Friday, March 10, 2017

Keerthivasan

ஈழப் போரின் இறுதி நாட்கள் – 9

பிரபாகரனை ஆயுதங்களுடன் சந்திக்க திட்டமிட்ட கிட்டு!

போலந்தில் தங்கியிருந்த கிட்டு, தன்னை வந்து சந்திக்குமாறு அவசர தகவல் ஒன்றை கே.பி.க்கு அனுப்பிய விபரத்தை கடந்த அத்தியாயத்தில் எழுதியிருந்தோம். போலந்தில் கிட்டு தங்கியிருந்த இடத்தில்  இருந்த சூழ்நிலையில், யாராலும் கிட்டுவை கற்பனைகூட செய்து பார்க்க முடியாது. யாழ்ப்பாணத்தில் புகழின் உச்சியில் இருந்த காலத்தில், ஏராளமானவர்கள் புடைசூழ ராஜ தோரணையில் இருந்த கிட்டு, போலந்தின் தலைநகர் வார்சோவில், ஒரு அறையில், துணைக்கு ஒற்றை ஆள்கூட இல்லாத நிலையில், சுயமாக சமையல் பண்ணிக் கொண்டு, கவனிப்பாரற்ற நிலையில் இருந்தார். பொழுதுபோக்காக ஓவியம் வரைந்து கொண்டிருந்தார்.

அவரைக் கவனிப்பதற்காக நியமிக்கப்பட்டவர், எப்போதாவது ஒருமுறை தலையைக் காட்டினார்.

கிழக்கு ஐரோப்பாவில் குளிர் அதிகமுள்ள நாடுகளில் போலந்தும் ஒன்று. கிட்டு போலந்தில் இருந்த நாட்கள் முழுவதும் அங்கு குளிர்காலம். அவர் தங்கியிருந்த அறையில் ஹீட்டர் வசதிகூட கிடையாது. ஒரு காலை இழந்து, கிரட்ச்சஸ் (ஊன்றுகோல்) உதவியுடன் நடக்க வேண்டிய நிலையில் இருந்த அவருக்கு, வெளியே போய் பொருட்கள் வாங்கிக் கொடுக்கக்கூட உதவிக்கு ஆள் கிடையாது.

வெளியே கடுமையான ஸ்னோ. சாதாரண ஆட்களே நடக்கச் சிரமப்படும் அந்த ஐஸ் படிவுகளில், ஒரு கால் இல்லாமல் ஊன்றுகோலுடன் நடமாடும் ஒருவரை கற்பனை செய்து பாருங்கள். வெளியே கடைக்குச் சென்று பொருட்களை வாங்கிக் கொண்டு வருவது என்றால் எப்படி இருக்கும்? பலதடவைகள் ஸ்னோவில் சறுக்கி விழுந்து, கைகளில் காயங்களுடன் காணப்பட்டார் கிட்டு.

கே.பி.-யை அவர் அவசரமாக போலந்துக்கு அழைத்த காரணம், கே.பி.-யுடன் புறப்பட்டு எப்படியாவது தலைவரிடம் செல்வதற்குதான்.

இந்த இடத்தில் கிட்டு பற்றி சில விஷயங்கள் சொல்ல வேண்டும். இதில் சொல்லப்படும் சில விஷயங்கள் கிட்டு பற்றி உங்களுக்கு தெரிந்த விஷயங்களுக்கு நேர்மாறாக இருக்கலாம்.

விடுதலைப்புலிகள் இயக்கத்தில் அதீத உயரத்துக்கு சென்றவர் அவர்தான் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அதி உச்சத்தில் இருந்து ‘அதல பாதாளத்துக்கு’ சென்றவரும் அவர்தான் என்பது, இன்றும் வெளிநாடுகளில் கிட்டுவுக்கான நினைவு விழா நடத்தும் பலருக்கேகூட தெரியாது.

‘அதல பாதாளத்துக்கு’ என்று சொல்வதை உங்களில் சிலரால் ஜீரணிக்க முடியாமல் இருக்கும் என்பது தெரியும். அப்படியானவர்கள், அவசரப்பட்டு ‘அடிவருடி..’ என்று தொடங்கி உங்கள் வசமுள்ள கலைச்சொற்களை தூவத் தொடங்கி விடாதீர்கள். முதலில், கீழே எழுதப்பட்டிருப்பதை முழுமையாகப் படிக்கவும். கிட்டு போன்ற நிலையில் இருந்த ஒருவரால், அவர் ஐரோப்பாவில் தங்கியிருந்த நிலையைவிட மோசமாக அதல பாதாளத்துக்கு செல்ல முடியாது என்பது ஆவரேஜ் ஐ.க்யூ உள்ள நபருக்கேகூட புரியும்!

அப்படியும் புரியவில்லையா.. கட்டுரை படித்தபின் கைவசமுள்ள கலைச் சொற்களை துவங்குங்க ராஜா, “அடிவருடி.. ஆள்காட்டி.. இடிவிழுந்தவன்..” in alphabetical order.

கிட்டு இலங்கையில் எப்படி வாழ்ந்தார்? விடுதலைப்புலிகள் இயக்கத்தின் யாழ்ப்பாண தளபதியாக கிட்டு இருந்த காலத்தில்தான், யாழ். குடாநாடு புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அந்த நாட்களில் யாழ்ப்பாணத்தில் கிட்டுவைச் சுற்றி ஜேஜேன்னு ரொம்ப பெரிய கூட்டமே இருக்கும். அவரது உத்தரவுகளை நிறைவேற்ற ஆள், அம்பு, சேனை என்று காத்திருப்பார்கள்.

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகிய விடுதலைப்புலிகள் பத்திரிகையில் முதல் பக்கத்தில் இருந்து கடைசிப் பக்கம்வரை கிட்டுவை மையப்படுத்தும் செய்திகளாகவே இருக்கும். கிட்டுவின் போட்டோ இல்லாத பக்கமே கிடையாது. பிரபாகரன் அப்போது தமிழகத்தில் தங்கியிருந்தார். சுருக்கமாகச் சொன்னால், யாழ்ப்பாணத்தில் புலிகளின் ‘அதியுச்ச நட்சத்திரம்’ கிட்டுதான் என்ற நிலை இருந்தது.

அப்படியிருந்த நிலையில்தான் கைகுண்டு தாக்குதல் ஒன்று காரணமாக கிட்டு ஒரு காலை இழக்க நேர்ந்தது. அதன்பின் மருத்துவ சிகிச்சைக்காக தமிழகத்தில் தங்கியிருந்தார். இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்த நாட்களில், தமிழக அரசு அவரை சிறையில் அடைத்தது. பின், இலங்கைக்கு இந்திய ராணுவத்தால் அனுப்பி வைக்கப்பட்டார். புலிகள் யாழ்ப்பாணத்தை விட்டு, வன்னியிலுள்ள காடுகளில் தலைமறைவு வாழ்க்கை வாழவேண்டிய நிலை ஏற்பட்டபோது, கிட்டுவும் காட்டில் வசிக்க நேர்ந்தது.

கால் இழப்பு ஏற்பட்ட நிலையிலும், அவரைச்சுற்றி எந்த நேரமும் மெய்ப்பாதுகாவலர்களும் விசுவாசிகளும் இருந்தார்கள். தமிழகத்தில் சிறையில் இருந்தபோதும், அவருடன் கைதான மற்றைய விடுதலைப்புலிகள் எப்போதும் அவரைச் சுற்றி இருந்தார்கள். பின்பு காட்டுக்குள் வசித்தபோதும், அவரைச் சுற்றி ஒரு கூட்டமே இருந்தது. கிட்டுவை தோளில் சுமக்கும் அளவுக்கு விசுவாசிகள் இருந்தார்கள்.


யாழ்ப்பாணத்தில் செல்வாக்காக நடமாடிய கிட்டு

அப்படியாக ரொம்ப செல்வாக்காக இருந்த கிட்டு, போலந்தில் தன்னந்தனியே ஒரு அறைக்குள், தனிமையில் இருந்ததை கண்டே கே.பி. திகைத்துப் போனார்.

அந்த நிலைக்கு எப்படிச் சென்றார் கிட்டு? ஐரோப்பாவில் அவருக்கு என்ன நடந்தது? அதைப்பற்றி யாரும் இதுவரை வெளிப்படையாகவும், விலாவாரியாகவும் தெரிவித்ததாக தகவல் இல்லை. இப்போது அவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.

கே.பி.யின் வேண்டுகோளுக்கு இணங்க பிரபாகரன், கிட்டுவை லண்டனுக்கு அனுப்பி வைத்த விபரங்களை கடந்த அத்தியாயத்தில் தெரிவித்திருந்தோம். லண்டனில் போய் இறங்கியவுடன், ஆரம்பத்தில் செல்வாக்காகத்தான் இருந்தார் கிட்டு. அவரைச் சுற்றி ‘வெளிநாட்டுப் புலிகள்’ பலர் எப்போதும் காணப்பட்டனர். லண்டனில், கிட்டுவின் பல அலுவல்களை கவனித்தவர் அஜித்.

கிட்டு லண்டனுக்கு அனுப்பப்பட்டபோது, இலங்கையில் இருந்து புலிகளின் தலைவர் பிரபாகரனால் கூடவே அனுப்பி வைக்கப்பட்டவர் அஜித்.

கிட்டுவுடன் எப்போதும் கூடவே இருக்குமாறு அஜித்துக்கு புலிகளின் தலைவரால் உத்தரவிடப்பட்டு இருந்தது. (ஆனால், கிட்டு பிரிட்டனுக்கு வெளியே வெவ்வேறு நாடுகளுக்கு சென்றபோது, அஜித்தால் அவருடன் செல்ல முடியவில்லை. காரணம், பிரிட்டனில் அஜித்துக்கு அகதி அந்தஸ்தோ, வதிவிட விசாவோ கிடைக்கவில்லை)

அரசியல் காரணங்களால் கிட்டுவுக்கு பிரிட்டிஷ் அரசால் சிக்கல்கள் எழத் தொடங்கியபோது, ‘வெளிநாட்டுப் புலிகள்’ பலர் அவரை விட்டு விலகி நிற்கத் தொடங்கினார்கள். ஆரம்பத்தில் தமது வீடுகளுக்கு கிட்டுவை அழைத்து பிலிம் காட்டிய சிலர், பிரிட்டிஷ் ஹோம் ஆபிஸ் மற்றும் எம்.ஐ.5 ஆகியவை கிட்டுவில் கண் வைத்ததும், ஒதுங்கத் தொடங்கினர். ஒரு கட்டத்தில், அவர்களது வீட்டுக்கு கிட்டு வருவதாக சொன்னாலும் சாக்குப் போக்கு சொல்லி தட்டிக் கழித்தனர்.

பிரிட்டனில் இருந்த நிலையை, தாய்லாந்தில் இருந்த கே.பி.க்கு கிட்டு தெரிவித்தார். அதையடுத்து கே.பி., பாரிஸில் இருந்த திலகரை தொடர்பு கொண்டு, கிட்டுவை லண்டனை விட்டு வெளியே கொண்டுவர ஏதாவது செய்ய முடியுமா என்ற கேட்டார்.

இது நடந்த காலப்பகுதியில் திலகருக்கு, ஜெனீவாவில் உள்ள ஐ.நா. அலுவலகத்தில் நல்ல தொடர்புகள் இருந்தன. திலகர் தனது ஐ.நா. அலுவலக தொடர்புகள் மூலம் கிட்டு சுவிட்சலாந்து செல்வதற்கான ட்ரவல் டாக்குமென்ட் ஒன்றை ஏற்பாடு செய்தார்.

ஐ.நா. கிட்டுவுக்காக வழங்கிய இந்த ட்ரவல் டாக்குமென்டை laissez-passer என்று அழைப்பார்கள். வழங்கப்பட்ட நாட்டுக்கு (சுவிட்சலாந்து) ஒருவழி பயணம் மட்டும் செய்யக்கூடிய, நாடற்றவர்களுக்கான, பாஸ்போர்ட் போன்ற சமாச்சாரம் இது.

இப்படியான ட்ரவல் டாக்குமென்ட் ஒன்றை வைத்துக் கொண்டு சுவிட்சலாந்தில் சுதந்திரமாக நடமாடுவது கொஞ்சம் சிரமமானது. அவ்வப்போது போலீஸ் சோதனைகளின்போது, இந்த ஆவணம் வைத்திருப்பவர்களை ஜாஸ்தி குடைவார்கள். அது மாத்திரமல்ல, அவருடன் கூட இருப்பவர்களையும் அதிக விசாரணைகளுக்கு உட்படுத்துவார்கள்.

இந்த இடத்தில் சுவிஸ் காவல்துறை (கன்டொன் போலீஸ் அல்ல.. ஃபெடரல் போலீஸ்) பற்றிய ஒரு விபரம் சொல்ல வேண்டும். கிட்டு, விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவர் சுவிஸ் ஃபெடரல் போலீஸின் சிறப்பு பிரிவு ஒன்றின் கண்காணிப்பில் இருந்தார்.

சுவிஸ் போலீஸில் உள்ள இந்த சிறப்பு பிரிவு, தீவிரவாதம் மற்றும் வெளிநாட்டு பணப் பரிமாற்றங்களை கண்காணிக்கும் ரகசிய அமைப்பு. அந்த சிறப்பு பிரிவின் பெயர், Einsatzgruppe TIGRIS. (ஆங்கிலத்தில், Task Force TIGRIS)

(இப்படியொரு ரகசிய டிவிஷனே கிடையாது என்று கூறிக்கொண்டிருந்த சுவிட்சலாந்து அரசு, சமீபத்தில் 2009-ம் ஆண்டுதான், இந்தப் பிரிவு இயங்குவது உண்மைதான் என ஒப்புக்கொண்டது.)

சுவிட்சலாந்தில் கிட்டுவோடு நெருக்கமாக இருந்தவர்கள் சிலர், இந்தப் சிறப்பு பிரிவின் கண்காணிப்புக்குள்ளும் வந்து, விசாரணைகளிலும் சிக்கிக் கொண்டனர். அதையடுத்து, சுவிட்சலாந்திலும் கிட்டுவை விட்டு விலகத் தொடங்கினார்கள் சில சுவிஸ் புலி முக்கியஸ்தர்கள்.

கிட்டு, விடுதலைப் புலிகளின் யாழ்ப்பாண தளபதியாக இருந்தபோது, முழு யாழ்ப்பாணத்தின் சட்டம் ஒழுங்கு நடைமுறைகள் அவரது கண்ணசைவிலேயே நடந்தன. அப்படி பழக்கப்பட்டுவிட்ட ஒருவரை, சுவிஸ் போலீஸின் இந்த கண்காணிப்பும் விசாரணைகளும் அதிர வைத்தன. அவரது வாழ்வில் அதுவரை தன்னைச் சுற்றி பலரை வைத்து அதிகாரத்துடன் இருந்த அவருக்கு, தன்னிடம் நெருங்காமல் ஆட்கள் விலகி விலகிச் செல்வது திகைக்க வைத்தது.

கடந்த அத்தியாயத்தில் நாம் குறிப்பிட்ட மெக்சிகோ பயணத்தின்போதுகூட கிட்டுவுக்கு தனிமைதான் கிட்டியது.

கிட்டு சுவிட்சலாந்து செல்வதற்கு திலகர் ஏற்பாடு செய்ததுபோல, மெக்சிகோ செல்லும் ஏற்பாடுகளை அமெரிக்காவில் இருந்தபடி கவனித்தவர், புரஃபெஸர் செல்வகுமார். கிட்டுவை மெக்சிகோவுக்கு புறப்பட்டு வருமாறு கூறியவரும் செல்வகுமார்தான். கிட்டுவுக்கு துணையாக மெக்சிகோ சென்றவர் நாதன். மெக்சிகோவில் சில நாட்கள் தங்கிவிட்டு நாதன் திரும்பிவிட, மெக்ஸிகோவில் தனித்துப் போனார் கிட்டு.

அமெரிக்காவில் பணிபுரிந்து கொண்டிருந்த செல்வகுமார், கிட்டுவுடன் மெக்சிகோவில் தங்கியிருப்பது சாத்தியமில்லை.

இப்படியாக ஈழத் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் கிடைத்த அனுபவத்தால் வெறுத்துப் போயிருந்த கிட்டுவுக்கு, ஒரு கட்டத்தில் எந்தவொரு மேற்கு ஐரோப்பிய நாடும் விசா கொடுக்க தயாராக இல்லை என்பது நன்றாகவே புரிந்தது. அப்படியான நிலையில் அவர் உடனடியாக செல்லக்கூடிய ஒரே நாடு உக்கிரேன்தான். கிட்டுவும் உக்ரேன் செல்வதையே விரும்பினார்.

அதற்கு ஒரு காரணமும் இருந்தது.

கிட்டுவுக்கு வெளிநாடு செல்லும் முன்பே, அவர் புலிகளின் சார்பில் ஒருவரை உக்ரேனுக்கு அனுப்பி வைத்திருந்தார். ரஷ்யா உடைந்து, உக்ரேன் உருவாகியபோது, உக்ரேனில் தங்கிவிட்ட ரஷ்ய ஆயுதங்கள் வெளிச் சந்தைக்கு வரும் என்ற ஊகம் பரவலாக அடிபட்டுக் கொண்டிருந்தது. அப்படியான நிலையில், புலிகள் இயக்கத்தில் இருந்து ஒருவரை தேர்ந்தெடுத்து, அவரை உக்ரேன் சென்று தங்கி, அங்குள்ள நிலைமைகளை ஆராயுமாறு அனுப்பி வைத்திருந்தார் கிட்டு.

அப்படி கிட்டுவால் முன்பே உக்ரேனுக்கு அனுப்பப்பட்ட நபர், நரேன்.
கிட்டு தாமும் வெளிநாடு செல்வோம் என்றே நினைத்திராத காலத்தில் கிட்டுவால் வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்ட இந்த நரேன், அப்போதும் உக்ரேனில் தங்கியிருந்தார். இதனால்தான், உக்ரேன் செல்ல விரும்பினார் கிட்டு.

கிட்டு உக்ரேனுக்கு செல்லும் ஏற்பாடுகளை கே.பி. செய்து கொடுக்க, உக்ரேன் சென்று நரேனுடன் சேர்ந்து கொண்டார் கிட்டு. தலைநகர் கிவ்வில் தங்கிக் கொண்டார்.

ஈழத் தமிழர்கள் அதிகம் வசிக்காத நாடு உக்ரேன். எப்படியாவது அங்கிருந்தும் கிளம்பி, இலங்கைக்கு செல்வதே கிட்டுவுக்கு விருப்பமாக இருந்தது. ஆனால், இலங்கைக்கு சும்மா திரும்ப அவர் விரும்பவில்லை. திரும்பிச் செல்வதற்குமுன் புலிகள் இயக்கத்துக்காக எதையாவது சாதித்துவிட்டு, புகழுடன் நாடு திரும்ப விரும்பினார் அவர்.

கிட்டுவை நன்கு அறிந்தவர்களுக்கு அவரது இந்த மென்டாலிடி நன்றாக தெரிந்திருக்கும்.

கிட்டு உக்ரேனுக்கு சென்ற அந்தக் காலப்பகுதியில் உக்ரேன் கிட்டத்தட்ட ஒரு ஆயுத கறுப்பு சந்தையாக இருந்தது. ரஷ்யா உடைந்தபின் உக்ரேனுக்கு கிடைத்த பல ஆயுதங்கள், திருட்டுத்தனமாக சுடச்சுட விற்பனையாகிக் கொண்டிருந்தன. அதனால், அனைத்து நாடுகளின் உளவுத்துறைகளும் உக்ரேனுக்குள் வட்டமடித்துக் கொண்டிருந்தன.

உக்ரேனுக்குள் இருந்துகொண்டு கிட்டு, இரண்டு காரியங்களில் ஈடுபட்டார். முதலாவது, உக்ரேனில் இருந்த சில ஆயுத வர்த்தகர்களிடம் தொடர்பை ஏற்படுத்தி, புலிகள் இயக்கத்துக்காக ஆயுதங்களை பெற்றுக் கொள்ளும் முயற்சி.

இரண்டாவது, உக்ரேனில் ராணுவம் தொடர்பான கோர்ஸ் ஒன்றை செய்ய முயன்றார். உக்ரேனில் Sevastopol என்ற இடத்தில், ராணுவ கல்வி கற்பிக்கும் மையம் ஒன்று இருந்தது. அதன் பெயர் Nakhimov. உக்ரேன் ராணுவ அதிகாரிகள் தமது வாரிசுகளை ராணுவ கல்வி கற்க சேர்த்துவிடும் இடம் இது. அதில் இணைந்து கொள்வதற்கான முயற்சிகளை செய்து கொண்டிருந்தார் கிட்டு.

உக்ரேனில் ஆயுதத் தரகர்களுடன் தொடர்பை ஏற்படுத்தும் கிட்டுவின் முயற்சிகள் ஓரளவுக்கு கைகூடும் நிலையை அடையத் தொடங்கின. உக்ரேனுக்குள் கிவ் புறநகரப் பகுதியில் இருந்து ரகசியமாக இயங்கிய ஆயுத வியாபாரி ஒருவரையே கிட்டு தேர்ந்தெடுத்து அவருடன் தொடர்புகளை ஏற்படுத்த முயன்றார். இந்த நபரின் பெயர், லியோனிட் மினின் (Leonid Efimovich Minin).

உக்ரேன் ஆயுத வியாபாரி லியோனிட் மினின்
இந்த லியோனிட் மினின், மர வர்த்தகம் செய்வதாக வெளியே காட்டிக்கொண்டு, ரகசியமாக ஆயுத வியாபாரம் செய்த நபர். 1990களின் துவக்கத்தில் சுவிட்சலாந்து சுக் நகரில் தனது மர வர்த்தக நிறுவனத்தை பதிவு செய்துகொண்டு, மர ஏற்றுமதி செய்யும் போர்வையில், உக்ரேனில் இருந்து ஆயுதங்களை அனுப்பிக் கொண்டிருந்தவர். 1992-ல் இவர் ஆயுத வர்த்தகம் செய்வதை தெரிந்துகொண்டு, உளவு அமைப்புகள் இவரை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்திருந்தன.

அதாவது கிட்டு, உக்ரேன் போய் இறங்கிய அதே 1992-ம் ஆண்டு, இந்த லியோனிட் மினினை உளவு அமைப்புகள் கண்காணிக்கத் தொடங்கின.

இப்படியான நிலையில் உக்ரேனில் கிட்டு, ஒரு பக்கமாக இந்த நபருடன் ஆயுத வர்த்தக தொடர்பை ஏற்படுத்த முயன்றபடி, மறு பக்கமாக ராணுவ இன்ஸ்டிடியூட்டில் அட்மிஷன் எடுக்கும் முயற்சிகளிலும் ஈடுபட, உளவுத்துறைகளின் பார்வை இவர்மீதும் விழுந்தது. உக்ரேன் ராணுவ உளவுத்துறை டி.ஐ.யு. (DIU – Defence Intelligence of Ukraine) கிட்டுவை வட்டமிடத் தொடங்கியது.

இந்த நிலையில் கிட்டுவை உக்ரேனுக்குள் விட்டுவைப்பது ஆபத்து என்று உணர்ந்து கொண்ட கே.பி., நிலைமை இறுகுவதற்குமுன் கிட்டுவை உக்ரேனில் இருந்து போலந்துக்கு நகர்த்துமாறு நரேனுக்கு தகவல் அனுப்பினார்.

நரேன், கிட்டுவை போலந்துக்கு கொண்டுவரும்போது, அங்கே கிட்டுவை வரவேற்று, தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு, அவருடன் தங்கியிருப்பதற்கு லண்டனில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டவர், சேகர். சிறிது நாட்களே கிட்டுவுடன் போலந்தில் தங்கியிருந்த சேகர், அடிக்கடி கிட்டுவை தனியே விட்டுவிட்டு லண்டன் சென்று விடுவார். அவருக்கும் ஆயிரம் சோலி.

அப்படி கிட்டு தனியே இருந்த ஒரு தினத்தில்தான், அங்கே போய் இறங்கியிருந்தார் கே.பி.! அவரிடம் கிட்டு சொன்ன முதல் வாக்கியம், “என்னை எப்படியாவது தலைவரிடம் (பிரபாகரன்) கொண்டுபோய் விட்டுவிடு மச்சான்”

ஆனால், கிட்டு தலைவரிடம் போய் சேரவில்லை. போகும் வழியில் இந்தியக் கடலில் உயிரிழந்தார்.

தொடரும்...

Source
nadunadapu 

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :