Monday, May 25, 2015

Keerthivasan

எங்கே பிராமணன் ? – 16 – மனுநீதி – 1

எங்கே பிராமணன் ? – 16 – மனுநீதி – 1


கேள்வி : மனுநீதி அல்லது மனு தர்மம் பற்றி என்ன சொல்கிறீர்கள்? பிராமணர்களை விசேஷமாக உயர்த்தி, மற்றவர்களை எல்லாம் மட்டமாக வைத்துப் புனையப்பட்டதுதானே மனுதர்மம்? மிகவும் அநியாயமாக, நியாயத்திற்குச் சம்பந்தமே இல்லாத பல விதிகளைக் கொண்டதுதானே மனு தர்மம்?

சோ : இது, மிகவும் தவறான எண்ணம். இந்தச் சந்தர்ப்பத்தில், மனு ஸ்ம்ருதி பற்றிய சில விவரங்களைப் பார்ப்போம். அதன் பிறகு, அது அநீதியை விதித்ததா, அல்லது தர்மத்தைக் கூறியதா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

மனுநீதி, மனுதர்மம் என்றெல்லாம் குறிப்பிடப்பட்டாலும், அந்த நூலின் பெயர் ‘மனுஸ்ம்ருதி’ என்பதுதான். ‘ச்ருதி’ என்பது கேட்கப்பட்டது. அதாவது, வேதங்கள்; அவை ரிஷிகளால் உணரப்பட்டு, உலகிற்குக் கிட்டியவை; செவி வழி வந்தவை. ‘ஸ்ம்ருதி’ என்பது, முந்தைய உபதேசத்தை நினைவில் வைத்து, அதன் அடிப்படையில் வகுக்கப்பட்டது. வேதங்களில் கூறப்பட்டதைப் புரிந்து கொண்டு, அந்த வேதங்களுக்கு விரோதமில்லாமல் தெரிவிக்கப்பட்ட சிந்தனைகள், விதிமுறைகள் ‘ஸ்ம்ருதி’களில் காணப்படும்.




Image not related to the Article Just for Representation...

ஸ்ம்ருதிகளை எடுத்துக் கொண்டால், மனுஸ்ம்ருதியைத் தவிர, வேறு பல ஸ்ம்ருதிகளும் இருக்கின்றன. யாக்ஞவல்கிய ஸ்ம்ருதி, பராசர ஸ்ம்ருதி, ப்ரஹஸ்பதி ஸ்ம்ருதி, நாரத ஸ்ம்ருதி… என்பவை, அந்த ஸ்ம்ருதிகளில் சில.

‘மனு’ என்கிற பெயர் வேதங்களிலும் கூட இடம் பெறுகிறது. வேறு பல ஸ்ம்ருதிகளிலும் அவருடைய பெயர் குறிப்பிடப்படுகிறது. மனு ஒருவர் அல்ல; சொல்லப் போனால், அது ஒரு பதவி மாதிரி; அதை விதித்தவர்கள் மனு என்று அழைக்கப்பட்டனர். மனுஸ்ம்ருதியை எழுதியவர் ‘இந்த மனுதான்’ என்று சொல்லிவிட முடியாது. என்றாலும், பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே செய்யப்பட்ட நூல் இது என்று நம்பப்படுகிறது.

மஹாபாரதத்தில் கூட, மனுஸ்ம்ருதியில் கூறப்பட்டுள்ள விதிகள் விவாதிக்கப்படுகின்றன. மஹாபாரதமோ சுமார் ஐயாயிரம் வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டது. ஆகையால், மனுஸ்ம்ருதி அதற்கும் முன்பாகச் செய்யப்பட்டிருக்கிற நூல் என்பது தெளிவாகிறது.
சில ரிஷிகள், மனு என்ற மஹரிஷியை அணுகி, படைப்பு மற்றும் வாழும் வகை, ராஜநீதி போன்ற விஷயங்களை விளக்கிச் சொல்லுமாறு கேட்டுக் கொண்டனர். அப்போது அந்த மஹரிஷி (மனு), அவர்களுக்கு, படைப்பு எப்படி நிகழ்ந்தது என்பதை விளக்கினார். பின்னர், ‘ப்ரும்ம தேவன் எனக்கு இந்த சாஸ்திரத்தை (மனுஸ்ம்ருதியை) உபதேசித்தார்; நான் இதை மரீசி போன்ற ரிஷிகளுக்கு எடுத்துச் சொன்னேன். இப்போது இங்கேயுள்ள ப்ருகு முனிவர், உங்களுக்கெல்லாம் இதை விளக்குவார். அவர் என்னிடமிருந்து இதை முழுமையாகத் தெரிந்து கொண்டார்’ என்று மனு கூறினார்.

அதையடுத்து, ப்ருகு, அங்கு கூடியிருந்த ரிஷிகளுக்கு, இதை (மனுஸ்ம்ருதியை) விளக்கினார். இப்படித் தொடருகிற மனுஸ்ம்ருதியில், படைப்பு; யுகங்கள் உட்பட கால அளவுகள்; யுக தர்மங்கள்; நான்கு வர்ணங்கள்; ஒவ்வொரு வர்ணத்தின் சிறப்பு; சொத்துக்கள் பற்றிய விதிமுறைகள்; குற்றங்கள்; அவற்றின் விசாரணை; தண்டனைகள்; அரசனின் கடமைகள்; நீதிபரிபாலனம் நடக்க வேண்டிய முறை; யுத்தத்தில் அரசனின் அணுகுமுறைகள்; பெண்கள் பற்றிய விதிமுறைகள்; நான்கு வர்ணங்களைச் சார்ந்தவர்களின் கடமைகள் மற்றும் உரிமைகள்; பாவங்கள் – அவற்றிற்கான பிராயச்சித்தங்கள்; முற்பிறவிகளின் விளைவுகளாக இப்பிறவியில் காணப்படுகிறவை; திருமணங்கள்; இல்லறத்தானின் பொறுப்புகள்; ராஜ்யத்தை நடத்த வேண்டிய முறைகள்; வழக்குகளை நடத்த வேண்டிய வழிமுறைகள்… என்று பற்பல விஷயங்கள் பேசப்படுகின்றன.

பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பாக இப்படிப்பட்ட ஆழ்ந்த சிந்தனை இங்கே இருந்திருக்கிறது என்பதைக் கண்டு, மேல்நாட்டு அறிஞர்கள் கூட வியந்து பார்க்கிறபோது, நாம்தான், மனுஸ்ம்ருதியை இகழ்ந்து பேசுவது பெருமை என்று நினைக்கிறோம். மனுஸ்ம்ருதியை இகழ முனைபவர்கள், அப்படிச் செய்வதற்கு முன்னால், அதில் என்ன கூறப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டால் நல்லது. மனுஸ்ம்ருதியின் சில பகுதிகளை நாம் பார்ப்போம்.

 – CHO
– தொகுப்பு : அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன்

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :