Monday, May 25, 2015

Keerthivasan

கட உபநிஷதத் தத்துவங்கள் - 8 - மனதின் தாக்கம் எதனால்?


  கட உபநிஷதத் தத்துவங்கள்  - 8 - மனதின் தாக்கம் எதனால்?

        மனம் பற்றியும் புத்தியைப் பற்றியும் சில பதிவுகளில் சொன்னது புரிந்திருக்கும் என்றே கருதுகிறேன். அடுத்து மனம் எந்த விஷயத்தின் தாக்கத்தால் நினைவலைகளை உருவாக்குகிறது என்பது பற்றி இந்தப் பதிவில் கூற விழைகிறேன்.





        மனதில் நினைவலைகள் எதனுடைய தாக்கத்தால் உருவாகின்றன என்பதைப் பற்றிக் கொஞ்சம் சிந்தியுங்கள். நான் இவற்றைக் கொஞ்சம் உபநிஷத ஸ்லோகங்களின் அடிப்படையில் அல்லாமல் பின்னோக்கிய முறையில் கொண்டு செல்ல முயல்வதால் நீங்கள் கொஞ்சம் குழம்ப நேரிடலாம். ஆனால் கடைசியில் ஸ்லோகத்தின் பொருள் கூறுகையில் நான் சொன்ன வழிமுறை சரியானதே என்றும் தோன்றலாம். ஏனென்றால் ஸ்லோகப் பொருட்கள் இது இன்னது என்று உரைப்பதால் அவைகளின் பொருள் பற்றிக் கொஞ்சம் ஆழ்ந்து யோசிக்கத் தோன்றாது அதனால்தான் இந்த முறையைப் பின்பற்றுகிறேன்.

      மனதில் நினைவலைகள் உருவாவது உண்மையில் உடலின் தாக்கத்தால். இன்னமும் குறிப்பாக இதைச் சொல்வதென்றால் ஐம்புலன்களின் தாக்கத்தால். ஐம்புலன்களான கண், காது, மூக்கு, வாய், தோல் ஆகியவையே நம் மனதில் நினைவலைகளை உருவாக்குகின்றன. இந்தப் புலன்கள் இல்லாத ஒரு மனிதனின் மனம் வெளிப் பொருட்களால் சிந்திக்கவே செய்யாது மாறாக அவன் மனதின் உட்பொருளாக எதையேனும் நினைத்துக் கொண்டிருக்கும். கண்கள் காண்கின்றன அதன் மூலம் மனம் சிந்திக்கின்றது. காதுகள் கேட்கின்றன அதன் மூலம் மனம் சிந்திக்கின்றது. வாய் உண்கிறது அதன் மூலமும் மனம் சிந்திக்கின்றது. மூக்கு நுகர்கிறது அதனாலும் மனம் சிந்திகின்றது. தோல் தொடுவுணர்ச்சி அல்லது ஸ்பரிசத்தை உணர்கிறது. அதன் மூலமும் மனம் சிந்திக்கின்றது. ஆக இந்த ஐம்புலன்களின் மூலமாகத்தான் மனதின் உணர்வுத் தாக்கமே நிகழ்கிறது. இவற்றை சிறிய உவமைகள் மூலம் விளக்க முயல்கிறேன்.

     கண்கள் ஒரு அழகிய பொருளைக் காண்கிறது உடன் மனம் அப்பொருள் எத்தனை அழகாக உள்ளது நமக்குக் கிட்டுமா என்று நினைக்கிறது. காது நல்ல விஷயங்களைக் கேட்கும் போது நல்ல இசையைக் கேட்கும் போது மனம் அதை ரசிக்கிறது. மூக்கு நல்ல வாசனையை உணரும் போது மனம் குதூகலமடைகிறது. வாய் நல்ல உணவை உண்ணும் போது மனம் திருப்தி அடைகிறது. தோல் ஒரு நல்ல ஸ்பரிசத்தை உணர்ந்தால் மனம் ஆனந்தமடைகிறது. இவைகள் வெவ்வேறு பொருட்களாக இருக்கலாம். இவை அனைத்தையும் கொண்ட ஒன்றையும் சொல்ல விழைகிறேன்.

     ஒருவனுக்கு நல்ல அழகிய, இனிமையான வார்த்தைகளைப் பேசக் கூடிய, நறுமணப் பொருட்களைப் பூசிய, நல்ல உணவைத் தயாரித்துத் தரக் கூடிய, மென்மையான ஸ்பரிச சுகத்தைத் தரக் கூடிய மனைவி ஒருத்தி வாய்க்கிறாள் என்று கொள்ளுங்கள். அப்படியானால் அவள் மூலம் அவனுடைய அனைத்துப் புலன்களும் எழுச்சியடைந்து அவன் மனம் மிகுந்த ஆனந்தமடையும். இதற்கு மாறாக இருந்தால் மனம் துக்கமடையும். இப்போது புரிகிறதா புலன்கள் எப்படி மனதைத் தன்வயப் படுத்துகின்றன என்று?

      இன்னும் அடுத்த பதிவில் புலன்களின் செயல்பாடுகளைப் பற்றிக் காண்போம்.

ஆக்கம்: துரோணாச்சாரியார்

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :