Friday, January 22, 2016

Keerthivasan

எங்கே பிராமணன் ? – 26 – ஜோதிடம்

ஜோதிடம்



கேள்வி கேட்பவர் : ஜோஸ்யத்தை ஹிந்துக்கள் நம்புகிற மாதிரி வேறு யாரும் நம்புவதில்லை…

சோ : அப்படிச் சொல்ல முடியாது. ஒவ்வொரு தேசத்தில், அல்லது மதத்தில், ஒவ்வொரு வகையான ஜோதிடம் நம்பப்படுகிறது. நியூமராலஜி மட்டுமல்லாமல், பிறந்த தேதியை வைத்தும் பலன்கள் பார்க்கப்படுகின்றன. ஹிந்துக்களிடையே இந்த நம்பிக்கை கூடுதலாக இருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம்.

கேள்வி : ‘கூடுதல்’ என்று மட்டும் சொல்லிவிட முடியாது. இங்கே அது வெறியாகவே இருக்கிறது. உதாரணத்திற்குப் பார்த்தால், ஒருவருக்கு உடல் நலம் அடிக்கடி பாதிக்கப்பட்டால் கூட, ஜோஸ்யரைத் தேடிப் போகிறார். இது என்ன பைத்தியக்காரத்தனம்! உடல் நலம் சரியில்லை என்றால், டாக்டரிடம்தானே போக வேண்டும்?

சோ : சரி. ஒரு டாக்டரிடம் அந்த நபர் போகிறார். பல டெஸ்ட்கள் செய்யப்படுகின்றன. பல மாத்திரைகள்; இஞ்ஜெக்ஷன்கள். ஆனாலும் உடல் நலம் சீர்படவில்லை. வேறு டாக்டரிடம் போகிறார். அப்போது முதல் டாக்டரிடம் போனது மூடநம்பிக்கையா, வெறியா?

இரண்டாவது டாக்டரிடமும் குணம் தெரியவில்லை என்றால், ஒரு கிளினிக்கில் அட்மிஷன் செய்து கொள்கிறார். எல்லா டெஸ்ட்களும் திரும்பச் செய்யப்படுகின்றன.

‘முதலிலே செய்தாகி விட்டது – இதோ அந்த ரிஸல்ட்கள்’ என்று கூறினால், கிளினிக்கில் அதை ஒப்புக் கொள்ளாமல், புதிய டெஸ்ட்கள் நடக்கின்றன. செலவு, மீண்டும் செலவு, மேலும் செலவு. இது என்ன ரொம்ப புத்திசாலித்தனமா?

டாக்டரைக் குற்றம் சொல்லியும் பயனில்லை. இன்ன வியாதி என்று டெஸ்ட்டின் மூலம் அறிந்து, அதற்கு இன்ன மருந்து என்று கொடுக்கிறார்கள். இருந்தாலும் பலனில்லை.வேறு வழி பார்க்கப்படுகிறது. விஞ்ஞான பூர்வமாக வளர்ந்துள்ள மருத்துவத்தின் கதி இது. இதில் இன்னொரு பிரச்சனையும் உண்டு.இப்போது கொடுக்கப்படுகிற மருந்தை, இன்னமும் சில ஆண்டுகள் கழித்து, மருத்துவ உலகம் நிராகரிக்கிறது.‘அது தவறான மருந்து’ என்று அப்போது சொல்லப்படுகிறது. அந்தத் தவறான மருந்தை, இப்போது நாம் நல்ல மருந்து என்று ஏற்கிறோம்; அதையே தவறான மருந்து என்று விஞ்ஞானம் கூறும்போது அதையும் ஏற்கிறோம்.இது பைத்தியக்காரத்தனமா, அல்லது பகுத்தறிவா? என்ன இது? நம்பிக்கை.

நமக்கு விவரம் தெரியாது. டாக்டருக்குத் தெரியும் என்பது நம்பிக்கை. அதனால் அவரிடம் போவதும் நம்பிக்கை. அவர் சொல்கிற மருந்தைச் சாப்பிடுவதும் நம்பிக்கை.

இதையெல்லாம் பகுத்தறிவு என்று கூறுகிற நீங்கள், ஜோஸ்யத்தை ஏன் இகழ்கிறீர்கள்?

கேள்வி : டாக்டர், மருத்துவத்தைப் படித்தவர்; அதில் அனுபவம் உள்ளவர்; ஆராய்ச்சி மூலமாகக் கண்டுபிடிக்கப்பட்ட மருந்தைத் தருகிறார். அதையும் ஜோஸ்யத்தையும், ஒன்றாக்குவதை ஏற்க முடியாது.

சோ : இரண்டும் ஒன்றுதான் என்று நான் சொல்லவில்லையே? ‘நம்பிக்கை’ பற்றிப் பேசுகிறேன்.‘சம்பந்தப்பட்ட டாக்டர், எவ்வளவு நபர்களைப் பார்த்தார்; அவருடைய அனுபவம் எத்தகையது; அவர் தருகிற மருந்துகளுக்குப் பின் உள்ள ஆராய்ச்சி எப்படிப்பட்டது…’ என்பதையெல்லாம் விசாரித்துக் கொண்டா, நாம் ஒரு டாக்டரிடம் போகிறோம்? கிடையாது. ராசியானவர் என்றால், அது கூட பகுத்தறிவில்லை – அம்மாதிரி ஒரு காரணத்தினால், அவரிடம் போகிறோம்.

அதே மாதிரி ஜோஸ்யர்களிலும், ஜோதிட சாஸ்திரத்தை நன்கு அறிந்தவர்கள் இருக்கிறார்கள். அதில் நல்ல அனுபவம் உள்ளவர்கள் இருக்கிறார்கள். அவர்களைச் சிலர் நம்பினால், அதில் என்ன தவறு?

 – CHO
– தொகுப்பு : அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன்

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :