Monday, May 25, 2015

Keerthivasan

சங்கல்பம் - சிறுகதை


சங்கல்பம்

- இரா. கௌரிசங்கர்

நான் இன்று அலுவலகத்திலிருந்து சீக்கிரம் வீட்டிற்கு திரும்ப முடிந்தது ஒரு அதிசயமாகத்தான் தோன்றியது – ஏனெனில் தினமுமே எப்படியும் ஒரு எட்டு மணி ஆகி விடும்.  இன்று ஐந்து மணிக்கெல்லாம் வருவதென்றால்…



எனக்கே ஒரு புது மாதிரியாக இருந்தது.  வீட்டில் உள்ளவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று பார்க்க ஆசையாக இருந்தது.  ஒரு ஆச்சரியத்துடன் வரவேற்ப்பார்களா, சீக்கரம் வந்ததை கொண்டாடுவார்களா என்று பார்க்கத் தோன்றியது.

எனக்கு கூட நிறைய எதிர்பார்ப்புகள் – இந்த நேரத்தை எப்படியெல்லாம் கழிக்கலாம் என்று.

ஒரு நல்ல காபி குடித்துவிட்டு ரிலாக்ஸ் செய்யலாம், விட்டுப்போன புத்தகம் எதையாவது படிக்கலாம், ஹாயாக டிவி ரெமொட்டை வைத்துக் கொண்டு எல்லா சானலையும் வளம் வரலாம், பசங்களோடு விளையாடலாம், மனைவியுடன் சின்னதாக ஒரு வாக் போகலாம்

இப்படி ஒரு இரண்டு மணி நேரத்திற்கு, கிட்டத்தட்ட ஒரு வாரம் செய்யக் கூடிய வேலைகளை எல்லாம் மனம் போட்டு அலசியது!
 
நாம் நினைப்பதெல்லாமா வாழ்க்கையில் நடக்கிறது? மனைவி வீட்டில் இல்லை – ‘சீக்கிரம் வந்து விடுவேன் என்று முன்னாலேயே ஏன் என்னிடம் சொல்லவில்லை’ என்று ஊடல் செய்யப் போகிறாள் என்ற கவலையும் உடன் தொற்றிக் கொண்டது. பசங்களையும் காணோம்!

ரிடையர் ஆன என்னுடைய அப்பா தான் என்னை வரவேற்றார்.  

“வாடா! என்ன என்னக்கும் இல்லாத அதிசயமா சீக்கிரம் வந்துட்ட?” என்றார்.

“ஆமா! இங்க  பக்கத்துல ஒரு வேலை; சீக்கிரம் முடிஞ்சுடுத்து.  அதான் வந்துட்டேன்.  எங்க ஒருத்தரையும் காணோம்?” இது நான்

“கீதா கோவில் போயிருக்கா; பசங்க விளையாட.” என்றவர்  “நல்ல வேலை நீ வந்தே; எனக்கு கொஞ்சம் பழம் வாங்கணும், நீ கூட்டிண்டு போறியா?” என்று ஒரு குண்டையும் போட்டார்!

ரிலாக்ஸ் செய்ய ஆசையாயிருந்தாலும், சரி அப்பாவையாவது திருப்தி படுத்தலாமே என்று அவரைக் கூட்டிக் கொண்டு கிளம்பினேன்.  காரைக் கிளப்பி எதாவது பட்டு கேட்கலாம் என்று FM தட்டியதும் ஏதோ ‘நாக்க முக்க… நாக்க முக்க …’ என்று கத்தியது. என்னுடைய அப்பாவிற்கு எரிச்சல் வந்து விட்டது!

“என்ன பாட்டு இது! நிறுத்தித் தொலையேன் இந்த சனியனை” என்று கடுமையாகச் சொன்னார்.

ரெஸ்ட் எடுக்க  விடாமல் என்னைக்  கூட்டிக்  கொண்டு  வந்த  கோபமா  அல்லது என்னுடைய இயல்பா தெரிய வில்லை!- எனக்குக் கோபம்தான் வந்தது.  இருந்தாலும்  அடக்கிக்  கொண்டு  ஒரு விதமான எதிர்ப்பை காட்டும் முகமாக ரேடியோவையும் நிறுத்தாமல் வண்டியை ஓட்டிக் கொண்டு வந்தேன்.

அவர் பழம் வாங்க இறங்கிப் போன போது நான் சற்று ஆராய்ச்சியில் ஈடுபட ஆரம்பித்தேன். அப்பா காரில் பயணம் செய்வதோ ஒரு ஐந்து நிமிடம் தான். அந்த நேரத்தின் சூழ்நிலையை அவர் அப்படியே ஏற்றுக் கொள்ளக் கூடாதா? எப்போதும் எல்லாம் மற்றும் எல்லோரும் பெர்பெக்டாக இருக்க வேண்டும் என்று எதிர் பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்?  நமக்கு பிடிப்பது அடுத்தவருக்கு பிடிக்காமல் இருக்கலாம்.  அதே போல் நமக்கு பிடிக்காதது அடுத்தவருக்கு நிரம்பப் பிடித்திருக்கலாம்.  இதில் ஒரு சம நிலை எப்படி ஏற்படும்?  அவரைக் கேட்டால், “எனக்கு பிடிப்பவை நல்ல விஷயங்கள்; அனால், உங்களுக்கு பிடிப்பவையெல்லாம் கன்னா பின்னா சமாச்சாரங்கள் “ என்றுதான் சொல்வார்.  நல்லது கெட்டது என்பதெல்லாம் ஒரு relative சமாச்சாரம் தானே!

இப்படி யோசித்துக் கொண்டிருந்த போது, சட்டென்று பொறி தட்டினாற்ப் போல ஒரு விஷயம் விளங்கியது.  நாமெல்லாரும் கூட இப்படித்தானே? எப்படி ஒரு கார் பயணம் ஒரு சிறிய கால வெளியோ அதேப்போல தானே நமக்கும் இந்த வாழ்க்கை?  ஒரு பெரிய பயணத்தின் பகுதிதானே இந்த வாழ்க்கை?  அப்படிப் பார்த்தால், நமக்கு விதிக்கப் பட்ட பல ஜென்மங்களில் இந்த ஜென்மம் கூட ஒரு சிறிய விழுது தானே?  இதற்குள் எத்தனை ஆசாபாசங்கள்? எத்தனை எதிர்பார்ப்புகள்? வன்மங்கள், கோபதாபங்கள் மற்றும் துடிப்புகள்? ஏன் நம்மால் ஒரு பார்வையாளனாக, வழிப்போக்கனாக, காட்சிகளை மட்டும் பார்க்கின்ற சாட்சிப் பொருளாக இருக்க முடிவதில்லை?

இந்த எண்ணம் தோன்றியதும் மனத் தெளிவு வந்தது.  இனிமேல் முடிந்த வரை மற்றவர்களை அனுசரித்துப் போவது என்ற சங்கல்பத்தை எடுத்துக் கொண்டேன்.  கடைக்குள்ளே சென்று அப்பா வாங்கிய பழங்களை கொண்டு வந்து காரில் வைத்தேன்.  என் மனைவிக்குப் பிடிக்கும் என்று ஒரு தம்ளரில் பழச்சாறு வங்கிக் கொண்டேன்.  நல்ல உற்சாகத்தோடு வீட்டிற்குத் திரும்பினேன்.  அங்கே என்னுடைய மனைவி வீட்டுக்குத்  திரும்பியிருந்தாள்.

நான் வாங்கிய பழத் தம்ளரை எடுத்துக் கொண்டு அவளிடம் கொடுக்கச் சென்றேன்.

என்னைப் பார்த்ததும் என்னுடைய பையன் வேகமாக குறுக்கே வந்து  ‘அப்பா’ என்று கூப்பிட்டுக் கொண்டே என் மீது மோதினான்.  என்னுடைய கையில் இருந்த தம்ளர் நழுவி பழச்சாறு என் மேல்  கொட்டியது.

பழச் சாறில் நனைத்த சட்டையுடன் என்னுடைய பையனைக் கோபமாகப் பார்த்தேன்.

நான் என்னை மறந்தேன்.

‘பளார்!’

குறிப்பு: இரா. கௌரிசங்கர் எங்கிற பெயரிலேயே முகனூலில் பதிந்த கதை இது.

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :