Monday, August 22, 2016

Keerthivasan

எங்கே பிராமணன்? – தர்மம் – 02 – 34


ராவணனிடம் கும்பகர்ணன், ‘இந்த வம்பு நமக்கு வேண்டாம்; ஸீதையை திருப்பி அனுப்பி விடு; பெண்களினால் எவனும் உருப்பட்டதில்லை; அனுப்பி விடு’ என்கிறான். ஆனால், ராவணன் அதைக் கேட்கவில்லை. ‘சரி. அப்படியானால் உனக்காக நான் யுத்தத்தில் போரிட்டுச் சாகிறேன்’ என்று சொல்லி விட்டு, கும்பகர்ணன் யுத்தம் நடத்துகிறான். தர்மத்தை அவன் பார்த்த பார்வை அப்படி. அது அவன் ஏற்ற தர்மமாகிறது.

கேள்வி : இதென்ன, ஒவ்வொருவருக்கு ஒரு தர்மமா?

சோ: அப்படியல்ல. நேரம், சூழ்நிலை, சம்பந்தப்பட்டவர்களின் நடத்தை… என்று பல விஷயங்கள் இதில் அடங்குகின்றன. தவிர, மஹாபாரதத்திலோ, ராமாயணத்திலோ, கர்ணன், விபீஷணன், கும்பகர்ணன் ஆகியோர் எடுத்த முடிவுகள் தர்மம்தானா, இல்லையா என்பது பற்றி தீர்ப்பு இல்லை. இரண்டு நிகழ்ச்சிகளைப் பார்ப்போம்:

மாண்டவ்யர் என்று ஒரு ரிஷி. அவர் நிஷ்டையில் இருந்தபோது, அங்கே ஒரு திருடன் வந்து விட்டான். அவனைத் துரத்திக் கொண்டு அரசனின் சேவகர்கள் வந்தார்கள். ரிஷி, திருடனையும் கவனிக்கவில்லை. அவர்களையும் கவனிக்கவில்லை.

அவர்கள் இவரை ‘திருடன் எங்கே?’ என்று கேட்க, இவர் பதில் அளிக்காமல் இருக்க, திருடனும் அகப்பட்டுவிட, இவர்தான் அவனை மறைத்து வைத்தார் என்று அவர்கள் நினைத்து விடுகிறார்கள். அவர் கழுவில் ஏற்றப்படுகிறார்.
தர்மதேவனிடம், மாண்டவ்யர் ‘தவறே செய்யாத எனக்கு ஏன் இந்த தண்டனை?’ என்று கேட்கிறார்.தர்மதேவன், ‘நீ சிறுவனாக இருந்தபோது, ஊசியினால் பூச்சிகளைக் குத்தினாய். அதனால் இப்போது உனக்கு இந்த தண்டனை கிடைத்திருக்கிறது’ என்று கூறுகிறான்.

‘சிறிய வயதில் நான் அறியாமல் செய்த தவறு அது. பூச்சிகளை இம்மாதிரி செய்யக் கூடாது என்று தெரிந்து வைத்து, நான் அதைச் செய்யவில்லை. அப்படி தெரியாமல் செய்த தவறுக்கு இவ்வளவு பெரிய தண்டனையை நீ அளித்திருக்கிறாய். அதனால் நீ மனிதனாகப் பிறக்கக் கடவது’ என்று மாண்டவ்யர், தர்மதேவனுக்கு சாபமிடுகிறார்.

தர்மதேவன், மனிதனாக – விதுரராகப் பிறந்தார். இப்படி மனிதனாகப் பிறக்க வேண்டிய நிலை தர்மத்துக்கே ஏன் ஏற்பட்டது? அளவுக்கு மீறிய தண்டனையை தர்மதேவன் கொடுத்தான் என்பதுதான், அவன் செய்த குற்றம். அவன் புரிந்த அதர்மம் அது.

ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் எவ்வளவு விஷயம் அடங்கியிருக்கிறது என்று பாருங்கள். அதர்மத்திற்குத் தண்டனை விதிப்பது என்பது தர்மதேவனுக்கு உரிய தர்மம்தான். அவனுடைய கடமைதான் அது. ஆனால், அளவுக்கு மீறிய தண்டனையைக் கொடுத்தான் என்பதால், அவன் செயல் அதர்மமாகி விட்டது. அதற்குரிய தண்டனையை அவன் அனுபவித்தான். தர்மதேவனுக்கே கூட அதர்மப் பாதையில் செல்லும்போது தண்டனை உண்டு.



– CHO
– தொகுப்பு : அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன்

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :