Monday, August 1, 2016

Keerthivasan

எங்கே பிராமணன்? – சொல்லின் சக்தி – 32

கேள்வி: ஹிந்து மத விழாக்களில் அது பூஜையாகட்டும் – ஒரு நல்ல காரியமாகட்டும் – வார்த்தைக்கு ரொம்பவும் முக்கியத்துவம் கொடுக்கிறார்களே, ஏன்?

சோ : பேசும்போது ஏற்படுகிற ஒலி, மங்களகரமானதாக இருக்க வேண்டும். அது நல்ல அதிர்வுகளை ஏற்படுத்தும். வேத மந்திரங்களுக்கு இந்த சக்தி உண்டு என்று நம்பப்படுகிறது.

பொதுவாகவே, பேச்சிற்கு – சொல்லுக்கு – மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அவச்சொல் தவிர்க்கப்பட வேண்டும். ஏனென்றால், நாம் சில அவச்சொற்களைப் பேசும்போது, சில துஷ்ட தேவதைகள் ‘அவ்வாறே ஆகுக!’ என்று கூறிவிடும்.

அதனால் சில சமயங்களில் கூறப்படுகிற அவச்சொல் மாதிரியே, சில விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்பட்டுவிடும் என்றும் நம்பப்படுகிறது.

இதைத் தவிர, சொல்லுக்கு சக்தி உண்டு என்பதைக் காட்டுகிற பல நிகழ்ச்சிகள், ஹிந்துமத நூல்களில் கூறப்பட்டிருக்கின்றன.

உதாரணத்திற்கு ஒன்றைச் சொல்கிறேன். ‘த்வஷ்டா’ என்பவன் தேவதச்சன். அவனுக்கு இந்திரனோடு பெரும் பகை உண்டாகியது. ஆகவே, இந்திரனைக் கொல்லக் கூடிய சக்தி பெற்ற மகனைப் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் அவன் ஒரு யாகம் செய்தான்.
‘எனக்கு ஒரு மகன் பிறக்க வேண்டும்; அவன் இந்திரனைக் கொல்பவனாக இருக்க வேண்டும்’ என்பது அவன் பிரார்த்தனை.இந்த வேண்டுதலை அவன் சொல்கிறபோது, வார்த்தைகளின் ஏற்ற இறக்கத்தினால் ஒரு பிழை ஏற்பட்டது. ‘இந்திரனைக் கொல்லக்கூடிய மகன்’ என்பதற்குப் பதிலாக, ‘இந்திரனால் கொல்லப்படக் கூடிய மகன்’ என்று அவனுடைய வேண்டுதல் வார்த்தை வெளிப்பட்டது. அவனுக்கு ஒரு மகன் பிறந்தான்; அவனை இந்திரன் கொன்றான்!கும்பகர்ணன் தொடர்பான ஒரு நிகழ்ச்சியும் உண்டு. பெரும் பலசாலியாகிய அவன், கருணையற்றவனாக இருந்தான். ரிஷிகள் எல்லாம் அவனிடம் அஞ்சினர். அவன் தவம் புரிந்து, இறைவனிடம் வரம் கேட்டான்.‘நித்யத்வம்’ – என்றும் இருக்கக் கூடிய சாஸ்வதத் தன்மை வேண்டும் என்பது அவன் மனதில் இருந்த கோரிக்கை. இதை நிறைவேற்றிக் கொள்ளவே அவன் தவம் புரிந்தான்.

இதைப் பார்த்து தேவர்களே கூட கவலையுற்றனர். இப்படிப்பட்ட கொடூரமானவன், பலசாலி – என்றும் இருப்பவன் என்றாகி விட்டால், நல்லோரின் கதி என்ன? அவர்கள் தெய்வத்திடம் முறையிட, கும்பகர்ணன் வரம் கோரியபோது, ‘நித்யத்வம்’ என்பதற்கு பதிலாக ‘நித்ரத்வம்’ என்று சொல் மாறியது. அந்த வரத்தால் கும்பகர்ணன் பெரும் – நித்திரை – தூக்கம் உடையவனாகத் திகழ்ந்தான்.

இப்படி, சொல் மிகவும் சக்தி வாய்ந்தது. நல்லதையே பேச வேண்டும் என்று இதனால்தான் பெரியோர்கள் வலியுறுத்துகின்றனர்.

– CHO
– தொகுப்பு : அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன்

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :