Saturday, July 18, 2015

Keerthivasan

திருமழபாடி - திருநாவுக்கரசர் திருத்தாண்டகம்

திருமழபாடி - திருநாவுக்கரசர் திருத்தாண்டகம்


திருமழபாடி திருத்தலத்தின் இறைவன் மீது திருநாவுக்கரசர் இயற்றிய திருத்தாண்டகம்


இந்த திருத்தாண்டகத்தில் ஏழு பாடல்களே உள்ளன. அது கவனிக்கத்தக்கது.

திருமழபாடி

பாடல் எண் : 1

அலையடுத்த பெருங்கடல்நஞ் சமுதா வுண்டு
அமரர்கள்தந் தலைகாத்த ஐயர் செம்பொன்
சிலையெடுத்து மாநாகம் நெருப்புக் கோத்துத்
திரிபுரங்கள் தீயிட்ட செல்வர் போலும்
நிலையடுத்த பசும்பொன்னால் முத்தால் நீண்ட
நிரைவயிரப் பலகையாற் குவையார்த் துற்ற
மலையடுத்த மழபாடி வயிரத் தூணே
யென்றென்றே நானரற்றி நைகின் றேனே.
பொழிப்புரை:
அலைகள் பொருந்திய பெரிய கடலில் தோன்றிய விடத்தை அமுதமாக உண்டு தேவர்களுடைய உயிரைப் பாதுகாத்த தலைவர் என்றும், மேருவை வில்லாக வளைத்துப் பெரிய பாம்பினை நாணாகப் பூட்டி நெருப்பாகிய அம்பினைக் கோத்து முப்புரங்களையும் எரித்த செல்வர் என்றும், தன் மாற்றுக் குறையாத கிளிச்சிறை என்ற பசிய பொன்னாலும் முத்தாலும் நீண்ட பலகை போன்ற வயிரத்தாலும் குவியலாகத் திரட்டி இயற்றப்பட்ட மழபாடியில் உறையும், மலை போல உறுதியாக அமைந்த வயிரத்தூணே என்றும் எம்பெருமானை முன்னிலையாகவும் படர்க்கையாகவும் சொல்லி நான் மனம் உருகுகின்றேன்.



பாடல் எண் : 2

அறைகலந்த குழல்மொந்தை வீணை யாழும்
அந்தரத்திற் கந்தருவர் அமரர் ஏத்த
மறைகலந்த மந்திரமும் நீரும் கொண்டு
வழிபட்டார் வானாளக் கொடுத்தி யன்றே
கறைகலந்த பொழிற்கச்சிக் கம்பம் மேய
கனவயிரத் திரள்தூணே கலிசூழ் மாட
மறைகலந்த மழபாடி வயிரத் தூணே
யென்றென்றே நானரற்றி நைகின் றேனே.
பொழிப்புரை :
ஓசை பொருந்திய குழல் , மொந்தை , வீணை , யாழ் என்ற இசைக் கருவிகளை இசைத்து வானத்தில் கந்தருவர் என்ற தேவகணத்தாரும் தேவர்களும் துதித்து வேதமந்திரமும் ஓதி , நீரினால் அபிடேகம் செய்து வழிபட , அவர்களுக்கு வானுலகில் வெகுகாலம் அநுபவிக்கும் செல்வத்தைக் கொடுக்கும் , செறிவினால் இருண்ட பொழில்களை உடைய காஞ்சி நகரில் ஏகம்பத்தில் விரும்பியிருக்கும் மேம்பட்ட வயிரக்குவியலால் அமைந்த தூண் போல்வாய் என்றும் , வேத ஒலி பொருந்திய மாடங்களை உடைய மழபாடியில் உள்ள வயிரத்தூண் போல்வாய் என்றும் , நான் பலகாலும் எம்பெருமானை அழைத்து உள்ளம் உருகுகின்றேன் .



பாடல் எண் : 3

உரங்கொடுக்கு மிருண்மெய்யர் மூர்க்கர் பொல்லா
ஊத்தைவாய்ச் சமணர்தமை யுறவாக் கொண்ட
பரங்கெடுத்திங் கடியேனை யாண்டு கொண்ட
பவளத்தின் திரள்தூணே பசும்பொன் முத்தே
புரங்கெடுத்துப் பொல்லாத காமன் ஆகம்
பொடியாக விழித்தருளிப் புவியோர்க் கென்றும்
வரங்கொடுக்கும் மழபாடி வயிரத் தூணே
யென்றென்றே நானரற்றி நைகின் றேனே.
பொழிப்புரை :
வலிமை மிக்க கறுத்த உடம்பினராய் , உண்மையறிவு அற்றவராய் , நல்லவரல்லாத ஊத்தை வாயை உடைய சமணர்களை ஆன்மபந்துக்களாகக் கொண்ட பாவமாகிய சுமையை நீக்கி , அடியேனை அடிமையாகக் கொண்ட பருத்த பவளத்தூணே ! பசிய பொன்னில் பதிக்கப்பட்ட முத்தே ! திரிபுரங்களை அழித்துத் தவறான செயலில் ஈடுபட்ட மன்மதனுடைய உடம்பு சாம்பலாகுமாறு தீ விழித்து உலக மக்களுக்கு என்றும் மேம்பட்ட வாழ்வை அருளும் மழபாடியில் உள்ள வயிரத்தூணே ! என்று பலகாலும் நான் வாய்விட்டு அழைத்து உள்ளம் உருகுகின்றேன் .



பாடல் எண் : 4

ஊனிகந்தூ ணுறிக்கையர் குண்டர் பொல்லா
வூத்தைவாய்ச் சமணருற வாகக் கொண்டு
ஞானகஞ்சேர்ந் துள்ளவயி ரத்தை நண்ணா
நாயேனைப் பொருளாக ஆண்டு கொண்ட
மீனகஞ்சேர் வெள்ளநீர் விதியாற் சூடும்
வேந்தனே விண்ணவர்தம் பெருமான் மேக
வானகஞ்சேர் மழபாடி வயிரத் தூணே
யென்றென்றே நானரற்றி நைகின் றேனே.
பொழிப்புரை :
சுவைத்து உண்ணுதலை விடுத்துக்கையில் உறியில் கரகத்தைத் தாங்கி உடல்பருத்த பொலிவற்ற , ஊத்தைவாயினை உடைய சமணர்களை ஆன்மபந்துக்களாகக் கொண்டு , உள்ளத்தில் நல்லறிவு பெற்று , உள்ளத்தில் வயிரம் போல ஒளி வீசும் எம்பெரு மானை நெருங்காத நாய் போன்ற கீழேனாகிய என்னை ஒரு பொருளாகக் கருதி அடிமையாகக் கொண்ட , மீன் பொருந்திய கங்கையைத் தன் ஆணையால் தலையிலே தங்குமாறு சூடிய அரசனே ! தேவர்கள் தலைவனே ! மேகத்தை உடைய வானளாவிய மாடி வீடுகளை உடைய மழபாடியில் உகந்தருளியிருக்கும் வயிரத்தூணே என்று நான் பலகாலும் வாய்விட்டுக் கூப்பிட்டு உள்ளம் உருகுகின்றேன் .



பாடல் எண் : 5

சிரமேற்ற நான்முகன்றன் றலையும் மற்றைத்
திருமால்தன் செழுந்தலையும் பொன்றச் சிந்தி
உரமேற்ற இரவிபல் தகர்த்துச் சோமன்
ஒளிர்கலைகள் படவுழக்கி உயிரை நல்கி
நரையேற்ற விடையேறி நாகம் பூண்ட
நம்பியையே மறைநான்கும் ஒல மிட்டு
வரமேற்கும் மழபாடி வயிரத் தூணே
யென்றென்றே நானரற்றி நைகின் றேனே.
பொழிப்புரை :
ஐந்தலைகளைக் கொண்ட பிரமனது ஐந்தாவது தலை அழியுமாறும் திருமாலுடைய தலைமை அழியுமாறும் போக்கி , வலிமை உடைய சூரியன் ஒருவனுடைய பற்களை உடைத்துச் சந்திரனுடைய ஒளிவீசும் கலைகள் அழியுமாறு கலக்கி , அவர்களை உயிரோடு விட்டு , வெண்ணிறக் காளையை இவர்ந்து , பாம்பினை அணிந்த குணபூரணனே ! தலைவனே ! நான்கு வேதங்களும் உன்புகழ் பாடிப் பெருமை பெறுகின்ற மழபாடி வயிரத்தூணே என்று நான் அரற்றி நைகின்றேன் .



பாடல் எண் : 6 

சினந்திருத்துஞ் சிறுப்பெரியார் குண்டர் தங்கள்
செதுமதியார் தீவினைக்கே விழுந்தேன் தேடிப்
புனந்திருத்தும் பொல்லாத பிண்டி பேணும்
பொறியிலியேன் தனைப்பொருளா ஆண்டு கொண்டு
தனந்திருத்து மவர்திறத்தை யொழியப் பாற்றித்
தயாமூல தன்மவழி யெனக்கு நல்கி
மனந்திருத்தும் மழபாடி வயிரத் தூணே
யென்றென்றே நானரற்றி நைகின் றேனே.
பொழிப்புரை:
சினந்து பிறரைத் திருத்த முற்படும் சிறுமையின் மேம்பட்ட பருத்த உடலை உடைய சமணர்களாகிய பொல்லாத அறிவினை உடையவர்கள் காட்டிய தீவினைகளில் அழுந்தினேனாய் விளை நிலங்களை அழித்து அவ்விடத்தில் அசோகமரத்தை வளர்த்துப் பாதுகாக்கும் நல்வினையில்லேனாகிய என்னையும் ஒரு பொருளாக ஏற்று அடிமை கொண்டு மகளிரைப் பற்றிய எண்ணத்தை யான் நினையாதவாறு நீக்கி இரக்கத்திற்கு அடிப்படையான அறவழியை எனக்கு வழங்கி என் மனத்தை நல்வழியில் திருத்தும் மழபாடி வயிரத்தூணே என்று நான் அரற்றி நைகின்றேன்.



பாடல் எண் : 7 
சுழித்துணையாம் பிறவிவழித் துக்கம் நீக்குஞ்
சுருள்சடையெம் பெருமானே தூய தெண்ணீர்
இழிப்பரிய பசுபாசப் பிறப்பை நீக்கும்
என்துணையே யென்னுடைய பெம்மான் தம்மான்
பழிப்பரிய திருமாலும் அயனும் காணாப்
பரிதியே சுருதிமுடிக் கணியாய் வாய்த்த
வழித்துணையாம் மழபாடி வயிரத் தூணே
யென்றென்றே நானரற்றி நைகின் றேனே.
பொழிப்புரை:
நீர்ச் சுழிக்கு ஒப்பாகித் தன்னிடத்திலேயே ஆழ்த்தும் பிறவி வழியாகிய துக்கத்தைப் போக்கும் சுருண்ட சடையை உடைய எம் பெருமானே! சடையில் தூய தெளிந்த நீராகிய கங்கையை ஏற்றவனே! போக்குதற்கு அரிய பசுத்தன்மையால் உள்ள பாசத்தால் ஏற்படும் பிறப்பை நீக்கிய என் துணைவனே! என் தலைவனே! எல்லோருக்கும் தலைவனே! குறை கூறுதற்கரிய திருமாலும் பிரமனும் காணாத ஒளிப்பிழம்பே! வேதத்தின் முடிவாகிய உபநிடதங்களுக்கு அணிகலனாய் எனக்குக் கிட்டிய வழித்துணையாகிய மழபாடி வயிரத்தூணே என்று நான் பலகாலும் வாய்விட்டுக் கூப்பிட்டு உள்ளம் உருகுகின்றேன்.
 
தொகுப்பு: Arul Sivasankaran

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :