண்டுயாழ்செய் குருந்த மணநாறும் குன்றிடஞ்சூழ் தண்சாரல் குறும்பலாவே.

-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற பாண்டியநாட்டுத்தலங்களில் இது 13வது தலம்.

தல சிறப்பு: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் 64 சக்தி பீடத்தில் இது, "பராசக்தி பீடம்' ஆகும்.

முகவரி: அருள்மிகு குற்றாலநாதசுவாமி திருக்கோயில், குற்றாலம் - 627 802. திருநெல்வேலி மாவட்டம். போன்: +91-4633-283 138, 210 138.

இத்தலவிநாயகர் வல்லபகணபதி என்று அழைக்கப்படுகிறார். பிரகாரத்திலுள்ள முருகன், கையில் வில்லேந்தியபடி காட்சி தருகிறார். இவருடன் வள்ளி, தெய்வானை இருவரும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்த்தபடி இருக்கின்றனர். குற்றால அருவி நீர் விழும் பாறையில், பல சிவலிங்க வடிவங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. அபிஷேகப் பிரியரான சிவனுக்கு, எப்போதும் அபிஷேகம் நடக்க வேண்டுமென்பதன் அடிப்படையில் இவ்வாறு செதுக்கியிருக்கிறார்கள். சிவனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டதாகக் கருதப்படும் இந்த தீர்த்தத்தில் நீராடுவது மேலான புண்ணியத்தைத் தரும். பிரகாரத்தில் அகத்தியர் சன்னதிக்கு எதிரில் அவரது சீடர், சிவாலய முனிவருக்கு சன்னதி இருக்கிறது.

தீராத தலைவலி உள்ளவர்கள் இங்கு சிவனை வழிபட்டு, தைல பிரசாதம் பெற்றுச் செல்கிறார்கள். இதை தேய்த்துக் கொண்டால் தலைவலி பிரச்னை நீங்குவதாக நம்பிக்கை.

தலபெருமை:
நான்கு வேதங்கள் 4 வாயிலாகவும், இறைவனின் நடனம் காண பிலவேந்தன் வந்த வழி ஐந்தாவது வாயிலாகவும் அமைந்துள்ளது. இங்குள்ள துவாரபாலகர்களின் அமைப்பு மிகவும் சிறப்பானது. இக்கோயில் வைணவக்கோயிலாக இருந்த போது, அகத்தியர் நேற்று வந்தாரா? என ஒரு துவாரபாலகர் கேட்பதைப்போலவும், இன்னொரு துவார பாலகர் அவர் வரவில்லை என கூறுவதைப்போலவும் உள்ளது.

நீர், நிலம், நெருப்பு, வாயு, ஆகாயம் என பஞ்சபூத லிங்கங்களையும் இங்கு ஒன்றாக தரிசிக்கலாம். பஞ்ச சபைகளான பொற்சபை, வெள்ளி சபை, தாமிர சபை, ரத்ன சபை, சித்ர சபை என்ற 5 சபைகளில் குற்றால நாதர் கோயில் அருகே சித்ர சபை அமைந்துள்ளது. இங்குள்ள மூலவர் நடராஜர் சித்திரமாக அருளுகிறார்.

இக்கோயிலுக்கு மொத்தம் 5 வாசல்கள் உள்ளன.

குற்றாலநாதர் லிங்கத்தின் மீது, அகத்தியரின் விரல் பதிந்த தடங்கள் தற்போதும் இருக்கிறது. அகத்தியர், திருமாலின் தலையில் கை வைத்து அழுத்தியதால், சிவனுக்கு தலை வலி உண்டானதாம். எனவே, இவருக்கு தலை வலி நீங்க தினமும் காலையில் 9.30 மணிக்கு நடக்கும் பூஜையில், தலையில் (லிங்க பாணத்தின் மீது) தைலம் தடவுகின்றனர்.

பசும்பால், இளநீர், சந்தனம் மற்றும் 42 விதமான மூலிகைகளைச் சேர்த்து 90 நாட்கள் வேகவைத்து, அந்த கலவையில், செக்கில் ஆட்டி எடுத்த தூய நல்லெண்ணெய் சேர்த்து, இந்த தைலம் தயாரிக்கின்றனர்.

சிவனுக்கு, அபிஷேகம் செய்த தைலம் பிரசாதமாகவும் தருகின்றனர். இதுதவிர, தினமும் அர்த்தஜாம பூஜையின்போது, "கடுக்காய் கஷாய' நைவேத்யம் படைக்கின்றனர். அருவி விழும் இடத்தில் இருப்பதால் சிவனுக்கு ஜுரம், குளிர்காய்ச்சல் உண்டாகாமல் இருக்க இந்த கஷாயம் படைக்கின்றனர். சுக்கு, மிளகு, கடுக்காய் உள்ளிட்ட மூலிகைகள் சேர்த்து தயாரிக்கும் இதை, "குடுனி நைவேத்யம்' என்கிறார்கள். சக்தி பீடங்கள் 64ல் இது, "பராசக்தி பீடம்' ஆகும். இத்தல அம்பிகை, "குழல்வாய்மொழிநாயகி' என்றழைக்கப்படுகிறாள். ஐப்பசி பூரத்தன்று திருக்கல்யாண விழா நடக்கிறது. அன்று குற்றாலநாதர், குழல்வாய்மொழி நாயகி இருவரும் அகத்தியர் சன்னதிக்கு அருகில் எழுந்தருளி, அகத்தியருக்கு திருமணக்காட்சி கொடுக்கின்றனர்.

அகத்தியர் இங்கு திருமால் தலத்தை, சிவத்தலமாக மாற்றிய போது சுவாமிக்கு வலப்புறம் இருந்த ஸ்ரீதேவி, குழல்வாய்மொழிநாயகியாகவும், பூதேவி, பராசக்தியாகவும் மாற்றினாராம். பராசக்தி, இங்கு ஸ்ரீசக்ர அமைப்பிலுள்ள பீடத்தின் வடிவில் காட்சி தருகிறாள். பூமாதேவியாக இருந்து மாறிய அம்பிகை என்பதால் இந்த பீடத்திற்கு, "தரணி பீடம்' (தரணி - பூமி) என்று பெயர். ஒன்பது அம்பிகையரின் அம்சமாக இந்த பீடம் இருப்பதாக ஐதீகம். எனவே, பவுர்ணமியன்று இரவில் "நவசக்தி' பூஜை செய்கின்றனர். அப்போது, பால், வடை பிரதானமாக படைக்கப்படும்.

இவள் உக்கிரமாக இருப்பதால், இவளுக்கு எதிரே சிவலிங்க பிரதிஷ்டை செய்துள்ளனர். இவர், "காமகோடீஸ்வரர்' என்றழைக்கப்படுகிறார். பவுர்ணமி, நவராத்திரி மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தரணி பீடத்திற்கு, பன்னீர் கலந்த குங்கும அர்ச்சனை செய்து, விசேஷ பூஜை செய்து வழிபட்டால் பிரார்த்தனைகள் நிறைவேறும்.

மணக்கோல நாதர்: கோயில் பிரகாரத்தில் மணக்கோலநாதர் (சிவன்) சன்னதி இருக்கிறது. சிவன், அம்பிகையை மணம் முடித்த கோலத்தில் இங்கு காட்சி தருவதால் இவருக்கு இப்பெயர். இவருடன் திருமணத்தை நடத்தி வைத்த பிரம்மா, தாரை வார்க்கும் கோலத்தில் விஷ்ணு, மகாலட்சுமி, திருமணக்காட்சி பெற்ற அகத்தியர் மற்றும் பிருங்கி மகரிஷி ஆகியோரும் இருக்கின்றனர்.

லிங்க வடிவ பலாச்சுளை: தலவிருட்சம் பலா மரத்தைச் சுற்றி சிறிய சன்னதி எழுப்பப்பட்டிருக்கிறது. இம்மரத்தின் கீழ் "ஆதிகுறும்பலாநாதர்' பீட வடிவில் காட்சி தருகிறார். இந்த மரத்தில் வருடத்தின் அனைத்து நாட்களிலும், பலா காய்த்துக் கொண்டிருக்கும். இதை யாரும் பறிப்பதில்லை. இந்த பலாவில் உள்ள சுளைகள், "லிங்க'த்தின் வடிவில் இருப்பது கலியுக அதிசயம். இதை பழமையான நூலான குற்றாலக்குறவஞ்சி, ""சுளையெலாஞ் சிவலிங்கம்'' என்று குறிப்பிடுகிறது. விசேஷ காலங்களில் சிவனுக்கு, பலா சுளையை பிரதானமாக படைக்கின்றனர். இதுதவிர பல்லாண்டுகள் பழமையான பலா மரம் ஒன்று பிரகாரத்தில் உள்ளது. இதனை சிவனாகவே பாவித்து, நைவேத்யமும் படைத்து தீபாராதனை செய்கின்றனர்.

தொலைந்த பொருள் தரும் சிவன்: அர்ஜுனன், தான் பூஜை செய்த லிங்கம் வைத்திருந்த சம்புடத்தை (பெட்டி), காசியில் தொலைத்துவிட்டான். வருந்திய அர்ஜுனன் இங்கு வந்தபோது, அந்த பெட்டியைக் கண்டெடுத்தான். அதை இங்கேயே வைத்து பூஜித்துவிட்டுச் சென்றான். இந்த லிங்கம் பிரகாரத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறது. பொருளை தொலைத்தவர்கள் இந்த லிங்கத்திடம் வேண்டிக்கொள்ள, மீண்டும் அவை கிடைக்கும் என்கிறார்கள். பங்குனி உத்திரத்தன்று, அர்ஜுனன் இங்கு லிங்கத்தைக் கண்டான். எனவே, அன்று இவருக்கு விசேஷ பூஜை நடக்கிறது. இவரது சன்னதிக்கு அருகிலிருந்து இந்த லிங்கம், மேற்கு முக விநாயகர், குற்றாலநாதர் விமானம், திரிகூட மலை மற்றும் குற்றால அருவி ஆகிய ஐந்தையும் தரிசிக்கலாம்.

சித்திரசபை: குற்றாலநாதர் கோயிலுக்கு அருகில், சித்திரைசபை தனிக்கோயில் அமைப்பில் இருக்கிறது. தாமிரங்களால் வேயப்பட்ட இந்த சபையில் நடராஜர், திரிபுரதாண்டவமூர்த்தியாக ஓவிய வடிவில் காட்சி தருகிறார். சித்திர சபைக்குள் அகத்தியர், திருமாலின் தலையில் கை வைத்து அழுத்த அவர் லிங்கமாக மாறியது, மதுரையில் சிவன் நிகழ்த்திய திருவிளையாடல்கள், தெட்சிணாமூர்த்தியின் பல்வேறு வடிவங்கள் என பல சித்திரங்கள் மூலிகைகளால் வரையப்பட்டுள்ளது. நடராஜருக்கு மார்கழி திருவாதிரை விழா, தேரோட்டத்துடன் பத்து நாட்கள் நடக்கும்.

இவ்விழாவின் போது தினமும் காலை, மாலையில் நடராஜருக்கு செய்யப்படும் தீபராதனையை நடராஜரின் நடனத்தைப் போல, மேலும், கீழுமாக ஆட்டுகின்றனர். இதனை, "தாண்டவ தீபாராதனை' என்கின்றனர். இவ்விழாவில் நடராஜருக்கு வெள்ளை சாத்தி, பச்சை சாத்தி என இரண்டு விதமான அலங்காரம் செய்யப்படுகிறது. பச்சை சாத்தி அலங்காரத்திற்கு மரிக்கொழுந்தினால் பிரத்யேகமாக அலங்காரம் செய்கிறார்கள். சித்திரை பிரம்மோற்ஸவத்தின்போதும் இவருக்கு இந்த தீபாராதனை உண்டு.

தல வரலாறு:

திருக்கயிலாயத்தில் சிவ பார்வதி திருமணம் நடக்கிறது. இதை தரிசிக்க பிரம்மா, விஷ்ணு, முப்பத்துமுக்கோடி தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் ஆகியோர் வந்துள்ளனர். இதனால் பூமியின் வடதிசை தாழ்ந்து, தென் திசை உயர ஆரம்பிக்கிறது. இதை சமப்படுத்த சிவன் அகத்தியரை அழைத்து,""நீ ஒருவன் மட்டும் தென்திசை சென்றால் போதும், உலகம் சமநிலைக்கு வந்துவிடும். அத்துடன் இதுநாள் வரை குற்றாலத்தில் விஷ்ணுவாக அருள்பாலித்து வந்த என்னை, சிவலிங்கமாக்கி மகுடாகமப்படி பூஜை செய்தால் எங்களது திருமணத்தை இங்கிருந்தபடியே தரிசிக்கலாம்,''எனக்கூறி அனுப்பிவைக்கிறார்.

சிவனின் கட்டளைப்படி அகத்தியர் குற்றாலம் வந்து, விஷ்ணு வடிவில் அருள்பாலிக்கும் சிவனை தரிசிக்க செல்கிறார். ஆனால் அங்கிருந்த துவாரபாலகர்கள் சைவ சமயத்தை சேர்ந்த அகத்தியரை கோயிலுக்குள் விடவில்லை. இதனால் வருத்தமடைந்த அவர் இங்கிருந்து சற்று தூரத்திலுள்ள இலஞ்சிக்குமாரர் கோயிலுக்குச் சென்றார். அங்கு வெண்மணலில் லிங்கம் பிடித்து, சிவனை வழிபட்டார்.

தான் குற்றாலத்தில், சிவதரிசனம் செய்ய அருளும்படி வேண்டினார். அவருக்கு காட்சி தந்த முருகன், ""அகத்தியரே! தாங்கள் சிவக்கோலத்தை கலைத்துவிட்டு, வைணவக்கோலத்துடன் கோயிலுக்குள் சென்று பெருமாளை சிவலிங்கமாக்கி வழிபாடு செய்யுங்கள்,''என யோசனை கூறுகிறார்.

முருகனின் யோசனைப்படி அகத்தியரும் நெற்றியில் திருமண் இட்டு, கழுத்தில் துளசி மாலை அணிந்து கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்கிறார். உடனே திருமாலின் கையில் சங்கு இருந்த இடத்தில் மான், துளசி இருந்த இடத்தில் சந்திரன், பொட்டு இருந்த இடத்தில் நெற்றிக்கண், ரத்தினம் இருந்த இடத்தில் பாம்பு என அனைத்தும் மாறியது.

அத்துடன் உயரமாயிருந்த திருமாலின் தலையில் கைவைத்து, திருமேனி குறுக குறுக என சிவனை வேண்டி பிரார்த்தனை செய்ய, நெடிய திருமால் குறுகிய சிவனாக மாறி விடுகிறார். அந்த இடத்திலேயே அகத்தியருக்கு திருமண காட்சி கிடைக்கிறது. இன்றும் கூட இத்தலத்தில் பகலில் தேவர்களும், இரவில் அகத்தியரும் பூஜை செய்வதாக கூறப்படுகிறது. அகத்தியர் தன் கைவிரல்களால் சிவலிங்கத்தில் தலையில் வைத்து அழுத்தியதால் இன்றும் கூட லிங்கத்தின் மேல்பகுதியில் விரல்களின் தடம் இருப்பதை காணலாம்.

இக்கோயில் திருமால் தலமாக இருந்தபோது, சங்கு வடிவில் அமைக்கப்பட்டிருந்தது. தற்போதும் இக்கோயில் சங்கின் வடிவில் இருப்பதைக் காணலாம். திருக்குற்றால மலையிலுள்ள செண்பகாதேவி, கோயிலுக்குச் செல்லும் வழியில், அருவியின் மேற்பரப்பில் இருந்து இந்த வடிவத்தை பார்க்கலாம்.

மகாலட்சுமியின் அம்சமான சங்கு, ஆற்றலின் வடிவமாகும். இதன் ஒலி, சக்தியைத் தருவதாகும். எனவேதான், சிவபூஜையில் சங்கு ஒலிக்கும் வழக்கம் உண்டு. இதன் அடிப்படையிலும், இக்கோயில் சங்கின் அமைப்பில் அமைந்திருப்பதாகச் சொல்வர். இங்கு 8 கால பூஜையிலும், சிவன் சன்னதியில் சங்கு ஊதுகின்றனர்.

குற்றால அருவி இங்குள்ள இறைவனுக்கு உரிய புண்ணிய தீர்த்தம் என்பதால் மது, மாமிசம் அருந்தி விட்டு இங்கே நீராடுவதை தவிர்ப்பது நல்லது.

தகவல் தொகுப்பு: திரு. சரவணன் சிவதாணு

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :