Saturday, May 23, 2015

Keerthivasan

கட உபநிஷதத் தத்துவங்கள் - 6 - விதியும் மதியும் ஒரு விளக்கம்

கட உபநிஷதத் தத்துவங்கள்  - 6 - விதியும் மதியும் ஒரு விளக்கம்





    இரண்டு நாளைக்கு முன்னர் வந்த பதிவுக்கு சில நண்பர்கள் சில சந்தேகங்களை எழுப்பினார்கள். அப்போதுதான் எனக்குத் தோன்றியது. நானே ஒரு பத்து உபநிஷத ஸ்லோகங்களின் கருத்தைப் பல பதிவுகளாக விரித்து புரியுமளவு எழுத முயன்று கொண்டிருக்கிறேன் இதிலும் சந்தேகம் என்று வந்தால் எப்படி? அப்போதுதான் நான் செய்வது சரியான காரியம் என்று எனக்கும் புரிந்தது. ஏனென்றால் ஒரு சுலோகம் மற்றும் அதன் பொருள் வெறும் பத்து வரிகள்தாம். ஆனால் இத்தனைப் பதிவுகளிலும் சிலருக்கு சந்தேகங்கள் எழும் பட்சத்தில் இந்தத் தொடரை வெறும் மந்திரம் எழுதி பொருளை உரைக்கும் அளவில் கொண்டு செல்லக் கூடாது என்பது எனக்குப் புரிந்தது!! அதனால்தான் மிக எளிய முறையில் அவற்றின் கருத்துக்களை என் சொந்த நடையில் விவரிக்க முயல்கிறேன்.

     ஒரு சிலர் விதி என்பது மனிதனே உருவாக்கிக் கொண்ட கற்பனை அதன் மூலம் அவன் உழைக்காமல் சோம்பிக் கிடந்து வீணாகப் போகிறான் என்றனர். அது அப்படியல்ல இப்போது சில உதாரணங்கள் மூலம் அதைத் தெளிவாக விளக்க முயல்கிறேன்.

     விதி என்பது பூமியில் நமக்கு அளிக்கப்படும் ஆட்டக்களம். ஆனால் அந்தக் களத்தில் ஆடுவது நம்முடைய புத்தியையும் மனதையும் வைத்துதான். உதாரணமாக ஒரு சிறுவன் எட்டு வயதில் தாயை இழந்து தந்தையின் அரவணைப்பில் உள்ளவன். அவன் தாயை சிறு வயதில் இழந்தது விதி. இன்னமும் அவன் தந்தையும் திடீரென அவனுக்குப் பத்து வயதாகும் போது இறந்து போக அவன் அனாதையாகிறான். இதுவும் விதிதான், இப்போது அவன் பத்து வயதில் அனாதையாக வாழ்க்கைக் களத்தில் விதி நிற்க வைக்கிறது! இன்னும் அவன் உடனே பிக்பாக்கெட் அடிக்கவும், ரவுடித்தனம் செய்யவும் சிறுவயதிலேயே பழகி பெரிய தாதாவாகிறான். இதுதான் அவன் மதியின் செயல். அவன் மதி அவனைத் தீவினைக்கு வழிநடத்தி சென்றது. அதே இன்னொருவன் அவன் போலவே உள்ளவன் பிச்சை எடுத்தேனும் கருத்துடன் படித்து முன்னேறி வாழ்வில் சிறந்த இடத்தைப் பிடிக்கிறான். இதுவும் மதியின் செயல்தான். இங்கு அவன் மதி அவனை நல்வினை செய்ய வழிநடத்தியது. இங்கும் கூட நடுநடுவில் விதி அவனிடம் சில விளையாட்டுகள் காட்டலாம். அதையெல்லாம் எதிர்கொண்டு தன குறிக்கோளில் மாறாமல் இருப்பவன் அதற்கேற்ற நிலையை அடைகிறான். இதையே விதிக்கும் மதிக்கும் வித்தியாசமாக சொல்ல விழைகிறேன்.

    இன்னொரு உதாரணம். ஒரு கால்பந்து ஆட்டக் களம். பத்து வீரர்கள் நிற்கிறார்கள் இரு அணியிலும். இதில் ஒரு அணியின் செயல்பாட்டைக் காண்போம். அந்த அணியினர் எதிர்கொள்ளும் பந்துதான் அவர்களின் களம். அதுதான் விதி.அது அந்த டீமிலுள்ள அனைத்து ஆட்டக்காரர்களுக்கும் சமமானது. அதில் ஒரு ஆட்டக்காரன் பந்தைப் பார்க்க ஓடி ஓடி செல்கிறான். அவ்வாறு சென்று நூறு முறை பந்துகளை உதைக்கிறான். அதில் ஐந்து பந்து கோல் ஆகிறது. அவன் வெற்றிகரமான வீரனாகிறான். அதே அணியில் இன்னொரு வீரன் அவன் கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை உள்ளவன், தன்னுடைய திறமை மீது நம்பிக்கையற்றவன், கொஞ்சம் சோம்பேறியும் கூட. அவன் பந்தைப் பார்த்து ஓடாமல் தான் இருக்கும் இடத்தில் வரும் பந்தை மட்டுமே உதைத்தால் போதும் என்று நினைக்கிறான். அதனால் அப்படியே செய்கிறான். அவன் அருகில் வரும் நாலைந்து பந்தை மட்டும் உதைக்கிறான். அவை கோல் பக்கம் போகாததால் வெற்றி வாய்ப்பை இழக்கிறான். தோல்வியை அடைந்த வீரனாகிறான்.

      இப்போது சொல்லுங்கள் ஆட்டக் களம் இருவருக்கும் பொதுவானது. அதை விதி என்று கொள்ளலாம். ஆனால் தன மன சிந்தனை மற்றும் புத்தியின் மூலம் இருவரும் வெவ்வேறு முறையில் விளையாடி வெற்றி/தோல்வியைப் பெறுகின்றனர். இதையே மதி என்று சொல்லலாம்.

     இன்னமும் ஒரே ஏழைக் குடும்பத்தை சேர்ந்த இரண்டு சகோதரர்கள். ஏழ்மையையே தன்னுடைய விதியாக நினைத்து நொந்து கொண்டு அதனாலேயே சரியாகப் படிக்காமல் தானும் கூலி வேலை செய்து ஏழையாகவே இருக்கும் ஒருவன். அதே ஏழ்மையைப் பற்றி நினைத்துப் பார்த்து அதைத் தன்னுடைய சலியாத உழைப்பின் மூலம் வென்று பணக்காரனாகி தன்னுடைய ஏழ்மை விதியை வெல்ல வேண்டும் என்று நினைத்து அதை சாதித்து பணக்காரனாக ஒளிரும் இன்னொரு சகோதரன். இதுதான் இருவரின் மதிக்கும் உள்ள வித்தியாசம். ஆனால் இருவருக்கும் ஒரே விதிதான் வாய்த்தது ஒருவன் அந்த விதியை மதியால் வென்றான் இன்னொருவனால் வெல்ல முடியவில்லை. இன்னும் அடுத்த பதிவில் காண்போம்

ஆக்கம்: துரோணாச்சாரியார்

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :