Monday, August 22, 2016

Keerthivasan

காஷ்யப புரா - காஷ்மீர் சரித்திரம் - 03

எப்படியாவது காஷ்மீரை பாகிஸ்தானோடு இனைக்க வேண்டும் என்று பாகிஸ்தானியர்கள் முயன்றார்கள். முகம்மது அலி ஜின்னா ஜூலை 1947ல் ஒரு கடிதத்தை ஹரி சிங்கிற்கு எழுதினார். பாகிஸ்தானோடு இனைந்தால் அனைத்து சலுகைகளையும் காஷ்மீருக்கு வழங்குவதாக அவர் கூறினார். ஆனால் அதற்கு ஹரி சிங் இணங்கவில்லை. பாகிஸ்தானோடு இனைந்தால் காஷ்மீரில் உள்ள இந்துக்களும், சீக்கியர்களும் இன‌ ஒழிப்பு செய்யப்படுவார்கள் என்பதை அவர் நன்கு உணர்ந்திருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த‌ பாகிஸ்தான் தங்கள் வசம் இருந்த மேற்கு பஞ்சாப் பகுதியில் கிளர்ச்சியை தூண்டியது. பஷ்டூன் பழங்குடிகளை கொண்ட ஒரு பெரும் படை பாகிஸ்தானிய ஆதரவுடன் காஷ்மீரீல் நுழைந்து, பெரும் அட்டூழியங்களை புரிந்தது.

மேற்கு பக்கத்திலிருந்து நுழைந்த ஒரு படையும், வடக்கு பகுதியில் இருந்து பஷ்டூன்களின் படையும் ஒரு சேர உள்ளே நுழைந்து காஷ்மீரை உருக்குலைத்தது. கொடூரமாக இந்துக்களும், சீக்கியர்களும் கொல்லப்பட்டனர், எஞ்சியவர்கள் ஜம்முவை நோக்கி சென்றனர். ஜம்முவை அடைந்த இந்துக்கள் தங்களுக்கு ஏற்பட்ட‌ பயங்கரமான நிகழ்வுகளை மற்றவர்களிடம் உணர்ச்சி பெருக்குடன் எடுத்து கூறினர். இந்த செய்திகள் பரவத் தொடங்க, ஜம்மூவில் இருந்த இந்துக்கள் அங்கிருந்த முஸ்லீம்களை தாக்கத் தொடங்கினர். இதனால் மதக்கலவரம் வெடிக்க தொடங்கியது. ஜம்மு பகுதியில் கடும் தாக்குதலுக்கு உட்பட்ட‌ பல ஆயிரம் முஸ்லீம்கள் மேற்கு பாகிஸ்தானை நோக்கி புலம் பெயர்ந்தனர். மகாராஜா ஹரி சிங்தான் முஸ்லீம்கள் மீதான தாக்குதலுக்கு ஆனையிட்டார் என புலம் பெயர்ந்த முஸ்லீம்கள் அங்கு தெரிவித்தார்கள். ஜம்மூவின் மேற்கு பகுதியில் பல ஆயிரம் முஸ்லீம்கள் குழமத் தொடங்கினர், இதுதான் பின் நாளில் பாகிஸ்தானிய ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று அழைக்கப்பட்டது. பாகிஸ்தான் அதை "சுதந்திர காஷ்மீர்" எனும் பொருள் பட "ஆஜாத் காஷ்மீர்" என்று அழைத்தது.

இதற்கிடையே பாகிஸ்தானிய பஷ்டூன்களின் படையெடுப்பால் மகாராஜா ஹரிசிங் இந்தியாவோடு காஷ்மீரை இனைக்க சம்மதம் தெரிவித்தார். காஷ்மீரின் பிரதம மந்திரியாக மகாராஜாவால் "மெஹர் சந்த் மஹாஜன்" நியமிக்கப்பட்டிருந்தார். அவர் நேருவையும், சர்தார் வல்லபாய் படேலையும் சந்தித்து தங்களுக்கு தேவையான ராணுவ தளவாடங்களையும், ராணுவ உதவிகளையும் வழங்குமாறு வேண்டினார். காஷ்மீரை இந்தியாவோடு இனைத்து விடுகிறோம், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காஷ்மீர் பகுதிகளை இந்தியா உடனடியாக வந்து மீட்குமாறு மகாராஜா ஹரி சிங் கேட்டுக் கொண்டார். நேருவோ தன்னுடைய நெருங்கிய நண்பரான "ஷெயிக் அப்துல்லாவை" மகாராஜா சிறையில் இருந்து உடனடியாக விடுவித்தால் மட்டுமே இந்தியா காஷ்மீரை இனைத்துக் கொள்ளும் என்று கூறினார். (ஷெய்க் அப்துல்லா, காஷ்மீர் பண்டிட் வம்சத்தை சேர்ந்தவரும், பின் நாளில் இஸ்லாத்துக்கு மதம் மாற்றப்பட்டவருமான‌ "ராகோ ராம் கௌல்" (Ragho Ram Kaul) என்பவரின் தலைமுறையில் வந்தவர். "முஸ்லீம் கான்ஃபரன்ஸ்" எனும் இயக்கத்தை அவர் தலைமையேற்று வழிநடத்தி வந்தார். பின்நாளில் அது "நேஷனல் கான்ஃபரன்ஸ்" என்று அழைக்கப்பட்டது. காஷ்மீரில் கிளர்ச்சியை தூண்டியதாக மகாராஜா அவரை சிறையில் தள்ளியிருந்தார்) நேருவின் நிபந்தனையை ஏற்று மகாராஜா ஹரிசிங் வேறு வழியின்றி ஷெய்க் அப்துல்லாவை விடுவித்தார்.

26 October 1947, அன்று காஷ்மீரை இந்தியாவோடு இனைக்கும் ஒப்பந்தத்தில் மகாராஜா கையெழுத்திட்டார். காஷ்மீரில் இருந்து ஆக்கிரமப்பாளர்களை துரத்தி அடித்த பின் காஷ்மீர் மக்கள் தான் யாரோடு இருக்க வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டும் என்று நேரு அந்த ஒப்பந்தத்தில் ஒரு நிபந்தனையை இனைத்தார். அச்சமயத்தில் ஷேக் அப்துல்லா தலைமையில் இருந்த‌ "நேஷனல் கான்ஃபரன்ஸ்" தான் காஷ்மீர் முஸ்லீம்களின் செல்வாக்கை பெற்ற பெரிய கட்சியாக இருந்தது. நேருவின் நண்பராக இருந்த ஷெய்க் அப்துல்லா இந்த ஒப்பந்தத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா பாகிஸ்தான் பிணக்கத்தை தொடர்ந்து மௌன்ட்பாட்டான் லாகூருக்கு சென்று ஜின்னாவை சந்தித்தார். காஷ்மீர், ஹைதராபாத் மற்றும் ஜுனாகத் பகுதிகளில் உள்ள சுயராஜ்ஜியங்களை மக்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்தி, அவர்க‌ளின் விருப்பத்திற்கு இணங்க இந்தியா அல்லது பாகிஸ்தானொடு இனைக்கலாம் என்று தெரிவித்தார் மௌன்ட்பாட்டன். ஜின்னாவோ இதை நிராகரித்தார். மக்களின் கருத்து கணிப்பு அவசியமில்லாதது. முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகள் காஷ்மீரோடு இனைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார். அப்படி இனைக்காத நிலையில், பாகிஸ்தான் காஷ்மீரை ராணுவ பலத்தோடு சுலபமாக கைப்பற்றி விட இயலும் என்று அவர் நினைத்திருந்தார்.

இதன் பின் 27 அக்டோபர் 1947ல் காஷ்மீருக்குள் வீறு கொண்டு நுழைந்தது இந்திய ராணுவம். விமானங்கள் மூலமாக பல பகுதிகளுக்கு இந்திய ராணுவத்தினர் தரை இறக்கப்பட்டனர். இங்கே நாம் ஒன்றை புரிந்துக் கொள்ள வேண்டும். காஷ்மீரை பாகிஸ்தானின் இஸ்லாமாபாதில் இருந்து மிகச்சுலபமாக சமவெளிகள் வழியாக அடைந்து விடலாம். ஆனால் தில்லி மற்றும் பிற வட இந்திய பகுதிகளில் இருந்து அதை அடைய மலை வழியாகதான் ஏறிச் சென்றாக‌ வேண்டும். அதற்கு இந்தியாவிற்கு பல மணி நேரங்கள் பிடிக்கும். இதை பயன்படுத்திக் கொண்ட பாகிஸ்தான், பஷ்டூன் பழங்குடிகளையும், இதர முஸ்லீம் கிளர்ச்சிக்காரர்களையும் பின் நின்று வழி நடத்தி, ஆயுதங்களை தந்து அவர்களுக்கு அனைத்து விதங்களிலும் உதவி செய்தது. பாகிஸ்தான் அன்று தொடங்கிய இந்த மறைமுகப் போர் அதன் பின் பல ஆண்டுகள் கையாளப்பட்டு இன்று வரையும் தொடர்ந்து வருவதுதான் உண்மை. 


ஆக்கம்: Enlightened Voice

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :