Friday, January 22, 2016

Keerthivasan

எங்கே பிராமணன் ? – 25 – கர்மா தியரி

கர்மா தியரி




கேள்வி கேட்பவர் : ‘கர்மா’ என்ற சொல்லே தோல்வி மனப்பான்மையை வளர்க்கத்தானே உதவுகிறது? போன ஜன்மத்தில் செய்ததன் பலன்களை இந்த ஜன்மத்தில் பெறுகிறோம் என்று சொல்கிற இந்த ‘கர்மா தியரி’ பற்றி என்ன சொல்கிறீர்கள்? அதிலும் கூட, ‘பிராரப்த கர்மா’ என்கிறார்கள். அது என்ன விசேஷ கர்மா?

சோ : முன் பிறவிகளில் செய்த புண்ணிய பாவங்களின் பயனை நாம் இந்த ஜன்மத்தில் அனுபவிக்கிறோம் என்று கூறுகிற இந்த ‘கர்மா தியரி’, வேறு எந்த மதத்திலும் இல்லாத ஒரு தத்துவம் என்று கூறப்படுகிறது. நீங்கள் கடைசியாகக் கேட்டதற்கு முதலில் வருகிறேன்.

கர்மாவை சஞ்சித கர்மா, பிராரப்த கர்மா என்று கூறுகிறார்கள். ‘சஞ்சிதம்’ என்றால் மூட்டை. நாம் இதுவரை பல ஜன்மங்களில் செய்த புண்ணிய பாவங்களின் மூட்டை – சஞ்சித கர்மா. அதிலிருந்து ஒரு பகுதியைத்தான் நாம் இந்த ஜன்மத்தில் அனுபவிக்கிறோம்; அது பிராரப்த கர்மா. இன்னமும் நிறைய மீதி இருக்கும்; அத்துடன் நமது இந்த ஜன்ம பாவ – புண்ணியங்களும் சேர்ந்து கொள்ளும். இதனால்தான் கர்மக் கடனை தீர்க்க, நாம் பல பிறவிகள் எடுக்கிறோம்.

இந்த கர்மா தியரியை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், இறைவனை நம்புகிறவர்களால் பல விஷயங்களுக்கு விளக்கம் காண முடியாமல் போகும்.

ஒரு அயோக்கியன் இருக்கிறான்; செய்வது எல்லாம் கொடுமை, ஏமாற்று வேலை, மோசடி. ஆனால், அவன் துன்பத்தை அனுபவிப்பதில்லை. வேறு ஒருவன், நல்லவன்; யாருக்கும் ஒரு தீங்கும் இழைப்பதில்லை; நேர்மையாளன். ஆனால் இவன் துன்பத்தில் உழல்கிறான்.

ஏன் இப்படி? இறை நம்பிக்கை இல்லாதவர்கள் வேண்டுமானால், ‘அப்படித்தான் நடக்கும். அதற்கு என்ன செய்வது? சந்தர்ப்ப சூழ்நிலை…’ என்று, சொல்லிவிடப் பார்க்கலாம். அந்தச் ‘சந்தர்ப்ப சூழ்நிலைகள்’ ஏன் குறிப்பிட்ட வகையில் அமைந்தன என்று கேட்டால், அவர்களும் கூடத் தயங்க வேண்டியதுதான்.
கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் – நம்மை எல்லாம் ஆள்கின்ற இறைவன் இருக்கிறான் என்று நம்புகிறவர்கள் – என்ன பதில் சொல்வார்கள்?‘அயோக்கியனுக்கு இன்பம்; நேர்மையாளனுக்கு துன்பம்… ஏன்?’ என்று கேட்டால் ‘அது, கடவுள் இஷ்டம்’ என்று சொல்வார்களா?அப்படிச் சொன்னால், கடவுள் கருணையே அற்ற, தர்ம நியாயம் பார்க்காத கொடூர மனம் உடையவன் என்று ஆகிவிடும்.

சரி. ‘அது கடவுளை மீறி நடக்கிற விஷயம்’ என்று சொன்னால், கடவுள் சர்வ வல்லமை படைத்தவர் அல்ல என்று ஆகிவிடும்.

பின் என்னதான் விளக்கம்?

அயோக்கியனை நன்றாக வளர்த்து, யோக்கியனைத் திண்டாட வைத்து, கடவுள் விளையாடுகிறானா? வேடிக்கை பார்க்கிறானா? அல்லது இந்தக் கொடுமையை ரஸிக்கிறானா? சில மதங்களில், இது சாத்தானின் வேலை என்று கூறி விடுகிறார்கள். அப்படியானால் சாத்தானின் சக்தி, இறைவனின் சக்தியை விட உயர்ந்தது என்று ஆகிவிடும்.

இப்படிப்பட்ட சிக்கலான விஷயத்தில், ஹிந்து மதம் தெளிவைக் கண்டிருக்கிறது. ‘நீ முற்பிறவிகளில் கொடுமை செய்திருந்தால், அதன் பலனாக இந்தப் பிறவியில் துன்பத்தை அனுபவிக்கிறாய். முற்பிறவிகள் பலவற்றில் நீ பாவம் புரிந்திருந்தால் – அந்தப் பாவத் தொகுப்பு சஞ்சித கர்மா. அதிலிருந்து ஒரு பகுதியை இந்தப் பிறவியில் அனுபவித்துக் கழிக்கிறாய் – அது உன் ப்ராரப்த கர்மா’ என்று ஹிந்து மதம் கூறுகிறது.
அதே போல ‘நீ சென்ற பிறவிகளில் நன்மைகள் செய்திருந்தால் – இந்தப் பிறவியில் அதன் பயனாக, உனக்கு நல்லது நடக்கும். அது உன் புண்ணியத்தின் பலன். இதுவும் கர்மாதான். புண்ய கர்மா.இது தோல்வி மனப்பான்மையை வளர்க்கும் என்று நீங்கள் சொல்கிறீர்கள். மாறாக, இது மனிதர்களை நல்வழிப்படுத்த உதவும் என்பதுதான் சரி.இப்பிறவியில் நாம் நன்மைகளையே செய்தால், தர்மங்களைச் செய்தால், மற்றவர்களிடம் நியாயமாக நடந்து கொண்டால் – அடுத்த பிறவியிலாவது நமக்கு நன்மையே நடக்கும் – என்ற நம்பிக்கையை ஊட்டக் கூடிய விளக்கம் – கர்மா தியரி.

ஹிந்து மதத்தின் விசேஷமான சிறப்பம்சங்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது.

 – CHO
– தொகுப்பு : அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன்

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :