Wednesday, September 30, 2015

Keerthivasan

இதுதான் இந்துமதம் – 18


மூன்று குணங்களும் மாறி மாறி நம்முள் தோன்றுகின்றன. இந்த முக்குணங்களின் சதவீதமே ஒருவரின் தன்மையை குறிக்கிறது. அதுவே வர்ணங்கள் எனப்படுகின்றன. பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர என நான்காய் இதுவே பிரிக்கப்படுகிறது.

வர்ணம் எனப்படுவது, "விரிஞ்ஜா" எனும் வேர் சொல்லில் இருந்து உருவாகுகிறது. அதன் பொருள் "தேர்ந்தெடுப்பது" என்பதாகும். பிரபஞ்சம் பிரம்மாவின் மூலம் தோன்றும் போது அனைவருமே பிராமணர்களாகவே தோன்றினார்கள் என்றும், அதன் பின் அவரவர் தேர்ந்தெடுக்கும் செயல்கள் மூலம் ஒவ்வொரு தன்மையை அடைகிறார்கள் என்கிறது மகாபாரதம்.

பிராமண தன்மை சத்வ குணம் நிறைந்ததாய் இருக்கிறது. அது எதற்கும் அஞ்சுவதில்லை, எதற்கும் ஆசைப்படுவது இல்லை. எதையும் எதிர்ப்பார்ப்பதும் இல்லை. எதிர்காலத்திலோ, கடந்த காலத்திலோ இல்லாமல் நிகழும் இந்த கணப் பொழுதில்தான் அது நிலைப்பெற்று இருக்கிறது. அது எப்பொழுதும் நிறைந்தே இருக்கிறது. அதனால்தான் பிராமணத் தன்மையே சிறந்ததாக கொள்ளப்படுகிறது. தனக்காக எதையும் சிந்திக்காமல் அனைவரும் நன்றாக இருக்க‌ சிந்திப்பது அதன் தர்மமாக இருக்கிறது.

சத்திரிய தன்மை ரஜோ குணம் நிறைந்ததாக இருக்கிறது. அது எப்போதும் அமைதியற்று இருக்கிறது. மேலும் மேலும் விரிவடைய வேண்டும், வளர வேண்டும் என்று ஆசைப்படுகிறது. அடுத்தவர் மீது ஆளுமை கொள்ள வேண்டும் என்று அது துடிக்கிறது. அடுத்தவர் பொருளை அபகரிக்க எண்ணுகிறது. தேச நிர்வாகமும், தேச பாதுக்காப்பும் அதன் தர்மமாக இருக்கிறது.

வைசிய தன்மை ரஜோ குணமும் தாமஸ குணமும் கலந்த கலவையாக இருக்கிறது. ஆசை, பொருள் ஈட்டல், செலவுகள் செய்யாமல் சேர்த்து வைத்தல் ஆகியவற்றை மையமாக கொண்டுள்ளது. தனக்காக மட்டும் பொருள் ஈட்டாமல் தேசத்திற்காக பொருள் ஈட்டுவது அதன் தர்மமாக இருக்கிறது.

சூத்திர தன்மை தாமஸ குணத்தால் நிரம்பியிருக்கிறது. விழிப்புணர்வு இல்லாமல் கால்நடைகள் போல் வாழும் நிலை. ஆன்மீகம் குறித்து விருப்பம் இல்லாமல் உலகியல் சிந்தனைகளோடு மட்டும் வாழும் நிலை. எதையும் அடைய வேண்டும் என்கிற விருப்பம் இல்லாத சராசரி நிலை. தனக்காக மட்டும் உழைக்காமல், அனைவருக்காகவும் உழைப்பது அதன் தர்மமாக இருக்கிறது.

ஒவ்வொரு ஜென்மத்திலும் ஒருவர் தேர்ந்தெடுத்து செய்யும் வினைகளின் தொகுப்பே அவரின் அடுத்த பிறப்பில் அவரின் தன்மையாக இருக்கிறது. இன்று நாம் பின்பற்றும் சாதி முறைகளை வர்ணம் என்று கொள்ள இயலாது. கடந்த பல நூறு ஆண்டுகளாக ஏற்பட்டுவிட்ட வர்ண கலப்பினால் எந்த சாதியையும் ஒரு குறிப்பிட்ட வர்ணத்தை முழுவதுமாக சார்ந்துள்ளது என்று சொல்ல இயலாது. அதாவது வர்ணத்தையும், சாதியையும் நாம் பொருத்தி பார்க்கவே இயலாது. வர்ணம் மிக விசாலமானது. அது பிறப்பால் மட்டுமின்றி ஒருவர் தேர்ந்தெடுக்கும் செயல்களால் தீர்மானிக்கப் படுகிறது. உதாரணத்திற்கு கர்ணன், விஸ்வாமித்திரர், அஸ்வத்தாமா, வியாசர், விதுரர் என பலரை சொல்லலாம். சாதியோ மிக குறுகியது. பிறப்பால் மட்டுமே தீர்மானிக்கப்படும் ஒரு அடையாளமாக அது இருக்கிறது.

மேலும் இது குறித்து பார்ப்போம்.


Englightened Master

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :