Tuesday, August 25, 2015

Keerthivasan

எங்கே பிராமணன் ? – 22 – சகுனங்கள்

எங்கே பிராமணன் ? – 22 – சகுனங்கள்



கேள்வி : 13 என்கிற எண் துரதிருஷ்டவசமானது என்கிற நம்பிக்கை மேல்நாடுகளில் இருப்பது போல, ஹிந்து மதத்தில் ஏதாவது ஒரு எண் – துரதிருஷ்டவசமானது என்கிற எண்ணம் உண்டா?

சோ : அப்படி எந்த ஒரு எண்ணும் ஹிந்து மத நூல்களில் குறிப்பிடப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. ஏசு பங்கேற்ற கடைசி விருந்தில் கலந்து கொண்ட ஒருவரால், அவர் காட்டிக் கொடுக்கப்பட்டார். அந்த விருந்தில் பங்கேற்றவர்கள் 13 பேர். அதனால்தான் 13 என்பது நல்ல எண் அல்ல என்ற நம்பிக்கை தோன்றியிருக்கிறது. ஹிந்து மத நூல்கள் விவரிக்கின்ற நிகழ்ச்சிகளில், எண்களோடு சம்பந்தப்பட்ட இம்மாதிரி சம்பவங்கள் இல்லை. சொல்லப் போனால், ஹிந்துமத நம்பிக்கைகளின்படி பார்த்தால், ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு விசேஷம் இருக்கிறது. ஆகையால், எந்த எண்ணுமே நல்ல எண் அல்ல என்ற கருத்து ஹிந்துக்களிடையே இல்லை.


கேள்வி : அது இல்லாவிட்டால் என்ன? இங்குதான் மூட நம்பிக்கைக்குக் குறைவே இல்லையே? உதாரணத்திற்கு ஒன்று – நாம் ஒரு காரியமாக வெளியே செல்கிறபோது, பூனை குறுக்கே போனால், நமது காரியமே குட்டிச் சுவராகி விடும் என்று நம்பப்படுகிறதே! நமது காரியத்திற்கும், பூனைக்கும் என்ன சம்பந்தம்? அது, திட்டம் போட்டு நமது காரியத்தைக் கெடுக்கப் போகிறதா?

சோ : பூனை, நமது காரியத்தைக் கெடுக்கும் என்று யாரும் நம்புவதில்லையே! சகுன சாஸ்திரம் என்பது விவரமானது. ராமாயணம், மஹாபாரதம் போன்ற நூல்களில் கூட, சகுனங்கள் பற்றி நிறைய விவரங்கள் கூறப்பட்டுள்ளன.

நீங்கள் சொன்ன பூனை விஷயத்தையே எடுத்துக் கொண்டால், அந்தப் பூனை நமக்கு ஒரு எச்சரிக்கை. பூனையால், நன்மையோ தீமையோ இல்லை. ஆனால், கிரஹ நிலைகள் நம்மை பாதித்துக் கொண்டே இருக்கும். அந்த பாதிப்பு நன்மை தருவதாகவும் இருக்கலாம்; தீமை விளைவிப்பதாகவும் இருக்கலாம்; ஆனால் பாதிப்பு உண்டு.

பூனை குறுக்கே போவது போன்ற சகுனங்கள், நம்மை எச்சரிக்கின்றன. ‘கிரஹ நிலை சரியில்லை; இச்சமயத்தில் நீ காரியத்தில் முனைந்தால், அது உனக்கு அனுகூலமாக நடக்காது; சற்று காத்திருந்து, கிரஹ நிலைகள் மாறிய பின், உன் காரியத்தில் முனைந்தால், உனக்கு நல்லது’ என்று பூனை குறுக்கே போகிற நிகழ்ச்சி, நமக்கு எடுத்துச் சொல்கிறது.


நமக்கு விதி அந்த நேரத்தில் ஒத்துழைத்தால், ‘சரி. ஏதோ தடங்கல் போலிருக்கிறது. இப்போது இந்த காரியத்தில் முனைய வேண்டாம்’ என்று முடிவு எடுக்கிறோம். நமக்கு விதி ஒத்துழைக்கவில்லை என்றால், சகுனத்தை ஒதுக்கி விட்டு, காரியத்தில் முனைகிறோம். அதாவது, நமது காரியம் அந்த நேரத்தில், கெட்டுத்தான் தீர வேண்டும் என்று விதி இருந்தால் – அதை அந்தப் பூனை நிகழ்ச்சி தடுத்துவிடப் போவதில்லை.


கேள்வி : சரி. நீங்கள் சொல்வதை வைத்துக் கொண்டே கேட்கிறேன். கிரஹ நிலைகளின் பாதிப்பு நிச்சயமாக ஏற்பட்டே தீருமா?
சோ : அது நமது விதியைப் பொறுத்தது; நமக்கு இருக்கிற தெய்வ நம்பிக்கையைப் பொறுத்தது. தெய்வத்தின் அனுக்ரஹம் நமக்குப் பரிபூர்ணமாகக் கிட்டினால், கிரஹ நிலைகள் நம்மை ஒன்றும் செய்து விடாது.ஞானசம்பந்தருக்கு, மதுரையிலிருந்து ஒரு அழைப்பு வருகிறது. மதுரை மன்னன் கூன்பாண்டியன் சமண மதத்தில் பற்று கொண்டு, சமண மதத்தினர் சொல் கேட்டு, சைவர்களுக்குத் தொல்லை விளைவிக்கிறான். சைவம் க்ஷீண தசையை அடைகிறது. அப்போது, ராணி மங்கையர்க்கரசியும், அமைச்சர் குலச்சிறையாரும் ஞானசம்பந்தரை வேண்டி அவருக்காகக் காத்திருக்கிறார்கள்.

அவர் மதுரைக்குப் புறப்படுகிறார். அப்போது அவருடன் இருந்த அப்பர் ஸ்வாமிகள் (திருநாவுக்கரசர்) சம்பந்தரைத் தடுக்கிறார். திருநாவுக்கரசர் வயதில் மிகவும் மூத்தவர்; சம்பந்தர் சிறு பையன். ஆனால், திருநாவுக்கரசருக்கு, சம்பந்தர் மீது பெரும் ஈடுபாடு உண்டு. சம்பந்தருக்கும் அப்பர் ஸ்வாமிகள் மீது பெரிய மரியாதையும் பக்தியும் உண்டு.

சம்பந்தர் புறப்பட்ட நேரம் சரியில்லை என்பதை, அப்பர் கவனிக்கிறார். ‘கிரஹ நிலைகள் சரியில்லை, இப்போது புறப்பட வேண்டாம்; தீமை நேரிடுமோ என்று நான் அஞ்சுகிறேன்’ என்று சம்பந்தரை அப்பர் எச்சரிக்கிறார்.

ஆனால், சம்பந்தர் ‘சிவனுடைய பாதத்தைப் பற்றி நான் நிற்பதால், கிரஹங்கள் என்னை ஒன்றும் செய்துவிடாது’ என்று கூறுகிறார். ‘மூங்கிலின் அழகைக் கொண்ட தோள்களைப் படைத்த உமாதேவியை, ஒரு பாகமாகக் கொண்டவர்; விஷத்தை உட்கொண்ட கழுத்தைக் கொண்டவர்…’ என்று பொருள் கொண்ட வார்த்தைகளாகிய ‘வேயுறு தோளி பங்கன், விடமுண்ட கண்டன்’ என்று ஆரம்பித்து அப்போது, சம்பந்தர் பாடிய பாடல்கள் – கோளறு திருப்பதிகம். இதைச் சொல்பவர்களை, கிரஹக் கோளாறுகள் ஒன்றும் செய்யாது என்று காஞ்சி மஹா ஸ்வாமிகள் சொல்லியிருக்கிறார்.



 – CHO
– தொகுப்பு : அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன்

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :