Friday, August 21, 2015

Keerthivasan

இதுதான் இந்துமதம் – 16


நாம் இயலாது என்று நினைக்கும் எதையும் தகுந்த பயிற்சியாலும், வைராக்கியத்தாலும் அடைய இயலும். இதையே கிருஷ்ணர் கீதையின் ஆறாவது அத்யாயத்தில் குறிப்பிடுகிறார்.

"அர்ஜுனா மனம் சஞ்சலமானதுதான், இதை வசப்படுத்துவதும் கடினம்தான். ஆனால் தகுந்த பயிற்சியாலும், மன உறுதியாலும் மனம் வசப்படுகிறது. மனதை வசப்படுத்த இயலாதவனால் (மேற்சொன்ன) யோகத்தை அடைய இயலாது. ஆனால் தகுந்த பயிற்சியினால் ஒருவன் யோகத்தை அடைந்து விடலாம்" என்கிறார்.

நம் மனம் மிக பலவீனமானது. புலன்களின் வழியாக புறப்பொருட்கள் நம் மனதை எளிதில் ஆட்கொண்டு விடுகின்றன. எதை "நினைக்காதே" என்று சொல்கிறோமோ அதையே மனம் நினைக்கத் தொடங்குகிறது. மனதில் விழும் ஒவ்வொரு எண்ணங்களும் விதைகளாய் பதிகின்றன. முறையற்ற உணவு அந்த விதைகளுக்கு வீரியத்தை அளிக்கிறது. விதைகள் பெரும் விருட்சங்களாகின்றன.

ஒரு கட்டத்தில் நம்மால் நம்மை மாற்றிக் கொள்வது கிட்டத்தட்ட இயலாததாக மாறுகிறது. ஆன்மீக தத்துவங்களை படிக்கையிலும், கேட்கையிலும் நம் மனதில் "இதெல்லாம் நடக்கிற காரியமா" எனும் எண்ணம் தோன்றுகிறது. காரணம் தீய விதைகளை அழிப்பதற்கு நம்மால் உடனுக்குடன் இயலாது, அவற்றை ஒடுக்க நல்ல விதைகளை நாம் நட வேண்டும்.

நம் மனம் ஒரு நல்ல விளை நிலம். அதில் என்ன நடுகிறோமோ அதுவே முளைக்கிறது. நல்லவற்றை நடுவத‌ற்குதான் "சத்சங்கம்" தேவைப்படுகிறது. அதாவது நல்லவர்களோடு நட்பு அவசியமாகிறது. நல்லவற்றை கேட்பதும், பார்ப்பதும், படிப்பதும், நினைப்பதும் அவசியமாகிறது.

எந்த ஒரு செயலும் 48 நாட்கள் தொடர்ந்து செய்யப்பட்டால் அது நம் ஆழ்மனதில் பதிந்து விடுகிறது என்கின்றனர் யோகிகள். அதை "ஒரு மண்டலம்" என்றும் கூறுகிறார்கள். நவீன உளவியல் நிபுணர்களும் அதை ஊர்ஜிதம் செய்கிறார்கள். நாம் ஒரு யோகாசன பயிற்சியையோ, சூரிய நமஸ்காரமோ, சுலோகம் சொல்வதோ அல்லது வேறு எந்த ஒரு நற்செயலையும் 48 நாட்கள் தொடர்ந்து செய்துவிட்டால் நம் ஆழ்மனம் அதை பற்றிக் கொண்டு விடுகிறது. அதன் பின் நமக்கு மனரீதியான ஒரு எதிர்ப்பு தோன்றுவதில்லை நம் மனம் அதை ஏற்றுக் கொண்டு விடுகிறது.

மனிதர்களை நல்லவர், தீயவர் என்று பிரிக்க இயலாது என்கின்றன நம் தர்ம நூல்கள். அதனால்தான் இராவணனிடமும், துரியோதனனிடமும் கூட பல நல்லவற்றை நாம் பார்க்க முடிகிறது. முக்குணங்களில் சதவீதத்தை வைத்தே நாம் ஒருவரை பகுத்தாய இயலும். முக்குணங்கள் யாவை ? அடுத்த பகுதியில் பார்ப்போம்.

Englightened Master

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :