Monday, August 22, 2016

Keerthivasan

காஷ்யப புரா - காஷ்மீர் சரித்திரம் - 01



இந்துக்களின் ஆதார பூமியாகவும், வேத காலத்திலேயே சனாதன தர்மத்தின் வேராக‌வும் திகழ்ந்தது காஷ்மீர். 

பூமியில் இருக்கும் சுவர்கம் என்று குறிப்பிடும் வகையில் அது ஒரு அற்புதமான, அழகான‌ பகுதியாக திகழ்ந்தது.. சமஸ்க்ருதத்தில் "காஷ்மீர்" என்பது "நீர் வற்ற செய்யப்பட்ட‌" என பொருள்படும். "கா" என்றால் "நீர்", "ஷிமீரா" என்றால் "வற்ற செய்யப்பட்ட" எனப் பொருள்படும். காஷ்மீர் பகுதியில் ஒரு பெரும் ஏரி இருந்ததாகவும், அதை மரிச்சி ரிஷியின் புதல்வர் "காஷ்யப மக‌ரிஷி" வற்ற செய்ததாகவும் புரான குறிப்புகள் குறிப்பிடுகின்றன. "வராஹ மூலா" (பாரமுல்லா என்று தற்போது மாற்றப்பட்டு விட்டது) எனும் குன்றுகளுக்கு இடையே இருந்த அந்த‌ ஏரியின் இடைவெளியில், ஒரு பிளவை ஏற்படுத்தி காஷ்யபர் அதை வற்ற செய்ததாக புரான குறிப்புகள் தெரிவிக்கின்றன. வற்றப்பட்ட அந்த பகுதிதான் பிற்காலத்தில் வாழ்விடமாக மாறி "காஷ்யப புரா" என்று அழைக்கப்பட்டது என்பது பழங்கதை. இதை பாரசீக, மேற்கத்திய இலக்கியங்கள் "காஸ்பபிராஸ்" (Kaspapyros) என்று அழைத்தன. கிரேக்க-எகிப்திய கணித மேதையான "ப்டாளமி"யால் (Ptolemy) அது பிற்காலத்தில் "காஸ்பீரியா" (Kaspeiria) என்றும் அழைக்கப்பட்டது. .

காஷ்மீர் சனாதன தர்மத்தின் ஆதார வேராக இருந்து வந்தது. பாரதத்தின் ஆதி கால‌ வேத பண்டிதர்கள் காஷ்மீரையே மையமாக கொண்டிருந்தார்கள். 5150 வருடம் பழமையான மகாபாரதத்தில் கூட காஷ்மீர் "காம்போஜ" அரசின் கீழ் இருப்பதாக‌ குறிப்புகளை பார்க்கலாம். பொது ஆண்டுக்கு 300 ஆண்டுகளுக்கு முன் காஷ்மீரை கைப்பற்றிய அசோக சக்கரவர்த்தி அங்கு புத்த மதத்தை நிறுவினார். அதன் பின் பல நூறு ஆண்டுகளாக சனாதன தர்மத்தோடு புத்த மதமும் தழைத்து வந்தது. காஷ்மீரில் இருந்து திபெத் மற்றும் சீனாவுக்கு புத்த மதம் பரவத் தொடங்கியதும் இதன் பின்னர் தான். ஏழாம் நூற்றாண்டுக்கு பின் மீண்டும் இந்து தர்ம தத்துவ மலர்ச்சி காஷ்மீரில் பெருமளவில் தொடங்கியது. மிகப்பெரும் தத்துவ மேதைகள் அங்கு தோன்றி பல இலக்கியங்களையும், கோட்பாடுகளையும் வெளிப்படுத்தினார்கள். அவர்களில் "வசுகுப்தர்" (875–925) வழங்கிய "சிவ சூத்திரங்கள்" மிக முக்கியமானவை. இந்த சிவ சூத்திரங்கள் தான் சிவபெருமானை ஒரே முழு முதற் கடவுளராக முன் நிறுத்திய‌ "காஷ்மீர் சைவம்" தழைத்தோங்க மிக முக்கிய ஆதாரமாக இருந்தது. அதன் பின் வந்த "அபிநவகுப்தர்" (975–1025) காஷ்மீர் சைவ மதத்திற்கு மேலும் பல பங்களிப்புகளை ஆற்றினார். காஷ்மீர் சைவ சமயத்தின் ஆளுமை பாரதத்தின் தெற்கே உள்ள பகுதி மக்களை கவர்ந்து, பலரை ஆட்கொள்ளத் தொடங்கியது.

எல்லாம் நன்றாக சென்றுக் கொண்டிருந்த வேளையில்தான் பாரதம் முஸ்லீம் படைகளின் ஆக்கிரமிப்புக்கு வந்தன (படிக்க ரத்தத்தில் முளைத்த என் தேசம் - முதல் பாகம்) 13 ஆம் நூற்றாண்டுகளில் அங்கு நுழைந்த‌ முஸ்லீம் படைகளின் ஆக்கிரமிப்பால் இந்துக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாக தொடங்கினர். பொது ஆண்டு 1339ல் முதல் முஸ்லீம் அரசனாக "ஷா மீர்" காஷ்மீரை ஆட்சி செய்யத் தொடங்கினான். இஸ்லாம் மெல்ல காஷ்மீரில் பரவத் தொடங்கியது. "ஷெயிக் நூருதின் நூரானின்" எனும் ஒரு இஸ்லாமிய மதகுரு (காஷ்மீர் இந்துக்களால் "நுந்த் ரிஷி" என்று அழைக்கப்பட்டவர்) காஷ்மீரின் சைவ‌ நெறியையும், இஸ்லாமிய சுஃபி கோட்பாடுகளையும் இனைத்து பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்தார். அதன் பின் காஷ்மீரை ஆண்ட‌ பெரும்பாலான சுல்தான்கள் மத சகிப்புத்தன்மை கொண்டவர்களாக இருந்தாலும், கொடுங்கோலன சுல்தான் "சிகந்தர்" (1389–1413) இந்துக்கள் மீது பிரத்யேக வரிகளை சுமத்தியும், கட்டாயமாக மதமாற்றியும், இந்துக்களின் கோவில்களை அழித்தும் இஸ்லாத்தை பெருமளவில் பரப்பினான். "சிலைகளை பூண்டோடு அழிப்பவன்" எனும் பொருள் படும் "பத் ஷிகான்" (But–Shikan) எனும் பட்டம் அவனுக்கு வழங்கப்பட்டது.

அடுத்த ஐந்து நூற்றாண்டுகள் காஷ்மீர் முகலாயர்கள் உட்பட முஸ்லீம்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. கட்டாய மதமாற்றங்களினால் பல ஆயிரம் இந்துக்கள் மதமாற்றம் செய்யப்பட்டு வந்தனர். இதன் விளைவாக காஷ்மீர் முஸ்லீம் பெரும்பான்மை கொண்ட பிரதேசமாக மாறத் தொடங்கிய‌து. 16ம் நூற்றாண்டின் மத்தியில் இந்துக்களின் ஆளுமை தர்பாரில் மிகவும் குறைய தொடங்கியது. இதனால் இந்து பண்டிதர்கள் பாரதத்தின் மற்ற பகுதிகளுக்கு புலம் பெயர தொடங்கினர். அரேபியா, மத்திய ஆசியா, பாரசீகம் துருக்கி ஆகிய பகுதிகளில் இருந்து இஸ்லாமிய மதப்பிரச்சார குழுக்களை சேர்ந்த முல்லாக்களும், மௌலனாக்களும் காஷ்மீருக்குள் ஊடுறுவ தொடங்கினர். பல ஆயிரம் வருடங்களாக காஷ்மீரின் அலுவலக மொழியாக இருந்த சமஸ்க்ருதத்திற்கு பதிலாக பாரசீக மொழி நிறுவப்பட்டது.

அதன் பின் காஷ்மீரை முகலாயர்கள் 1586 முதல்1751 வரை ஆண்டார்கள். மராத்திய எழுச்சியாலும், நாதிர் ஷாவின் படையெடுப்பாலும், முகலாயர்களின் ஆளுமை குறையத் தொடங்க, காஷ்மீர், ஆப்கானிய "துரானிய" சாம்ராஜ்யத்தின் வசம் வீழ்ந்தது. 1747 முதல் 1819 வரை துரானிய அரசு அதை ஆண்டது. ஆப்கானியர்களின் கொடுங்கோல் ஆட்சியில் காஷ்மீர் மக்கள் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாகினர். அதற்கு சாவுமணி அடிக்கும் வகையில் பொது ஆண்டு 1819ல், "மகாராஜா ரஞ்சித் சிங்" தலைமையில் போர் தொடுத்த சீக்கிய படை காஷ்மீரை கைப்பற்றியது.


ஆக்கம்: Enlightened Voice

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :