Saturday, July 18, 2015

Keerthivasan

சைவ சித்தாந்தம்: நான் புரிந்து கொண்டது. – 10


சைவ சித்தாந்தம்: நான் புரிந்து கொண்டது. – 10


திருச்சிற்றம்பலம்

மனம்.வாக்கு,காயம் மூன்றையும் இறைவனுக்குத் தொண்டு செய்யும் அடிமையாக்கச் சித்தாந்தம் நான்கு நெறிகளைக் கூறும்.

இறைவனுக்கு மனமுவந்து

1. உடலால் தொண்டு செய்தல் - சரியை
2. வாயாலும் உடலாலும் செய்தல் - கிரியை
3. அந்தக்கரணங்களால் செய்தல் - யோகம்
4. சிந்தித்து தெளிந்து மெய்ப்பொருள் காண்பது - ஞானம் 

இப்பதிவில் கிரியையைப் பற்றி காண்போம்.

கிரியை:
சைவக் கிரியைகள் என்பது சிவநெறியில் ஒழுகுவோர் மந்திரம், தந்திரம், பாவனைகளுடன் செய்யும் செயல்கள் அல்லது கருமங்களைக் குறிக்கும். கிரியை என்ற சைவ சமய கலைச்சொல் பல்வேறு சந்தர்ப்பங்களில் அனுஷ்டிக்கப்படும் நியதிச்செயல்கள் என்னும் கருத்தில் சமயப் பிரமாண நூல்களில் வழங்கி வருகின்றது. கருமம், சடங்கு, பூசை என்பனவும் அதே பொருளைத்தரும் சொற்கள் ஆகும். சைவசமயிகளுக்குரிய இத்தகைய கிரியைகள் பற்றி, சிவாகமங்களும் அவற்றைச் சார்ந்த உபாகமங்களும் இவற்றின் அடிப்படையில் எழுந்த பத்ததிகளும் விரித்துக் கூறுகின்றன.

இச்சைவக் கிரியைகளைச் செய்வதால் இம்மையில் அறம், பொருள், இன்ப வாழ்வுகளைப் பெற்று வாழ்தலும், மறுமையில் வீடு பேற்றினைப் பெறுதலுமாம். கிரியைகளை முறைப்படி செய்வதனால் மனத்தூய்மை உண்டாகும்; மனத்தூய்மையினால் பரதருமங்கைகூடும். பரதருமத்தினால் ஐம்பொறி அடக்கமாகிய சாந்தி உண்டாகும் சாந்தியினால் யோகநெறி கைகூடும் யோகத்தினால் தத்துவ ஞானங் கைகூடும் தத்துவ ஞானத்தினால் பரமுத்தி சித்திக்கும். ஆகவே கிரியைகள் ஞானத்திற்கு மூலகாரணமாய் வீடு பேறாகிய பரமுத்திப்பேற்றை தரும்..


கிரியைகளின் வகைகள்:
சைவக் கிரியை ஆன்மார்த்தக் கிரியை, பரார்த்தக் கிரியை என இரு வகைப்படும். ஆன்மார்த்தம் என்பது தன் நன்மை கருதிச் செய்யப்படும் சந்தியாவந்தனம், சிவபூசை போன்ற கிரியைகளைக் குறிக்கும். பரார்த்தம் என்பது பிறர் நன்மை கருத்திச் செய்யப்படும் ஆலய வழிபாடுகளைக் குறிக்கும்.

ஆன்மார்த்த கிரியையானது பூர்வக் கிரியை, அபரக் கிரியை என இரு வகைப்படும். 


பூர்வக் கிரியை:
பூர்வக் கிரியை ஓர் உயிர் தாயின் கர்பத்தில் தங்கும் காலம் முதல் பூமியிற் பிறந்து வளர்ந்து வாழ்ந்திருக்கும் காலம் வரையும் செய்யப்படுங் கிரியைகளைக் குறிக்கும்.பூர்வக் கிரியை சிவாகமங்களில் சொல்லப்பட்ட விதிமுறைகளுக்கேற்ப நடைபெறும் சைவக் கிரியைகளின் ஒரு பிரிவாகிய ஆன்மார்த்தக் கிரியையின் வகைகளில் ஒன்றாகும். இது ஓர் உயிர் தாயின் கற்பத்தில் தங்கும் காலம் முதல் பூமியிற் பிறந்து வளர்ந்து வாழ்ந்திருக்கும் காலம் வரையும் செய்யப்படுங் கிரியைகளைக் குறிக்கும். பூர்வக் கிரியைகளில் பிரதானமாக இருது சங்கமனம், கர்ணவேதனம், நாம கரணம், அன்னப் பிராசனம், வித்தியாரம்பம், உபநயனம், விவாகம், தீட்சை, சந்தியாவந்தனம், ஆசாரியாபிஷேகம், சிவபூசை என்பவற்றைக் குறிப்பிடலாம். 


அபரக் கிரியை:
அபரக் கிரியை மரண சமயம் முதல் சபிண்டீகரணம்(சபிண்டீகரணம் - பிதிர்க்களுக்குரிய கிரியை இறந்தவனுக்கும் உரிமையாதற்பொருட்டு பெரும்பாலும் இறந்த பன்னிரண்டாம் நாள் செய்யப்படும் சிராத்தம்) வரையும், அதன் மேல் வருட சிராத்தம், மகாளயம், அமாவாசை தர்ப்பணம் வரையில் விரிந்து செல்கின்றது.


பரார்த்தக் கிரியை:
பரார்த்தக் கிரியை என்பது சிவாகமங்களில் சொல்லப்பட்ட விதிமுறைகளுக்கேற்ப நடைபெறும் சைவக் கிரியைகளின் பிரதான இரு பிரிவுகளில் ஒன்று. எல்லா உயிர்களினதும் நன்மை கருதி இறைவனை வழிபடுவதற்காகத் திருக்கோவில் அமைத்தல் முதலான கிரியைகளைக் குறிக்கும். இது கர்ஷணாதி பிரதிஷ்டாந்தம், பிரதிஷ்டாதி உற்சவாந்தம், உற்சவாதி பிராயச்சித்தாந்தம் என மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்படும்.

கர்ஷணாதி பிரதிஷ்டாந்தம் என்பது திருக்கோவில் அமைப்பதற்குரிய இடத்தை ஆராய்ந்து தெர்ந்தெடுத்து பரிசோதித்து பண்படுத்தி நாட்கல் நாட்டித் திருக்கோவில் அமைத்து, மூர்த்தியை அமைத்து பிரதிஷ்டை செய்து முடிக்கும் வரையுள்ள கிரியைகளின் தொகுதியாகும்.

பிரதிஷ்டாதி உற்சவாந்தம் என்பது பிரதிஷ்டை நடைபெற்றபின் நாள்தோறும் செய்ய வேண்டிய நித்திய பூசை, அவற்றின் காலங்கள், நித்திய பூசை முடிவில் செய்யப்படும் உற்சவங்கள் முதலிய கிரியைகளின் தொகுப்பாகும்.

உற்சவாதி பிராயச்சித்தாந்தம் என்பது நித்திய பூஜை முதலியவற்றில் ஏற்படும் குற்றம் குறைகளை நீக்குவதற்காக செய்யப்படும் நைமித்திய உற்சவங்கள் அவற்றின் வகைகள் தொடங்கும் முறைகள் என்பவற்றின் தொகுதியாகும். 
பரார்த்தக் கிரியையானது நித்தியக் கிரியை, நைமித்தியக் கிரியை காமியக் கிரியை என மூவகைப்படும். 


நித்தியக் கிரியை:
நித்தியம் என்பது ஆலயத்தில் தினமும் நடைபெறும் நித்திய பூசையைக் குறிக்கும். இது ஆலயங்களின் அமைப்புக்கும் மரபுக்கும் ஏற்ப ஒரு காலப் பூசை தொடக்கம் ஆறு காலப் பூசை, பன்னிரு காலப் பூசை (திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் நடைபெறுவது) என விரிந்து செல்லும்.உதாரணமாக நித்திய பூஜை, நித்திய அக்கினிகார்யம், நித்திய பலி, நித்திய உற்சவம் என்பனவாகும்.


நைமித்தியக் கிரியை:
நைமித்தியம் என்பது நித்திய பூசை வழிபாடுகளில் ஏற்படுகின்ற குறைகளை நிவர்த்தி செய்வதற்காக நடைபெறும் விஷேட பூசைகள், உற்சவங்களைக் குறிக்கும்.உதாரணமாக மகோற்சவம், கும்பாபிஷேகம், நவராத்திரி என்பவற்றைக் குறிக்கும்.


காமியக் கிரியைதாம் விரும்பிய பலனை எதிர்பார்த்து செய்யப்படும் கிரியைகளாகிய அபிஷேகம், அர்ச்சனை முதலியன காமியக் கிரியை எனப்படும்.

அடுத்த பதிவில் யோகம் பற்றிச் சிந்திப்போம்.

திருச்சிற்றம்பலம்.

பதிவை பற்றிய உங்கள் கருத்துக்களுக்கு: Janarthanam Karthik

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :