Tuesday, July 26, 2016

Keerthivasan

எங்கே பிராமணன்? – 27 – ஜோதிடம் – ஜோதிட சாஸ்திரத்தின் கூர்மை – 5


சோ : ஜோதிட சாஸ்திரத்தின் கூர்மையைக் காட்ட, ஒரு சில உதாரணங்களைக் கூறுகிறேன். இவை நான் அறிந்தவை; கேள்விப்பட்டவை அல்ல.

சஞ்சய் காந்தி, விமான விபத்தில் மரணம் அடைந்தபோது, ‘துக்ளக்’ ஆஃபீஸில் ஓவியராகப் பணி புரிந்து கொண்டிருந்த திரு. ஸாரதி திகைத்துப் போனார். ‘ஒரு பெரிய அதிசயம். எல்லோரும் கொஞ்சம் காத்திருங்கள்’ என்று கூறிவிட்டு, தன் வீட்டிற்குச் சென்று, பாபுராவ் பட்டேலின், ‘மதர் இந்தியா’ பத்திரிகையின் பழைய இதழ் ஒன்றைக்கொண்டு வந்தார்.

பாபுராவ் பட்டேல், அதில் ஜோதிடமும் எழுதிக் கொண்டிருந்தார். அந்தப் பழைய இதழில், ‘சஞ்சய் காந்தி இன்னும் இரண்டு ஆண்டுகளில், ஒரு விமான விபத்தில் உயிர் இழக்கக் கூடும்’ என்று தன்னுடைய ஜோதிடக் குறிப்புகளில் பாபுராவ் பட்டேல் எழுதியிருந்தார்.

எப்படி, இந்த மாதிரி அவரால் சொல்ல முடிந்தது? ஜாதகத்தைக் கணித்து அவர் சொன்ன முடிவு, அப்படியே பலித்து விட்டது எப்படி? ‘குருட்டாம் போக்கு’ என்று சொல்லி விடலாம்; அப்படிச் சொல்வது சுலபம். ஆனால், இந்த மாதிரி ஒரு விஷயத்தில், இப்படி முன்கூட்டியே கணிக்க முடிந்தது என்பது, ஜோதிட சாஸ்திரத்தின் வலிமையைத்தான் காட்டுகிறது.

இன்னொரு நிகழ்ச்சி. ஸி.என் அண்ணாதுரையின் மரணம், தி.மு.க. பிரிவினை (எம்.ஜி.ஆர். வெளியேற்றப்பட்டது) இரண்டையுமே, 1967-லேயே ஒரு ஜோதிட நிபுணர் கூறியிருந்தார். அவர் பெயர் சுந்தரராஜன். (என்னுடன் பள்ளியில் படித்தவர்). அவர் ‘தி அஸ்ட்ரலாஜிகல் மாகஸின்’ என்ற பிரபல ஜோதிடப் பத்திரிகையில் 1967-ல் தி.மு.க. பெரிய வெற்றி பெற்றபோதே, ‘இன்னும் ஒரு சில ஆண்டுகளில் தி.மு.க. பிளவுபடும். அதன் நிறுவனத் தலைவர்களில் முக்கியமானவர் மரணம் அடைவார்’ என்று எழுதியிருந்தார்.

இந்தக் கணிப்பு வெளியான இதழை, 1972-ல் அவர் என்னிடம் காட்டியபோது, எனக்கு ஆச்சரியமாக இருந்தது. தி.மு.க. ஆரம்பிக்கப்பட்ட நேரத்தை வைத்துக் கொண்டு, தான் இதை கணித்ததாக அவர் என்னிடம் விளக்கினார்.

இன்னுமொரு நிகழ்ச்சி. என் நண்பன் ஒருவன். பெரிய கடனில் சிக்கியிருந்தான். எதுவும் அவன் வாங்கிய கடன் இல்லை. ‘ஷ்யூரிட்டி’ கையெழுத்துப் போட்டு, அவன் சந்தித்த பிரச்சனை அது. பித்துப் பிடித்தவன் போல் அவன் மாறி விட்டான். அவன் தற்கொலை செய்து கொள்ளவும் முயன்றான். அவனுடைய நண்பர்களாகிய நாங்கள் ஏதோ உதவி செய்தோம்; அதுவும் போதவில்லை. திண்டாடிக் கொண்டிருந்தான்.

இந்த நிலையில், என்னை ஒரு ஜோதிடர் சந்தித்தார். என் ஜாதகத்தைப் பற்றிக் கூறினார். நான் அவரிடம், ‘என்னைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதனால் சரியாகச் சொல்ல முடிகிறது. என் நண்பர் ஒருவர் இருக்கிறார். அவரது ஜாதகத்தைப் பார்த்துச் சொல்ல முடியுமா?’ என்று கேட்டேன். அவரும் சம்மதித்தார்.

என் நண்பன், கடனில் சிக்கியது, அவனுடைய தற்கொலை முயற்சி… என்று எல்லா விவரத்தையும் மிகத் தெளிவாக எடுத்துச் சொல்லிக் கொண்டே வந்தார். என் நண்பனைப் பற்றி, அவருக்கு ஒன்றுமே தெரியாது. சந்தித்தது கூட இல்லை. ஆனால், அவனுடைய நிலையை அப்படியே விவரித்தார்.

பிறகுதான், இதைவிட அதிசயமாக அவர் ஒன்று சொன்னார். ‘கவலை வேண்டாம். இவருக்கு நல்ல காலம்தான். இவருடைய கவலை முழுமையாகத் தீர்ந்து விடும். இரண்டே மாதத்தில் எல்லா கஷ்டங்களும் மறைந்து விடும்’ என்று அவர் சொன்னார். நாங்கள் இதை நம்ப முடியாமல் இருந்தோம். ஏன் என்றால், அவன் சிக்கியிருந்த குழப்பம் அப்படிப்பட்டது.

ஆனால், இரண்டு மாதத்திற்குள்ளேயே, அந்த நண்பனின் மகன், தனக்குத் தெரிந்த ஒரு அரசியல்வாதியின் உதவியுடன், கடன் கொடுத்திருந்த சிலரைச் சந்தித்து, பெரும் வட்டி கொடுத்ததையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளுமாறு செய்து, முழு கடனையும் ஃபைஸல் செய்து விட்டான். எல்லோருக்கும் நிம்மதி.

இப்படி எல்லாம் கணிக்க வழி சொல்கிற ஜோதிட சாஸ்திரத்தை, பொய் என்று கூறுவது சரியாக இருக்காது.

ஆனால், ஒன்று. மிக நன்றாகக் கற்றறிந்த ஜோதிடர் கூட, எதிர்காலத்தைத் துல்லியமாகக் கணித்து விடுவார் என்று உறுதியாகக் கூற முடியாது.

வராஹமிஹிரரே ‘கிரஹங்களின் போக்கை வைத்து, சூசகமாக பலன் சொல்லலாம்; ஆனால், என்ன நடக்கும் என்பது பிரம்மனுக்கு மட்டுமே துல்லியமாகத் தெரியும்’ என்று கூறியிருக்கிறார். ஆகையால், ஜோதிடத்தை நம்பியே ஒவ்வொரு காரியத்தையும் செய்வது புத்திசாலித்தனமல்ல.

 – CHO
– தொகுப்பு : அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன்

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :