Monday, March 13, 2017

Keerthivasan

ஈழப் போரின் இறுதி நாட்கள் – 10

AHAT என மாறிய புலிகளின் MV Yahata

The sinking of a LTTE supply barge hindered the ability for the LTTE to transport goods en masse to Jaffna.  Sunk in a tangent Sri Lankan naval and air operation.
 விடுதலைப் புலிகளின் முன்னாள் யாழ்ப்பாணத் தளபதி கிட்டு (சதாசிவம் கிருஷ்ணகுமார்) இந்தியக் கடலில் வைத்து கப்பலுடன் வெடித்துச் சிதறியது எப்படி? இது பற்றி முன்பு நான்கைந்து வெவ்வேறு விதமாக கூறப்பட்டு வந்தன. அதில் எந்தக் கதை நிஜம் என்பதில் குழப்பங்கள் இருந்தன.

விடுதலைப் புலிகள் இலங்கையில் பலமாக இருந்தபோது, கிட்டுவின் இறப்பு எப்படி நடந்தது என்று விலாவாரியாக வெளியிடவில்லை.

கிட்டு கப்பலுடன் வெடித்துச் சிதறியது பற்றிய நிஜமான கதை தெரிந்தவர்கள் மிகச் சிலரே. அவர்களும், புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்களாக இருந்தார்கள். அவர்கள் யாரும் அப்போது வாய் திறந்து எதையும் கூறவில்லை. புலிகளின் ரகசியம் காத்தல் அதற்கு காரணமாக இருந்தது.

இப்போது, இந்த விவகாரம் தொடர்பாக முழுமையாக தெரிந்த ஓரிருவரே உயிருடன் உள்ளார்கள். அவர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இது எழுதப்பட்டுள்ளது. என்ன நடந்தது என்பதற்கு ஒரு பதிவு வேண்டும் அல்லவா?

சரி, இந்த விஷயத்தில் நிஜம் என்ன? உண்மையில் என்னதான் நடந்தது?

சில ஐரோப்பிய நாடுகளில் மாறி மாறி இருத்த கிட்டு, கடைசி நாட்களில் தலைமறைவு வாழ்க்கை வாழவேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது என்பதை, கடந்த அத்தியாயங்களில் எழுதியிருந்தோம். அதன்பின் போலந்தில் இருந்து கிட்டுவை, தாய்லாந்துக்கு அழைத்துக் கொண்டார் கே.பி.

கிட்டுவை தாய்லாந்தில் இருந்து புலிகளின் கப்பல் ஒன்றில் இலங்கைக்கு அனுப்பி வைப்பதே திட்டம்.

இலங்கை கடற்படையினரின் கண்களில் சிக்காமல் கப்பலை இலங்கை கடல் பகுதிக்குள் கொண்டு செல்வதே ரிஸ்க் அதிகமான காரியம். அதிலும், கப்பலில் கிட்டு போன்ற புலிகளின் முக்கியஸ்தர் செல்வதால், தீவிர முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன. கிட்டு செல்வதற்கான கப்பலை செலுத்துவதற்காக கேப்டன் ஒருவரை தேர்ந்தெடுத்து, தொலைத் தொடர்பு சிறப்பு பயிற்சிக்காக சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்தார் கே.பி.

எதற்காக இந்த விசேட பயிற்சி? அந்த நாட்களில் (90களின் துவக்கத்தில்) புதிதாக வந்திருந்த தொழில்நுட்பம் ஒன்று தொடர்பான பயிற்சி அது. அதைப் பற்றியும் கொஞ்சம் சொல்ல வேண்டும். அதையும் ஏன் சொல்ல வேண்டும் என்ற காரணம், தொடர்ந்து படிக்கும்போது உங்களுக்கே புரியும்.

1992-ம் ஆண்டு டிசம்பர் மாத நடுப்பகுதியில் கிட்டு தாய்லாந்துக்கு வந்து சேர்ந்தார். அப்போது, விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு செயல்பாடுகளுக்கு பொறுப்பாளராக கே.பி. இருந்தார். இலங்கையில் யுத்தத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த புலிகளுக்கு தேவையான ஆயுதங்கள், மற்றும் உபகரணங்கள் அனைத்துமே கே.பி.-யின் தலைமையில் இயங்கிய பிரிவால் அனுப்பப்பட்டு வந்தன.

புலிகளின் கடந்தகால செயல்பாடுகளை அறிந்தவர்களுக்கு ஒரு விஷயம் நன்கு தெரிந்திருக்கும். புலிகள் உபயோகித்த ஆயுதங்கள், மற்றும் உபகரணங்கள், அநேக தருணங்களில் இலங்கை அல்லது இந்திய ராணுவங்களிடையே கூட இருந்ததில்லை. அவை லேட்டஸ்ட் மாடல்களாக இருக்கும்.

இதற்கு காரணம், மார்க்கெட்டில் புதிய தொழில்நுட்பம் ஏதாவது வந்துவிட்டால், புலிகளின் வெளிநாட்டுப் பிரிவு உடனடியாக வாங்கி, இலங்கைக்கு அனுப்பி விடுவது வழக்கமாக இருந்தது. வெளிநாட்டுப் பிரிவுக்கு கே.பி. பொறுப்பாளராக 2003-ம் ஆண்டுவரை இருந்தார். அதுவரை இதுதான் வழமையாக இருந்தது.

1992-ல் சட்டலைட் டெலக்ஸ் தொழில்நுட்பம் மார்க்கெட்டுக்குள் வந்தது. பல பெரிய நிறுவனங்களே அதை வாங்கத் தயங்கிய ஆரம்ப நாட்களில், புலிகளின் வெளிநாட்டுப் பிரிவு, சட்டலைட் டெலக்ஸ் உபகரணங்களை வாங்கியது.

1990களில், புலிகள் தமது தொலைத் தொடர்புகளுக்கு, ஐ-காம், YESU-747 தொலைத் தொடர்பு சாதனங்களை பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் சட்டலைட் டெலக்ஸ் தொழில்நுட்பம் அறிமுகமாகவே, புலிகளின் தலைவர் பிரபாகரன் பிரத்தியேகமாக பயன்படுத்த முதலில் சட்டலைட் டெலக்ஸ் உபகரணம் ஒன்று புலிகளின் வெளிநாட்டுப் பிரிவால் வாங்கப்பட்டது.

அந்த நேரத்தில், கிட்டுவும் தாய்லாந்து வந்து, இலங்கைக்கு செல்வது என்று முடிவாகியதால், கிட்டு செல்லவிருந்த கப்பலில் சட்டலைட் டெலக்ஸை பயன்படுத்துவது என்று திட்டமிட்டார் கே.பி.


கிட்டு செல்வது பரம ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. தாய்லாந்தில் சுமார் 2 வாரங்கள் கிட்டு, ரகசிய இடம் ஒன்றில் தங்கியிருந்தார். கிட்டு கப்பலில் இலங்கை செல்லப்போகும் விஷயத்தை எந்தவொரு தொலைத் தொடர்பு உரையாடலிலும் பயன்படுத்தாமல் ரகசியம் காக்கப்பட்டது. காரணம், புலிகளின் தொலைத்தொடர்பு உரையாடல்களை இடைமறித்து அறிந்து கொள்வதில், இலங்கை, இந்திய உளவுத்துறைகள் உட்பட சில வெளிநாட்டு உளவுத்துறைகளும் ஆர்வமாக இருந்தார்கள்.

இதனால்தான், புதிதாக வந்த சட்டலைட் டெலக்ஸ் தொழில்நுட்பத்தை கிட்டு செல்லப்போகும் கப்பலில் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்த புதிய தொழில்நுட்பத்தை இடைமறித்து அறியும் உபகரணங்கள் அப்போது இருக்கவில்லை. (இப்போது உள்ளன)

இந்த சட்டலைட் டெலக்ஸ் உபகரணத்தை நடுக்கடலில் நகரும் கப்பல் ஒன்றில் வைத்து இயக்கும் பயிற்சிக்காகவே, கேப்டன் ஒருவரை சிங்கப்பூர் அனுப்பி வைத்திருந்தார் கே.பி.

இந்த விபரங்களை ஏன் விலாவாரியாக சொல்கிறோம் என்றால், இந்த சட்டலைட் டெலக்ஸ் உபகரணமே, கிட்டுவின் இறப்புக்கு மறைமுகமான ஒரு காரணமாக இருந்தது.

சிங்கப்பூரில் சட்டலைட் டெலக்ஸ் பயிற்சியை முடித்துக் கொண்டு, சட்டலைட் உபகரணத்துடன் திரும்பியிருந்தார் அந்த கேப்டன். ஆனால், அதே நேரத்தில் புலிகளின் மற்றொரு கப்பல் முக்கிய பொருட்களுடன் இலங்கைக்கு செல்ல வேண்டியிருந்தது. புலிகள் அமைப்பின் முக்கியஸ்தரான கிட்டுவும் அதே கப்பலில் செல்ல வேண்டும் என்பதால், தம்மிடம் இருந்தவர்களில் சிறந்த கேப்டனையும், மாலுமிகளையும் கப்பலை செலுத்த அனுப்புவது என்று முடிவு செய்தார் கே.பி.

சிங்கப்பூர் பயிற்சிக்கு சென்ற கேப்டனைவிட, முக்கிய பயணங்களில் அனுபவமுள்ள மற்றொரு கேப்டனை அனுப்புவது என்றும், புலிகளுக்குச் சொந்தமான MV Yahata என்ற கப்பலில் கிட்டுவை அனுப்புவது எனவும், முடிவு செய்யப்பட்டது.

MV Yahata கப்பலைச் செலுத்த நியமிக்கப்பட்ட அனைவருமே தமிழர்கள்தான். அவர்களது பெயர்கள், ஜெயச்சந்திரன், சிவராசா, சற்குணலிங்கம், கிருஷ்ணமூர்த்தி, நாயகம், இந்திரலிங்கம், பாலகிருஷ்ணன், மோகன்.

இதில் ஜெயச்சந்திரன் கப்பலின் கேப்டன், சிவராசா என்பவர் ‘பவுண்’ என்ற பெயரிலும் அறியப்பட்டவர். கப்பலின் சீஃப் இஞ்சினியர் அவர்.

கிட்டு இலங்கை செல்வதற்காக தாய்லாந்து வரை வந்திருக்கிறார் என்ற விபரம், புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுக்கும், வேறு ஓரிரு முக்கிய தளபதிகளுக்கும் மட்டுமே தெரிந்திருந்தது. அந்த விஷயம் மிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. கப்பலில் கிட்டுவுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்காக 8 பேர் அடங்கிய விடுதலைப்புலிகள் டீம் ஒன்றும் தாய்லாந்தில் தயாராக இருந்தது.

லெப். கர்ணல் குட்டிஸ்ரீ என்கிற ஸ்ரீ கணேசன் (சுதுமலை), மேஜர் வேலன் என்கிற சுந்தரலிங்கம் சுந்தரவேல் (பருத்தித்துறை), கடற்புலி கேப்டன் ஜீவா (பாஷையூர்), கடற்புலி கேப்டன் குணசீலன் (யாழ்ப்பாணம்), கடற்புலி கேப்டன் ரோஷன் (நல்லூர்), கடற்புலி கேப்டன் நாயகன் (வல்வட்டித்துறை), கடற்புலி லெப்டினென்ட் நல்லவன் (யாழ்ப்பாணம்), கடற்புலி லெப்டினென்ட் அமுதன் (யாழ்ப்பாணம்) ஆகியோர் கிட்டுவுக்கு பாதுகாப்பு கொடுக்க நியமிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின்.

இதில் லெப். கர்ணல் குட்டிஸ்ரீ, புலிகளின் ஆயுத தயாரிப்புத் துறையில் முக்கியமான ஒருவர். இலங்கையில் புலிகளால் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் பலவற்றின் வடிவமைப்பில் இவரது பங்களிப்பு அதிகம். புலிகளிடம் இல்லாத ஆயுதங்கள் பற்றிய நுணுக்கங்களை அறிவதற்காக விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், குட்டிஸ்ரீயை கே.பி.-யிடம் அனுப்பி வைத்தார்.

கே.பி.-யுடன் லெபனான் சென்ற குட்டிஸ்ரீ, புலிகளின் வெளிநாட்டுப் பிரிவின் பாலஸ்தீன விடுதலை ( பி.எல்.ஓ. ) தொடர்புகள் மூலம் அங்கு ஆயுதத் தயாரிப்பில் சில பயிற்சிகளைப் பெற்றார். அதன்பின் பிரபாகரன் கேட்டிருந்த புதிய ஆயுதங்கள் பற்றிய விபரங்களுடன், கிட்டு ஏறிய அதே கப்பலில் பயணித்திருந்தார்.

இந்த 8 விடுதலைப் புலிகளும் கிட்டு கப்பலுடன் வெடித்து இறந்தபோது இறந்து போனார்கள்.

கிட்டு இறந்த செய்தியை வெளியிட்டபோது, இவர்களது பெயர்களையும் வெளியிட்டிருந்தது விடுதலைப்புலிகள் இயக்கம். ஆனால், இந்த 8 பேரையும் தவிர, மற்றொரு விடுதலைப்புலி உறுப்பினரும் அந்த கப்பலில் இருந்தார். அவரது பெயரை புலிகள் இயக்கம் அப்போது, இறந்தவர்கள் பட்டியலில் வெளியிடவில்லை.

அவரது பெயர் பிரபாகரன். லெப்டினென்ட் பிரபா என்று அழைப்பார்கள். இந்த பிரபா, புலிகளுக்கும், இலங்கை முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசாவுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நாட்களில், கொழும்பில் சில ரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தவர்.

அதன்பின், பிரேமதாசா அரசுக்கும், புலிகளுக்கும் இடையே இருந்த டீல் முறிந்தது. அந்த நேரத்தில் பிரபாவை கொழும்பில் இருந்து வெளியே அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்படித்தான், அவர் தாய்லாந்தில் இருந்த கே.பி.-யிடம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.

சிறிது காலத்தின்பின், அவரை மீண்டும் இலங்கைக்கு அனுப்பி வைக்கும்படி புலிகளின் தலைமையிடம் இருந்து தகவல் வந்தது. அந்த வகையில், கிட்டு பயணம் செய்த கப்பலில் அவரும் பயணம் செய்திருந்தார். கிட்டுவுடன் சேர்ந்து அவரும் இறந்து போனார்.

ஆனால், அவரின் சில நடவடிக்கைகள் ரகசியமாக வைக்கப்பட வேண்டும் என்ற காரணத்தால், அவர் இறந்ததை புலிகள் அறிவிக்கவில்லை.

இதேபோன்று மற்றொரு விஷயமும் நடந்தது. கிட்டு சென்ற கப்பல் வெடித்துச் சிதறியபின், அந்தக் கப்பலில் செல்லாத மற்றொருவர் கொல்லப்பட்டார் என இந்திய உளவுத்துறை சில நாட்கள் நம்பிக்கொண்டிருந்தது. அதை பிற்பாடு பார்க்கலாம்.

MV Yahata கப்பல், அதன் ஊழியர்களையும், கிட்டுவையும், 9 விடுதலைப் புலிகளையும் ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. கப்பலில் புதிதாக வாங்கப்பட்டிருந்த சட்டலைட் டெலக்ஸ் சாதனமும் இருந்தது. அது தரையில் இயங்குவதில் எந்த சிக்கலும் இருக்கவில்லை.

கப்பல் புறப்பட்ட நிமிடத்தில் இருந்து, சகல தொடர்புகளுக்கும், சட்டலைட் டெலக்ஸையே பயன்படுத்துமாறு கே.பி. கூறியிருந்தார். எக்காரணம் கொண்டும், ஐ-காம் உபகரணத்தை பயன்படுத்த வேண்டாம் எனவும் எச்சரித்திருந்தார்.

கப்பல் கேப்டன் ஜெயச்சந்திரனுக்கு இந்த சட்டலைட் உபகரணத்தை உபயோகிக்க ஓரளவுக்கு தெரிந்திருந்தது. கிட்டுவின் குழுவில் சென்ற புலிகளில், சுந்தரலிங்கம் சுந்தரவேல் என்ற பெயரைப் பார்த்திருப்பீர்கள். புலிகள் வட்டாரங்களில் இவரை ‘வேல்’ என்று அழைப்பார்கள். இவரும் தொலைத் தொடர்பு சாதனங்களை இயக்குவதில் ஸ்பெஷலிஸ்ட்.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனால், தாய்லாந்து அனுப்பப்பட்டவர் இவர்.

இலங்கையில் இருந்து பிரபாகரனின் தகவல் தொடர்புகள் வெளிநாட்டுக்கு போவதும், வெளிநாட்டில் இருந்து பிரபாகரனுடன் தகவல் பரிமாற்றம் செய்வதும், தாய்லாந்தில் இருந்த ‘வேல்’ ஊடாகவே அந்த நாட்களில் நடைபெற்று வந்தன. இதனால், அவரும் சட்டலைட் தகவல் தொடர்பு உபகரணத்தை ஓரளவுக்கு இயக்கத் தெரிந்தவர்.

இவர்கள் இருவரும் சமாளிப்பார்கள் என்ற தைரியத்தில்தால், சிங்கப்பூர் பயிற்சிக்கு சென்ற மற்றைய கேப்டன் வராமல், கிட்டுவின் பயணம் துவங்கியது.

தாய்லாந்தின் புக்கெட் துறைமுகத்தில் இருந்து கப்பல் புறப்பட்டது. கப்பல் புறப்பட்டு, சில மணி நேரத்தில், அதில் இருந்த சட்டலைட் டெலக்ஸ் இயங்கவில்லை.

இங்கு மற்றொரு விஷயத்தையும் சொல்ல வேண்டும். இது நடைபெற்ற நாட்களில், இந்திய உளவுத்துறை றோ, தாய்லாந்தின் தெற்கு கடற்பரை நகரமான புக்கெட்டில் அதிக கவனம் செலுத்திக் கொண்டிருந்தது. அதற்கு காரணம், புலிகளை கண்காணிப்பது அல்ல, பாகிஸ்தானின் உளவுத்துறை ஐ.எஸ்.ஐ. அங்கிருந்து சில ரகசிய நடவடிக்கைகளை செய்து கொண்டிருந்தது.

ஐ.எஸ்.ஐ. ரகசிய ஆயுத ஷிப்மென்ட்டுகளை அனுப்ப புக்கெட் துறைமுகத்தை பயன்படுத்திக் கொண்டிருந்ததை மணந்து பிடித்திருந்த றோ கேட்டுக்கொண்டதன்படி, அந்தமான் பகுதியில் இருந்த இந்தியக் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று அவ்வப்போது, புக்கெட்டுக்கு அருகே ரகசியமாக வந்து போய்க்கொண்டிருந்தது.

ஒருதடவை, இந்திய நீர்மூழ்கிக் கப்பல் புக்கெட் கடலில் நீருக்கு வெளியே தெரிந்ததை போட்டோ எடுத்து அந்த நாட்களில் வெளியிட்டிருந்தது பாங்காக் போஸ்ட் பத்திரிகை. அதே துறைமுகத்தில் இருந்துதான், புலிகளும் இயங்கிக் கொண்டிருந்தனர்.

கிட்டு பயணம் செய்த MV Yahata கப்பல் நடுக் கடலுக்கு சென்றதும், அதில் எழுதப்பட்டிருந்த YAHATA என்ற பெயரில் முதல் எழுத்தையும், கடைசி எழுத்தையும் அதில் இருந்தவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டபடி அழித்தார்கள். இப்போது கப்பலின் பெயர் AHAT என்று மாறியது.

சட்டலைட் டெலக்ஸ் வேலை செய்யாத நிலையில், YESU-747 தொலைத் தொடர்பு சாதனத்தின் மூலம் கப்பலில் இருந்து, கே.பி.-யை தொடர்பு கொண்டார்கள். அந்தத் தொடர்புக்காக புலிகள் உபயோகித்தது, வர்த்தகக் கப்பல்கள் வழமையாக உபயோகிக்கும் அலைவரிசையை அல்ல.

இந்த புதிய அலைவரிசையில் மெசேஜ் போவதை, ஆட்டோ-ட்ராக் பண்ணியது, அந்த ஏரியாவில் இருந்த இந்தியக் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல்…

தொடரும்


Source
nadunadapu  

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :